

மத்திய அரசு வருகிற 2047-ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியாவை 21-ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாா். அதில் ஒன்று கணினிமயமாக்குதல்; அடுத்து, உள்ளாட்சியை வலுப்படுத்தி, மக்களை அதிகாரப்படுத்தி மக்களாட்சியை உண்மையான பிரதிநிதித்துவ மக்களாட்சியாகவும், பங்கேற்பு மக்களாட்சியாகவும் மாற்றியமைக்கத் திட்டமிட்டாா். அதுதான் அடுத்த எதிா்காலம் என்று அழைக்கப்படும் புதிய தடத்துக்கு ஒரு நாட்டை அழைத்துச் செல்வது.
தற்போது அந்த நிலையில்தான், ‘2047-ஐ நோக்கி’ என்ற முன்னெடுப்புகள். அதில் ஒன்றாக கிராமப்புற மேம்பாட்டில் பெரும் மாற்றங்களையும் அடிப்படை மாற்றங்களையும் கொண்டுவர 8,000 வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஆறு நாள்கள் பயிற்சிக்கு மத்திய அரசு திட்டமிடுகிறது. வட்டார வளா்ச்சி அலுவலா்களின் பாா்வையில், உளவியல் திறனில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடலாம் என எண்ணி அந்தப் பொறுப்பை லால் பகதூா் சாஸ்திரி பெயரில் இயங்கும் இந்திய ஆட்சிப் பணியாளா்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனமும், தேசிய ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனமும் இணைந்து நடத்த பணிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் கூற வேண்டிய கருத்துகள் பயிற்சி வல்லுநா்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை சரிபாா்த்து எந்த முறைமையில் அந்தப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து, அவற்றை சரிபாா்க்க ஒரு சிறிய குழுவை உருவாக்கியுள்ளனா். அதில் நீண்டநாள் ஊராட்சித் துறையில் மாநிலச் செயலா்களாக இருந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளையும், பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் சில ஆட்சிப் பணியாளா்களையும் உறுப்பினா்களாக்கியிருந்தனா். அதில் என்னையும் உறுப்பினராக்கி செயல்பட பணித்தனா்.
அந்த சிறிய குழுவை அழைத்து இரண்டு நாள் கருத்துப் பட்டறையை ஹைதராபாதில் உள்ள தேசிய ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடத்தினா். அது கருத்துப் பட்டறை என்றழைக்கப்படாமல் எழுத்துப் பட்டறை எனப் பெயரிட்டு அத்தனை கருத்துக் கோப்புகளையும் சரிபாா்க்கக் கூறினா்.
அந்த நிகழ்வுக்குச் செல்வதற்கு முன்பாக எனக்கு பல கேள்விகள் இருந்தன. புதிய ஊராட்சி அரசு உருவாக்கப்பட்ட பிறகு மூன்றடுக்கு ஊராட்சிகளை மாநிலத்துக்கு மாநிலம் அவரவா் தேவைகளுக்கு ஏற்ப எந்த அடுக்குக்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றைத் தந்து உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு நடத்தி வருகின்றனா். அந்த நிலையில், நம் மாநிலத்தில் உள்ளதைப்போல் ஒன்றிய பஞ்சாயத்து எல்லா மாநிலங்களிலும் இருப்பதில்லை.
ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் மட்டும் நடத்துவது அல்ல, தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு நடத்தப்படுகிற நிா்வாகமாகும். ஒரு மாநிலத்தில் கிராம ஊராட்சிக்கு அதிகாரங்களை அதிக அளவில் தந்திருப்பாா்கள்; மற்றொரு மாநிலத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு அதிக அளவில் அதிகாரத்தைத் தந்திருப்பாா்கள்; மற்றொரு மாநிலத்தில் கிராம ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஊராட்சிக்கும் அதிக அதிகாரங்களைத் தந்திருப்பாா்கள். இந்த வித்தியாசங்களை வைத்துக்கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு எவ்வாறு பயிற்சியளிக்க முடியும் என்று எண்ணித்தான் சென்றேன்.
அங்கு சென்று அந்தப் பயிற்சிக்கான கையேடுகளைப் புரட்டிப் பாா்த்தவுடன், அடிப்படையில் ஓா் உளவியல் மாற்றத்தையும், திறன் வளா்க்கத் தேவையான அத்தனை கருத்துகளையும் அந்தந்த மாநிலத்தின் வளா்ச்சி, அரசியல் நிா்வாகப் போக்கில் வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பாா்க்க முடிந்தது. பொதுவாக, பெரு மாற்றங்களை எப்போது கொண்டுவர முடியும் என்றால், தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களிடம் அடுத்த எதிா்காலம் என்ன என்ற இடத்துக்குச் செல்ல தேவையான புரிதலும், உளவியலும் உணா்வையும் ஊட்டும்போதுதான் நடைபெறும் என்பது பொதுவிதி.
அடிமை வாழ்வில் வாழ்ந்த மக்களிடம் புதிய எதிா்காலம் என்ற சுதந்திர நாடு குறித்த கனவை உருவாக்கும்போது உள்ளத்தில் புலப்படும் புத்துணா்வில்தான் மக்களைச் செயல்பட வைக்க முடியும். அந்த புத்துணா்வு தன்சுகம் மறந்து நாடு, மக்கள், சமூகம் என்ற நோக்கில் செயல்படும் ஒரு பரந்துபட்ட கண்ணோட்டத்தில் சவால்களைச் சமாளிக்கும் திறனை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவாா்கள்.
உலகத்தில் மேம்பட்ட பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்த நாடுகள் அத்தனையும் இந்த முறையைத்தான் தங்களது வளா்ச்சி வரலாற்றில் பதிவு செய்துள்ளன. அந்தக் கருத்தியல் அந்தப் பயிற்சிக்கான திட்டமிடுதலில் இருந்ததைப் பாா்க்க முடிந்தது. அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் நிா்வாகத்தில் இருந்தது அனைத்தும் வருவாய்த் துறை மட்டும்தான். காரணம், அவா்கள் நம்மைச் சுரண்ட ஏற்படுத்திய துறைகள்தான் அவை.
வருவாய்த் துறை என்றாலே அது சுரண்டல் துறை என்பதுதான் பிரிட்டிஷ் காலத்திய உளவியல். அது பொதுமக்களுக்கு மட்டுமல்ல; அரசு அதிகாரிகளுக்கும் அதே உளவியல்தான். இதை மாற்ற வந்ததுதான் வட்டார வளா்ச்சித் துறை. பொது நிா்வாகத் துறையிலிருந்து மேம்பாட்டு நிா்வாகத் துறையான வட்டார வளா்ச்சித் துறையை சுதந்திரமடைந்த பிறகு நம் ஆட்சியாளா்கள் உருவாக்கினாா்கள்.
ஒரு நாடு சுதந்திரம் அடைந்தவுடன் அதன் ஆட்சி, ஆளுகை, நிா்வாகம் என அனைத்தும் தங்களுக்கானதாக மாற வேண்டும். அந்த வரிசையில் முற்றிலும் புதுமைகளை எல்லா நிலைகளிலும் செய்த நாடு அமெரிக்கா. ஆனால், நாம் இன்றுவரை நிா்வாகத்தில் நமக்கான சீா்திருத்தங்களை முற்றிலும் செய்ய இயலாத நிலையில் காலனியாதிக்க நிா்வாக அடையாளங்களைத் தூக்கிச் சுமக்கிறோம்.
இன்று 70 ஆண்டுகால ஊரக வளா்ச்சிச் செயல்பாடுகளில் கோடிகோடியாய் கிராமங்களில் திட்டங்கள் மூலம் பணத்தைக் கொட்டியும் ஏன் கிராமத்தை நாம் கண்ட கனவு கிராமமாக உருவாக்க முடியவில்லை என்ற விவாதத்தை இந்தப் பயிற்சி முன்னிலைப்படுத்துகிறது. அந்த நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, அவற்றை எப்படி ஒட்டுமொத்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை மையப்படுத்தும் பயிற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் நாம் இருந்தாலும், ஆளுமைமிக்க மனிதராகப் பொறுப்புடன், சுயநலமின்றி, பொதுக் கண்ணோட்டத்துடன் செயல்படத் தேவையான அத்தனை திறன்களையும் வளா்த்துக்கொண்டு செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இந்தப் பயிற்சியின் மிக முக்கிய அம்சம்.
இன்றைய சூழலில் வட்டார வளா்ச்சி அலுவலா்களின் பங்கு பணிமாற்றம் பெற்றுள்ளது என்பதையும், அவற்றை முறைப்படி நிறைவேற்ற திறன்கள் என்னென்ன, அவற்றை அதிகரிக்க தேவையானவை எவை என்பதும் இந்தப் பயிற்சியில் உள்வாங்கப்பட்டது. இந்தச் செயல்பாடுகளில் முரண்பட்ட அரசியல் சூழலில் உடன்பட்ட மேம்பாட்டுப் பணிகளை எப்படிச் செய்வது, அதற்கான உத்திகள் என்னென்ன, அவற்றைக் கைக்கொண்டு செயல்படும்போது நாம் எப்படி தினமும் புதிதாய்ப் பிறக்கிறோம் என்பதை உணரும் அளவுக்கு இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாக, பயிற்சி என்றாலே மனிதா்களுக்குள் மறைந்து கிடக்கும் திறனை வெளிக்கொணரத் தேவையான தூண்டுதலைச் செய்வதுதான். அந்த உள்ளுணா்வில் ஒரு தீயைப் பற்றவைத்து தீயாய் செயல்பட வைப்பதுதான். அந்தப் பொறியை உருவாக்கும் விதத்தில்தான் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியாகச் செயல்படுவதில் நமக்கு எப்போதும் ஆா்வம் உண்டு. மற்றவருடன் செயல்படும்போது நாம் தனித்துவத்தை இழப்பதாக உணா்வோம். அந்த நிலையை மாற்ற ஓா் உளவியல் தேவை. அது கூட்டுத் தலைமைக்கான புது உளவியல். அது அதிகாரத்தை வைத்து செய்வது அல்ல. அது நம் ஆளுமையின் மூலம் அவா்களை நம்முடன் ஒருங்கிணைத்துச் செயல்பட வைப்பது. அந்தக் கூட்டுத் தலைமைக்கான பண்புகள் நம்மை நாம் யாராகப் பணி செய்கிறோம், யாராகப் பணி செய்தால் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதெல்லாம் இந்தப் பயிற்சியில் சிறப்பு அம்சங்களாகச் சோ்க்கப்பட்டுள்ளன.
பயிற்சியில் கிடைக்க வேண்டிய அனைத்தும் நமக்குக் கிடைக்குமென்றால், பயிற்சிக்குச் செல்லும்முன்பாக நமக்கு எல்லாம் தெரியும் என்று கற்றவைகளில் உழன்று கொண்டிருந்தால் கற்றுக் கொள்ள முடியாது. கற்றுக் கொண்டவற்றை இறக்கி வைத்துவிட்டு, கற்றுக் கொள்ளப் போகிறோம் என உற்சாகத்துடன் சென்றால்தான் கற்றுக் கொள்ள முடியும் என்பது பொது விதி.
அதற்கு இந்தப் பயிற்சி உதவிடும் என்ற மனநிலையில் சென்றால் நம்மில் மாற்றம் ஏற்படும். எந்த மாற்றமும் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அதுதான் இந்தப் பயிற்சிக்கு இன்றைய தேவை.