

எஸ். காசிவிஸ்வநாதன்
தமிழர்கள் வாழும் இடங்களில் பொங்கல் விழாவை மனிதநேயப் பண்பாட்டு திருவிழாவாக கொண்டாடுகிறோம். விவசாய சமூகத்தின் வலிமை திருவிழாவே பொங்கல். தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடுதான் பொங்கல். எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காது வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல்.
பொங்கல் விழா காலப்போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகத்தின் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடையதாகவே பொங்கல் பண்டிகை தமிழ் மக்களின் பண்பாடாக வளர்ந்துள்ளது.
புறநானூறு, பரிபாடல் போன்ற பண்டைய இலக்கியப் பாடல்களிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது.
தை மாதத்தில் வைகை நதிக்கு பொங்கலிட்டு பூஜை செய்யும் மகளிர் தமது அன்னையர் அருகே நின்று நீராடுவதாக பரிபாடல் குறிப்பிடுகிறது.
ஆறுகளில் கரையும் - அணையும் கட்டப்பட்டு, மருத நில வேளாண்மை நிலைத்த வேளாண்மையாக மாறிய பிறகு முல்லை நிலப் பகுதிகளில் ஏரிகள் - குளங்கள் வெட்டப்பட்டு கலப்பை பெருமளவு பயன்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் முல்லை நில வேளாண்மை பருவ காலமும், மருத நில வேளாண்மைப் பருவ காலமும் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த இருவகை பட்ட வேளாண்மையையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் பேரரசுகள் உருவாயின. இந்தப் போக்கு தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி சோழர் ஆட்சி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை, வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக் கொண்டது. தை முதல் நாளை மையமாகக் கொண்டு வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடை திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கலைப் பற்றிய வரலாற்று ஆதாரம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில்தான் நமக்கு கிடைக்கிறது. திருவொற்றியூர் கல்வெட்டு புதியீடு விழா எனப் பொங்கலைக் குறிக்கிறது. புதுயீடு என்பது முதல் அறுவடை எனக் கொள்ளலாம்.
தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இரு வகை உற்பத்தி முறைகளை (முல்லை-மருதம்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல் விழா!
"நெற்பல பொழிக! பொன் பெரிது சிறக்க' - என ஐங்குறுநூறு கூறுகிறது. பொலி என்ற சொல்லுக்கு செழித்தல், மங்கலமாதல், வளமடைதல் என்ற பொருள்கள் உண்டு. பொலியிடுவது என்பது முதியோர் முதல் சிறார் வரை ஒன்று சேர்ந்து "பொலியோ, பொலி " எனக் கூடி ஒலி எழுப்புவது. "மேலும் மேலும் வளமை: அனைவருக்கும் வளமை அளித்திடுவாய்' என பூமிக்கு உத்தரவிடும் ஆண்மையோடு "பொலி, பொலி பொலிகவோ ... பொலிக! ' என்று ஒலி எழுப்பப்படுகிறது.
பொலிக என்ற இந்தச் சொல்லே பிற்காலத்தில் பொங்கல் என மருவியது. வேர் இல்லாத எந்த விழாவுக்கும் பொங்கல் விழா என்றுமே அடிமையாகி விடவில்லை. தமிழரின் தனிப் பெருமையாய் விளங்கும் திருவள்ளுவர் மனிதநேய சமத்துவ சமுதாயம் என்று லட்சியத்தையே முன்வைத்தார்.
பழியஞ்சி பாத்தூண் உடைத்தாயின்
வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
தனது உணவை பிறருடன் பகிர்ந்து உண்பதைப் பண்பாடாக முன்வைக்கும் வள்ளுவர்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!
எனப் போர்க் குரலும் எழுப்புகிறார்.
வள்ளுவர் காலம் தொடங்கியே தமிழர் முன்வைத்த வாழ்க்கை வேறுபாடுகள் அற்ற வம்பறியா வாழ்க்கை முறையே ஆகும். வையத்து வாழ்வாங்கு வாழவே தமிழர் முயன்றனர்.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்!' என்ற பொதுமைப் பண்பாட்டில் வளர்ந்த, தமிழர் பண்பாடு சமயம் கடந்த சமத்துவ நெறியையே முன்வைக்கிறது.
ஆண் - பெண் என்ற வேறுபாடு இன்றி இரு பாலரும் தமிழகத்தில் மனிதன் மீது திணிக்கப்பட்ட தீமைகளை எதிர்த்துப் போராடியதே தமிழர் மரபாக உருப்பெற்றது.
வைகுண்ட சுவாமிகள், ராமலிங்க வள்ளலார் ஆகியோர் மானிட சமத்துவம் என்ற தமிழ்ப் பண்பாட்டு பதாகையை உயர்த்தி பிடித்தனர். திருமூலர் தொடங்கி நந்தனார் சித்தர் எனப் பல போராளிகளின் வழியே வள்ளலார் சன்மார்க்க நெறி கண்டார்.
கடந்த நூற்றாண்டில் "நானும் ஒரு சித்தன்' என புதிய அறம் பாட வந்த மகாகவி பாரதி தமிழர் மரபின் மனிதநேய சமத்துவ பண்பாட்டின் புதுயுக அடையாளமாக வைத்து இருந்தார். தமிழரின் உயரிய பண்பாட்டை பொதுவுடைமைப் பண்பாடாக நிறைவு பெறச் செய்தார்.
மகாகவி பாரதியின் வழியில் பாரதிதாசன் தொடங்கி தமிழ் மக்களின் வாழ்வில் மானிட சமத்துவம் என்ற நெறி நின்று பண்பாட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் எண்ணற்றோர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய தேசிய உருவாக்கத்தில் தமிழகம் வீரியமிக்க பணியாற்றியது. சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், வ. உ.சி., வ.வே.சு. போன்றோரின் முன்னோடியான இயக்கச் செயல்பாடுகள் இதற்கு வழிகாட்டின.
சுயமரியாதை இயக்கம் ஜாதி கொடுமைகளை எதிர்த்த தமிழ் தேசிய இனத்துக்கு புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்தது.
இருபதாம் நூற்றாண்டு வரலாறு புதிய நவீன தமிழ் தேசிய இனத்தைத் தோற்றுவித்தது. மனிதநேய பண்பாடுகள் ஜனநாயகம் நிறைந்ததாக தமிழ் தேசிய இனம் வளர்ச்சி பெற்றது.
தமது மொழியையும், நாட்டையும் நேசிப்பவர்கள் தமிழர்கள். ஜனநாயக சமதர்ம உணர்வு வளர்ச்சி பெறச் செய்வது அவசியம். தமிழினத்தின் வாழ்வில் 2,000 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்த மனிதநேய பண்பாட்டுக்கு பேரபாயம் ஏற்பட்டு வருகிறது. ஊழலும் வன்முறையும் நேர்மையற்ற வீழ்ச்சியும் மனித உள்ளத்தின் பண்புகளைக் கரைத்து வருகிறது.
இவற்றை முறியடிப்பதுடன் ஒரு மாற்றத்தை நோக்கி நமது தமிழர் பண்பாடு கொண்டு செல்லப்பட பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம்!
கட்டுரையாளர்:
தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.