இலங்கைத் தமிழர் உரிமைகள் காக்க...

கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
3 min read

இலங்கையில் புதிய அரசமைப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் நிலையில், அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், அவர்களது உரிமைகளைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்தக் கடிதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனக் கவலையை வெளிப்படுத்துவதாகும்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "இலங்கைத் தமிழர்கள் 77ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்ட இனப் பாகுபாடு, வன்முறை மற்றும் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகளைச் சகித்து வந்துள்ளனர். இதையொரு சமுதாயத்துக்கு எதிரான இனப்படுகொலை என வரையறுக்கும் நிலை உருவாகியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசமைப்புகள் 1947, 1972 மற்றும் 1978-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசமைப்புகள் அனைத்தும் ஒற்றை ஆட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றி இருந்தன. இது திட்டமிடப்பட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது''.

இலங்கையில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கடந்தகால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்றவுடன், முதலாவதாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையகத் தமிழர்களில் 10 லட்சம் பேரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் சிங்களர்களின் 63 தொகுதிகள் 77-ஆக அதிகரிக்கப்பட்டன.தமிழர்களின் தொகுதிகள் 20-இலிருந்து 11-ஆகக் குறைக்கப்பட்டன. 1956-ஆம் ஆண்டு இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே என்னும் சட்டம் உருவாக்கப்பட்டது.

சிங்கள அரசுப் பதவிகளில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டனர்.

சிங்கள ராணுவத்திலும் தமிழர்களின் சேர்ப்பு மறுக்கப்பட்டது. தபால், ரயில்வே, சுங்கம் மற்றும் மருத்துவமனைகளிலும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்புகளில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதற்கு எதிராக தந்தை செல்வநாயகம் தலைமையில் சுமார் 30 ஆண்டுகள் தமிழர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். வேறு வழியே இல்லாமல்தான் 1976-ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சி கூடி சுதந்திரத் தமிழீழம் கோரிக்கையை முன்வைத்தது.

1979-ஆம் ஆண்டு தமிழர்களின் அறப்போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கொடிய சட்டத்தைச் சிங்கள ஆட்சியினர் கொண்டு வந்தனர். தென்கிழக்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமும், 95,000 புத்தகங்களைக் கொண்ட யாழ்ப்பாண நூலகம் சிங்கள ராணுவத்தினரால் திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. கலாசார ரீதியாகத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை இது.

1956, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளும், அவர்களின் சொத்துகள் சூறையாடுதலும் நிகழ்த்தப்பட்டன. 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையின் போது 3,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1983-ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திர நாளன்று (ஆகஸ்டு 15) இந்திய பிரதமர் இந்திரா காந்தி தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்துப் பேசியபோது, "இலங்கையில் நடைபெறுவது இனப் படுகொலை ஆகும். இதை இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது' என எச்சரித்தார். இந்தியாவின் பிரதமரால் இனப் படுகொலை என்ற வார்த்தை முதல்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப் பிரச்னை குறித்து சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, ஜெயவர்த்தன மனம் கொதித்துப்போய், "இந்திய அரசு எங்கள் மீது படையெடுக்க விரும்புமானால், 24 மணி நேரத்தில் இலங்கையைக் கைப்பற்றி என்னையும் கைது செய்ய முடியும். ஆனால், அதற்குள்ளாகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்கள மக்களால் அடியோடு தீர்த்துக்கட்டப்படுவார்கள்' என எச்சரித்தார்.

இந்திரா காந்தி காலத்தில் அவரின் சிறப்புத் தூதரான ஜி. பார்த்தசாரதியின் முன்னிலையில் சிங்கள அரசு-தமிழ்த் தலைவர்கள் இடையே செய்யப்பட்ட உடன்பாட்டையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஆகியோர் செய்துகொண்ட உடன்பாட்டையும் முழுமையாக நிறைவேற்ற சிங்கள அரசு முன்வராததோடு, தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்தது. இந்தியா குறித்தோ, உலக நாடுகள் குறித்தோ சிங்கள அரசு சிறிதளவுகூடக் கவலைப்படவில்லை.

இனப் படுகொலை என்னும் பெரும் குற்றத்தைத் தடுப்பது மற்றும் அவர்களுக்குத் தண்டனை விதிப்பது ஆகியவை குறித்து ஆராய்வதற்காக 1948-ஆம் ஆண்டு ஐ.நா. பேரவை கூட்டிய மாநாட்டில் 140 நாடுகள் பங்கேற்றன. இனப் படுகொலை என்பது ஒரு நாட்டின் அரசால் திட்டமிட்டுக் கடைப்பிடிக்கப்படுவதாகும். இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒரு குழுவினரை அடியோடு ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இனப் படுகொலையாகும் என அந்த மாநாடு பதிவு செய்தது.

இனப் படுகொலையைத் தடுக்க வேண்டுமானால், இதில் ஈடுபடும் ராணுவம் அல்லது சிறப்புப் படை போன்றவைதடைசெய்யப்பட வேண்டும். இவற்றைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு விசாக்கள் வழங்கப்படக் கூடாது. இனப் படுகொலையில் ஈடுபடும் அரசுகள் அல்லது நாடுகளின் மக்கள் ஆகியோர் மீது ஆயுதத் தடையை ஐ.நா. விதிக்க வேண்டும். மேலும், ஐ.நா. விசாரணை ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும் என இந்த மாநாடு இனப் படுகொலை குறித்து திட்டவட்டமான கோட்பாடுகளையும், இனப் படுகொலையில் ஈடுபடும் நாடுகளின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விதிகளை வகுத்தது.

ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் நாஜி கட்சி ஆட்சியின் போது, 60 லட்சம் யூதர்கள் சித்திரவதை, படுகொலை, உயிரோடு எரித்தல் போன்ற கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இவர்களுக்கென்று தனியான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் இனப் படுகொலையாளர்களை விசாரித்துத் தண்டனை வழங்க நீதிமன்றங்களை அமைத்தது. நாஜி தலைவர்கள் பலர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவ்வாறே ருவாண்டா, போஸ்னியா, சூடான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இனப் படுகொலைகளைச் சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்து தண்டித்தது. ஆனால், சிங்கள அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க உலக அமைப்புகள் எதுவும் முன்வரவில்லை.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் ஐ.நா. பேரவையால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சு வாயு குண்டுகள், ரசாயன குண்டுகள் மற்றும் கொடூரமான ஆயுதங்களை சிங்கள ராணுவம் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட போரற்ற அமைதி மண்டலங்கள் ஆகியவற்றிலிருந்தவர்கள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2009-ஆம் ஆண்டில் ஐ.நா. செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன், சர்வதேச சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பாயில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் லூயி ஆர்பர், தென்னாப்பிரிக்கத் தலைவரும், கிறிஸ்தவ ஆயருமான டெஸ்மாண்டு டூட்டு, ஐ.நா. செயலாளராக (1997-2006) இருந்த கோபி அன்னான், அயர்லாந்து அதிபரும், ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த மேரி ராபின்சன், ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை போன்றோர் துணிந்து வெளிப்படையாகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிப் படுகொலைகளைக் கண்டித்தனர்.

ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மேற்கு நாடுகள் சிங்கள அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை சீனா மிகக் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அரசோ இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து சிங்கள அரசே ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அலுவலக அறிக்கையில் "சிங்களப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை பகிரங்கமாகப் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதற்கான நடவடிக்கையைச் சிங்கள அரசு மேற்கொண்டு அதற்கு முறையான மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளையும், ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. பேரவையின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கைகளையும் மனதில் கொண்டு விரைவாகச் செயல்பட்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

கட்டுரையாளர்:

தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com