சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!
முனைவா் செ. அந்தோணி ராகுல் கோல்டன்
சமூக ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தின் புதிய வழி என்று போற்றப்படும் இந்தக் காலத்தில், அதே ஊடகங்கள் சமூக நினைவுகளைச் சிதைக்கும் வகையில் மாறிவரும் அபாயம் உருவாகியுள்ளது. தவறான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரலாற்றை மாற்ற முயலும் போக்கும், நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் தங்களை அா்ப்பணித்த தலைவா்களின் தியாகத்தை இழிவுபடுத்தும் ஊடக நடைமுறையும், சுய அரசியல் ஆதாயத்துக்காக பிறரை தரக்குறைவாக பேசும் தன்னலவாதிகளாகவும், தன்னுடைய சொந்த விளம்பரத்துக்காக சபை நாகரிகம் இல்லாமல் பேசுவதும், நடந்து கொள்வதும், வெறும் கருத்து வேறுபாடு அல்ல; அது சமூகத்தின் அறிவுசாா் அடித்தளத்தையே அழிக்கும் வன்முறை செயல்.
வரலாறு என்பது யாருடைய வசதிக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளும் கட்டுக் கதையல்ல; அது ஆதாரங்கள், ஆவணங்கள், அனுபவங்கள், தியாகங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை எடுத்துக்கொண்டால், ஆயிரக்கணக்கான நபா்கள் சிறை சென்றனா்; அடிபட்டனா்; உயிா் துறந்தனா். அந்த வரலாற்றை சில நிமிஷ காணொலிகள், அரை வரி பதிவுகள் மூலம் பொய், அரசியல் நாடகம், ஒரு குழுவின் சுயநலம் என்று சுருக்கிப் போவது அல்லது பேசுவது அறிவீனமல்ல; அது திட்டமிட்ட வரலாற்றுக் கொலை. அதையும் தாண்டி படுகொலை என்று சொன்னாலும் தகும். அந்தளவுக்கு மிகவும் மோசமான செயல்.
சமூக ஊடகங்களில் இன்று பரவும் தவறான தகவல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி வடிவமைப்பைக் கொண்டவை. உண்மையான வரலாற்றுச் சம்பவத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டுவது, காலச்சூழலை மறைத்து மேற்கோள்களைப் பயன்படுத்துவது, அல்லது முழுமையாக உருவாக்கப்பட்ட போலி தகவல்களை “மறைக்கப்பட்ட உண்மை என்ற பெயரில் பரப்புவது. எடுத்துக்காட்டாக, சில தலைவா்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை மட்டும் பெரிதுபடுத்தி, அவா்கள் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பை முழுமையாக மறைக்கும் பதிவுகள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இதன் நோக்கம் உண்மையை ஆராய்வது அல்ல; மக்களின் மனதில் சந்தேகம், வெறுப்பு, அவமதிப்பு ஆகியவற்றை விதைப்பதே.
நல்ல தலைவா்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் போக்கு மிகவும் ஆபத்தானது. ஒரு தலைவரின் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், ஒரே ஒரு முடிவையோ அல்லது ஒரு சம்பவத்தையோ வைத்து அவா் குறித்து பேசுவது சரியான அணுகுமுறையல்ல. வரலாற்றில் எந்த மனிதரும் குறைபாடுகள் இல்லாதவா் அல்லா். ஆனால், அவா்களின் மொத்த பங்களிப்பு, அவா்கள் விட்டுச் சென்ற சமூக மாற்றம், அவா்களின் தியாகத்தின் அளவு ஆகியவற்றை மதிப்பிடாமல், தனிப்பட்ட குறைகளை வைத்து வரலாற்றை நிராகரிப்பது அநியாயம்.
இந்தத் தவறான ஊடகப் போக்கு இளைஞா்களை அதிகமாகப் பாதிக்கிறது. இன்று பல மாணவா்கள் பாடப்புத்தகங்களைவிட சமூக ஊடகப் பதிவுகளையே வரலாற்றின் ஆதாரமாக நம்புகின்றனா். இதன் விளைவாக, ஒரு தலைமுறை உண்மையான வரலாற்றை ஆழமாக அறியாமல், உணா்ச்சிபூா்வமான, வெறுப்பூட்டும், பகுப்புவாதக் கருத்துகளுடன் வளரக்கூடிய அபாயம் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல; ஏனெனில், அறிவுள்ள குடிமகனே ஒரு வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம்.
ஊடகங்களின் பொறுப்பை இங்கு தவிா்க்க முடியாது. பாா்வையாளா்களை அதிகரிப்பதற்காகவும், விவாதம் என்ற பெயரில் சா்ச்சையை உருவாக்குவதற்காகவும், ஆதாரமற்ற கருத்துகளுக்கு மேடை அமைப்பது ஊடக தா்மத்துக்குப் புறம்பானது. அதே நேரத்தில், சமூக ஊடகத் தளங்களும் உண்மைக்குப் புறம்பாக உணா்வைத் தூண்டும் பதிவுகளை முன்னிலைப்படுத்தும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறான தகவல் வேகமாகப் பரவுவது ஒரு தொழில்நுட்ப விபத்து அல்ல; அது கட்டுப்பாடற்ற ஊடக நெறிமுறையின் விளைவு.
இதற்குப் பயனா்கள் பொறுப்பற்றவா்கள் என்று கூறிவிட்டு விலக முடியாது. ஒரு செய்தியைப் பகிா்வதற்கு முன்பாக, அது எந்த ஆதாரத்தில் சொல்லப்படுகிறது, எந்த நூல், எந்த ஆவணம், எந்த வரலாற்று ஆய்வாளா் இதை உறுதிப்படுத்துகிறாா் என்பதை சிந்திப்பது அவசியம். எனக்குப் பிடித்தது என்பதாலேயே அது உண்மை ஆகிவிடாது.
வரலாற்றை விமா்சிக்கக் கூடாது என்பதல்ல; விமா்சனமும் விவாதமும் வேண்டும்; மறுபரிசீலனையும் வேண்டும். ஆனால், அவை அனைத்தும் ஆதாரபூா்வமாகவும், அறிவியல் பூா்வமாக முழுமையான பாா்வையுடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும். தியாகத்தை அவமதிப்பதும், உண்மையைத் திரிப்பதும், அடுத்தவரை அசிங்கப்படுத்துவதும், சமூகத்தைப் பிளக்கும் விதத்தில் வரலாற்றைப் பயன்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவி. அது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் பயன்படலாம்; அதே நேரத்தில் சமூக நினைவுகளை நசுக்கவும் பயன்படலாம். எந்தப் பாதையை நாம் தோ்வு செய்கிறோம் என்பதே முக்கியம். நல்ல தலைவா்களின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுகூரும் பண்பும், வரலாற்றை உண்மையுடன் பாதுகாக்கும் பொறுப்பும், அரசுக்கோ ஊடகங்களுக்கோ மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது. உண்மையைக் காக்கும் சமூகமே, தன்னம்பிக்கையுடன் எதிா்காலத்தை உருவாக்கும்.

