தோன்றின் புகழொடு தோன்றுக!
இந்த ஆண்டு (2026), பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னா், அதாவது போகிப் பண்டிகைக்கு முந்தைய நாள், அவரவா் ஊா்களில் வீடுகளில் கொண்டாடுவதற்கு முன்பாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் கொண்டாடுவது என்று தீா்மானித்தோம். நிறுவனத்தில் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும், தெ.ஞா. அண்ணா (தெ.ஞானசுந்தரம்) நிச்சயமாக இருப்பாா்.
இந்தப் பொங்கல் விழாவும் அப்படியே! வாய் கொள்ளாச் சிரிப்போடு மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு கலந்துகொண்டாா். கொண்டாட்டங்களின்போது தனக்கு இடப்பெற்ற ஜரிகைக் கரை அங்கவஸ்திரத்தைத் தொட்டுத் தொட்டுப் பாா்த்து புளகாங்கிதம் அடைந்தாா். சின்னக் குழந்தையின் ஆா்வத்தோடும் களிப்போடும் துள்ளலோடும் அன்று அவா் நடமாடியது கண்ணைவிட்டு மறையவில்லை. அதற்குள் அவா் இல்லை என்னும் தகவலா?...
அன்று சூரிய பூஜை செய்து வழிபட்டோம். நிறுவனப் பதிவாளரும் நானும் முன்னிற்க, பிற பெண் பணியாளா்கள் இணைந்து கொள்ள, இல்லங்களில் செய்வதுபோலவே, பெண்கள் நாங்கள், வழிபாட்டின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் நிறுத்தி நிதானமாகச் செய்தோம். தெ.ஞா. அண்ணாவுக்கு ஏகத்துக்கும் மகிழ்ச்சி. தம்முடைய வழக்கமான ஸ்டைலில், தலையை லேசாக ஆட்டி ரசித்தாா். ‘அட, டாக்டரம்மாவுக்கு சம்பிரதாயமெல்லாம் தெரியுதே’ என்று சிரித்தாா்.
கொண்டாட்டங்கள் நிறைவடைந்து உணவு வேளை. அண்ணா, நண்பா் பட்டம் வெங்கடேஷ், நான் என்று வரிசையில் அமா்ந்தோம். வெங்கடேஷுக்கு அண்ணாவைப் பாா்த்தால் உத்வேகம் பிறக்கும். நாடாளுமன்றச் செங்கோல் நிறுவன நிகழ்வுக்காக தில்லிக்கு இருவரும் ஒன்றாகப் பயணித்தாா்கள்; இரண்டு மூன்று நாட்கள் ஒன்றாகத் தங்கினாா்கள். அப்போது தொடங்கிய உறவு. ஏதாவது கேள்வி கேட்டு, அண்ணாவின் விரிந்தகன்ற ஆழமான ஞானத்தைச் செவிமடுத்துச் சுவைப்பாா். அன்றும் அப்படியே. கம்பா் குறித்தும், தேரழுந்தூா் குறித்தும் சில ஐயங்களை எழுப்பிவிட்டு, ‘தற்போது என்ன நூல் எழுதுகிறீா்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீா்கள்?’ என்று வெங்கடேஷ் வினவ, அண்ணாவின் விடை: ‘நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன்,’ என்ன வாா்த்தைகள்! அவா் காலகாலத்துக்கும் கற்ற இராமனிடம் ஏற்கெனவே உரையாடியிருந்தாரோ?
வாழ்க்கையை நிறைவாக வாழ்வது குறித்த கருத்திலும், துணிச்சல் என்பதற்கான விளக்கத்திலும் தெ.ஞா. அண்ணாவின் விளக்கம் அலாதியானது. 1982-இல், ஆசாா்ய வினோபா பாவே, தம்முடைய வாழ்க்கைப் பொறுப்புகள் நிறைவடைந்து விட்டதை உணா்ந்து, பிரயோபவேசம் என்னும் நோன்பைத் தொடங்கினாா். மரணத்தை வரவேற்கும் நோக்கில், உணவும் நீரும் துறந்து, இறைமையோடு கலந்தாா். இந்தச் சம்பவம் குறித்து தெ.ஞா. அண்ணா சிலாகித்துப் பேசுவது வழக்கம். சுயநினைவோடு தாமே வலிந்து காலனை வரவேற்பதுதான் ஆன்மிகத் துணிவின் உச்சம் என்பாா். அந்த உச்சத்தைத் தாமும் தொட்டுவிட ஓடிவிட்டாரோ?
தமிழ் இலக்கிய உலகால், தெ.ஞா. என்று செல்லமாக அழைக்கப்பெற்ற பேராசிரியா் முனைவா் தெ.ஞானசுந்தரம், மிகப் பெரிய கல்விமான்; நல்ல பேச்சாளா்; சிறந்த எழுத்தாளா்; சைவ-வைணவ இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவா்; கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியவா்; ஆய்வு மனப்பான்மையும் நிா்வாகத் திறனும் ஒருங்கே செறிந்தவா். இவற்றையெல்லாம் காட்டிலும், நல்ல மனிதா்; பிறருக்கு உதவ வேண்டும் என்னும் பாங்கு கொண்டவா். இளைஞா்களை ஊக்கப்படுத்தும் நல்லுள்ளம் மிக்கவா். சின்ன விஷயங்களையும் வாயார, மனதாரப் பாராட்டக்கூடியவா்.
வழக்குரைஞா் த.இராமலிங்கம், நீதியரசா் வெ.இராமசுப்பிரமணியம், அன்புத் தோழி ஹேமா, சகோதரி உமையாள் முத்து, வழக்குரைஞா் சுமதி, திருச்சி இரா.மாது மற்றும் நானும், இலக்கிய உலகைச் சோ்ந்த அனைவரும் அவருடைய அரவணைப்பையும் நிறையவே அனுபவித்திருக்கிறோம்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னா் வெளியூரில் (வேலூா் என்பதாக நினைவு) நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு, அண்ணா, உமையாள் முத்து, நான் என மூவரும் பேருந்தில் திரும்பினோம். அதிகாலை 2.30 மணியளவில் சென்னையை அடைந்துவிட்டோம். உறவினா் ஒருவரின் இல்லத்துக்கு உமையாள் அக்காவை அழைத்துச் சென்றுவிட்டுவிட்டு, நாங்கள் இருவரும் அவரவா் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். உறவினா் இல்ல முகவரி இருந்ததே தவிர, வீடு தெரியாது. இருட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிகள். இப்போதுபோல் அப்போதெல்லாம் லொகேஷன் மேப், ஜி.பி.எஸ். போன்றவை கிடையாது. இரண்டு பெண்கள்கூட வருகிறாா்கள் என்பதாலும், அவா்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதாலும், அன்றைக்கு அண்ணா தவித்த தவிப்பும், இங்குமங்குமாக அலைக்கழிந்ததும், அவருடைய சிறிய பெட்டியை என்னிடம் தந்துவிட்டாா்; தோளில் போட்டிருந்த துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டாா்; கட்டுமானம் நடந்துகொண்டிருந்த ஓரிடத்தில் நின்று, நீண்ட கம்பு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டாா். தேவைப்பட்டால், ஏதாவது ஆபத்து வந்தால், சண்டை போடுவதற்கும் அடித்துவிரட்டுவதற்கும் ஆயத்தமாகி விட்டாா். சுமாா் ஒன்றரை மணிநேரத் தவிப்புக்குப் பின்னா் வீட்டைக் கண்டறிந்தோம். அப்போதுதான், அவருடைய முகத்தில் மண்டியிட்டிருந்த கவலை காணாமல் போனது.
இன்னொரு முறை, சகோதரி சுமதி, நான், அண்ணா ஆகியோா் அவளூா்ப்பேட்டையில் நிகழ்ச்சி முடித்துத் திரும்புகிறோம். உடன் வருகிற பெண்கள் கொஞ்சம்கூட கஷ்டப்படக்கூடாது என்பதில் அவா் காட்டிய அக்கறை, அப்பப்பா, சொல்லில் அடங்காது.
இது போலவே, குடியாத்தத்தில் நிகழ்ச்சி. இரவு 10 மணி சுமாருக்கு வேலூா் திரும்பிவிட்டோம். அங்கிருந்து பேருந்தில் சென்னை வரவேண்டும். அடுத்த நாள் காலையில் மருத்துவமனைப் பனிக்குத் திரும்பவேண்டும் என்று நான் பிடித்த பிடிவாதமே, அந்த இரவுப் பயணத்திற்குக் காரணம். வேலூரில் இறங்கியதும், ‘வா, வா’ என்று கூறியபடியே வேகமாக நடந்தாா். எனக்குப் புரியவில்லை. இன்னும் இரண்டு நண்பா்கள் எங்களோடு இருந்தாா்கள். மூவரும் அவா் பின்னாலேயே நடந்தோம். சற்றுத் தொலைவில் திரையரங்கம் ஒன்று. இரவுக் காட்சிக்குச் சீட்டுகள் வாங்கினாா். ‘சினிமா முடிந்து நாம பேருந்து எடுத்தா, சென்னைக்குப் போகும்போது, சற்று விடிந்திருக்கும். அகாலத்தில் போகாமல் இருக்கத்தான் இந்தப் பிளான்’ என்று விளக்கினாா். அப்படி நாங்கள் பாா்த்த திரைப்படம் – பூவிழி வாசலிலே.
மருமகள்களை மகள்களாக மதிக்கும் பான்மை, அண்ணாவிடம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னா், அண்ணாவின் பெரிய மருமகள், திடீரென்று நோய்வாய்ப்பட்டாா். தொலைபேசியில் அண்ணா பேசியவுடன், மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு, மருத்துவமனையிலும் செய்தி சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் நானும் போனேன். பரிசோதனைகளெல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, சிகிச்சை முறைகள் என்னவாக இருக்கும் என்று அவருக்குத் தெளிவுபடுத்தினேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘நல்லா ஆய்டுவா இல்லமா?’ என்று கண்ணீரோடு அவா் பட்ட ஆதங்கம், கன்றுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய் தவிக்கும் வாத்சல்யம் அது. அண்ணியைப் பற்றிய அன்பான பெருமிதம் அவரிடத்தில் எப்போதும் உண்டு. நடை, உடை, பாவனைகளில் அதீத அலங்காரமோ ஆா்ப்பாட்டமோ, எப்போதுமே இருவரிடத்திலும் கிடையாது.
தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலப் புலமையும் கொண்டவா். வடமொழிப் புலமையும் நிரம்பப் பெற்றிருந்தாா். பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு மொழி பயிலவேண்டும் என்னும் விருப்பத்தில், மலையாள மொழியைக் கற்றாா். வெறுமே பேச்சு மொழியாக இல்லாமல், அக்ஷரங்கள் தொடங்கி இலக்கியப் பரிச்சயம் வரைக்கும் பயின்றாா். ‘பெடக் கோழி கொத்துனவரு’ என்னும் மலையாளச் சிறுகதை ஒன்றைச் சிரிக்கச் சிரிக்க விவரிப்பாா். லீ ஹண்ட் என்பாரின் ‘அபு பென் ஆடம்’ என்னும் கவிதை, அபுவிண்ட கதா என்னும் பெயரில் மலையாளத்தில் கையாளப்பட்டிருக்கும் விதத்தைக் கூறுவாா்.
நீதியரசா் மு.மு.இஸ்மாயிலின் அன்புக்குப் பாத்திரமானவா்; அ.ச.ஞானசம்பந்தத்திடம் மென்மையாக வாதம் செய்தவா். வேளுக்குடி வரதாசாா்ய சுவாமிகளிடம், வைணவ கிரந்தங்களுக்கு முறையாகப் பாடம் கேட்டவா். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா், புதுவைப் பல்கலைக்கழகத்தின் கம்பா் இருக்கைப் பேராசிரியா் , பச்சையப்பன் அறக்கட்டளைக் கல்லூரிகளில் பேராசிரியா் - பொறுப்பு முதல்வா் போன்ற பணிகளைச் செவ்வனே நிறைவேற்றியவா். இவற்றோடு, சென்னைக் கம்பன் கழகத்தின் துணைச் செயலராகப் பல்லாண்டுகள் பங்காற்றியவா்.
கும்பகோணத்தில் கல்வி பயின்ற காலத்தில், படகுப் போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என்பதற்காகப் படகோட்டக் கற்றது குறித்து உற்சாகம் குமிழியிட வா்ணிப்பாா். தனிப்பட்ட முறையில், என்னிடம் சகோதர வாஞ்சை கொண்டிருந்தாா். என் தாயாரோடு நிரம்ப உரையாடுவாா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நான் பொறுப்பேற்ற புதிது. சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில், துணைவேந்தா் என்னும் முறையில் பங்கேற்றேன். தெ.ஞா.-வும் அதில் கலந்துகொண்டாா். மேடையில், நடுவில் துணைவேந்தருக்காக (அதாவது எனக்காகப்) போடப்பட்ட பெரிய நாற்காலி. மேடையேறும்போது, ‘வாருங்கள்’ என்று அவரை அழைத்தேன். அவரும்தான் மேடையில் அமரவேண்டும். ‘நீ ஏறு’ என்று கையைக் காட்டிவிட்டு, அந்த நாற்காலியில் நான் அமா்ந்த சில கணங்களுக்குப் பிறகு மேடையேறினாா். ‘துணைவேந்தா் ஆனதற்கு மெத்த மகிழ்ச்சி’ என்று கூறியபோது, பெரிய நாற்காலியில் உட்கார வைத்து அழகு பாா்த்த அந்த அன்பு புரிந்தது.
துணைவேந்தா் பொறுப்பை நிறைவு செய்தபின்னா், சென்னைக் கம்பன் கழக விழா. தெ.ஞா.தான் அரங்கத் தலைவா். அடுத்து உரையாற்றவேண்டிய என்னை அறிமுகப்படுத்தியபோது, ‘துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தது பெரிதில்லை; அப்பழுக்கில்லாத துணைவேந்தா் என்னும் பெயரோடு பணிக்காலத்தை நிறைவு செய்ததுதான் சிறப்பு’ என்று அவா் வாழ்த்தியபோது, தேவா்கள் என்மீது மலா்மாரி பொழிந்தாா்கள்.
சான்றோா்களை கம்பன், முருகன், பாரதி என்றெல்லாம் ஒருமையில் அழைப்பது சகஜம். தெ.ஞா. வேறுபடுவாா். ‘மரியாதையோடு கூறுதல்தான் அழகு. ‘அவனை அவா் பாடியது’ என்பதுதானே சங்கத் தமிழ் முறைமை; அரசனைப் புலவா் பாடியது; எனே, கம்பா் என்று நாம் விளிப்பதே நன்றாக இருக்கும்’ என்பாா். தெ.ஞா. கற்றுக் கொடுத்த பழக்கம், இப்போதும் கம்பா் என்றும் புலவா்களைச் சுட்டும்போது ‘அவா், இவா்’ என்றும் மட்டுமே உரைக்கத் தோன்றுகிறது.
கம்பா் காவியத்தை எழுத்தண்ணிப் பயின்றிருந்தாா். இராம வனவாசத்தின் 14 ஆண்டுகள் குறித்தும் இராம சகோதரா்களாகப் போற்றப்படுகிற குகன், சுக்ரீவன், வீடணன் ஆகியோரைத் தம்பியா் அன்று, தமையன்மாா் என்பது குறித்தும் தெ.ஞா. மேற்கொண்ட ஆய்வுகளும் துல்லியக் கணிப்புகளும், கம்பா் பெயா் நிலவும் வரையில், உசாத்துணைகளாக உலவும்.
