ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வரலாற்றுப் பொக்கிஷங்கள்!

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
Updated On :17 ஜூன் 2026, 5:01 am IST

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 21 பெரிய செப்பேடுகளையும், 3 சிறிய செப்பேடுகளையும் கொண்டுள்ள இவை சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாகத் திகழ்கின்றன. செப்பேடுகளைக் கொண்டுவருவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை நீண்டகாலம் மேற்கொண்டாலும் தற்போது அவை சாத்தியமாகியிருக்கிறது. இந்த சோழர்கால செப்பேடுகள் என்ன சொல்ல வருகின்றன? அவை நெதர்லாந்து சென்றதன் பின்னணி என்ன என்பதையும் பார்ப்போம்.

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் சோழர்கால செப்பேடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. "ஆனைமங்கல செப்பேடுகள்' என அழைக்கப்படும் இவை சோழர்களின் வரலாறு குறித்து முக்கிய ஆவணமாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்த நெதர்லாந்து நாட்டினர் பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சோழ மண்டல கடற்கரைகளில் உள்ள சில இடங்களில் சுமார் 200 நூற்றாண்டுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். அப்போது, இந்த செப்பேட்டுத் தொகுதிகள் இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்திய தொல்லியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டச்சு காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சோழர்கால செப்பேடுகள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. 1862-ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் இவை பாதுகாக்கப்பட்டிருப்பதாகத் தொல்லியல் கழகம் தெரிவித்தது. லெய்டன் பல்கலை. அருங்காட்சியகத்தில் செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இவை முழுதாகப் படிக்கப்பட்டு விட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த செப்பேடுகள் இரண்டு காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 செப்பேடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்திர சோழனால் அளிக்கப்பட்டுள்ளது. 3 செப்பேடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி ராஜேந்திர சோழனின் பேரனான முதலாம் குலோத்துங்க சோழனால் வழங்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழன் வழங்கிய செப்பேடுகள் ஒரு மிகப் பெரிய வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வளையத்தின் முகப்பு ராஜேந்திர சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 21 செப்பேடுகளில், 5 சம்ஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. தானமாகக் கொடுத்தவை தமிழ் மொழியிலும், மன்னரின் புகழ் குறித்தும், வரலாறு குறித்தும் சம்ஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. இவை சோழ நாடு தவிர்த்து மற்றவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவிக்கிறார். இந்த செப்பேடுகள் குறித்த விவரங்கள் "தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள்' என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள செப்பேடுகள் சோழ மன்னர்களின் வம்சாவளியைக் குறிப்பிடுகிறது. தமிழ் மொழியில் உள்ள செப்பேடுகள் ராஜராஜ சோழன் ஆட்சியின் சாதனைகளைக் கூறுகிறது.

கி.பி. 985 முதல் 1012 வரை நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த "சூடாமணி விகாரம்' என்ற பெüத்த மடாலயத்துக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தை மானியமாக வழங்கியதை ஆவணப்படுத்தும் விதமாக செப்பேடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சைவ மதத்துக்கு மட்டுமல்லாமல், பெüத்த மதத்துக்கும் சோழர்கள் ஆட்சி உதவியாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. டச்சு ஆட்சிக்காலத்தில் கேம்பர் என்பவர் மூலம் செப்பேடுகள் நெதர்லாந்து சென்றிருக்கின்றன என்று வரலாற்று ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.இந்த சோழர்கால செப்பேடுகளை கேம்பரின் வம்சாவளியினர் பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட சிலைகளை நெதர்லாந்து திருப்பிக் கொடுத்தது. அதன் அடிப்படையில், சோழர்கால செப்பேடுகளைத் திருப்பித் தரும் முயற்சிகளும் தொடங்கின. நீண்டகாலமாகக் காட்சிப்படுத்தி வைத்திருந்த சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் அந்த நாட்டின் வெளிநாட்டுப் பயணத்தின் போது ஒப்படைக்கப்பட்டன. தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான இந்தச் செப்பேடுகள், பாரதம் திரும்பியது ஒரு வரலாற்றுத் தருணமாகும்.

ஆனைமங்கலம் செப்பேடுகளின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை சோழர்களின் வரலாற்றில் முதன்முதலில் ஒளியைப் பாய்ச்சிய பெருமை இந்தச் செப்பேடுகளையே சேரும். 1700-களில் ப்ளோரென்டியஸ் கேம்பர் என்ற பாதிரியாரால் நெதர்லாந்துக்கு இந்தச் செப்பேடுகள் நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டன. அக்காலகட்டத்தில் நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அந்நியர்களின் தாக்குதலின் போது பூமியில் புதையுண்டு இருந்ததாகவும், அவை தோண்டியெடுக்கப்பட்ட பிறகு பாதிரியாரின் கைக்குச் சென்றதாகவும் லெய்டன் பலகலைக்கழகத்தில் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கேம்பர் பாதியாரின் குடும்பதினரிடம் நீண்ட காலம் இருந்தது, 1868-ஆம் ஆண்டு இந்தச் செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதன் காரணமாகவே இது "லெய்டன் செப்பேடுகள்' என்று அழைக்கப்பட்டன.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய கடற்படையைக் கொண்டு கடல் கடந்த தேசங்களையெல்லாம் நடுங்கச் செய்தவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் தங்கள் வெற்றிகளையும், கொடைகளையும் வெறும் காற்றில் எழுதி விட்டுப் போகவில்லை. காலத்தால் அழியாத செப்புத் தகடுகளில் செதுக்கி வைத்தார்கள். அப்படி செதுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பேரதிசயம்தான் ஆனைமங்கலம் செப்பேடுகள்.

காலனித்துவ ஆட்சிக்காலத்தில் நம் மண்ணிலிருந்து விட்டுத் திருடப்பட்டு நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் முடங்கிக் கிடந்த இந்தத் தமிழர்களின் ஆகச்சிறந்த பொக்கிஷம் இப்போது மீண்டும் தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறது. மதநல்லிணக்கத்துக்குப் பெயர் பெற்ற ராஜராஜ சோழன் அந்த பெüத்த விகாரின் பராமரிப்புச் செலவுகளுக்காக ஆனைமங்கலம் கிராமத்தில் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். சண்டையில் அந்த வரலாற்று ஆணையை அவரது வீரம் செறிந்த மகன் முதலாம் ராஜேந்திர சோழன் செப்புத் தகடுகளில் நிரந்தர சாசனமாகக் குறித்து வைக்கிறார்-இதுவே ஆனைமங்கலம் செப்பேடு. 30 கிலோ எடை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 21 செப்பேடுகள்- இதுவே சோழர்கள் காலத்துக்குத் தந்த நன்கொடை.

ராஜேந்திர சோழன் காலத்து கல்வி, கலாசாரம், அரசியல், கட்டடக் கலை, பொருளாதாரம் மற்றும் ஆட்சியமைப்பு பற்றிய குறிப்புகள் இதில் அணுஅணுவாக இடம்பெற்றிருக்கின்றன. 26 கிராமங்கள் தானம், ஆமூர், நாணலூர், புத்தாகுடி, மூஞ்சிகுடி, சந்திரபாடி, உதயமார்த்தாண்டநல்லூர் உள்ளிட்ட ஊர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ராஜராஜ சோழனின் சாதனைகளுடன் 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை இதன் மூலம் அறியலாம். ஒருவேளை இந்த செப்பேடுகள் மட்டும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் உலகப் புகழ்பெற்ற சோழப் பேரரசின் முழுமையான வரலாற்றை நாம் வரிசைப்படுத்தி அறிய முடியாமலே போயிருக்கும். சோழர்களின் முழுமையான வரலாற்றை நாம் வரிசைப்படுத்தி அறிவதற்கு திருவாலங்காடு, கரந்தை, திருக்களர், எசாலம் மற்றும் ஆனைமங்கலம் ஆகிய 5 முக்கிய செப்பேடுகள்தான் நமக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

பொதுவாகவே, கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளைவிட செப்பேடுகளே மன்னரின் நேரடி ஆணைக்கான சாசனங்கள். ஓலைச்சுவடிகள்போல இவை இயற்கைச் சீற்றத்தால் அழிவதில்லை. ஆனால், செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் பிற்காலத்தில் பாத்திரங்களாக உருக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய இழப்புகளையும் தாண்டி நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்.

கி.பி. 1026-இல் ராஜேந்திர சோழன் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். அங்கு பிரம்மாண்ட அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார். சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய அந்த வரலாற்று நகரம் 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்பால் அரண்மனைகளும், மதில்களும் தகர்க்கப்பட்டு முற்றிலும் சிதைக்கப்பட்டது.

மேலும், வேதனையான விஷயம் என்னவென்றால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவையாறு கொள்ளிடம் ஆற்றுப்பாலம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் உள்திருச்சுற்று மதில்களில் இருந்து நம் முன்னோர் செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுப் பாறைகளைத் தூண்களாகப் பயன்படுத்தினர். இன்னும் அந்த எழுத்து வரிகளைப் பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் நாம் காண முடியும். சோழர்களின் இத்தகையப் பெருமைகளைத் தாங்கிய செப்பேடுகள் ஆங்கிலேயர் காலத்தில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டன. அப்படி கடத்தப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள்தான் இப்போது நல்லெண்ண அடிப்படையில் திரும்பியிருப்பது நம் வரலாற்று ஆய்வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.