அண்மைக்காலமாக, போதை ஒழிப்பு குறித்த கருத்தாக்கம் பரவலாகப் பேசுபொருளாகி வருகிறது. அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி, இளையோர் நலம் பேணுதல் இன்றியமையாதது அது என்ற நிலையில் செயல் வடிவம் பெற்றால் நன்று. அந்த வரிசையில் நம் கண் முன்னால், வளர்ந்து வரும் அதீத போதை, கைப்பேசிக் கருவிப் பயன்பாடு.
உலக அளவில் தனிநபரின் கைப்பேசிப் பயன்பாடு என்பது ஒருநாளில், நாலரை மணிமுதல் ஏழு மணி நேரம் என்கிறார்கள். இந்தியாவில் ஐந்து மணிநேரத்திற்குக் குறைவின்றி, அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவோர் இருக்கிறார்கள். அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, இது மிக அதிகம். அண்மைய ஆய்வு முடிவின்படி, சராசரியாக, ஒரு நாளைக்கு 77 முதல் 100 முறைக்குமேல் தன் கைப்பேசியைப் பதின்ம வயதினர் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. கவனித்துப் பார்த்தால், இந்தப் போதைக்கு உள்ளானவர்களில் அதிக வயது பேதமில்லை என்றே சொல்ல வேண்டும்.
அன்றாடம் காலை உலாவலுக்கு வரும் முதியவர்களுள் இருவர் களைப்பா(ற்)றிக் கொள்ளும் தருணத்தில் பேசிக் கொண்டது என் கவனத்தை ஈர்த்தது.
"ஊருக்குப் போயிருப்பீர்கள் என நினைத்திருந்தேன். ஆனால், உங்களிடம் காணும் மாற்றம் உடல் நலம் குறைந்த மாதிரி தெரிகிறது. என்ன காரணம்?' எனக் கேட்ட தன் நண்பரிடம், அவர் சொன்ன பதில் அதிர்ச்சி உண்டாக்கியது.
"சும்மாதான் இருக்கிறோமே என்று மகன் வாங்கித் தந்த அறிதிறன்பேசியைத் துழாவ ஆரம்பித்தேன். பேரக் குழந்தைகளிடம் பயன்படுத்தும் முறையைக் கேட்டுப் பழகத் தொடங்கியது, என் நேரக் கொள்ளி ஆனது. இரவு பகலாக ஸ்டேட்டஸ் போடுவது, ரீல்ஸ் பார்ப்பது, ஃபேஸ்புக்கில் பதிவிடுவது என வளர்ந்தது. தொடக்கத்தில் உற்சாகமாக இருந்தது. இளமை திரும்பின மாதிரி உற்சாகம். இவ்வளவு நாள் போனதே தெரியவில்லை. குடும்ப மருத்துவரும் விடுமுறைக்கு ஊருக்குப் போய்விட்டார்.
நேற்று வழக்கமான மருத்துவப் பரிசீலனைக்குச் சென்றபோது, சர்க்கரை, ரத்த அழுத்தம் என எல்லாமும் கூடிவிட்டிருக்கிறது. இத்தனைக்கும் மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிட்டிருக்கிறேன். கண்களில் தெரிந்த மாற்றத்தைக் கொண்டு காரணத்தை அவர்தான் கண்டுபிடித்துச் சொன்னார்.
பகலெல்லாம் எதையாவது பார்க்கிறதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இரவு வேளையில் விழிப்பு வந்த பிறகு, நேரம் என்ன என்பதைப் பார்ப்பதுபோல் தொடங்கிய பழக்கம், திரும்பவும் அந்தக் கருவிக்குள் மூழ்கவைத்துவிட்டது.
முதலில் இந்தக் கருவியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப் போய்விட்டேன். இன்றைக்குக் கட்டாயமாக உதறிவிட்டு வந்திருக்கிறேன். இனி பழையபடி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். பாருங்கள்; இப்போது மணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளக் கைப்பேசியைத் திறந்துவிட்டால் என் பதிவுக்கு எத்தனை பேர் பதிலிட்டிருக்கிறார்கள்?
எத்தனை பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்? என்று பார்க்கிற புத்தி வந்துவிடுகிறது' என்று சின்னக் குழந்தைபோல் அவர் சிரித்துக் கொண்டு சொன்னார்.
"உங்ககிட்ட சொல்றதுக்கென்ன, எதைப் பார்க்கிறோம் என்கிற விவஸ்தையே இல்லாம, வந்ததையெல்லாம் பார்த்துப் பார்த்து என் கண்ணும் உடலும் மட்டுமில்லே, மனசும் கெட்டுப் போச்சு' என்று விசும்பலுடன் கூறியது கேட்க வருத்தமாக இருந்தது.
உண்மைதான். பழக்கமாகத் தொடங்கி, வழக்கமாக வளர்ந்து, முழுக்கவும் தன்வயப்படுத்தி மனங்களை ஆட்கொள்ளும் கருவி, குருவாக உயர்ந்து பலவற்றைப் போதிக்கத் தொடங்கி விடுகிறது. உடல் நலம், மன நலம் என்கிற பெயரில், உணவு, உடை, நாகரிகம், அனுபவம் என உதவுவதுபோல் முன் வரும் பதிவுகள் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றன. பின்னர், அடிமனதில் ஒளிந்திருக்கும் ஆசாபாசங்களை மெல்லத் தூண்டி தீனி போட்டுவிடுகின்றன. இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியாமலேயே அதுவாகவே நம்மை ஆக்கிவிடுகிற நிலை.
ஆப்பதனை அசைத்துவிட்ட
குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
என்று பட்டினத்தார் பாடுகிற அவலத்துக்கு நம்மை உள்ளாக்கிவிட்டு விடுகிறது.
ஒரு குரங்கு, மரக்கிளையில் இருந்தபடி, அந்த மர நிழலில் அறுக்கக் கொணர்ந்த மரத்தைப் பிளந்து பணி செய்யும் தச்சரை வேடிக்கை பார்க்கிறது. பெரு மரம் ஒன்றைப் பிளக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். சுத்தியல் உளி கொண்டுஅம்மரத்தில் சிறு பிளவை முதலில் உருவாக்குகிறார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட சிறு கட்டையை (அதுதான் ஆப்பு) அப்பிளவில் திணிக்கிறார். சுத்தியல் மாதிரியான கொட்டாப்புளி கொண்டு அதன் தலைப்பகுதியில் அடிக்கிறார். ஆப்பு உள்ளே இறங்குகிறது. அதை மெல்ல மெல்ல அசைக்கிறார். அது பெருமரத்தில் விரிசலை ஏற்படுத்தி, பிளவைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறது. அது நெடுமரமும் கூட.
நெடுநேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குரங்கு, தச்சர் உணவு இடைவேளைக்குச் சென்ற நேரம் பார்த்து, அவரைப் போலவே செயல்படத் தொடங்கியது. வேடிக்கையாகத் தொடங்கிய இவ்விளையாட்டு, சுவாரசியமாகி வளர்ந்தது. அசைக்க முடியாத நிலையில் ஆப்பு இறங்கிவிட்டது. மரத்தின் இருமருங்கிலும் கால் போட்டுக் கொண்டு ஏறி அமர்ந்தபடி குரங்கானது, தனது கைகளையும் கால்களையும் பயன்படுத்தி வலிந்து அசைத்து அசைத்து இழுத்தே விட்டது. அந்த நேரம் பார்த்து, தச்சரும் வந்துவிட, மீண்டும் மரக்கிளைக்குத் தாவப் போகும்போதுதான், ஆப்புக் கழன்ற இடைவெளியில் தன் கால் அகப்பட்டுக் கொண்டது தெரியவருகிறது.
ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு, அப்புறம் வெளிவர முடியாத நிலையில், பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகியுங்கள் என்று விட்டுவிட்டுத் தன் காலத்து அனுபவக் கதையினை விவரிக்கிறார் பட்டினத்தடிகள்.
நாப்பிளக்கப் பொய்யுரைத்து
நவநிதியம் தேடி
நலம் ஒன்றும் அறியாத
நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகை அறியீர்
கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட
குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.
காம வயப்பட்டு இல்லறமரபு மீறிய மனிதர்களுக்கு அவர் உரைத்த அறம், ஆசை வயப்பட்டு கைப்பேசிக் கவர்ச்சியில் இறங்கிய மனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்திவருகிறது.
ஒரு காலத்தில் தொலைக்காட்சி, இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக இருந்தது. ஆனால், அப்பெட்டிக்கும் பார்ப்பவர்க்கும் இடைவெளியிருந்தது. அது கணினியாகி வந்தபோது இடைவெளி குறைந்தது. குழந்தைபோல், மடியேறி அமர்ந்த கணினி, கையளவில் சுருங்கியபிறகு, அதுவே அனைவரையும் கையகப்படுத்திவிட்டது.
பொதுவெளியில் பேச, எழுதக் கூசும் வாசகங்கள் வெகுஇயல்பாய்ப் பதிவிடப்படுகின்றன. முதலில் அநாகரிகம் என்று முகச்சுழிப்போடு கடந்துபோனாலும், அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் தொடங்கியதைப் பார்த்து இதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்களுக்கு முன்னதாகவே அது புரிந்துகொண்டு அம்மாதிரியான பதிவுகளைக் கவனத்தில் கொண்டுவந்து கையகப்படுத்திவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. இயல்பானதுதான் என்கிற மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. இந்த இடத்தில் உறுதியற்ற மனத்தவர்கள் வயதுவேறுபாடின்றி, வசியப்பட்டுவிடுகிறபோது, தனி மனித அளவிலான தவறுகள் குற்றங்களாக வளர்ந்து பொதுவெளியில் சட்ட ஒழுங்கு மீறல்களுக்கு வழிகோலிவிடுகின்றன.
நேரத்தைக் கையகப்படுத்தி, ஆளையே காலி செய்துவிடுகிற அவலத்துக்கு கையேறிய இந்தக் கருவியின் பயன்பாடு எல்லை மிகுந்து போயிருக்கிறது. அந்தப் பெரியவர் சொல்லியதுபோல், "சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதுமாதிரிதான்.'
எத்தனை விழிப்புணர்வுப் பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த விழிப் புணர்வில் இருந்து மீட்க முடியாத போக்கு மிகுந்துகொண்டே போகிறது. யார் எதுவரை எதைப் பார்க்கலாம் என்ற வரம்பின்றி விரியும் இந்தப் பயன்பாடு பயமுறுத்தும் சமூக விரோதப் போக்காகவே வளர்ந்து வருகிறது. நடைமுறையில் அறிய வரும் பல்வேறு குற்றங்களின் பெருக்கத்துக்கு இதுவே நாற்றங்கால் என்பதும் தெரிகிறது.
இது மிகைப்படுத்தப்பட்ட பதிவாக எனக்கும் கூட முதலில் தோன்றியது. இன்றைக்கு, பால் வேறுபாடின்றி, வயது பேதமின்றி கால நேரக் கணக்கின்றி வளர்ந்து வரும் இப்பழக்கம், மதுவைவிட, மற்ற போதைகளைவிட, நம்முள் புகுந்து நம்மையே நமக்கு எதிரியாக ஆக்கி, மனிதகுல விரோத மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது என்பதுதான் உண்மை.
இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்பதே நடைமுறைக்கு வரவேண்டிய கட்டாயக் கடமை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கவியுடன் நடிக்க வேண்டாம்..! ரசிகையின் கடிதத்திற்குச் சுவாரஸ்யமாக பதிலளித்த விஜய்!

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
இளையராஜா - 75 கேள்விகளும் பதில்களும்!
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




