பூங்குழலி
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணிபுரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணிபுரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அதிகபட்சமாக 8 அல்லது 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு ஒத்த உடல் வளர்ச்சியையே கொண்டிருந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவே இது என்பது வெளிப்படையான உண்மை.
பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படும் நிலையில், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் காலை உணவுக்கான சாத்தியமின்றி வீட்டிலிருந்து ஒருவேளை உணவு மட்டுமே எடுத்து வரும் சூழல் உள்ளது. அதையும்கூட கொண்டு வர இயலாத நிலையில் பல மாணவர்கள் உள்ளனர் என்பதே உண்மை.
இது வெறும் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் வளர்ச்சி சார்ந்த பிரச்னையாக மட்டும் இல்லை. பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்கான மாணவர்களின் திறனையும் பாதிக்கும் ஒரு சமூகச் சிக்கல். இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட நீதி ஆயோக் அறிக்கை, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்புக்கு 87 சதவீதம் மாணவர்களே செல்கின்றனர் எனச் சொல்கிறது.
தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்குச் செல்வது 96.7 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது 96.6 சதவீதமாகவும் இருக்கும் நிலையில், மேல்நிலைக்குச் செல்லும் கட்டத்தில் இது 87 சதவீதமாக சரிகிறது. அதிலும் மேல்நிலைக் கல்வியைத் தொடங்கும் மாணவர்களில் 8.5 சதவீதத்தினர் அதை முடிப்பதில்லை என்கிறது அந்த அறிக்கை. எண்ணிக்கையில் பார்த்தால் இது சுமார் 80,000 மாணவர்களாகும்.
உலகெங்கும் மாணவர்களை பள்ளிக்கு வரவைப்பதில் உணவு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது எனப் பல ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
அரசுப் பள்ளிகளில் உணவு வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்து, மு.க. ஸ்டாலினின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் காலை உணவுத் திட்டமாகவும் வளர்ந்துள்ளது. அண்மையில் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை மேற்கோள் காட்டி, இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அதன் விளைவாக "பிரதம மந்திரி போஷண்' என்ற பெயரில் நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டம் தொடங்கிய பிறகு, பள்ளிக்கு வரும் மாணவர்களின் 10 முதல் 20 சதவீதம் அதிகரித்திருப்பதுடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. மேலும், காலை உணவுத் திட்டம் குறித்து கடந்த ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுவால் வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கிராமப்புற மற்றும் மலைவாழ் குழந்தைகளிடையே அதிகமாக காணப்படும் ரத்த சோகை போன்ற குறைபாடுகளை குறைக்கும் விதமாக காலை உணவுத் திட்டம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு, பத்தாம் வகுப்பு வரை மதிய உணவு என்பது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கை வகிப்பதை யாரும் மறுக்க இயலாது. பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் உணவு உண்டு வளர்ந்த குழந்தைகள் திடீரென 11, 12-ஆம் வகுப்பில் வீட்டிலிருந்து உணவு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்படுவது என்பது பல மாணவர்களின் வாழ்வில் சாத்தியமாக இருப்பதில்லை.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரையே உள்ளது. பெற்றோர் பெரும்பாலும் கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாக உள்ளனர். அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கு உதவியாக பிள்ளைகள் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதிலும் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் வயதில் உள்ள மாணவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்கிறார்கள். அதற்கிடையில் அவர்கள் படிப்பையும் கவனிப்பது என்பதே பெரிதாக உள்ளது. அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் பெற்றோரின் சுமையைக் குறைக்கவே அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பல பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதிலும் விளையாட்டில் திறனும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் அதிகாலையிலேயே பயிற்சிக்கு வந்து, பின்னர் மீண்டும் மாலையில் பயிற்சி முடிந்த பிறகே வீட்டுக்குச் செல்கின்றனர். சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை மாணவர்கள் பள்ளியிலேயே இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஒருவேளையேனும் நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவை உண்பது என்பது அடிப்படைத் தேவையாக உள்ளது. அது மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் விளைவாக அவர்கள் விளையாட்டில் பங்கெடுப்பதையும் ஊக்கப்படுத்தும்.
மேல்நிலைப் பள்ளி வரை மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்த வேண்டும். பள்ளியில் தொடர்ந்து இருக்கவும், ஆரோக்கியமாக வளரவும், கற்றலிலும் விளையாட்டிலும் முன்னேறவும் உணவு என்பது ஒரு நலத் திட்டம் மட்டுமல்ல; கல்விக்கான அடிப்படை உள்கட்டமைப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு
ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாக 19,485 மாணவா்கள் சோ்க்கை

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




