பெ.நா. மாறன்
தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை பார்த்தோம். இதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் அவரவர் ஆட்சிக் காலங்களின் தொடக்கங்களில் வெளியிட்ட பல அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம்.
வெள்ளை அறிக்கை குறித்த அறிவிப்பு வந்த உடனேயே இப்போதெல்லாம் கடைக்கோடி மக்கள் வரை அதன் முடிவைச் சொல்லி விடுகிறார்கள்: இப்போ என்ன, தேர்தலுக்கு முன்பு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் இல்லை. உங்களுக்குத் தேவை கால அவகாசம், எங்கள் மறதி அல்லது பெருந்தன்மையான மன்னிப்பு. அவ்வளவுதானே?
பொதுமக்கள், தாம் ஆதரவு அளிக்கும் எந்தத் தலைவரையும் சொடுக்குப் போட்டாற்போல் ஒரு விநாடியில் தூக்கி எறிந்து விடுவதில்லை. அவருடைய முதல் தவறுக்காகவோ, அவர் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதற்காகவோ அவரை வெறுத்து ஒதுக்கி விடுவதில்லை. நிறைய மன்னிக்கிறார்கள்; நிறைய சமரசங்களுக்குத் தயாராக இருக்கிறார்கள்.
சில சமயங்களில் சரியான திருப்தியான மாற்று கண்களில் படாத காரணத்தாலும் சகித்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களுடைய சகிப்புத்தன்மையையும், மெளனத்தையும் தப்பர்த்தம் செய்து கொள்ளும் தலைவர்களின் செயல்களால் சலிப்படையும் நிலைக்குப் போகும்போது ஒரு நம்பிக்கையான மாற்று சக்தி மக்கள் கண்களில் பட்டதென்றால் அதுவரையில் உச்சத்தில் இருந்த தலைவர்களைக்கூட அவர்கள் செய்த சில பல நன்மைகளையும் மறந்து புதிய மாறுதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க முன்வந்து விடுகிறார்கள்.
வெள்ளை அறிக்கையின் மையப்புள்ளி பொதுவாக மாநிலத்தின் கடன் சுமை குறித்தது. 1967-இல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது, மாநில கடன் சுமார் ரூ. 300 கோடி. (தனிமனித கடன் சுமை சராசரி ரூ. 60 மட்டுமே). அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 2006-ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்தபோது, மாநிலத்தின் மொத்த கடன் ரூ.57,000 கோடி (தனிமனித கடன் சுமை ரூ. 8,500) என்று ஆகியிருந்தது. அதன் பிறகான நான்கு அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் அது ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்து தனிமனித கடன் சுமை சுமார் ரூ.1.29 லட்சமாக ஆகியிருக்கிறது.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி, தனி மனித வருமான வளர்ச்சி போன்ற பெரிய காரணிகளுக்குள் எல்லாம் ஒரு சாமானிய மனிதன் சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை.
தன் வாழ்வுக்கு அவன் வாங்கியுள்ள கடன்கள், அதிலே ஏற்பட்டிருக்கும் சுமைகள் குறித்த சொந்தக் கவலைகளில் உழன்று கொண்டிருக்கும் அவனிடம் இந்த மாநிலக் கடன் குறித்து மீண்டும் மீண்டும் சொல்வதில், ஏதோ திடீரென்று ஒருநாள் காலை அவன் வீட்டு வாசலில் அரசு ஜப்திக்கு போய் நின்று, "இவ்வளவு தொகை நீங்கள் அரசின் சார்பிலான கடனைத் தர வேண்டி இருக்கிறது' என்று பறித்துக் கொண்டு விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துவதைத் தவிர, இந்தக் கடன் சுமை குறித்த விவாதங்களால் என்ன பயன்?
"அரசு தானே கடன் வாங்குகிறது; தனிமனிதனாக உனக்கு என்ன பிரச்னை' என்ற கோணத்திலும் ஒரு விவாதம் நடக்கிறது. "இந்தத் தொகைக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதை அரசு பார்த்துக்கொள்ளும்.
இந்திய ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலையின்றி உங்கள் தனிமனித வாழ்க்கையை தொடருங்கள்' என்பது சரியான வாதமா?
கடன்தொகை அதிகரித்தால் மாநில வருவாயின் பெரும்பகுதி வட்டியாகப் போவதில் வீணாகுமே; அந்தப் பணம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகிக்க முடியாமல் போகின்ற தொகை தானே என்ற கோணத்தை விட்டுவிட முடியுமா? தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் வட்டிக்காகக் கொடுக்கப்பட்ட தொகை 2005-06-ஆம் ஆண்டில் 14 சதவீதமாக இருந்தது; இப்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொகையாகப் பார்த்தால் 2005-06-ஆம் ஆண்டில் ரூ. 18,000 கோடி வட்டிப் பணமாகச் சென்றது; இப்போது ரூ. 60,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
2025-26-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வட்டியாகத் தரப்பட்ட தொகை ரூ. 62,000 கோடி. அது பள்ளிக் கல்வித் துறைக்குச் செலவழிக்கப்பட்ட தொகையைவிட ஒன்றரை மடங்கு அதிகம்; சுகாதாரத் துறைக்குச் செலவழிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு; உழவர் மற்றும் வேளாண்மை துறைக்குச் செலவழிக்கப்பட்டதைவிட நான்கு மடங்கு; நீர்வளத் துறைக்குச் செலவழிக்கப்பட்டதைவிட ஒன்பது மடங்கு; தொழில் மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு செலவழிக்கப்பட்டதைவிட 12 மடங்கு அதிகம் என்று பார்த்தால் அதன் தீவிரம் புரியும்.
புதிய அரசின் முன் உள்ள பெரிய சவால்கள் இவைதான். வருவாயைப் பெருக்க வேண்டும்; கடன் இன்னும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்; மிஞ்சுகிற வட்டிச் சுமை மாநிலத்தின் திட்டங்களுக்கு உபயோகமாக வேண்டும். நிர்வாகச் செலவைக் குறைக்க வேண்டும்.
"ஆகுஆறு அளவு இட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை'
என்கிற திருவள்ளுவரின் அறிவுரைக்கு மாறாக, செலவினங்களைக் கட்டுப்படுத்த இயலாத நிலை. சமூக முன்னேற்ற முதலீடு என்கிற பெயரில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் தொடர்ந்தே ஆக வேண்டிய நிலை. மாநிலத்தின் நிதி நிலை குறித்த புரிதல் இருந்தோ இல்லாமலோ மிகப் பெரிய அளவிலான பொருளாதாரச் சுமைகளை உள்ளடக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது இன்றைய ஆளுங்கட்சி.
நல்வாய்ப்பாக, இன்றைய ஆட்சியாளருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் இப்போதைய நிதி நெருக்கடி சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதிகள் எவையும் சில ஆண்டுகளுக்காவது நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதற்கான மனத் தயாரிப்புடன் இருக்கிறார்கள். எனவே, ஆளும் கட்சி தானாகக் கிடைத்திருக்கும் இந்த இயற்கையான சலுகையைப் பயன்படுத்தி நிர்வாகத்தில் தீவிரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியம்.
திட்டங்களுக்காக செலவழிக்கப்படும் தொகையில் அவசியமான செலவினத்தைத் தாண்டி, ஊழலாக 20 முதல் 30 சதவீதம் வரை விநியோகம் ஆகிறது. அதைத் தடுத்து நிறுத்தினால் புதிய திட்டங்களுக்கான வருவாய் கிடைத்து விடும் என்று பிரசாரங்களின்போது சொல்லப்பட்டது.
மாநில வருவாயைத் தங்கத்துடனும், திட்டம் சார்ந்த ஒப்பந்தச் செலவுகளை தங்க நகை செய்வதோடும் ஒப்பிடலாம். அதில் அழகான ஆபரணங்கள் உருவாக தவிர்க்க இயலாத சேதாரம் என்று ஒருபகுதி இருந்தே தீரும். சேதாரம் அளவுக்கு அதிகம் என்றால் அது ஊழல். சேதாரத்தை மிகவும் குறைத்தால் நகையின் தரத்தில் குறைபாடு இருக்கும். நேர்மையானவர் கைகளில் கிடைக்கும் தங்கம் மட்டுமே தரமான அணிகலனாக உருவாகும்.
அரசு பொதுப் பணம் தவறான திசைகளில் பயணிப்பதை அதிதீவிரக் கண்காணிப்புகளுடன் அறவே தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அவசியம். இது கோட்பாடாகச் சொல்வதற்கு எளிது. நடைமுறையில் கொண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனமும் சுய கடப்பாடும் அவசியம். ஆட்சி மாற்றங்களின்போதும் புதிய ஆட்சியாளர்கள் வரும்போதும் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்பது இந்த விஷயத்தைத்தான். ஊழல் தடுப்புக்காக ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தி நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் செய்ய வேண்டும்.
புதிய தொழிற்சாலைகளும், பாலங்களும், நூலகங்களும், பூங்காக்களும் வேண்டுமா அல்லது தினசரி வாழ்வில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வேலைகளும் எளிய தேவைகளும் நிறைவடையும் நிலை வேண்டுமா என்று கேட்டால் 100 சதவீதம் எல்லா மக்களும் இரண்டாவது விஷயத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. எத்தனை மக்கள் எந்தத் தேவைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிற சரியான விகிதாசாரத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதுதான் சிறப்பான ஆட்சிக்கான வெற்றி என்பது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (ஒருவன் தவறு செய்யும் போது கடுமையாகச் சொல்லி இடித்துத் திருத்துகிற நண்பன் இல்லாதவனை அழிக்க அடுத்தவர் தேவை இல்லை; தானாகவே கெட்டழிவான்) என்று சொன்ன வள்ளுவர், இன்னும் ஓர் எச்சரிக்கையை தந்துள்ளார்.
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (கூடவே இருந்து குளிர்விக்கப் பேசி தவறான வழிகளையே காட்டும் துணைவனைவிட எழுபது கோடி எதிரிகள் மேலானவர்கள்). அரசுப் பொறுப்பில் இருப்போர் மறக்கக் கூடாத விதிகள் இவை.
வரிகள் ஏதுமின்றி, அரசின் வருவாயைப் பெருக்குவது என்பது ஓர் அசாதாரண அதீத எதிர்பார்ப்பு. ஆனால், ஊழல் தடுப்பில் தீவிரத்துடன் திட்டம் மற்றும் ஒப்பந்தச் செலவினங்களில் பணத்தை மிச்சம் பிடித்துக் காட்டிய பிறகு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத் தன் நேர்மையை நிரூபித்த பிறகு புதிய வரிகளையோ கட்டண உயர்வுகளையோ அரசு அறிவித்தால் அந்தப் பணம் நம் நன்மைக்கே என்ற நம்பிக்கை வந்து பொதுமக்கள் நிச்சயம் ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டது அரசு

வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற 6 முக்கிய ஆய்வு முடிவுகள்!
தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர்!

கேரளம்: மாநிலத்தின் வருவாயில் 77% ஓய்வூதியம், வட்டிக்கு மட்டுமே செலவிடப்படுகிறதாம்...
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


