போர்நிலை வேண்டாம்!
நாடு காக்கும் வேந்தர்கள் போர் நிலை பெருக்குவதைக் காட்டிலும் நீர்நிலை பெருக்கினால் உலகம் உய்யும் என்கிறார் குடபுலவியனார்.


உலக வாழ்க்கை நிலையற்றது, எல்லா உயிர்களும் எவ்வாறு தோன்றினவோ, அவ்வாறே ஒருநாள் அழிந்துவிடும் தன்மையுடையவைதான். ஆனால், அழிவதற்காகவே எவ்வுயிரும் வாழ்வதில்லை. தான் வாழ்கிற வரையிலும் இந்த உலகத்துக்கு - அதாவது தன்னைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுக்கு உதவியாக இருந்து நிறைவு செய்வதுதான் வாழ்வியல் இலக்கு. எல்லா உயிர்களுக்கும் இது இயல்பு என்றட்லும் மனிதர்களுக்கு மட்டும் இது விதிவிலக்குபோலும்.
தனி மனிதராக இருப்பவர் அடுத்த மனதரை அடக்கியாள நினைக்கிறார். பின்னர் அவரே பலம் பெற்றுத் தனக்குப் பின்னே ஒரு குழுவைச் சேர்த்து இந்தச் சமுதாயத்தைத் தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறார். இன்னும் பலர் தனக்குக் கிடைத்திருக்கிற அதிகார பலத்தைக் கொண்டு ஒரு நாட்டையே தன் சர்வாதிகாரத்தின் பிடியில் அழுத்தித்தன் காலால் மற்றநாட்டு மக்களை அழிக்க நினைக்கிறார்.
தனி ஒரு மனிதனுக்குள் ஏற்படுகிற இந்த ஏகாதிபத்திய வெறி, எத்தனையோ உயிர்களைக் காவுகொண்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை.
அகவாழ்க்கைக்குப் பொருள்தேடும் அற வாழ்வை அறியாமை என்றும், புறவாழ்வுக்குப் பொருள் தேடும் பிழைப்பைப் பெரிதென்றும் நம்பிக் கொண்டிருந்த ஒரு பிற்போக்குத்தனம் தமிழர்தம் அறவியலை எள்ளியது. ஆனால், புறவாழ்வின் நுகர்வு வெறி அறிவியலின் துணையோடு மனிதனை என்ன பாடுபடுத்தும் என்பதை இப்போது உலகம் அறிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் அருளாளர்கள் முன்னே கண்டு கூறியிருக்கிறார்கள்.
பொன்னையும், உயர்வையும், அற்பப் புகழையுமே விரும்புகிற இந்தப் புறவாழ்வை வெறுத்து விட்டு அசுமாகிய ஞானவாழ்வை விரும்பிப் பராசக்தியைச் சரணடைந்த மகாகவி பாரதியார் இப்படிப் பதிவிடுகிறார்.
யேசுவிடம் ஒருநாள் ஒரு மனிதன் வந்து 'ஸ்வாமி? எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன என்று கேட்டான். அதற்கு யேசு சொன்னார்:- ‘ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட என்றார். வந்த மனிதன்:- 'நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் நடத்தி வருகிறேன் என்றான். அப்போது யேசு கிறிஸ்து:- ஒரு குறை இன்னும் உன்னிடத்திலே இருக்கிறது. வீட்டுக்குப் போய் உன்னுடைய சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விடு. உனக்கு மோட்ச செல்வம் உண்டாகும். சிலுவையை (அதாவது வேள்வி விரதத்தை கைக்கொண்டு என்னுடனே வா' என்றார்.
வந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப் போனான். அவன் பெரிய பணக்காரன். அத்தனையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு யேசுவின் பின்னே போவதில் அவன் மனதுக்கு இன்பம் தோன்றவில்லை. அப்போது, யேசு கிறிஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் செல்வமுடையார் மோட்ச ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது' என்றார்.
யேசு கிறிஸ்துவின் இந்தக் கருத்தை மகாத்மா காந்தியடிகள் வழியாகக் கூறிய மகாகவி பாரதியார் மேலும் தொடர்கிறார். மேற்குத் தேசத்தார் தங்களுடைய மேம்பாட்டை பவுன், ஷில்லிங், பென்ஸ் என கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள். அமெரிக்காவின் செல்வத்தை அளவெடையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே எல்லா தேசத்தாருக்கும் அமெரிக்காவைக் கண்டால் பொறாமை. நமது தேசத்தில் சிலர் அமெரிக்காவைப் போல நாமும் செல்வந் தேடுவதே சரியென்றும், ஆனால் அந்த மாதிரி நாம் வேலை செய்ய வேண்டாமென்றும் சொல்லுகிறார்கள். இந்த முயற்சி ஈடேறாது. ஒரு மனிதன் ஏக காலத்தில் உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிலையிலும் இருக்க முடியாது. இயந்திரசாலை, ஆலை இவற்றால் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார். நவீன இயந்திர தந்திரங்களினாலும் அவற்றால் விளையும் செல்வத்தினாலும் இன்பமுண்டாகாது' என்றும் எடுத்துக் காட்டுகிறார்.
இந்த உலகத்தில் எத்தனையோ தொழில்கள் உண்டு. திருவள்ளுவர் எல்லாத் தொழில்களையும் பின்னே தள்ளி விட்டு உழவுத் தொழிலை,
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர்
என்று முன்னிறுத்தக் காரணம் என்ன?
தன்னை வருத்திக் கொண்டு சூழ்ந்து வாழக்கூடிய எல்லா உயிர்களுக்கும் உணவாகிய உயிர்த்தன்மையை அளிக்கிற உன்னதத் தொழில் என்பதனால்தானே. ஆனால், நாம் நவீனகாலத்தில் உழவுத் தொழிலை தாழ்ந்த தொழிலாக நினைத்து வெறுக்கத் தொடங்கினோம். பணம் பெருக்கும் தொழில்களையே பெரிதென்று நம்புகிறோம்.
பணம் பெருத்த நாடுகள் செய்யும் தொழில் என்ன? வறுமை நிறைந்த நாடுகளுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதா? அவற்றையும் தன்னிறைவு பெறச் செய்வதற்கு உதவுவதா? இல்லவே இல்லை. அறிவியலின் துணையோடு ஆயுதங்களைப் பெருக்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. உயிர்களை வாழவைக்கும் உழவுத் தொழிலுக்கு மாற்றாக உயிர்களையெல்லாம் கொடூரமாகக் கொல்லக்கூடிய அத்தனை ஆயுதங்களையும் உருவாக்கும் அழிவுத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றன.
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்து வாழ்வியல் நெறிகளை உலகுக்குச் சொன்ன அகவாழ்வு எங்கே? அதே அணுவைத் துளைத்து ஆயுதமாக்கிச் சூழ வாழ்பவர்களை எதிரிகளெனக் கருதிக் குருதி குடிக்கக் காத்திருக்கும் குரூரப் புறவாழ்வு எங்கே? நவீனம் என்ற பெயரில் நாம் காட்டுமிராண்டித்தனத்தைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். நாம் அணிந்திருக்கும் உடைகளும் தரித்திருக்கும் ஆயுதங்களும் புதுமையாக இருக்கலாம். ஆனால், தம் உள்ளம் கொலைவெறி நிறைந்த மிருகத்தின் குணத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
பேசித் தீர்ப்பதன் மூலம் பேதங்களை அகற்றலாம் என்பதுதான் இலக்கியங்கள் காட்டும் செந்நெறி. இந்தியாவைப் பீடித்திருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சத்தியத்தின் நித்தியத்தைத் தன்வழியாகக் கொண்டு உலகுக்கே அகிம்சை நெறியைப் போதித்த மகாத்மா காந்தியடிகள் தனக்கு முன்னே இருந்த அருளாளர்களின் புனித அகவாழ்வையே போராட்ட வழியாகவும் தேர்ந்தெடுத்தார். இதையும் மகாகவி பாரதியாரே தன் வாக்கால் மெய்ப்பிக்கிறார்.
"ஸ்ரீமான் காந்தி யேசுநாதரை மாத்திரமேயல்லாமல் முஹம்மது, நானக் கபீர், சைதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர், ராமகிருஷ்ணர் என்ற ஞானிகளை எல்லாம் காட்டி, இவ்வனைவரும் வறுமையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றதையும், உலகத்துக்கு நல்ல வழிகாட்டியதையும் நினைவுபடுத்துகிறார். ஆதலால், வறுமை விரதமே உயர்வு என்கிறாரா? ஒரே அடியாக அப்படியும் சொல்லவில்லை. பொன்னைக் காட்டிலும் அதிக உண்மை காட்ட வேண்டும்; அதிகாரத்தைக் காட்டிலும் அதிகதீரம், சுய நலத்தைக் காட்டிலும் அதிக ஈகை - இவை வேண்டும்.
நமது வீடுகளையும், அரண்மனைகளையும், கோயில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக் கோலம் அதிகமாகவும் விளங்கச் செய்வோமானால், நம்மிடத்தில் பாரமான சைன்யமில்லாமலே எதிர்த்து வரும் சேனைக் கூட்டங்களைத் தடுக்கலாம் என்று ஸ்ரீமான் காந்தி சொல்லி வருவதில் எனக்குப் பெரும்பாலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. தெய்வமில்லையென்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லா தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனதில் தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்லவேண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன். தெய்வத்தின் அருள்பெற்றால் மற்ற செல்வங்களெல்லாம் கூடி வரும் என்று யேசு கிறிஸ்து கூறியதை மகாத்மா காந்தி எடுத்துக்காட்டுகிறார். அதுவும் வேதவாக்கியமாம்.
நாம் அறவாழ்வாம் அகவாழ்வையும் மறந்து விட்டோம். பிற உயிர்களுக்காக வாழும் தவ வாழ்வையும் மறந்து விட்டோம். அற்பக் காகிதக் காசுக்காக எதையும் அடமானம் வைக்கத் துணிகிற மடமை பூண்டு விட்டோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஓருலகக் கருத்துணர்வை உலகுக்கு முதன்முதலில் பதியவைத்த தமிழினம் இன்று மீண்டும் தன் போதனையைத் தொடங்கவேண்டிய காலச்சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த உலகம் பொன்னாலோ பொருளாலோ நிலத்தாலோ அல்லாது எதனால் நிலைபெற்றிருக்கிறது என்பதைக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பட்டியலிடுகிறார். நாடு காக்கும் வேந்தர்கள் போர் நிலை பெருக்குவதைக் காட்டிலும் நீர்நிலை பெருக்கினால் உலகம் உய்யும் என்கிறார் குடபுலவியனார்.
'அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள், மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்'
என்கிறார் சாத்தனார். இந்த அறபோதனை காலந்தோறும் இலக்கியங்களில் நீண்டுகொண்டே வருகிறது.
இத்தகைய உயர்ந்த இலக்கியங்கள் சுட்டும் அறம் போற்றும் அகவாழ்வு தேவையா? அழிவுக்கு வழிகாட்டும் புறவாழ்வு தேவையா?-முடிவு செய்ய வேண்டிய சூழல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...