இன்று ஒன்று நன்று
மற்றவர் செய்த தீமையை எடுத்துச் சொல்லும்போதே, அவரை அவ்வாறு செய்யத் தூண்டிய குற்றத்துக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம் என்பது மறைமுக உண்மையாக இருப்பதைப் பற்றி...

மற்றவர் செய்த தீமையை எடுத்துச் சொல்லும்போதே...

மற்றவர் செய்த தீமையை எடுத்துச் சொல்லும்போதே...
'வர வர யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எந்த நேரத்தில் யார் என்னவாக ஆவார்கள் என்றே புரியவில்லை' என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அலுத்துக் கொண்டார் நடைப்பயண நண்பர். எந்த நோக்கத்தில் யாரை மனதில் வைத்துக்கொண்டு அவர் சொன்னார் என்பது தெரியாது. அது அவருக்குள் இருக்கிற ஆதங்கம்; அது மட்டுமல்ல; அது அவரது அந்தரங்கமும்கூட. 'யார் அவர்' என்றும், 'எந்த தருணத்தில் யார் என்னவாக ஆனார்' என்றும் அவரிடம் கேட்கத் தயாராக இல்லை.
அப்படி ஒரு கேள்வியோ, அக்கேள்விக்கான முகக்குறிப்போ என்னிடம் இருந்து வெளிப்படாத காரணத்தால் அவர் ஆதங்கம் பொசுக்கென வற்றிப் போய்விட்டது. சில நிமிஷ மெüனத்துக்குப் பிறகு, அவரே தொடர்ந்தார். 'இன்று மௌன விரதமா?'ஆமோதிப்பதான மெல்லிய புன்சிரிப்பைப் பதிலாகக் கொள்ள அவரால் முடியவில்லை. 'நான் ஏதும் தப்பாகச் சொல்லிவிட்டேனா? நான் சொன்னதுக்குப் பதிலே சொல்லவில்லையே?' மெல்லிய பதற்றம் அவர் குரலில். 'சொல்வதற்கு என்ன இருக்கிறது? அது உங்களின் ஆதங்கம். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?'
'இல்லாமல் சொல்வேனா? அந்த அவர் உங்களுக்கும் வேண்டப்பட்டவர்தான்' பூடகமாகச் சொல்லி நிறுத்தினார். இந்த இடம்தான் ஆபத்தானது; தெரிந்தோ, தெரியாமலோ, நம்மையும் அவர் வரிசையில் சேர்த்துவிடுகிற இடம். அதற்கு இடம் கொடுக்காமல், 'இருக்கட்டுமே. அதனால் என்ன?' என்றேன். 'நாளைக்கு, நீங்களும் அவரிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொன்னேன்' என்று இழுத்தார்.
தான் ஏமாளி ஆனதற்கு அவரைக் காரணர் ஆக்கி விடுகிற வழக்கம் எல்லாருக்கும் பொதுவானதுதான். ஒருவேளை இவரிடம் அவர் ஏமாந்து போகாமல் தப்பித்தும் இருக்கலாம் அல்லவா? அதுகூட இவரை, இவ்வாறு சொல்லவும் வைத்திருக்கும். பின்னரும் மௌனமாக நடந்து கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'உங்களுக்கு அவரைப் பற்றி முன்னரே தெரிந்துவிட்டிருக்கிறது போலும். அதனால்தான் மௌனம் சாதிக்கிறீர்கள்' என்று மீண்டும் தூண்டில் போட்டார்.
'உண்மையில் அவர் யார் என்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை' என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்ல முடியாதே. சொல்லப்படுபவர் யாரோ? ஆனால், சொல்பவர் நண்பராயிற்றே. எனவே, பொதுவாகப் பதில் தரவேண்டிய நிலை. 'நீங்கள் சொன்னது போல, நான் ஒரு விரதத்தைக் கடைப்பிடித்து வருவது உண்மைதான்' என்று நிறுத்தினேன். 'அது என்ன விரதம்' என்று ஆர்வத்துடன் கேட்டார். 'சற்றே விரிவாகச் சொல்ல வேண்டிய விரதம் அது' என்று நிறுத்தித் தொடர்ந்தேன்.
நான்கு பேர் ஒன்றாகக் கூடினால், பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றி கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அதில் ஒருவர் விடைபெற்றுக் கொண்டார் எனில், எஞ்சிய மூவரும் அவரைப் பற்றிக் குறைபட்டுக் கொள்வார்கள். அதிலும் ஒருவர் விடைபெறும் வேளையில், ஏனைய இருவரும் விடைபெற்றவரைப் பற்றி விமர்சனம் செய்துகொள்வார்கள். அவர்களும் பிரிய வேண்டிய நிலை வந்த பிறகு, வெளியில் சொல்லாமல் ஒருவரைப் பற்றிய கருத்தை மற்றொருவர் மனத்தில் ஏற்றிக் கொண்டு போவார்கள். இது மனித சுபாவமாகி விட்டது. அதற்குப் பிறகு மீளவும் அவர்கள் கூடுகிறபோது, யார் யாரைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை, பூடகமாகவோ, ஜோடனை செய்தோ, தருணம் பார்த்தோ, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.
அவ்வாறு நேர்ந்துவிட்டால், அந்தக் கணத்தில், ஏற்படுகிற சலிப்போ, கோபமோ, அவநம்பிக்கையோ என்னவிதமான வாக்காக வெளிப்படும் என்று தெரியாது. அது உறவையும் நம்பிக்கையையும் எப்படியெல்லாமோ பாதிக்கவும் செய்யும் என்பது தெரிந்தும் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர் நமக்குத் தீமை செய்திருந்தால்கூட, அதைப் பிறரிடத்தில் சொல்லும் பழக்கம் நல்லதில்லை. ஒருவேளை, அவர் நமக்கு நல்லது என நினைத்துச் செய்திருக்கலாம்.
'நன்றாற்றலுள்ளும் தவறு உண்டு, அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை' என்று திருவள்ளுவர் சொல்லியது நடைமுறை உண்மை (திருக்குறள்-469). அந்த நல்லது பின்னர் தீயதாகப் போயிருக்கலாம்.
இல்லை, திட்டமிட்டே அவர் தீது புரிந்திருந்தாலும், அதைத் தீயதாக நாம் கருதாத நிலையில், அது நல்லதாக இல்லாவிட்டாலும் தீயதாக ஆகிவிடாதல்லவா? அதுவே, அவரை நல்லவராக ஆக்கிவிடுவதோடு நம்மையும் நல்லவராகக் காட்டி விடுமே.
ஒருவரைத் தீயவராகக் குற்றஞ்சாட்டுவதே நம்மிடம் உள்ள தீய குணத்தை வெளிப்படுத்தி விடுகிறது. அப்படி, மற்றவர் செய்த தீமையை எடுத்துச் சொல்லும்போதே, அவரை அவ்வாறு செய்யத் தூண்டிய குற்றத்துக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம் என்பது மறைமுக உண்மை. 'இவரைப் பற்றித் தெரியாதா, அடுத்தவரைப் பற்றிக் குறை சொல்ல வந்துவிட்டார்' என்று வாய்விட்டோ, மனத்தளவிலோ மற்றவர் நினைக்காமல் இருக்க என்ன உத்தரவாதம்? அதுமட்டுமல்ல, குறையிலாத நிறை எதுவும் இல்லை. தீயதில்லாத நன்றும் இல்லை.
நன்றும் தீதும், குறையும் நிறையும் பார்ப்பவரின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப மாறுபடும். தன் குற்றம் கண்டு நீக்கிப் பிறர் குற்றம் காணத் தலைப்பட்டு விட்டால், எக்குற்றமும் நம் கண்ணில் படாது. அதைவிடவும் நாம் குற்றம் இழைக்கவும் மாட்டோம். 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்ற பழமொழியிலேயே குற்றம் இல்லாத சுற்றம் இல்லை என்ற பொருள் தொனிப்பதைப் பார்க்கலாம்.
அதற்காக, குற்றத்தையே பெரியதாகக் கருத்தில் கொள்வது தகாது. குற்றம் உள்ள இடத்தில் குணமும் இருக்கவே செய்யும். அதனால், குணத்தையே முதலில் நாட வேண்டும். பின்னரே குற்றம் பற்றிய பரிசீலனைக்கு இடம் கொடுக்க வேண்டும். குணத்தின் மறுபக்கம் குற்றமும் இருக்கும். அவற்றுள் எது மிகுதியாக இருக்கிறது என்று தெரிந்து தெளிந்து அதற்கேற்ப, ஒருவரைக் கணிக்கலாமே தவிர, அதைப் பிறரிடம் சொல்வது பெருமைக்கு உரிய செயலாகாது. அவ்வாறு சொல்ல நேரிட்டால், அது அவரைப் பற்றிய மதிப்பீடாக மட்டும் அமையாது நம்மையும் அது உள்ளடக்கிக் காட்டிவிடும். அதுமட்டுமல்ல, அம்மதிப்பீடு தவறாகிவிடும் எனில், அது நம்மையும் குற்றவாளியாக்கி விடும்.
ஒருவர் செய்யும் செயலானது சந்தர்ப்ப சூழலால் நன்றாகவோ, தீயதாகவோ ஆகிவிடுகிறது. மற்றபடி யார் ஒருவரும் தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டு ஒழுகுபவராக இருந்துவிட முடியாது. அறிந்தோ, அறியாமலோ செய்யப்பட்ட தீமையை வைத்து அவரைத் தீயவர் என்று அடையாளப்படுத்தி விடுவது, அவரை எப்போதும் அந்தக் கண்ணோட்டத்திலே நிறுத்திவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த முத்திரையை அவருக்கு இட்ட தீமையைப் புரிந்தவராக நாமும் ஆகிவிடுவோம். அது கொலையினும் கொடிது.
உயிர்க் கொலையை விடவும் ஒருவரது ஆளுமைப் பண்பைக் கொலை செய்யும் பாவத்துக்கு உள்ளாகி விடுகிறோம். 'எவ்வுயிரையும் கொல்லாமையே நல்ல நெறி' என்று அதற்குத் தனி அதிகாரம் படைத்த திருவள்ளுவர், 'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்று முதலில் சொல்லி, அதன் பின் இரண்டாவதாகப் 'பொய்யாமையும் நன்று' என்கிறார் (திருக்குறள்-323). அதற்குப் பொய் கூறாமை என்பது மட்டும் பொருளாகிவிடாது.
மெய்யாகவே, நல்லவராக இருக்கக்கூடியவரை, நம் கண்ணோட்டத்தில் தீயது புரிந்தவராகக் கருதிச் சொல்லிவிட்டால் அதுவும் பொய்யாகிவிடும் அல்லவா? அது அவரது ஆளுமையையே சிதைக்கும் செயலாகிவிடுமே. அதனால், பிறர் தீமையைச் சொல்லாது விடுவது சான்றாண்மை என்கிற திருவள்ளுவர், அதற்கு எடுத்துக்காட்டாகக் கொல்லாமையை முன் வைக்கிறார். உணவுக்காகவோ, பாதுகாப்புக்காகவோ, பிற உயிர்களைக் கொல்லும் தேவைகூடப் பல சமயங்களில் வந்து சேரலாம். ஆனால், பிறர் தீமையைச் சொல்லாமல் இருப்பது எப்போதும் முடியுமே. இது திருவள்ளுவர் நமக்குக் காட்டிய எளிய, இனிய விரதம் இத்திருக்குறளின், 'பிறர் தீமை' என்பதற்குப் 'பிறர் தனக்குச் செய்த குற்றங்கள்' என்றும், 'பிறருடைய குற்றங்கள்' என்றும் பலரும் பொருள் சொல்லி வருகிற நிலையில், நாமக்கல் கவிஞர் இவ்விரண்டையும் மறுத்து, 'பிறருக்குத் தீமை உண்டாகக்கூடிய எதையும் வாயாலும் சொல்லாமை' என்று பொருள் தருகிறார். இது எவ்வளவு சிறந்த நோன்பு. இந்தப் பண்பும் பழக்கமும் தான் இன்றைக்கு நாட்டும் வீட்டுக்கும் தேவை.
இதற்கு முதற்படி, பிறர் தீமையைச் சொல்பவர்களிடம் கேளாமல் இருப்பது. கேட்டாலும் மனக் கொள்ளாமல் இருப்பது. அது அகத்துக்கும் புறத்துக்கும் நல்லது. நம்மை நாமே கெடுத்துக் கொள்ள இடம் கொடுக்க வேண்டாமே. இது மாதிரி அவரே (அவர் யாரே ஆயினும்) உங்களைப் பற்றி என்னிடம் சொன்னாலும் என் நிலை இதுதான்'.
இத்தனை சொல்லியும் ஏற்றுக் கொள்ளாத தயக்கத்துடன் அவர் கேட்டார். 'அப்படியானால் அவர் செய்த தீமையை அப்படியே விட்டுவிடுவதா?' 'அப்படி என்ன தீமை செய்துவிட்டிருப்பார். கொலையே செய்துவிட்டாரா?' 'கொலைக்கு நிகரான கொடுஞ்செயலையே அவர் செய்திருந்தாலும், அவர் எப்போதாவது ஏதாவது ஒரு நல்லது செய்திருக்க மாட்டாரா? அதனை நினைத்துக் கொள்ளுங்கள், தீயது மறந்துபோகும்' என்று அதற்கும் திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் (திருக்குறள்-109)
புன்னகையோடு, நண்பரும் அமைதியாக ஏற்றுக் கொண்டார். 'இன்று ஒன்று நன்று' என்று கொள்ளத்தக்க இந்தச் செய்தியால், தீமையைப் பரப்பும் செயலில் இருந்து ஒருவரை மடைமாற்றம் செய்ய முடிந்தது. இது எல்லாருக்குமானதாகட்டும் என்பதே விழைவு.
கட்டுரையாளர்: பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...