அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத்தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு அரசியல் காரணங்களுக்காக, உள்நோக்கம் கொண்டு கூறப்பட்டது எனப் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழ்நாட்டின் கள நிலவரம் இருந்து வருகிறது.
கள், சாராயம் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் தமிழ் பேசும் மக்களிடையே சங்ககாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது. சங்க காலத்தில் கஞ்சா, ஓபியம் போன்ற போதையூட்டும் பொருள்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவில் இருந்தும், வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலமாகவும் கஞ்சா, ஓபியம் போன்றவை தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமானது.
மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கஞ்சா, ஓபியம் போன்றவற்றை போதைக்காகப் பயன்படுத்தும் பழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தொழிலாளர்களிடையே தொடங்கி, பின்னர் தமிழ் சமூகத்தில் பரவத் தொடங்கியது.
1937-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட, தற்போதைய தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சோதனை முறையில் மதுவிலக்கு முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது. பின்னர், மாகாணத்தின் பிற பகுதிகளுக்கும் படிப்படியாக மதுவிலக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது அரசின் வருவாய் தேவையை அதிகரிக்கும் நோக்கத்துக்காக மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான கொள்கை முடிவுகளை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளும் விதத்தில் மாநிலங்களின் பட்டியலில் மதுவிலக்கு இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், 1948-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலத்தில் (தற்போதைய தமிழ்நாட்டில்) மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தமிழ்நாட்டில் ரத்து செய்வதற்கு முன்பு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஒரு சிலரே போதையூட்டும் சாராயத்தை திருட்டுத்தனமாக அருந்தும் பழக்கமுடையவராக இருந்து வந்தனர். சாராயம் அருந்துபவர்கள் சமுதாயத்தில் இழிவாகப் பார்க்கப்பட்டனர். குற்றமாகக் கருதப்பட்ட சாராய விற்பனையும் ஊருக்கு வெளியே, திருட்டுத்தனமாக நடைபெற்றது.
1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, மதுவிலக்கை மீண்டும் 1974-ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. அதன் பிறகு, தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மதுவிலக்கை ரத்து செய்வதும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கை அமல்படுத்துவதும் ஆன விபரீத முடிவுகளை எடுத்தனர்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சாராயம் உள்ளிட்ட மதுவகைகள் விற்பனை தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி நடைபெறுவதன் விளைவாக, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில் சண்டை சச்சரவு தினசரி நிகழ்வுகளாகவும், கடன் சுமையால் பல குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பதுமான சமுதாய சீரழிவுக்கு மதுப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சூழலில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதல் கட்டமாக, டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூடுவோம் என்ற வாக்குறுதியை 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அளித்தன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த ஓர் அரசும் இதுநாள் வரை முன்வரவில்லை.
போதையூட்டும் சாராயம் உள்ளிட்ட மது பானங்கள் அருந்தும் பழக்கம் நம் சமுதாயத்தில் அதிக அளவில் பரவியுள்ள சூழலில், கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாடு தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு மற்றும் கடத்தல் அதிகரித்து வருவதை அறிந்த தமிழ்நாடு காவல் துறை டிசம்பர் 2021 முதல் 2022 வரை நடத்திய 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை'களில் 75,000 கிலோ கஞ்சா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓபியம், ஹெராயின் மற்றும் செயற்கை போதைப் பொருள்களின் பயன்பாடு தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதை அண்மையில் காவல் துறை கைப்பற்றிய போதைப் பொருள்களின் அளவிலிருந்து அறிய முடிகிறது.
தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை வழியாக கடத்தலுக்காகக் கொண்டுவரப்படும் போதைப் பொருள்களில் ஒரு பகுதி சில்லறை விற்பனைக்காக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, பெரும்பாலான
பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் தங்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருள்கள் சில்லறை விற்பனை தங்குதடையின்றி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, 'டார்க் வெப்' உள்ளிட்ட சில சட்ட விரோத இணையவழி வர்த்தகம் மூலம் போதைப் பொருள்கள் விற்பனை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 9% மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சென்னை நகரில் 10 முதல் 19 வயதுடைய சிறார்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு சமீபத்திய ஆய்வில் 30% சிறார்கள் மதுப் பழக்கம் உடையவர்கள் என்பதும், 34% சிறார்கள் மது, கஞ்சா போன்ற ஏதேனும் ஒருவகையான போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளன.
இந்தியாவில் மிக அதிக மது நுகர்வு விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் ஆண்கள் தினமும் மது அருந்துகின்றனர்; 22 லட்சம் ஆண்கள் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் மது அருந்துகின்றனர்; 37 லட்சம் பேர் மதுக்கு அடியாகி, மது தொடர்பான பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர் என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் சுமார் 7.5 லட்சம் பேர் கஞ்சா, ஓபியம், செயற்கை போதைப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பதும், அவர்களில் சுமார் 1.5 லட்சம் பேர் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் என்பதும் ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றன. தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் போதைப் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை தேவைப்படுகிற நிலையில் உள்ளனர். ஆனால், சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே ஆண்டுதோறும் போதை மீட்பு சிகிச்சை அளிக்கிற வசதி தமிழ்நாட்டில் உள்ளது.
'போதை கலாசாரம் ஒரு நாட்டை அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கச் செய்துவிடும்' என்பதை உணர்ந்த பல உலக நாடுகள் அவர்களது நாட்டில் பரவியிருந்த போதை கலாசாரத்தை வேரோடு அழிக்கும் பணியை மேற்கொண்டு, வெற்றி கண்டுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
போதைப் பொருள்கள் விற்பனை மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தல், போதைக்கு அடிமையான அனைவருக்கும் போதை மீட்பு சிகிச்சையை அரசே விரைந்து வழங்குதல், ஆசிரியர் - பெற்றோர் இணைந்து வழி தவறும் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்துதல், விளையாட்டு மற்றும் பல்வேறு கலைகளில் இளைஞர்களை ஈடுபடச் செய்தல், போதைக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளிப் பருவத்திலேயே கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் போதை கலாசாரத்துக்கு தீர்வாக அமையும்.
தமிழ்நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான பெண்கள் போதைக்கு அடிமையான அவரவர் கணவரையும், மகனையும் போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதே போன்று கோடிக்கணக்கான பெண்கள் அவர்களது குழந்தைகள் போதைப் பழக்கத்தைக் கற்றுக்கொள்ளாத சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தாதா என்ற ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.
புதிதாக பதவியேற்க இருக்கும் மாநில அரசு தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவியிருக்கும் போதை கலாசாரத்துக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வார்கள் என நம்புவோம்.
கட்டுரையாளர்:
முன்னாள் காவல் துறை உயரதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தீர்வு காணவேண்டிய போதை கலாசாரம்

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

