மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால், உலகம் அமைதியாக இருப்பதில்லை. அதிகாரமும் அதனால் ஏற்படும் அகந்தையும் பேராசையைத் தருகின்றன. விளைவு போராக உருவெடுக்கிறது. இன்றைக்கு உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் போருக்கும் இதுவே காரணம்.
பாரதம் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தன்னை அறிதல் என்னும் தத்துவத்தில் நிலைபெற்றது. அந்தத் தத்துவம் மக்களுக்கு நிலையாமைக் கொள்கையை உணர்த்தியது.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு'
என்ற உண்மை அமைதியின்பால் மக்களை ஆற்றுப்படுத்தியது.வேத காலம் தொடங்கி இந்த மனநிலையை மக்களிடம் காண்கிறோம். பாரத தேசத்தில் மன்னர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வேதம் அன்றாடம் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக தானங்களும் அளித்து வேதவிற்பன்னர்களை ஆதரித்தார்கள்.
தமிழ் மன்னர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மூதூர், அன்றாடம் வேதஒலி கேட்டே விடியல் கண்டது என்பதை,
"நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே'
என்று பரிபாடல் சொல்கிறது.
வேத மந்திரங்கள் ஒலிப்பதை ஏன் மன்னர்கள் அவசியமெனக் கருதினார்கள். மக்கள் ஏன் அதை நம்பி ஏற்றனர்? வேத மந்திரங்கள் எதை வலியுறுத்தின? அதன் பொருள் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து கொள்ளும் போது மகாகவி பாரதி ஏன் "வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே' என்று பாடினான் என்று புரிந்து கொள்ளலாம்.
வியாசர் தனது சீடர்களுக்கு நான்கு வேதங்களையும் கற்றுக் கொடுத்து உலகம் முழுவதும் அதைக் கற்பிக்கும்படி செய்தார்.
வேதம் காலம்தோறும் நம் தேசம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை அவரது சீடர்களும் உறுதி செய்தார்கள். இன்றைக்கும் துறவிகளும் மடங்களும் வேத பாடசாலைகளைப் பேணிக் காப்பதைத் தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
சாமானிய மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். காலம்காலமாக ஒரு செயல்பாடு நம்பிக்கையுடன் தொடர்கிறது என்பதே அதன் பயனையும் பலனையும் உறுதிப்படுத்துகிறது. வேதம் பல செய்திகளைத் தாங்கி நின்றாலும் அதன் முடிந்த முடிபு அமைதியும் ஒற்றுமையும் மட்டுமே.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என உலகம் சுகமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே வேதங்களின் நோக்கம். வேதங்களைக் காப்பதற்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காஞ்சி மஹா ஸ்வாமிகள் வேதங்களின் சாரத்தை ஒரே பாட்டில் பாடி வைத்தார்கள். அந்தப் பாடலும் உலக அமைதியை வலியுறுத்தும் ஐ.நா. சபையில் எம்.எஸ். சுப்புலட்சுமியால் பாடப்பட்டது.
"மைத்ரீம் பஜத அகிலஹ்ருஜ்ஜேத்ரீம்
ஆத்மவதேவ பரானபி பஷ்யத
யுத்தம் த்யஜத, ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷ்வக்ரமமாக்ரமணம்'
அதாவது, அனைவரிடமும் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லோருடைய இதயத்தையும் வெல்லக்கூடிய சக்தி உண்மையான நட்புக்கே உண்டு. எல்லா உயிர்களிலும் ஒரே ஆத்மாவே இருக்கிறது அதனால் தன்னைப் போலவே பிறரையும் பார்க்க வேண்டும். போரையும் போட்டியையும் விட்டு விடுங்கள் மனத்தில் இருக்கும் போட்டி, பொறாமை, அகந்தை ஆகியவற்றைக் கைவிட வேண்டும்.
தர்மத்தை மீறி, பிறரை அடக்குவது தவறு.முதல் பகுதியில் இப்படி ஒற்றுமையைப் போதிக்கும் பாடல் இரண்டாம் பகுதியில் கருணையை போதிக்கிறது.
"ஜனனி ப்ருதிவீ காமதுகாஸ்தே
ஜனகோ தேவஸ் ஸகல தயாளு:
தாம்யத தத்த தயத்வம் ஜனதா:
ஸ்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்'
பூமி தாயாக இருக்கிறது காமதேனுவைப் போல, மனிதனுக்கு அனைத்தையும் கருணையுடன் தருகிறது. பரமாத்மா எல்லோருக்கும் தந்தை அளவற்ற கருணையுள்ளவர். சுய கட்டுப்பாடு, தானம் செய்தல், கருணையுடன் நடந்து கொள்ளுதல் மூன்றுமே மனித வாழ்க்கையின் அடிப்படை தர்மங்கள். அனைவருக்கும் நன்மை கிடைக்கட்டும். இப்படி வாழும்போதுதான் சமூகம் அமைதியாகவும், அறத்தோடும் இருக்கும்.
அதிகாரப் போட்டியால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள போர் சூழலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதும் அப்பாவி மக்கள் உயிர்துறப்பதும் கண்முன் நடைபெறும் காலத்தில் நட்பும் ஒற்றுமையும் தயையும் அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லும் போதும் கேட்கும் போதும் மனதில் ஆசுவாசம் பரவுகிறது.
மன்னர்கள் தேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் வேதம் ஒலிக்க வேண்டும் என்று விரும்பி பொன்னும் பொருளும் நிலமும் தானம் செய்து வேத மந்திரங்களை ஒலிக்கச் செய்ததற்கும் இதே உளவியல்தான் காரணம்.
அமைதியும் சுகமும் பெருகட்டும், நிலைத்திருக்கட்டும் என்பதை அன்றாடம் மீண்டும் மீண்டும் சொல்வதும் கேட்பதும் சூழ்நிலையை நேர்மறையானதாக மாற்றுவதுடன் மக்களுக்கும் நிம்மதியும் அமைதியும் ஆசுவாசமும் தந்தன. இதனால் மக்களும் வேதங்களையும் அதை ஓதுபவர்களையும் போற்றினர்.
ஆயிரம் இன்பங்களுக்கு நடுவில் இருந்தாலும் எதிரில் அச்சம் தரும் பொருள் ஒன்று இருந்து விட்டால் அந்த இன்பங்களை அனுபவிக்க முடியுமா? அப்படித்தான் போர் சூழலும் அழகான உலகத்தின் இன்பங்களை சுகங்களை மனிதர்கள் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.
முதல் உலகப் போர் முடிந்ததும் அமைதிக்காக சர்வதேச சபை தோன்றியது. ஆனாலும், இரண்டாம் உலகப் போர் மூண்டது. அதன் முடிவில் ஒற்றுமையை நிலைநாட்ட ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்டது. இன்றும் உலகம் யுத்தத்துக்கே அறைகூவல் விடுத்து நிற்கிறது.
உலகம் முழுவதும் 59 நாடுகளுக்கிடையில் மோதல்கள் நடந்து வருவதாகவும், இது இரண்டாம் உலகப் போரின் நிலையைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக அதிகம் என்றும் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (ஐஇபி) நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய அமைதிக் குறியீட்டின்படி, கடந்த 16 ஆண்டுகளில் 12}ஆவது முறையாக உலகளாவிய அமைதி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக நமது மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் வேதத்தின் ஒற்றுமைக்கான கீதத்தையும் அதன் பொருளையும் நேர்மறை ஆற்றலையும் உலகுக்கு பாரத மண்ணிலிருந்து எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
முதல் வேதமான ரிக் வேதத்தின் கடைசி மந்திரம் ஒற்றுமையைப் பாடுகிறது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அவசியமான பாடல். உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டிய பாடலும் ஆகும்.
"எல்லோரும் ஒன்று சேருங்கள்
எல்லோரும் ஒன்றாகப் பேசுங்கள்
முன் காலத்தில் தேவர்களும்
ஒற்றுமையுடன் இருந்து
வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை
ஏற்றார்கள்.
உங்கள் மந்திரங்கள் ஒன்றுபோல
ஒலிக்கட்டும்
உங்கள் அவையில் ஒன்றுபட்ட
குரல் கேட்கட்டும்
எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்
எல்லோரும் ஒன்றையே நாடட்டும்
உங்கள் அவையின் தீர்மானமும்
ஒன்றாக இருக்கட்டும்
உங்கள் இதயமும் விருப்பமும்
ஒன்றாகட்டும்
உங்கள் எண்ணங்கள் ஒன்றையே
சிந்திக்கட்டும்'.
இந்த வரிகளைப் படிக்கும் போதே மனதில் ஒற்றுமைக்கான சிந்தனை எழுகிறது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது தமிழ். உண்மையான முன்னேற்றம் என்பது தொழில்நுட்பத்தாலோ அல்லது பணத்தாலோ வருவதில்லை. மனிதர்களின் ஒற்றுமையிலிருந்தே தோன்றுகிறது. ஒற்றுமையே மனித சமூகத்தை வலுப்படுத்துகிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்று மகாகவி பாரதியார் பாடியதும் இதற்காகவே.
உலகம் அன்பும் ஒற்றுமையும் கொண்டு இயங்க வேண்டியது அவசியம். அன்பும் ஒற்றுமையும் உள்ள இடத்தில் சண்டைகள், போர்கள், வெறுப்பு குறையும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதால் கருணை, பகிர்ந்துண்ணல் போன்ற நல்ல பண்புகள் வளரும். இதனால், பிறரை வேறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
மொழி, மதம், கலாசாரம் போன்ற வேறுபாடுகளை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் போது உலகம் வளமானதாக மாறும். சமூகத்தில் சமத்துவம் அதிகரிக்கும். அநீதி குறையும். உலகம் முன்னேற அமைதியும் ஒற்றுமையும் வழிவகுக்கும்.
எல்லைகளைத் தாண்டி மனிதநேயத்தால் ஒன்றுபடுவதே அமைதிக்கான மார்க்கம். ஒற்றுமை பலவிதங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, சூழலியல் அறிவு என்று அடுத்தடுத்த நிலைகளில் ஒற்றுமை பரவி, உலகை "ஒற்றைக் கோளமாக' உணரச் செய்ய வேண்டும்.
"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்று அறியேன் பராபரமே' என்று தாயுமானவர் பாடியதும் உலகம் போர்களால் நிறைந்திருந்த காலத்தில்தான். இந்த சிந்தனை முன்னெடுக்கப்படும் போது எத்தகைய அமைதியற்ற சூழலும் மாற்றம் பெறும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

