தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. எறும்புகள் அளவில் சிறியதாகவும், சுறுசுறுப்புடனும் இயங்குவதால், கூட்டமாக ஒற்றுமையுடன் ஓரணியில் செயல்படுவதால், பொதுவான கூடுகட்டி குழுவாக வாழ்வதால், எதிர்காலத்தின் தேவை அறிந்து முன்கூட்டியே அதற்கான உணவை கூட்டு முயற்சியோடு சிறுகச் சிறுக சேமித்து வைப்பதால், எறும்புகளின் பயணப் பாதையில் இருபுறமும் தாண்டிச்செல்ல முடியாத தடை ஏற்படுத்தும் சோதனையைச் சந்தித்து மீள்வதால், விடாமுயற்சியால், தன்னம்பிக்கையால், சூழல் காப்பதால், பிறருக்கு உதவுவதால், வலிமையால், உருவு கண்டெள்ளும் மனப்பாங்கை வெல்வதால் அதன் மீதான மதிப்பு மிகும்.
வேடனிடமிருந்து புறாவைக் காப்பாற்றும் எறும்பின் கதையை சிறுவயதிலேயே பள்ளிப்பாடத்தில் எல்லோரும் படித்திருப்போம். எறும்புப்புற்றை தெய்வமாக பல பகுதிகளில் வழிபடுகிறார்கள். ஏனெனில், மனிதன் மற்றும் இயற்கைக்கு அதன் பங்களிப்பு கனமானவை. 'யானை முதலா எறும்பு ஈறாய' என்று உருவ அளவு கொண்டு மாணிக்கவாசகர் உயிர்களை வகைப்படுத்துவார்.
தானே தோன்றிய எறும்புப் புற்று வடிவிலான லிங்கத் திருமேனியை எறும்புகள் அணியாக வந்து வணங்கி அருள் பெற்றதைப் புராணங்கள் கூறுகின்றன. 'எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே! திரு எறும்பியூர் மலைமேன் மாணிக்கத்தை!' என்றும் திருநாவுக்கரசர்தன் தேவாரத்திலும் திருத்தாண்டகத்திலும் எறும்பின் புகழ் பாடியிருப்பார்.
எறும்புகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் தங்களின் வாழ்க்கை முறைகளில் உயர்வான நெறிகளையும் வரைமுறைப் பழக்கங்களையும் கொண்டவை. சிறுகுடிப்பண்ணனின் குடிலில் இருந்து சோறு பெற்று வரிசையாகச் சென்றவர்களைக் கண்டதும், மழை வருவதை முன்கூட்டியே தன்னறிவால் உணர்ந்து தான் சேமித்து வைத்திருக்கும் உணவை பள்ளமான நிலத்திலிருந்து மேட்டு நிலத்துக்கு எறும்புகள் தன் வாயால் சுமந்து செல்வதை உவமையாகச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கூறுகிறார்.
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன் புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
வறண்ட நிலத்தே உதிர்ந்த, சிறு புல்லிலிருந்து விழுந்த அரிசியை எறும்புகள் சேகரித்து பயணம் மேற்கொண்டு அழகாக ஊர்ந்து சென்று தன் வளைக்குள் சேமித்து வைக்கின்றன என மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் பாடுகிறார்...
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி (அகநானூறு)
நரை முடி நெட்டையார் காதலியைப் பிரிந்த காதலன் படுதுயர் உரைப்பது போல 'இரு
தலைக் கொள்ளி இதை நின்று வருந்தி' என்று அகநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.
இரண்டு புறமும் எரியும் கொள்ளிக் கட்டையில் இடையே நின்று தவிக்கும் எறும்பு மன
நிலையில் தவிக்கிறேன். கட்டையிலிருந்து குதித்து எறும்பு தப்பி விடலாமே என்று சிலர் கேட்பார்கள் என்று கருதிதான் 'குழாய் போன்று கொல்லிக் கட்டையினுள்' என்று குறிப்பிடுகிறார் வாதவூரர்.
'இருதலைக்கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்' என உரைக்கிறார். 'இருதலை மின்னுகின்ற கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே' என திருநாவுக்கரசரும் தன் தேவாரத்தில் இறைவனை வேண்டி நிற்கிறார்.
தலைவன் சென்ற பாதையானது எறும்புப்புற்று போல் பாறைகளும் அதிலுள்ள துளைகள் நீர்ச்சுனைகள் போலவும் உலைக் களத்துள்ள பட்டைக் கல்லைப் போன்ற
வெம்மையை உடைய பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லை உடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என ஓதலாந்தையார் குறுந்தொகையில் குறிப்பிடுகிறார்.
எறும்பி அளையின் குறும் பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிகுடத்திலுள்ள நெய்யை எறும்புகள் உண்ணப் புகுந்தால் உண்ண முடியாமல், தாமும் நெய்யுள் வீழ்ந்து அழிந்துவிடும். அந்த அச்சத்தால் எறும்புகள் குடத்தைச் சுற்றி மொய்க்குமே தவிர நெய்யின் அருகே செல்வதில்லை.
அதைப்போல இவ்வுடலில் உள்ள ஐம்பொறிகள் உள்ளத்துக்குள் செல்ல முயன்றால், அதில் இறைவன் உள்ளுறைந்துள்ளதால் பொறிகளின்பம் அழிந்துபடும் என எறும்புகளை பொறிகளாகச் சித்தரிக்கிறார் மாணிக்கவாசகர்.
'மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம்
தன்னை எறும்பு எனவே'
உயிர் நீக்கத்துக்கு உதவி நோய்கள் என் உடலுக்குள் செல்ல முடியாது, எனக்குள் வைகுந்தன் குடிகொண்டுள்ளான் என்பதாக எறும்பு மொய்ப்பதை நோய்க்கு உவமையாக திருமொழியில் பெரியாழ்வார் விளக்குகிறார்.
'நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள்போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்'
யானையானது தனக்குப் பாகன் ஊட்டும் உணவுக் கவளத்தைத் தன் வாயில் போடும்போது ஒரு சிறுபகுதி தவறிக் கீழே சிந்தினால் அதற்காக வருந்துவதில்லை. மாறாகத் தவறி விழுந்த சோற்றுப் பருக்கைகளை கோடிக்கணக்கான எறும்புகள் உண்டு வாழும். அப்படி செல்வந்தர்களும் தன் செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு பகிர்தல் வேண்டும் என குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் கூறுகிறார்.
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்
றூங்குங் களிறோ துயருறா-ஆங்கதுகொண்
டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.
எறும்புகள் பேசிக்கொள்ளும் மொழியை உணர்ந்த மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதும், கம்பராமாயணத்தில் கைகேயியின் தந்தையான அஸ்வபதி அதில் ஒருவன் என்பதாலும், அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் குறித்தும் அறிந்து எறும்பின் கதையாள் என்று கைகேயியை விளிக்கிறார் கம்பர்.
'தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என்மாமகனைக் கான் ஏகு என்றாள்;
எறும்பின் கதையாள்'
இப்படியாக எறும்பு மனிதனின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து சுற்றுச்சூழல் காப்பவையாகவும், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அணிவரிசையையும் பயிற்றுவிப்பவையாகவும் இருந்திருப்பதை இலக்கியக் குறிப்புகள் மூலம் நாம் உறுதி செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிதாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
வீட்டிலிருந்தபடியே வருமானம்...

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
வீடியோக்கள்

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


