-முனைவர் என். முசாபர்கனி
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது. இந்த வேகமான மாற்றங்களின் மத்தியில் உயர் கல்வி என்பது வெறும் பட்டம் பெறும் பயணம் அல்ல; அது மனித வாழ்க்கையை உயர்த்தும் வலிமையான சக்தியாகும். குறிப்பாக, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஒருவரின் அறிவாற்றலை மேம்படுத்தி, தொழில் திறனை வளர்த்து, சமூக மரியாதையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் முக்கியமான படிக்கட்டாக திகழ்கிறது.
ஒருவர் கல்வியில் முன்னேறும்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல் குடும்பம், சமூகம், நாடு ஆகிய அனைத்தும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கின்றன. எனவே, கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் அடிப்படைத் தூணாக கருதப்படுகிறது. கல்வித் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் திகழ்வதற்கும் அரசின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
ஒரு காலத்தில் பள்ளிக் கல்வி முடித்தாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் இருந்தது. பின்னர், இளநிலைப் பட்டப்படிப்பு சமூக அங்கீகாரத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியமானதாக மாறியது. ஆனால், இன்றைய உலகளாவிய சூழலில் இளநிலைப் பட்டம் மட்டும் போதுமானதாக கருதப்படுவதில்லை.
இப்போது உயர்ந்த பதவிகள், நிர்வாகப் பொறுப்புகள், ஆராய்ச்சி வாய்ப்புகள், தொழில்நுட்பத் துறைகள், வெளிநாட்டு கல்வி, உயரிய வருமானம் போன்ற பல முன்னேற்ற வாய்ப்புகளுக்கு முதுநிலைப் பட்டப் படிப்பு முக்கிய தகுதியாக உள்ளது.
இளநிலைக் கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. ஆனால், அந்த அடித்தளத்தின் மீது உயர்ந்த வெற்றிக் கட்டடத்தை எழுப்புவது முதுநிலைக் கல்வியே. இதன் மூலம் பாட அறிவு ஆழமடைகிறது; ஆராய்ச்சித் திறன் உருவாகிறது; தன்னம்பிக்கை அதிகரிக்கிறது; தொடர்புத்திறன் மேம்பட்டு சிந்தனைத் திறன் விரிவடைகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரித்து உயரிய ஊதிய நிலைகள் கிடைக்கின்றன. தலைமைத் திறனும் வளர்கிறது.
மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்தவர் மருத்துவராகப் பணியாற்றலாம். ஆனால், சிறப்பு மருத்துவராக உயர எம்.டி. உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகள் அவசியம். பொறியியல் துறையில் இளநிலைப் படிப்புகளை நிறைவு செய்தவர்கள் தொழில் துறை பணியில் சேரலாம். ஆனால், எம்.இ. உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகள் மேலாண்மை மற்றும் உயர் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கு கின்றன. இது போன்றே சட்டத் துறை உள்ளிட்ட துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் துறைகளில் இளநிலைப் படிப்புகளுக்குப் பிறகான முதுநிலைப் படிப்புகள் சிறந்த தொழில் வாய்ப்புகளையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகின்றன.
இன்றைய சூழலில் இளநிலைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்புகளுக்கான போட்டியும் கடுமையாகியுள்ளது.
ஒரே தகுதி கொண்ட பலர் விண்ணப்பிக்கும் சூழலில், கூடுதல் அறிவும் தகுதியும் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அந்த நிலையில், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னிலை கிடைக்கிறது. அரசுப் பணிகள், கல்லூரி ஆசிரியர் பணிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வங்கி, தனியார் துறைகள், நிர்வாகத் துறைகள் உள்ளிட்ட பல இடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு சிறப்பு மதிப்பைப் பெற்றுள்ளது.
பல மாணவர்கள் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வியைத் தொடர தயங்குகின்றனர். ஆனால், இன்றைய காலத்தில் அந்தச் சூழல் உயர் கல்விக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, சிறுபான்மையினர் நலத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை போன்ற பல துறைகள் மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
மேலும் திறமையாளர் உதவித்தொகை, மாணவிகளுக்கான ஊக்கத் தொகை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகைகள், தேசிய அளவிலான உதவித் திட்டங்கள், தனியார் அறக்கட்டளைகள் வழங்கும் நிதியுதவிகள் போன்ற பல வாய்ப்புகள் உள்ளன.
முதல் வகுப்பிலிருந்து இளநிலைப் பட்டம் வரை பல ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளோம். அதற்கு மேலாக இரண்டு ஆண்டுகள் முதுநிலைக் கல்விக்காக செலவிடுவது வாழ்க்கை முழுவதற்குமான முதலீடாகும்.
அந்த இரண்டு ஆண்டுகள் உயர்ந்த வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், சமூக மரியாதை, அறிவு விரிவு, நிலையான வாழ்க்கை போன்ற பல நன்மைகளை அளிக்கின்றன. உயர் கல்வி என்பது வெறும் பட்டமல்ல; அது உயர்வுக்கான பாதை. முதுநிலைப் பட்டப் படிப்பு என்பது சான்றிதழ் மட்டுமல்ல; வாழ்க்கையை மாற்றும் சக்தி. எனவே, இன்றைய இளைஞர்கள் இளநிலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்வதுடன் மட்டும் நின்று விடாமல், முதுநிலைப் படிப்பை நோக்கி முன்னேற வேண்டும்.
தனி மனித வளர்ச்சிக்கும், குடும்ப- சமூக முன்னேற்றங்களுக்கும், தேசிய வளர்ச்சிக்கும் உயர் கல்வியே சிறந்த வழிகாட்டியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்! அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்!

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
இன்றைய ராசி பலன் (30.04.2026) - மேஷம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

