திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்! அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்!

நீட் தேர்வை முறையை ரத்து செய்ய அறிவியல் இயக்கம் வலியுறுத்தியிருப்பது பற்றி...

News image

கோப்புப்படம் - EPS

Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் நுழைவுத் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் நீட் நுழைவுத் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் முகமது பாதுசா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”கூட்டாட்சியையும் சமூக நீதியையும் காக்க கல்வி உரிமையை மாநிலங்களுக்கு மீட்டளிக்க வேண்டும். இந்தியாவில் மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வு, சமத்துவம், சமூக நீதி மற்றும் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக தொடர்ந்து மாறிவருகிறது.

குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் கருவியாக அது செயல்படுகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது "திறமைக்கு முன்னுரிமை” என்ற பெயரில் அது நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில், இந்த தேர்வு, சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் வெற்றி பெறுவது பெரும்பாலும் பணம் படைத்தவர்களே. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களாகவே தேர்ச்சி பெறுகின்றனர்

கிராமப்புற, அரசு பள்ளி, தமிழ் வழி மற்றும் ஏழை மாணவர்கள் திட்டமிட்ட முறையில் பின்தள்ளப்படுகின்றனர். மருத்துவராக வருவதற்கு தேவையான மனிதநேயம், சமூக அக்கறை, மருத்துவ சேவை மனப்பான்மை, தொடர்ந்து உழைக்கும் திறன் போன்றவற்றை மதிப்பிடும் தேர்வு முறையாக நீட் இல்லை. ஒரே நாளில் பெரும் மன அழுத்தத்தோடு நடத்தப்படும் தேர்வு நீட். இத்தகைய தேர்வு ஒரு மருத்துவ மாணவனை அடையாளம் காண பயன்படாது.

மனிதநேயத்திற்கும் கூட இத்தேர்வு எதிரானது. மேலும், ஆண்டுதோறும் நீட் தேர்வைச் சுற்றி கேள்வித்தாள் கசிவு, முறைகேடு, போலி தேர்வர்கள், மதிப்பெண் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள நீட் தேர்வும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்த தேர்வு முறையின் நம்பகத்தன்மையே சீர்குலைந்து விட்டதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்வு என்ற பெயரில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறித்து, மொழி மற்றும் சமூக பல்வகைமைகளை புறக்கணித்து, மத்திய மயமாக்கலை திணிப்பது இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி அடிப்படைக்கு முரணானது.

எனவே, நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி சேர்க்கை அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும். சமூக நீதி, இடஒதுக்கீடு, மொழி உரிமை மற்றும் மாநிலங்களின் சமத்துவம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.

அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு தேவைப்பட்டால், அது மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட வேண்டும். நீட் தொடர்பான முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். கல்வியை வணிகமாக்கும் பயிற்சி மைய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

கல்வி என்பது சந்தை பொருள் அல்ல. அது சமூக உரிமை. மருத்துவக் கல்வி என்பது பணக்காரர்களுக்கான சலுகை அல்ல.மக்களின் சுகாதார உரிமையை பாதுகாக்கும் சமூகப் பொறுப்பு.

எனவே, இந்திய கூட்டாட்சியையும் சமூக நீதியையும் காக்க, நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்து மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டளிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The NEET exam must be abolished - TNSF urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.