இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுகவில் 22 எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடனும், 25 எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துடனும் பிரிந்துநிற்பது இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியாக வெளிப்பட்டது.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மூன்றாவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது. முதலிரண்டு இடங்களை தமிழக வெற்றிக் கழகம் (108), திராவிட முன்னேற்றக் கழகம் (59) பிடித்தன.
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற நிலையில், மூன்று பெரும் கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யத் தொடங்கின.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியே, தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள முன்னாள் அதிமுக நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் ஒரு பிரிவினருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
மறுபுறம், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.
மே 6 ஆம் தேதி தவெகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மேலிடப் பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அறிவித்தார்.
இதனிடையே, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முயன்றதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தவெகவுக்கு ஆதரவளிக்கலாம் என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதற்குள், திமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்திய தவெக, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, மே 10 ஆம் தேதி காலையில் தமிழ்நாட்டின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், மே 11, திங்கள்கிழமை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்ற நிலையில், அன்றைய தினமே இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையாவை சந்தித்து, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாகக் கடிதம் வழங்கினர்.
மே 12, செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ”திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம். தற்போது அதிமுக எந்தக் கூட்டணியிலும் இல்லை” என்று எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும், அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி மற்றும் கொறடாவாக சி. விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மறுபுறம், அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்சியின் பொதுச் செயலரான இபிஎஸ் நியமித்த கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இபிஎஸ் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையேதான், தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தனது பிரதான எதிரியென அறிவித்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் வீடு தேடிச் சென்று வாழ்த்துகளைப் பெற்றார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் நேரில் சென்று வாழ்த்துகளைப் பெற்ற விஜய், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸை மட்டும் சந்திக்கவில்லை.
மாறாக, செவ்வாய்க்கிழமை மாலையில் சி.வி. சண்முகத்தின் வீட்டுக்குச் சென்று தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்தது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசு முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இபிஎஸ் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் என்ன செய்யப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஒரு கட்சியின் சார்பில் ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது கட்சி, எதிராக வாக்களிக்கும் எனப் பேசியிருந்தார்.
தொடர்ந்து, அதிமுகவின் எஸ்.பி. வேலுமணிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுவதற்கு வாய்ப்பளிக்க முயன்றபோது, இபிஎஸ் அணியினர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த ஜே.சி.டி. பிரபாகர், அவர் பேசுவதற்கு அனுமதி கேட்டிருந்தார், யார் பேச வேண்டும் என நான்தான் முடிவு செய்வேன் எனக் கூறி, எஸ்.பி. வேலுமணியைத் தொடர்ந்து பேச அனுமதித்தார். அப்போது, தவெகவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக அவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இபிஎஸ் நியமித்த கொறடா உத்தரவுக்கு இணங்க தவெக அரசுக்கு எதிராக 22 பேரும், எஸ்.பி. வேலுமணி நியமித்த கொறடா உத்தரவுக்கு இணங்க அரசுக்கு ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர்.
பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக கொறடாவின் உத்தரவுக்கு எதிராக சட்டப்பேரவையில் சிலர் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளனர். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் என்னைத்தான் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிறகே, அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு சிலர் ஆதரவு அளித்துள்ளார்கள்” என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், எம்ஆர்சி நகரிலுள்ள தம் இல்லத்தின் முன் செய்தியாளர்களுடன் சி.வி. சண்முகம் பேசுகையில், “திமுக ஆதரவுடன் நான் முதல்வராகப் போகிறேன். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவளிப்பார்கள். தில்லியிடம் அனுமதி வாங்கிவிட்டேன் என்று இபிஎஸ் எங்களிடம் கூறினார். இதில் நியாயம் இல்லை என்பதால் எதிர்த்தோம். திருமாவளவனை முதல்வராக்கத் திமுக முயற்சித்தது. ஆனால், இபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை. 47 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்கவே இல்லை. அவர் பேரவைத் தலைவருக்கு அளித்த கடிதம் போலியானவை. அதை ஆய்வு செய்யக் கோரியுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, உடனிருந்த எஸ்.பி. வேலுமணி பேசும்போது, கட்சியிலிருந்து ஒவ்வொருவராக நீக்கிக் கொண்டிருக்கிறார் இபிஎஸ். எனவேதான், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்திவந்தார். இன்றைய சூழ்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரையும் மீண்டும் இணைத்தால் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக உள்ளோம் என்றார்.
அடுத்தது என்ன?
அதிமுகவில் மொத்த 47 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், விலகுவோருடன் மூன்றில் இரு பங்கான 32 எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதுடன், கட்சிக்கும் உரிமை கோர முடியும்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவில் இருந்து பிரிந்த பிறகு, கட்சியின் மீது உரிமை கோரியபோது, பொதுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி, பொதுச் செயலாளராகவுள்ள எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவரின் கீழ் கட்சி நிர்வாகம் செல்லும்.
இதற்கு முன்னதாக, தற்போது அதிமுகவின் பேரவைக் குழுத் தலைவர் யார்? எடப்பாடி கே. பழனிசாமியா? எஸ்.பி. வேலுமணியா?, அதிமுகவின் பேரவைக் கொறடா யார்? சி. விஜயபாஸ்கரா? அக்ரி கிருஷ்ணமூர்த்தியா? என்ற குழப்பம் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்குமே இருக்கலாம்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் சிவசேனை இரண்டாக பிளவுபட்ட போது, கட்சிக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தை அக்கட்சியின் இரு அணிகளின் தலைவர்களான உத்தவ் தாக்கரேவும் ஏக்நாத் ஷிண்டேவும் நாடினர்.
அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், பேரவைக் கட்சித் தலைவர் மற்றும் கொறடா நியமனம் பற்றி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதில், ”மாநில சட்டப்பேரவையில் கொறடாவையும், பேரவை கட்சித் தலைவரையும் குறிப்பிட்ட கட்சியே நியமிக்க முடியும். அக் கட்சி சார்பிலான எம்எல்ஏ-க்கள் குழு அவர்களை நியமிக்க முடியாது, கட்சி சார்பிலான நியமனத்தையே பேரவைத் தலைவர் அங்கீகரிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி நியமித்த பேரவைக் குழுத் தலைவரையும், கொறடாவையும்தான் பேரவைத் தலைவர் அங்கீகரிக்க முடியும்.
அதிமுகவின் இரு அணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்கள் மீது எடப்பாடி பழனிசாமி தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்வரா? அல்லது பொதுக் குழுவைக் கூட்டி கட்சியை எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தங்கள் வசப்படுத்துவார்களா? அல்லது சசிகலா உள்ளிட்டோரை இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்படப் போகிறார்களா? அல்லது தவெக அமைச்சரவையில் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் இடம்பெறப் போகிறார்களா?
பொறுத்திருந்து பார்க்கலாம், இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்!
Summary
What's Next in the AIADMK? 22 with EPS, 25 with CVS!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாக இபிஎஸ் கூறினார்! சி.வி. சண்முகம்
மந்திரி பதவிக்காக த.வெ.க.விடம் மண்டியிட்டு... சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக அறிக்கை!

தவெகவுக்கு ஆதரவா? அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை!

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

