மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஜா vs ஜெ; இபிஎஸ் vs ஓபிஎஸ்; இபிஎஸ் vs வேலுமணி! மீண்டும் மீண்டுமா?

அதிமுகவில், எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜா vs ஜெ; ஜெயலலிதா மறைவுக்குப் பின் இபிஎஸ் vs ஓபிஎஸ்; தற்போது இபிஎஸ் vs வேலுமணி என பிளவுபடுவது பற்றி..

News image

அதிமுக அலுவலகம் - DPS

Updated On :1 மணி நேரம் முன்பு

அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் எனும் பெயரைக் கேட்டால், நினைவு கூறப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அவர் திமுகவில் இருந்து வெளியேறியது. அதன்பின் அவரால் 1977-ல் தொடங்கப்பட்ட அதிமுகவை தொடர்ந்து பத்தாண்டுகள் அரியணையில் அமர வைத்து அக்கட்சியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிய பெருமை எம்ஜிஆரையே சேரும்.

ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அதிமுக இரண்டாக பிளவுபட்டது. கடந்த 1987 டிச.24-ல் எம்ஜிஆர் மறைந்தார். அப்போதே அதிமுகவின் அடுத்த தலைமையை தீர்மானிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதிமுகவின் அப்போதைய மூத்த தலைவரான ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியின் பக்கம் நின்றனர். அதேநேரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பக்கமும் அதிமுகவினர் அணிவகுத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட ஜானகி, அந்த ஆட்சியைத் தக்கவைக்க பேரவையில் 21 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநரால் கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட முயற்சித்தனர். ஆனால், அது நடந்தேறவில்லை. இறுதியில் கடந்த 1988 ஜன.28-ல் சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா தரப்பு எம்எல்ஏக்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டு,நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 எம்எல்ஏக்களின் ஆதரவோடு ஜானகி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், அன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் ஜானகி மற்றும் ஜெயலலிதா தரப்பு அணிகள் அடிதடியில் ஈடுபட்டு, சட்டப்பேரவையில் இருந்த மைக் உள்ளிட்ட பொருள்கள் சூறையாடப்பட்டன.

அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான காவல்துறையினர் சட்டப்பேரவைக்குள் நுழைந்து பேரவை உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் 117-க்கும் குறைவான சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றது மற்றும் சட்டப்பேரவைக்குள் நடந்த இந்த கலவரத்தின் காரணமாகவும் தமிழக சட்டப்பேரவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது வரலாறு.

இதனால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1989-ல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக (ஜா) மற்றும் அதிமுக (ஜெ) என இரு அணிகளாக பிரிந்து தேர்தலைச் சந்தித்தன. இதில் ஜானகி அணிக்கு இரட்டை புறாவும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டன. அதிமுகவில் ஏற்பட்ட பிளவு அந்த தேர்தல் திமுகவின் வெற்றிக்கு வித்திட்டது.

தனது கணவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியின் நலனே முக்கியம் என கருதிய ஜானகி அரசியலில் இருந்து விலக, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ஜெயலலிதா. 1989-ல் நடந்த பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களில் வென்றிருந்தது. அந்த தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து தேர்வான ஜெயலலிதா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

அதன்பின்னர் 1991-96, 2001-06, 2011-16 மற்றும் 2016-21 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக அக்கட்சியை வழிநடத்தினார். ஆனால், இந்த காலக்கட்டத்தில் அவர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக இருமுறை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில், தமிழக முதல்வராகப் பதவி வகிக்க ஜெயலலிதாவால் வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்தான் தற்போது போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் தனது தலைமையின் கீழ் அதிமுகவை வைத்திருந்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ஆம் ஆண்டு செப்.27-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதே வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மற்றும் இளவரசி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்.22-ல் உயிரிழந்தார். இதையடுத்து அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் அணி திரண்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டு டிச.29-ஆம் தேதி வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சியில் இருந்த அதிமுகவின் முதல்வர் பதவிக்கான தேர்வாகவும் அவரே இருந்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகி தர்மயுத்தம் நடத்தினார். இந்தநிலையில், கடந்த 2017 பிப்ரவரி முதல் 2021 ஜனவரி வரையிலான நான்கு ஆண்டுகள் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனால் சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நேரிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைவிட அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள்தான் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன. முதல்வரான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். இந்தநிலையில், கட்சி சட்டவிதிகளில் மாற்றம் செய்து,பொதுக்குழுவைக் கூட்டி கட்சியின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்ய அக்கட்சியினர் முடிவு செய்தனர்.

இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகள் அதிமுகவில் உருவானது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியைச் சேர்ந்த பெருவாரியான முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது. தொடர்ந்து இருதரப்பிலும், தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது.

இதனிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதனிடையே 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பெரும் சரிவையே சந்தித்தது. ஆனால், அப்போதும் அவர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2021ம் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 66 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் வென்ற திமுக 37.70 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் அதிமுக 33.29 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் களம் கண்டது. ஆனால் இந்த தேர்தலில் திமுக - அதிமுக என இரு திராவிட கட்சிகளும் தோல்வி அடைந்தன. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் 47 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது 21.21% ஆகக் குறைந்தது. தமிழக மக்களின் புதிய தேர்வான தவெக ஆட்சியமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில்தான் 73 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 108 இடங்களில் வென்றிருந்த தவெக அதன் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதிமுக பொதுச் செயலரான எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்து திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுவரை பயணித்தவர்கள், இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிமுக தற்போது மூன்றாவது முறையாக பிளவைச் சந்தித்து இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும், சி.வி.சண்முகம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்படத் துவங்கிவிட்டனர்.

சி.வி.சண்முகம் தலைமையிலான 30 எம்எல்ஏக்களைக் கொண்ட அணி தவெகவுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துவிட்டது. எம்ஜிஆருக்குப் பின் ஜெயலலிதா அதிமுகவை தமிழகத்தில் கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டையாக பல தசாப்தங்களுக்கு வைத்திருந்தார். ஆனால் அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழல், தலைமை மாற்றங்கள் அக்கட்சிக்கு பெரும் பாதிப்புகளையே ஏற்படுத்தி வருகிறது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாதது. ஆனால், இரு வேறு அணிகளாக பிரிந்து அரசியல் செய்வது அக்கட்சியை பலவீனப்படுத்துமே தவிர, வலுவடையச் செய்யாது என்பதே உண்மை.

2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்பும் என்று கூறியிருந்தார். அது யார் தலைமையிலான ஃபீனிக்ஸ் பறவை என்பதே இப்போது லட்சம் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

Summary

In AIADMK, after MGR's death, it was Jha vs J; after Jayalalithaa's death, it was EPS vs OPS; now it is about the split between EPS vs Velumani..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.