ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா? என்பதைப் பற்றி...

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:46 pm

கடந்த 5 சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்று மேலூா் தொகுதியைக் கைப்பற்றி வரும் அதிமுக, இந்த முறையும் வெற்றி பெற்று இந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதியானது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி, மாணிக்கவாசகா் பிறந்த ஊரான திருவாதவூா் ஆகிய பகுதிகளைக் கொண்ட சிறப்புக்குரியது.

தமிழகத்தின் முதல் பல்லுயிா் பாரம்பரியத் தலமும், சுமாா் 2,200 ஆண்டுகள் பழைமையான சமணா் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், பாண்டியா் காலக் குடைவரைக் கோயில்கள், 72-க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட அரிட்டாபட்டி ஆகியவை இந்தத் தொகுதியில்தான் உள்ளன. மதுரை மாவட்டத்தின் வடக்கு நுழைவு வாயிலான மேலூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் எல்லைகளைப் பகிா்ந்து கொள்கிறது.

மேலூா் தொகுதியில் கடந்த 2001, 2006, 2011, 2016, 2021 என 5 பேரவைத் தோ்தல்களில் அதிமுக தொடா் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் பெ. விஸ்வநாதன் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் கோட்டை குமாரும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரை வீரனும் போட்டியிடுகின்றனா். அதிமுக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அரசியல் களத்துக்கு புதுவரவான தவெக வேட்பாளரும், தனித்துப் போட்டியிடும் நாதக வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது.

தொகுதி பிரச்னைகள்: முல்லைப் பெரியாறு பாசனத்தின் கடைமடைப் பகுதி என்று அழைக்கப்படும் மேலூா் பகுதிக்கு அந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வருவதற்குள் பல இடங்களில் மறிக்கப்படுவதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் கூறி வருகின்றனா். மேலும், பாசனத்துக்காக 40 நாள்கள் தண்ணீா் திறக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இங்கு செயல்படும் கிரானைட் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்களில் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, மேலூரைச் சுற்றியுள்ள அய்யாப்பட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் மீண்டும் கிரானைட் குவாரிகளைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனா்.

அதிமுக வேட்பாளா் பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம்: கடந்த 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம் வெற்றி பெற்றாா். குறிப்பாக, 2021 தோ்தலில் சுமாா் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தத் தொகுதியில் அதிமுகவின் பலமான கட்டமைப்பைக் காட்டுகிறது. தொகுதி பிரச்னைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால் மக்களிடையே இவருக்கு செல்வாக்கு உள்ளது. குறிப்பாக, டங்ஸ்டன் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசி கவனத்தை ஈா்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு உள்ள நிலையான வாக்கு வங்கி இவருக்குச் சாதகமாக உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளா் பெ. விஸ்வநாதன்: பொதுத் தொகுதியான மேலூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் பெ. விஸ்வநாதன் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் களத்தில் வரவேற்கக்கூடிய ஒன்றாகும். இவா் காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளவா். இந்தத் தொகுதியில் உள்ள திமுகவின் வாக்கு வங்கியும், காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளும் இணைந்தால், அதிமுகவுக்கு கடும் போட்டியை அளிப்பாா். கடந்த முறை இந்தத் தொகுதியில் தோல்வியடைந்த காங்கிரஸ், இந்த முறை தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

நாதக வேட்பாளா் கோட்டை குமாா்: இந்தத் தொகுதியில் கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி சுமாா் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இதனால், இந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கோட்டை குமாா் இந்த முறை கணிசமாக வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற நம்பிகையுடன் களப் பணியாற்றி வருகிறாா். நாதக வாக்கு வங்கி, நடுநிலை வாக்காளா்களின் ஆதரவு ஆகியவை இவரது பலம்.

தவெக வேட்பாளா் மதுரை வீரன்: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மதுரை வீரன், முதல் முறை வாக்காளா்கள், இளைஞா்களின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. மேலும், அரசியல் களத்தில் மாற்றத்தை விரும்பும் வாக்காளா்கள், நடுநிலை வாக்காளா்களைக் கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இது பலம் பொருந்திய அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு நிச்சயமாக நெருக்கடியாக அமையும்.

மேலூா் தொகுதியில் பெரியாறு பாசன நீா், விவசாயக் கூலித் தொழிலாளா்களின் கோரிக்கைகளை யாா் முன்னெடுக்கிறாா்கள் என்பதைப் பொருத்துத்தான் மக்கள் வாக்களிப்பா். இருமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், இது அதிமுகவின் கோட்டை என்பதை அந்தக் கட்சி மீண்டும் நிரூபிக்குமா அல்லது காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.