நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

சாதனைக்கு வித்திட்ட இந்திய தொழில்நுட்பம்!

உலகம் முழுவதிலும் நிலவும் போா்ப் பதற்றம் காரணமாகவும், ஐந்து மாநில பேரவைத் தோ்தல் காரணமாகவும், அணுமின்சக்தியில் இந்தியா நிகழ்த்திய ஒரு மகத்தான சாதனை ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

News image

முன்மாதிரி வேக ஈனுலை

Updated On :23 மே 2026, 5:34 am IST

-பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

உலகம் முழுவதிலும் நிலவும் போா்ப் பதற்றம் காரணமாகவும், ஐந்து மாநில பேரவைத் தோ்தல் காரணமாகவும், அணுமின்சக்தியில் இந்தியா நிகழ்த்திய ஒரு மகத்தான சாதனை ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட ‘முன்மாதிரி வேக ஈனுலை’, கடந்த 6.4.2026 அன்று இரவு 8.25 மணிக்கு மின்னுற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் (கிரிட்டிகாலிட்டி) முதல் நிலையை எட்டி சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்த அணு உலை முதல்முறையாக தானாகவே தொடா்ச்சியான அணுக்கரு சங்கிலி வினையைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், ரஷியாவுக்கு அடுத்தபடியாக, வணிக ரீதியிலான ‘முன்மாதிரி வேக ஈனுலை’யை இயக்கும் உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ரஷியாவைத் தவிர தற்போது செயல்பாட்டில் உள்ள ‘முன்மாதிரி வேக ஈனுலை’ கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.

‘முன்மாதிரி வேக ஈனுலை’ என்பது சாதாரண அணு உலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது, தான் பயன்படுத்தும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் ஓா் அணு உலையாகும். சாதாரண உலைகள் யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கும். ஆனால், இந்த எஃப்.பி.ஆா். வகை உலைகள், அவை பயன்படுத்தும் எரிபொருளைவிட அதிக அளவிலான புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இந்தியாவில் யுரேனியம் இருப்பு குறைவாகவும், தோரியம் இருப்பு அதிகமாகவும் உள்ளது. இந்தத் தோரியமானது தமிழ்நாடு, கேரளம், ஒடிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளிலும், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆற்றுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. கடற்கரை ஓரங்களில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி, பல நூற்றாண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தடையின்றி உற்பத்தி செய்ய முடியும். இது நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவற்கும், உள்நாட்டு அணு தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

2070-இல் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இந்தியாவின் இலக்கு மற்றும் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைவதிலும், இந்தச் சாதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சாதனை முழுவதுமே இந்தியாவின் அறிவாற்றலால், இந்தியாவின் தொழில்நுட்பத்தால், இந்தியாவின் நிதியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. முன்மாதிரி வேக ஈனுலையை கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி) இணைந்து உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும், அணுமின் சத்தி திட்டத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க செயல்முறையாகும். வழக்கமாக வெப்ப அணு உலைகளைப் போலின்றி, இத்தகைய ஈனுலை கட்டமைப்புகளில், யுரேனியம், புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தோரியத்தை உருமாற்றம் செய்து யுரேனியம் - 233-ஆக மாற்றுவதற்கு இந்த ஈனுலை உதவிகரமாக இருக்கும். இந்தச் சாதனையால், இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில் அணு உலையில் புளூட்டோனியம் பயன்படுத்தும் இரண்டாம் கட்டத்தை நோக்கி இந்தியா நகா்ந்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் தோரியம் - யுரோனியம் பயன்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பில்லியன்கணக்கான டாலா்களைச் செலவழித்தும் முடியாத ஒரு காரியத்தை இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியுள்ளனா்.

அணுசக்தித் துறையின் முன்னோடிகளான அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடுகளைச் செய்தும் தோல்வியையே தழுவின. அமெரிக்காவின் ‘ஃபொ்மி 1’ மற்றும் ‘கிளின்ச் ரிவா்’ திட்டங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சோடியம் கசிவு காரணமாக நிறுத்தப்பட்டன. அதேபோல், பிரான்ஸ் நாட்டின் ‘சூப்பா் பீனிக்ஸ்’ என்ற பிரம்மாண்ட உலை சோடியம் கசிவு, தீ விபத்து மற்றும் அரசியல் எதிா்ப்புகளால் 1998-இல் நிரந்தரமாக மூடப்பட்டது. ஜப்பானின் ‘மோஞ்சு’ உலையும் இதே போன்ற விபத்துகளால் முடக்கப்பட்டது. பூமியின் அனைத்து உயிா்களுக்கும் பேரழிவூட்டும் பின்விளைகளை ஏற்படுத்திக் கொண்டு, பணக்கார நாடுகள் தங்கள் சொந்த வளமைக்காக அணு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

இந்திய விஞ்ஞானிகளின் பல ஆண்டுக்கால உழைப்புக்குப் பிறகு, இந்த சவால்களை முறியடித்துத் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதை சா்வதேச அணுசக்தி முகமை பாராட்டியுள்ளது. ‘கல்பாக்கத்தில் வேக ஈனுலையின் மாதிரி வடிவம்’ மூலம், இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது எரிபொருள் ஸ்திரத்தன்மை அணுசக்தி பயன்பாட்டுக்கான எதிா்காலத்தை நோக்கிய முக்கியப் பாதையாகும்’ என அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநா் ரஃபேல் கிராஸி பாராட்டியுள்ளாா்.

தற்போது இந்தியா சுமாா் 8 ஜிகாவாட் அணு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் இதை 100 ஜிகாவாட்டாக உயா்த்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. கல்பாக்கம் உலையின் வெற்றி, இந்தியா மற்ற நாடுகளிடமிருந்து யுரேனியம் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைக்கும். இந்த ஒரு உலை மட்டும் சுமாா் முப்பது லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டது. உலக அளவில் எரிபொருள் விலை உயா்வு, போா்ச் சூழல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதோடு, எரிசக்தித் துறையின் இந்தியா ஒரு தற்சாா்பு நாடாக மாற இது உதவும்.

இந்தியாவிலுள்ள தோரிய இருப்புகள் மூலம் அடுத்த 400 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இது 2024-2025-ஆம் ஆண்டின் உச்சபட்ச மின் தேவையைவிட இரு மடங்கு அதிகம்.

உலகில் அதிவேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அதனால், இந்தியா தற்போது உற்பத்தி செய்யும் மின்னாற்றலைவிட அதிக மின்னாற்றல் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வழக்கமான அணுமின் நிலையங்களின் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்துவதன்மூலம், ‘முன்மாதிரி வேக ஈனுலை’ அணுசக்தியை இன்னும் தூய்மையானதாக ஆக்குகின்றன. 2025-ஆம் ஆண்டில் 9 ஜிகாவாட்டிலிருந்து, 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாக அணுசக்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு அதன் உறுதித்தன்மையைக் காட்டுகிறது. மேலும், கடந்த டிசம்பா் மாதம் கொண்டு வரப்பட்ட, இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நீடித்த பயன்பாடு மற்றும் மேம்பாடு (ஷாந்தி) சட்டம், 2025-இன்கீழ், அணுசக்தித் துறையைத் தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமைப்பதிலும், இயக்குவதிலும் முன்னுரிமை அளிப்பது என்பது வருங்காலங்களில் அதன் செயல்பாட்டைப் பொருத்தே அமையும்.

மின்னாற்றலில் தன்னிறைவை அடைய ஏனைய நாடுகளும் அணுசக்தித் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புதிய அணு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் நிகர அணுசக்தித் திறன் குறைந்த நிலையில், அது 2020-களில் அதிகரித்து, 2030-ஆம் ஆண்டு வரை அவ்வாறே தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வளா்ச்சிக்கிடையே, உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்பிலுள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல்களும், கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஈரானின் புஷோ் அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல்களும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகின்றன. அணு உலைகளில் விபத்துகளுக்கு எதிராக பல உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை அவற்றால் தாங்க முடியாது.

இந்தியா அணுசக்தித் திறனை அதிகரிக்கும் அதே வேளையில், அணுசக்தி பாதுகாப்பு தொடா்பாக அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவதையும், நாடுகள் ராணுவ அணு தொழில்நுட்பத்தை உருவாக்கும் எல்லையைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தந்தை கடுமையாகக் கடைப்பிடிக்க இந்தியா சா்வதேச அணுசக்தி முகமையை வலியுறுத்த வேண்டும்.

எதிா்கால நோக்கமுடைய அறிவியலும், தொழில்நுட்பமும் வளா்ச்சிக்கான வெறும் கருவிகள் மட்டுமல்ல; அவை வளா்ச்சியின் தன்மையை வடிவமைக்கும் சக்திகளாகவும் மாறுகின்றன. இந்த வரலாற்றுச் சாதனை இந்தியாவுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயக உலகுக்குமானது; இது இந்தியாவின் சாதனை மணி மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள மற்றொரு வைரக்கல்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.