11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

திருக்குர்ஆனில் அனாதைகளின் பாதுகாப்புக்காக பல வசனங்கள் அருளப்பட்டுள்ளன.

News image
Updated On :28 மே 2026, 6:27 am IST

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துகளைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமானாரின் போதனைகள், அக்காலத்திய சமூகத்தில் அனாதைகள் தனிமைப்படாமல், ஒருங்கிணைந்து வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தூண்டின.

நபிகள் நாயகத்தின் மனிதநேயம், அனாதைகள் மீதான அக்கறை மற்றும் செயல்பாடுகள், இன்றும் உலகெங்கிலும் உள்ள அனாதைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்கிறது. இப்படியொரு தாக்கம் ஏற்பட காரணம் என்ன?

உலகில் மனிதன் பல்வேறு பாத்திரங்களாக வாழ்கிறான். ஓர் ஆணை எடுத்துக்கொண்டால் வாழும்போது தந்தையாக, மகனாக, கணவனாக, சன்னியாசியாக, துறவியாக, அனாதையாக, வணிகனாக, கூலியாக, தர்மகர்த்தாவாக, தீர்க்கதரிசியாக, அரசாட்சியின் தலைவனாக அறிஞனாக, ஒரு குடிமகனாக, போர் வீரனாக, ராஜதந்திரியாக, தோல்வியுற்றவனாக, வெற்றி பெற்றவனாக, நம்பிக்கையாளனாக, ஒப்பந்தக்காரனாக, கடனாளியாக, வழிப்போக்கனாக, துயரம் அறிந்தவனாக, சீர்திருத்தவாதியாக, உபதேசியாக, புதுமையை ஏற்றுக்கொள்பவனாக, பசி உள்ளிட்ட கஷ்டங்களை பொறுப்பவனாக, முதலாளியாக பல்வேறு நிலைகளில் வாழ்கிறான். ஆனால், எல்லோரும் எல்லா நிலைகளிலும் வாழும் வாய்ப்பு பெறுவதில்லை.

மனிதன் ஒரு சமூக விலங்கு, அவன் வாழ்வதற்கு குடும்பமும், சமூகமுமே முக்கியமானது. இந்த குடும்ப சமூகம் சார்ந்த வாழ்வியல் முறைக்கு சன்னியாசமும், துறவறமும் முற்றிலும் நேர்விரோதமானதாகும். இவை இரண்டையும் இஸ்லாம் அங்கீகரிப்பதும் இல்லை, ஏற்பதும் இல்லை. மாறாக, திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்ற தத்துவத்தை இஸ்லாம் பறைசாற்றுவதன் மூலமாக குடும்பமே

பிரதானமானது என்பதை உறுதிப்படுத்துவதோடு மக்கள் குழுக்களாக இணைந்து வாழவேண்டும் என்ற கோட்பாட்டையும், இறைவனைத் தொழுவதில்கூட ஜமாத்தாக (மக்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து) தொழ வேண்டும் என்று இறை வணக்கத்திலேயே வலியுறுத்தியதன் மூலமாக சன்னியாசம், துறவு உள்பட தனித்த வாழ்க்கையை இஸ்லாம் வேரறுக்கிறது.

உலகில் எத்தனையோ தீர்க்கதரிசிகள், உபதேசிகள், ஞானிகள், மத ஸ்தாபகர்கள் இப்படி பலரையும் கண்டுள்ளோம். பலரும் பல்வேறுவிதமான உபதேசங்களையும் வழிமுறைகளையும் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் அவர் கூறியவை அனுபவ ரீதியாகவோ, பொருத்தமாகவோ இருக்குமா என்றால், பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம், பெரும்பாலும் சன்னியாசியாக இருப்பார் அல்லது துறவறம் மேற்கொண்டிருப்பார். இவர் குடும்பவியலை பற்றியும் அரசாட்சியின் தர்மங்கள் குறித்தும் நிறைய சொல்லி இருந்தாலும் குடும்பவியலின் மகத்துவமும் அரசாட்சியின் அனுபவமும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் அவருடைய உபதேசங்கள் ஏட்டுச் சுரைக்காயாகவே அமையும்.

இதில் முற்றிலும் விதிவிலக்காக மேற்கூறிய எல்லா நிலைகளிலும் (சன்னியாசம் துறவறம் தவிர) பட்டறிவு பெற்றவர் முகமது நபி (ஸல்) ஆவார்கள். அவர்கள் அனாதை முதல் அரசாட்சி வரை உள்ள பெரும்பாலான நிலைகளில் (பாத்திரம்) இறைவன் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளான். ஆம், இறைவன் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு உலகில் பிறந்ததும் வழங்கிய முதல் அடையாளம் அனாதை என்பதே.

திருக்குர்ஆனில் அனாதைகளின் பாதுகாப்புக்காக பல வசனங்கள் அருளப்பட்டுள்ளன.

"அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' எனக் கூறுவீராக!-(அல்குர்ஆன் 2:220)

"அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துகளை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அனாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) நியாயமாகச் சாப்பிடலாம். அவர்களின் சொத்துகளை அவர்களிடம் வழங்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்'.-(அல்குர்ஆன் 4:6)

இதுபோல் பல வசனங்களில் அனாதைகளைப் பாதுகாப்பது பற்றியும், அனாதை சொத்துகளைப் பரிபாலனம் செய்வது பற்றியும், மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"அனாதைகளின் சொத்துகளை அவர்களிடமே அளித்து விடுங்கள். அவர்களின் சொத்துகளின் நல்லதை உங்களிடம் உள்ள கெட்டதிற்கு பகரமாக மாற்றி விடாதீர்கள்'. "அனாதைகளை சோதித்துப் பாருங்கள்; அவர்களிடம் தகுதியைக் கண்டால் அவர்களின் சொத்துகளை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்! அவர்கள் பெரியவர்களாகிவிடுவார்கள் என்று பயந்தும், அவசரமாக அதை சாப்பிட்டு விடாதீர்கள்!

ஏழையாக இருப்பவர் பராமரிப்பதற்கான கூலி என்ற அடிப்படையில் நியாயமாகச் சாப்பிடலாம்.“அனாதைகளின் சொத்துகளை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளின் நெருப்பையே உண்கின்றனர். இப்படியான பல்வேறு நல்கருத்துகள் அனாதைகள் பற்றி திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. இந்த இறை வசனங்களைச் செயல்படுத்தும் விதமாக இறைவன் தந்த அனுபவத்தினூடே மிகவும் கவனத்துடன் நபிகள் நாயகம் எடுத்துரைக்கும் கருத்துகள் ஹதிஸ்களாக உலகில் இன்றியமையாததாக முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள்தொகை பெருகி வரும் காலங்களில் அனாதைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தோம் என்பது முக்கியமானது. திருக்குர்ஆன், ஹதீஸ் கூறும் செய்திகள் வெறுமென படிப்பதற்கும், கேட்பதற்குமானது அல்ல, மாறாக செயல்படுத்த கடமைப்பட்ட செய்திகளாகும்.

பெருமானார் அனாதைகள் குறித்து எந்த அளவு அக்கறை கொண்டார்களோ அதே அளவு பெற்றோர்களையும், ஆதரவற்றவர்களையும் முதியோர்களைபற்றியும் அக்கறை கொண்டுள்ளார்கள்.

பெற்றோர்கள் பற்றிய இறைவசனங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!- (அல்குர்ஆன் 17:23)

இந்த வசனத்தில் இறைவன் தனக்கு இணை வைத்தல் கூடாது என்பதற்கு அடுத்தபடியாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதையே குறிப்பிடுவதோடு, பெற்றோரை நோக்கி "சீ' என்றுகூட கூறக்கூடாது என கட்டளையிடுகிறான்.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

அதனால்தான் முஸ்லிம் சமூகத்தில் முதியோர் இல்லங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை, பிற முதியோர், அனாதை இல்லங்களில்கூட முஸ்லிம் முதியவர்களைப் பார்ப்பது அரிது; காரணம், பெருமானாரின் அடிச்சுவற்றைப் பின்பற்றும் முஸ்லிம் மக்கள் பெற்றோர்களையும் முதியவர்களையும் அனாதைகளையும் பாரமாக நினைத்து புறக்கணிப்பதில்லை, அவர்களே பாதுகாக்கின்றனர்.

அனாதைகள், முதியோர்கள் சொத்துகள் பெற்றவராக இருப்பதில்லை, இவர்களைப் பாதுகாக்க போதிய இடவசதிகளையும், பொருள் வசதிகளையும் எல்லோரும் பெற்றிருப்பதில்லை. எல்லா தனிமனிதராலும் ஒருவருக்கான முழுப் பங்கையும் அளித்துவிட முடியாது. இதில் கூட்டுப் பங்களிப்பு அவசியம். இதற்காகத்தான் பைத்துல்மால் என்ற உதவி நிதியகத்தை உருவாக்கி அதன் வாயிலாக கட்டாய அற வரியாம் ஜகாத்தையும், தர்மம் எனும் சதக்காவையும் பெற்று அனாதையைக் காப்பது அவசியமாகிறது. இதற்கு அரசின், மக்களின் கூட்டு முயற்சி முக்கியமானது.

ஆகவே, ஜகாத் (அற வரி) வழங்க தகுதி படைத்தவர்கள், தங்களின் ஜகாத்தை எதற்கு வழங்குகிறோம் என்பதை ஆய்தறிந்து செலுத்தும் தேவையை உணர்ந்துள்ளனர்.

இப்படி குர்ஆன் ஹதிஸ் போதனைகளை உணர்ந்து இறை நாட்டப்படி (உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா? -(அல்குர்ஆன் 93:6)

அனாதையாக பிறந்த நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி அவ்வழி மக்களாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்று (மே 28) தியாகத் திருநாள்.

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.