கிருதயுகம் எழுக மாதோ!
உண்மையான தெய்வ பக்தி உடையவர்கள் செய்யும் செய்கைகளால் கிருதயுகம் விளையும்...

மகாகவி பாரதியார் - கோப்பிலிருந்து...
நம்முடைய வேதங்களிலேயோ, சமய ஆசாரியர்களுடைய உபதேசங்களிலேயோ கலியுகத்தின் கொடுமைகள் பற்றிப் பேசப்படவில்லை. பிற்காலத்தில் வந்த ஜோதிடர்கள் கலிபுருஷன் எனும் தீயவனைச் சனீஸ்வரனாக்கி, அவனைத் தெய்வமாகவும் படைத்து விட்டார்கள். யுகக் கவிஞனாகிய மகாகவி பாரதி, கலி பற்றிய கற்பிதங்களைத் தவிர்த்து, கிருதயுகத்தை எழச் செய்கிறார்.
புலவர்களின் வேந்தர் எனக் கருதப்படுகின்ற புகழேந்திப் புலவர் மட்டும் கலிபுருஷனின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக 'நளவெண்பா' எனும் குறுங்காவியத்தை எழுதிவிடுகிறார். ஆனால், நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் கலி பற்றிய செய்திகளைத் தகர்த்தெறியவே செய்திருக்கிறார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கலியுகம் பற்றி ஒரு தகவல் காணப்படுகிறது. 'காலம் கலிகாலம் ஆயிற்று. ஸம்சாரிகள் உயர்வதற்கு வேறொன்றும் உபாயம் இல்லாது போயிற்று. ஸாத்வாதிகமான பகவந்நாம ஸங்கீர்த்தனமே, ஆன்மாக்களுக்கு உஜ்ஜீவனமாயிற்று' என்பது மட்டுமே விஷ்ணு சகஸ்ரநாமம் தரும் செய்தி.
செவ்வைச்சூடுவார் இயற்றிய ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 12-ஆம் ஸ்கந்தம், இரண்டாம் அத்தியாயத்தில் கலியுகம் பற்றிப் பேசப்படுகிறது. 'கலியுகத்தில் ஒருவரின் குணம், நேர்மை, அறிவு, அன்பு முதலியவற்றைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வைத்தே மதிப்பிடுவார்கள். உண்மையைவிடப் பொய்க்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பொய் பேசுவது, பிறரை ஏமாற்றுவது, தவறுகளை மறைப்பது போன்றவை அதிகமாக இருக்கும்.
உறவுகளில் சுயநலம் அதிகமாக இருக்கும். உண்மையான குணத்தைவிட ஆடை, தோற்றம், பதவி, புகழ் போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என்பன ஸ்ரீமத் பாகவதம் தரும் தகவல்களாகும்.
மகாபாரதத்தில் 'வனபர்வத்தில்' மார்க்கண்டேய முனிவர் கலியுகம் பற்றி தருமனுக்குக் கூறுவதாகச் சில செய்திகள் உண்டு. அவையாவன: 'அறம் படிப்படியாகக் குறைந்து, பொய், திருட்டு, வன்முறை முதலியன அதிகமாகும். அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தர்மத்தைக் காக்காமல், கொள்ளைக்காரர்கள்போல் மக்களைத் துன்புறுத்துவார்கள். குடும்ப உறவுகள் பாசத்தால் இல்லாமல், பணத்துடனும், சுயநலத்துடனும் செயல்படும். பசுக்கள் குறைவான பாலையே தரும். உண்மையான ஆன்மிகங்களும் யாகங்களும் மறைந்து, போலியான மதவாதிகள் பெருகுவார்கள்' போன்றனவாகும்.
மகாகவி பாரதியார் தம் கையிலிருந்த பேனாமுனையைக் கூர்வாளாக்கிக் கலிபுருஷன் மீது பாய்ச்சுகின்றார். 'அநியாயக்காரர்களும், அடாவடிக்காரர்களும் தோன்றுகின்ற காலந்தான் கலிகாலமே தவிர, கலிகாலம் அதர்மவாதிகளைத் தோற்றுவிப்பதில்லை' என்பது பாரதியாரின் கருத்தாகும். 'தத்துவம்' எனுந் தலைப்பில் பாரதியார் வரைந்த கட்டுரை இதற்குச் சான்றாகும்.
'பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும்; அநியாயம் நீங்கினால் கலியில்லை; உலகம் முழுவதும் கலியில்லை; எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் 'கிருதயுகம்' அந்த கணமே கைமேல் கிடைக்கும்; இதில் சந்தேகம் இல்லை. ஒருவன் கலியை அடித்து நொறுக்கினால், அதனைப் பார்த்துப் பத்து பேர் உடனே நொறுக்கிவிடுவார்கள். இதில் சந்தேகம் இல்லை' என பாரதியார் ஆணித்தரமாக எழுதுகிறார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருமறைக்காட்டிலிருந்து புறப்படும்போது, திருஞானசம்பந்தர் சமணர்கள் வாழும் மதுரையம்பதிக்குச் செல்ல வேண்டும் என்கிறார். அப்போது திருநாவுக்கரசர், 'ஐயனே! இப்பொழுது தாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டாம். நாட்களும் கோள்களும் சரியாக இல்லை; தீங்கு நேரிடும்' என எச்சரிக்கின்றார்.
அதற்கு ஞானசம்பந்தர் 'நாள்களையும் கோள்களையும் அறுத்தெறியக்கூடிய கோளறு பதிகம் (கோள் : அறு : பதிகம்) பாடுகிறார். அதன் பொருள்: 'நாட்களும் கோள்களும் தீயனவாயின் அதனைச் சிவபெருமான் படைத்திருக்கமாட்டான். ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை அனைத்து நாட்களும் நல்ல நாட்களே ஆகும்; தீய நாட்களை எம்பெருமான் படைக்கமாட்டான்' எனச் சொல்லிப் புறப்படுகிறார்.
நம்மாழ்வாரும் 'இந்துக்கள் தங்களுடைய வேதப்பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டு, கூடித் தொழுவீர்களானால், கலி என்று ஒன்றில்லை' எனும் பொருளில் 'ஒக்கத் தொழுகின்றீராயின் கலியும் ஒன்றுமிலை' என அருளிச் செய்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் 'அரங்கனே! உன் பெயரை உச்சரித்துக் கொண்டே, கலிபுருடனின் தலைமீது பாய்ந்து அவன் தலையில் காலை வைத்துக் கூத்தாடுவோம்' என அருளிச் செய்கின்றனர் (பாசுரம் திருமாலை -1, திருவழுந்தூர்).
பத்திரிகையில் எழுதியது போதாதென்று 'குள்ளச்சாமி' வாக்காகவும், 'இந்து தேசத்திலுள்ள ஜீவனை யுக யுகாந்திரமாக அழியாதபடி, பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே! கொடூரமான கலியில் உலகம் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும் சமயத்தில்கூட, இந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து, மற்றவர்களையும் காக்கக்கூடிய ஜீவசக்தி இந்நாட்டினருக்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை' என அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறார் பாரதியார்.
'கலியுகத்தில் ஒவ்வொரு மனிதனையும் 'கலி' மூன்று முறை பற்றுவான்; அவற்றுக்குப் 'பொங்குசனி, 'மங்குசனி' எனப் பெயர். அவ்வாறு பற்றிய சனி ஏழரை ஆண்டுகள் தொடர்வான்' எனச் சோதிடர்களும், போலி மந்திரவாதிகளும் கட்டிவிட்ட கதை நாட்டில் பரவலாயிற்று. இது கலியுகத்தின் கொடுமை என முத்திரையும் குத்தினர். இவையெல்லாம் சில சாத்திரங்களிலும், புராணங்களிலும் புகுந்தன.
இதையெல்லாம் கண்டு கொதித்தெழுந்த பாரதி 'வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது; போதச் சுடரைப் புகையிருள் சூழ்ந்தது' என வசன கவிதையில் குறிப்பிட்டார். விவேகானந்தரும் 'சாத்திரங்கள் மாறக்கூடியன; ஆனால், வேதங்கள் மாறுவதில்லை' என எழுதியிருக்கிறார். 'கலியுகம் எந்தத் தீயவர்களையும் உருவாக்குவதில்லை; ஆனால், தீயவர்கள் கலியுகத்தை உருவாக்குகிறார்கள்' என்பது பாரதியின் எண்ணம்.
'கலி'என்பது மனிதர்களால் உருவாக்கப்படும் துயரங்கள், துன்பங்கள் என்பதை நன்கறிந்த பாரதியார், சோவியத் நாட்டில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, 'இடிபட்ட சுவர்போல் கலி விழுந்தான்' என வருணிக்கிறார்.
மகாகவி பாரதி கலியுகத்தைக் கொல்ல வந்தவர் மட்டுமன்று; கிருதயுகத்தை நிலைநாட்ட வந்தவரும் ஆவார். அதனை அவர் 'பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே, மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன்! கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்'என வஞ்சினமும் கூறுகின்றார்.
'கிருதயுகம்' என்றால் என்ன? அதனைப் பாரதியார், 'செய்கை' எனும் சிறுகதையில் 'உண்மையான தெய்வ பக்தி உடையவர்கள் செய்யும் செய்கைகளால் கிருதயுகம் விளையும்' எனச் சூசகமாகக் குறிப்பிடுகின்றார்.
கிருதயுகம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு விளக்கம் தந்தார். 'தர்மம் முழுமையாக நிலவும் காலம் கிருதயுகம். உண்மை, நேர்மை, கருணை, ஆன்மிகம் ஆகியவை மனித வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பதாக இந்து மரபு விவரிக்கின்றது' என்பது சுவாமிஜியின் விளக்கம்.
குள்ளச்சாமியை ஆன்மிகக் குருவாகக் கொண்டவர் மகாகவி பாரதியார். 'வேதாந்த மரத்திலொரு வேரைக் காட்டியவர் குள்ளச்சாமி. நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமி, ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து, ரிஷிகளுக்குள்ளே ரிஷியாகி, தேவர்களுக்கு எல்லாம் அதிபதியாகத் திகழ்ந்தவர். அந்தக் குள்ளச்சாமி அருளாவேசத்தில் 'கிருதயுகம்' பற்றிப் பேசியதைக் கீழே தருகிறேன்.
'நானே பஞ்சபூதம்! அஹம்ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால் கிருதயுகம் வருகிறது! எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும், எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்காக விதியுண்டானால், அதுதான் கிருதயுகம்' எனக் குள்ளச்சாமி ஆக்ஞாபித்ததால், பாரதியார் உள்ளத்திலும் அந்தத் தெய்வக்குரல் பதிவாகிறது.
விநாயகர் நான்மணிமாலையில் பாரதியாரின் கிருதயுக வேட்கைக் குரல், மீண்டும் மீண்டும் மூவிடங்களில் ஒலிக்கப்படுகிறது. 'கிருதயுகத்தைக் கொண்டு வரத் தெய்வம் தம்மைப் பணித்ததாகவும்' பாரதியார் வாக்குமூலம் தருகிறார்.
இன்னும் 'இன்று' எனும் கட்டுரையிலும் பாரதியார் 'கிருதயுகத்தை' கீழ்க்கண்டவாறு வேண்டி வரவேற்கின்றார்.
'இன்று தேவர்களை அழைக்கிறோம்; இந்த மண்ணுலகத்திலே மீளவும் 'கிருதயுகத்தைக் காட்டும் பொருட்டாக! அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராட்சஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக 'கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்துதரும் பொருட்டு, எமது குற்றங்களையெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டாக!' எனக் கிருதயுகத்தின் அவசியத்தை எடுத்து இயம்புகின்றார்.
மறுபடியும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கிருதயுகத்தை விளக்கி 1915-இல் 'தி கம்மிங் ஏஜ்' எனுந் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் சோஷலிசம் என்னதென்று விளக்குகிறார். 'பண்பார்ந்த வாழ்க்கை முன்பு, ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதாவது, இந்த பூமியைப் பொதுச் சொத்தாக்கி, அதில் எல்லோரும் கூடி ஒத்துழைக்கும் சகோதரர்களாக வாழும் வாழ்க்கையாகும். இந்த நாட்டில் மக்கள் கிருதயுகத்தில் அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்ற மரபு நமக்கு இருந்தது. எல்லா நாடுகளிலும் அந்தக் கிருதயுகத்தைக் கொண்டு வருவதில் மனிதன் இன்னும் தொடர்ந்து பாடுபட்டு வெற்றியடைவான்' என முடிக்கிறார்.
இதனால், சமத்துவத்தைப் பெறுவதற்கும் கிருதயுகம் பயன்படும் என்பதைப் பாரதியார் மிகவும் வற்புறுத்துகின்றார்.
'கிருதயுகத்தைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டேன்' என்பதன் பொருள் புரிகிறதல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

