3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மூன்றாவது கவிச்சக்கரவர்த்தி! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 17

கம்பர், பாரதியாருக்கு அடுத்து மூன்றாவது கவிச்சக்கரவர்த்தி கவிஞர் கண்ணதாசன்...

kavingar kannadasan

கவிஞர் கண்ணதாசன் - PC: Respecting owner

Published On :

- டி.என். சுகி சுப்பிரமணியன்

தமிழ்க் கவிகளில் கம்பர் மிகச் சிறந்த கவிச் சக்கரவர்த்தி. பண்டிதர்களும் பாமரர்களும் இவரை அன்றாடம் அறிவார்கள்.

இவரது கவிச்சிறப்பை, புராணச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில், கேட்டு மகிழ்ந்து, மறந்து விடுவது பாமரர்கள் தம் இயல்பு.

கம்பருக்கு அடுத்தபடியாக வில்லிபுத்தூராருக்கு இதே பெருமை கிடைக்கிறது.

பெரிய புராணம், கந்தபுராணம் இவற்றுக்கும் இதே பெருமை - கேட்பதும் மறப்பதுமான பெருமை - பாமரர்களிடம் நடைபெறுவதைப் பார்க்கிறோம். ஞானவான்களும் தெய்வ நம்பிக்கை ஊட்ட வல்லவர்களுமான திருமூலர், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்களுக்கும் சிறிது நேர விழிப்பைத் தரவல்ல சக்தி உள்ளன.

தேவாரம், திவ்யபிரபந்தம் யாவும் ஆன்ம வாழ்வுக்கும் அன்றாட ஒருமைப்பாட்டுக்கும் தேவையான நூல்கள். ஒருசிலர் முணுமுணுக்கப் பயன்படுகின்ற நூல்கள்.

பொதுமக்கள் பலரும் கூடிக் கலந்து விருந்து போன்று அனுபவிக்கும் தன்மை கம்பர் கவிக்கே எந்நாளும் இருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக, பல கோடி மக்கள் தொடர்ந்து அனுபவிக்கிறார்கள்.

குழந்தைகள், கம்பர்தம் கவிநயத்தையும், காவ்யச் சிறப்பையும் அறிந்ததாகவோ அனுபவித்ததாகவோ சரித்திரமும் இல்லை; சான்றும் இல்லை.

பாரதியார் காலம் வரைக்கும் கவிச்சக்கரவர்த்தியாக இருப்பவர் கம்பர் ஒருவரே.

பாரதியாரின் கவிதைகள் பாமரர்களுக்குப் பிடித்தமான கவிதைகள். பண்டிதர்களின் துணையும் தொந்தரவும் இல்லாமல் நமக்குள் நாமே படித்தும் பாடியும் எவராலும் எந்நாளும் அனுபவிக்க முடிகிறது. தமிழ்க் கவிதைகளில் பாரதியார் பாடிய கவிதைகள் பண்டிதர்கள் - பாமரர்கள் என்னும் இரு கரைகளை இணைக்கும் பாலமாய் அமைவதைப் பார்க்கிறோம்.

பாரதியார் கவிதையாற்றிலே சின்னஞ் சிறார்களும் தோணிகளோட்டி மகிழ்வது கண்கூடு. தேசீயமயமான பாடல்களைப் பாமரர்கள் பாடி மகிழ்ந்தார்கள்.

தெய்வத் திருப்பாடல்களை பக்தர்களும் பண்டிதர்களும் ''போனால் போகிறது பாரதியாரின் கவிதைகளில் ஓரளவு கவிநயம், பக்தி மார்க்கம் இருக்கிறது" என்று மன்னிப்பு மனப்பான்மையோடு ஆதியில் ஏற்றுக்கொண்டனர்.

ஏற்றுக்கொண்ட ஒருசில அறிஞர்களையும் மிகக் குறைவான பண்டிதப் பெருமக்களையும் பாராட்டிய பெருமை எழுத்தாளர் வ.ரா.வைச் சேரும். பாரதியார் கண்ணாரக் காணப் பிறந்த கவிச்சக்கரவர்த்தி என்று போர்க்கொடி பிடித்து தமிழ் மக்கள் மனதில் கொலு வீற்றிருக்கச் செய்தவர் வ.ரா. ஒருசில பத்திரிகையாளர்கள் - எழுத்தாள நண்பர்கள், இந்த நற்போரில் வ.ரா.வுடன் தோள் கொடுத்துப் பாரதிக்கு அஞ்சலி செய்து, பாரதியாரது தனித்தன்மையை கல்லில் எழுதிய சிற்பமாகப் பதிய வைக்க முடிந்தது.

கம்பர், பெரிய காவ்யத்தாலும், அற்புத அற்புதமான கவிதைச் சிற்பங்களாலும், பக்தியை அடித்தளமாக வைத்ததாலும் கவிச் சக்கரவர்த்தியானார்.

பாரதியார், தேசப்பற்று, பக்தி மார்க்கம், தமிழில் இசைப் பாடல்கள், சமுதாய விழிப்பு என்னும் நான்கு விஷயங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துத் தெள்ளுதமிழில் பாடினார்; அவர் கவிச்சக்கரவர்த்தியாக நிலைக்க முடிந்தது.

கம்பர், பாடல்கள் எழுதினார்.

பாரதியார் எழுதிய பாடல்கள் யாவும் பாடப்பட்டன.

படிப்பதற்கு அப்பாலும் பாடுவதற்குச் சுவையாய் (தேவார, திருவாசகங்கள் போல) அமைவது கவிதையின் மிகப் பெரிய சிறப்பு.

கம்பர் காலத்துக்கும், பாரதியார் காலத்துக்கும் இடையில் எத்தனையோ ஆயிரமாயிரம் கவிஞர்கள், புலவர்கள், புராணம் எழுதிய பக்தர்கள் பிறந்தார்கள்.

என்றாலும்,

பாரதியார், மூன்றே புலவர்களைத்தான் சிறந்த கவிஞர்கள் என்றார். வள்ளுவர், கம்பர், இளங்கோ மூவரும் பாரதியார் கவிமனத்தைக் கவர்ந்த தலைசிறந்த கவிஞர்கள்.

வள்ளுவரின் சிறப்புப் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அவரது திண்மையான அறிவுச் சூத்திரங்கள் பொதுமக்கள் மனதில் ஆழப் பதியவில்லை. பதிய முடிவதில்லை. குதிரைச் சவுக்கு போல அடிக்கும் தன்மை குறளுக்கு உண்டு. சூட்டுக் கோல் போன்று சுடும் தன்மையும் குறளுக்கு உண்டு. தனி மனிதத் தவறுக்கும், சமுதாயத்தின் தவறுக்கும் மருந்து போல பயன்படுவன குறட்பாக்கள்.

கம்பரோ, மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ போன்ற மணமிக்க கவிதை மலர்களைத் தந்தவர். தாமரை - அல்லி யன்ன லட்சுமிகரமான கவிதைகளைப் பாடியவர். நாடகப் பாங்கோடு பாடியவர்.

இளங்கோவின் ஆற்றல் பாரதியார் காலத்தில் மிகச் சிறப்பாக இல்லை. திரு. ம. பொ. சிவஞான கிராமணியார் செய்த சேவை, பாரதியார் வாக்குப் பொய்யாது போயிற்று. கனக விசயன் தலையில் கல்லேற்றி, கண்ணகிக்குச் சிலை செய்த செங்குட்டுவனைவிட, ம. பொ. சி. செய்த படையெடுப்பு மிகவும் கடுமையானது. தமிழ்ப் பண்டிதர்கள் - ஆராய்ச்சியாளர்கள் தலையிலும் தலைக்குள்ளாகவும் சிலப்பதிகாரத்தையும், கவிஞர் இளங்கோவையும் சுமத்தி- பாமரர்கள் இளங்கோவை அறிவதற்கும் வடிகால் அமைத்தார்.

தமிழ்க் கவிஞர்கள் என்று சொன்னால் கம்பர் ஒரு கவிச் சக்கரவர்த்தி. பாரதியார் மற்றொரு கவிச் சக்கரவர்த்தியென்று பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு பக்தியில் ஈடுபாடு என்றென்றும் உண்டு. அதைவிட, பக்தியைச் சுட்டிக் காட்டும் கவிஞர்களிடம் அதிகமான ஈடுபாடும் உண்டு. மேலும் சொன்னால், சிறப்பான கவிதைகளை அவர் மனனம் செய்வது வழிவழிவந்த மரபு.

எனவே,

கம்பர் தாம் எடுத்துக்கொண்ட ராம கதையாலும், அபூர்வமான தமது கவி ஆற்றலாலும், கவிதைகளின் தனி அமைப்பாலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொண்டார். கவிச் சக்கரவர்த்தியானார்.

தமிழ் உள்ளவரை, கம்பர்தாம் கவிச்சக்கரவர்த்தியென்பதைப் பண்டிதர்கள், பாமரர்கள் ஒருமனதுடன் ஒப்புக் கொள்ளுவார்கள்.

அடுத்து -

பாரதியாருக்கு கவிச்சக்கரவர்த்தியாவதற்கு அவருடைய காவ்யம் எதுவும் துணை நிற்கவில்லை. அவரது தேசப்பற்றும், தமிழ் இசைப்பற்றும் காரணமாக இருந்தன. இசைப் பாடல்களும், சமயப் பற்றிலே பிறந்த கண்ணன் - முருகன் - காளிதேவி-ஸ்தோத்திரப் பாடல்களும் அவருக்குக் கவிச்சக்கரவர்த்தி பட்டம் கொடுத்து மகிழ்ந்தன.

கவிஞன் கவிதைப் பாடல்கள் எழுதலாம்.

மக்கள் அப்பாடல்களைப் பாடுதல் வேண்டும்.

பாரதியார் எழுதிய கவிதை யாவும் பாடுவதற்காக எழுதப் பட்டவை. எனவே வெகு விரைவில் அவர் புகழ் தமிழர் நெஞ்சங்களில் முத்துக் குளித்தது.

தேச விடுதலை இயக்கம் தோன்றிய காலத்தில், ஆங்காங்கு பொதுக்கூட்டம் போட்டு பாரதியார் பாடல்களைப் பாடியதால் பொதுமக்கள் மனத்தில் தேசீய எழுச்சி ஆழமாக வேர்விட்டு ஆடாது அசையாது நித்தியமாய் நின்றுவிட்ட கற்பகத்தருவாக மாறுகிறார் பாரதியார்.

அவரிடம் முனைப்பாக நான்கு சிறப்புகளைச் சொல்லலாம். முதற்சிறப்பு தேசியப்பற்று. எவ்வாறு கம்பரிடம் காவ்ய நயம், பக்திமயம், சொற்செட்டு யாவும் அழியாத சொத்தாக இருக்கின்றனவோ, அதே போன்று பாரதியாரிடம் தேசப்பற்றும் மொழிப்பற்றும் அழியாத சொத்துகள்.

பாரதியார் விட்டுச்சென்ற தேசீய எழுச்சிப் பாடலில் இருக்கும் சூடும் - சுவையும் இன்னும் எத்தனை கோடி ஆண்டு ஆனாலும் நீறு பூத்துப் போகாத நெருப்பு. நித்தியமாய் நிர்மலமாய் அன்று உதிக்கும் சூரியனைப் போல அனல் தந்து கொண்டிருக்கும் !

அடிமைக் குளிர் மிகுந்தால், அவரது பாடல்கள், ஆதிக்கப் பணியையும், அதிகாரக் குளிரையும் விரட்டி வைக்கும் வைரி!

கண்ணதாசன் கவிநயத்தைச் சொல்லவேண்டிய நான், கம்பர் ஒரு கவிச்சக்கரவர்த்தி, பாரதியார் ஒரு கவிச்சக்கரவர்த்தி, இருவரும் என்றுமுள இளங்கவிஞர்கள் என்பதற்குரிய காரணத்தைச் சொல்லி வருகிறேன்.

யுகங்களின் தேவையைப் பொருத்து கவிஞர்களின் மனம் செயல்படும்.

பக்தியும் காவ்யமும் தேவைப்பட்ட காலம் - கம்பர் வாழ்ந்த காலம்.

தேச பக்தியும், தமிழ் இசைப் பாடல்களும் தேவைப்பட்ட காலம் - பாரதியார் வாழ்ந்த காலம்.

அந்தந்த யுகத்தின் வாசற்படியில் நிற்கும் கவிஞன் அக்காலத்திய சமுதாயத்தின் குரலாய் நிமிர்ந்து நின்று கவிதைகள் எழுத வேண்டும். அது இசையோடும் இணைய வேண்டும். எவரும் பாடியாக வேண்டும். அந்தக் கவிதைப் பாடல்களை கற்றவரும் மற்றவரும் மிகுதியான மக்கள் எண்ணிக்கையினர் கேட்டுக் கிளர்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும். அதிகமான மக்களை ஈர்ப்பதற்கு அதிகமான பாக்களைக் கவிஞன் இயற்றிக் கொண்டு இருத்தல் வேண்டும்.

கம்பர் அதிகமான பாக்களை எழுதியவர். அத்தனை பாக்களிலும் கவிதையின் உத்திகளும் ரசங்களும் கதைத் திருப்பங்களும் இருப்பதால் அவர் மிகப் பெரிய கவியாக விளங்குகிறார்.

கண்ணதாசன் அதிகமான பாக்களை எழுதினவர்; எழுதிக் கொண்டிருப்பவர், ஊற்று நீர் ஆற்று நீராகப் பெருக்கெடுக்க வேண்டும். கண்ணதாசன் இதனைச் செய்தவர். தனிப் பாடல்கள், சினிமா பாட்டுகள், சிறு சிறு காவ்யங்கள், இரங்கற் பாக்கள் (இரங்கற்பா கவிதைகளின் நயங்களை, டாக்டர் பட்டம் பெற விரும்பும் ஒருவர், ஆராய்ச்சி நூலாக எழுதலாம்) வசன - கவிதை யென்று, கவிதை வடிவங்கள் - பாவினங்கள் - கீர்த்தனைகள் யாவும் எழுதிக் குவிக்கிறார்.

கண்ணதாசனுக்கு சினிமா யுகம், ஒரு வரப்பிரசாதம்.

கவிதைகளைப் படிப்பதைவிட பாடி மகிழ வேண்டும் என்னும் யுகத்தில் நாம் இருக்கிறோம்.

கவிதையின் புகழ் பரவுவதற்குப் பாடுகிறவர்கள் தேவை. தியாகராஜர் சாகித்யங்களுக்கு சங்கீத வித்வான்கள் கிடைத்த மாதிரி, கண்ணதாசன் பாடலுக்கு திரை வித்வான்கள் கிடைத்தார்கள்.

திரைப்படங்கள் மறைந்த பின்னரும் வானொலி நிலையங்கள் திரைப்பாடல்களை நினைவூட்டிக் கொண்டிருப்பது பெரியதோர் வாய்ப்பு.

திரையுலகம், ஏழு கடலையும்விட மிகப் பெரிது. ஏழு உலகத்தைவிட வானொலி பரப்பளவு கொண்டது. எனவே, தம் பாடல்களின் வழியாகத் தம் கவிதையை, தமது கவித்துவத்தைப் பத்திரிகை - திரை - வானொலி சாதனங்கள் மூலம் வியாபிக்க முடிந்தது. விஸ்வரூபம் எடுக்கவும் முடிந்தது.

கம்பராம் கவிச் சக்கரவர்த்தியின் காவ்யச் சொல், கருத்து லாகவங்கள், சொற் ஜாலங்களையும் - கவிச் சக்கரவர்த்தி பாரதியாரின் எளிமை - இனிமை - இன்னோசைத் தன்மைகளை யும் - ஒட்டிக்கட்டிப் பார்க்க வேண்டும்.

பார்த்தால்?

நமக்குக் கண்ணதாசன் கவிதைகள் கிடைக்கும்.

கம்பர் காவ்யத்தைத் தந்தையாகவும், பாரதியின் பாண்டித்தியத்தைத் தாயாகவும் கற்பனை செய்து பார்க்க வேண்டும் - நமக்குக் கண்ணதாசன் கவிதைக் குழவிகள் கிடைக்கும்.

பாரதியார் தொடங்கி வைத்த சமுதாயச் செய்திகள் - மக்கள் தொடர்புக்குரிய மணிமணியான சொற்களைத் தாய்த் தன்மையாகவும், - கம்பனின் காம்பீர்யத்தை தந்தைத் தன்மையாகவும் நினைத்துத் தவம் இருக்க வேண்டும்.

தவத்தின் பலன்?

கண்ணதாசன் கவிதை நூல்களை நமது கைத்தலம் கிடைத்த கனிகளாகப் பார்க்கிறோம்.

கம்பரது பாடலுக்கும் - பாரதியாரது பாடலுக்கும் ஒட்டு மாம்பழமாகக் கனிந்த சரக்கின் பெயர், கண்ணதாசன் கவிதைகள்.

கண்ணதாசன் பாடல்களில் - கவிதைகளில் - சிறப்பும் சிந்தனையும் தெளிவாகவும் பொலிவாகவும் காணப்படுவதற்குக் காரணம், இரு சக்கரவர்த்தியின் ஒட்டுக்கிளை இவர் என்றேன்.

இந்தக் கவிதை மருக்கொழுந்து எத்தகைய இடங்களில் வேர்விட்டு உரத்தையும் சாரத்தையும் உறிஞ்சி வளர்ந்தது? -

இசைத் தமிழின் நலத்தை நாடுபவர்;

நாடகத் தமிழின் நயத்தை அறிந்தவர்;

இயல் தமிழின் இன்பம் நுகர்ந்தவர் ;

அரசியல் தமிழின் ஆணவம் கண்டவர்;

தத்துவத் தமிழின் தன்மைக்குள் முங்கி அனுபவித்தவர்;

ஆஸ்தீகத்தின் ஆழம் பார்த்தவர் ;

இலந்தைப்பழம் முதல் இந்து சமயம் வரை அனுபவித்தவர் ;

சித்தர் பாடல்களின் சித்தம் உணர்ந்தவர்;

காவடிச்சிந்தின் களியாட்டங்களையும், கிளிக்கண்ணி - லாலி - லாவணி - இவற்றின் பாமரத்தன்மையையும் பளிங்கு போல ஊடுருவிக் கண்ட மருக்கொழுந்து இவர்.

மற்றைய மலர்களுக்கு இல்லாத சிறப்பு மருக்கொழுந்துக்கு உண்டு. அது கிளைக்கும் போதும் மணக்கும்; எங்கே கிள்ளியெடுத்தாலும் மணக்கும். கிள்ளியெடுக்க யெடுக்க வளர்ந்து வளர்ந்து மணம் வீசும் தன்மையுடையது மருக்கொழுந்து.

கம்பரும், பாரதியாரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பொன்னும் புகழும் பேரும் ஊரும் அறியாதபடி இருந்தனர். பலர் கூடி காலங்காலமாக மேற்சொன்ன கவிஞர்கள் தம் உயர்வை உணர்த்த வேண்டிய பொறுப்பு இருந்தது.

பிறந்த காலத்திலேயே தமது மனத்தையும், மதிப்பையும் கண்ணாரக் கண்டும் கேட்டும் மகிழ்ந்துவரும் ஒரே கவிஞர் கண்ணதாசன்.

இலக்கணம் வழுவாமல், இலக்கிய ருசி கெடாமல், இழுக்கில்லாத வகையில் இசையுடைய பாட்டுகளைச் செழுமையாகவும், கொழுமையாகவும் யாத்தவர், கண்ணதாசன்.

இசை யென்னும் கொடிவழியே கவிதை மலரும் - ஏன் பலரோடு மதுவும் சொரியும் இயல்பினர்; கவிஞர்கள் மத்தியில் கோவிற் கொடிமரமாக - துவஜஸ்தம்பமாக நிமிர்ந்து நிற்கிறார். பிறரது விருப்புக்கும் வெறுப்புக்கும் மனம் கலங்காத கோவில் யானை இவர். பிறருக்கு ஆசி சொல்லிக் காசு வாங்கும் கவி - யானை.

இயல், இசை, நாடகத்தின் பிரதிநிதியான இவர், கம்பன் கவியழகும், பாரதியின் பாடல் தன்மையும் ஒன்றிய தியாகராஜ பிரம்மம் இவர்;

எனவே, கண்ணதாசனைக் கவிராஜயோக சக்கரவர்த்தியென்று ஒப்புக்கொள்வதால், தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை.

ஒப்பக்கொள்ள மறுப்பவர்கள், தேமதுரத் தமிழோசை அறியாத செவியிலிகள்; என்றுமுள கன்னித் தமிழைத் துய்த் துணரா காழ்ப்பு மணிகள்.

கல்வி அறிந்தாரைப் போற்றுதும்; அதுவே நம் கடமை!

கவி நயமே செவி நயம் என்றாரைப் போற்றுதும்; அதுவே நம் கண்ணியம்!

இலக்கண இலக்கியங்களில் வழுவாத கவியாம் கர்ணனைப் போற்றுதும்; அதுவே நம் கட்டுப்பாடு.

மூன்றாவது கவிச்சக்கரவர்த்தியைப் போற்றுதும்;

இதுவே நமது பண்பாடு!

[கவிஞர் கண்ணதாசனின் 50-வது பிறந்த நாளையொட்டி, 1976 -ல் வெளியிடப்பட்ட கண்ணதாசன் பொன்விழா மலரில் இடம் பெற்ற கட்டுரை. இன்னோர் 50 ஆண்டுகளுக்குப் பின் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. கட்டுரையாளர் டி.என். சுகி சுப்பிரமணியம், கவிஞரின் சமகால எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை விற்பன்னர். திருச்சி, சென்னை வானொலி நிலயங்களில் பணியாற்றியவர். 1986-ல் காலமானார். காப்புரிமை - தொடர்புடையோருக்கு].

Summary

The Third Emperor of Poet Kavingar Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.