பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

காணடா, கவித் தெய்வம் நானடா! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 16

திரைப்படங்களில் கவியரசர் கண்ணதாசனின் தனித்துவமான பாடல்கள் பற்றி...

Kaviarasar Kannadasan

கவியரசர் கண்ணதாசன் - தினமணி

Published On :

அதிகாலை நேரம். அம்மா ஒருத்தி பெண்ணிடம், ‘அடியே! பொழுது விடிஞ்சாச்சி. கண்ணைத் திறடி’ என்கிறாள்.

கைகளால் கண்களை மூடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணோ, ‘ம்ஹூம். உயிரே போனாலும் கைகளைத் திறந்து காட்ட மாட்டேன். நேற்றிரவு என் காதலன் (பாண்டிய மன்னன்) கண்ணுக்குள் புகுந்துவிட்டான். கைகளைத் திறந்தால் அவன் ஓடிவிடுவான். எப்படி கண்ணைத் திறப்பதாம்?’ என்கிறாள்.

முத்தொள்ளாயிரத்தில் இப்படி ஒரு முத்தான பாடல் இருக்கிறது.

‘தளையவிழும் பூங்கோதை தாயரே ஆவி /களையினும் என் கைதிறந்து காட்டேன்- வளைகொடுபோம் / வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் / தென்கண் புகுந்தான் இரா’ என்பது அந்தப் பாடல்.

நம் திருவள்ளுவர் வேறு சும்மா இருக்கவில்லை.

அவர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால், ‘என் காதலர் கண்ணை விட்டு போக மாட்டார். கண்ணுக்குள்ளேயே இருப்பார். கண்களை இமைத்தால் அவருக்கு எந்த துன்பமும் ஏற்படாது. அவர் அந்த அளவுக்கு நுட்பமானவர்’ என்று ஓர் இளம்பெண் கூறுவதுபோல குறள் எழுதிவிட்டார்.

‘கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் / நுண்ணியர்எங் காதலவர்’ என்பது அந்தக் குறள்.

கம்பர் வேறு. கம்பராமாயணத்தில் ராமன் திருவீதியுலா வரும்போது, ராமனின் அழகைக் கண்ட பெண்ணொருத்தி, ராமன் தன் நெஞ்சுக்குள் வந்து புகுந்ததால், அவன் தப்பித்துப் போகாத வண்ணம் கப்பென அவனைப் பிடித்துக் கண்ணுக்குள் போட்டுக் கொண்டதாகச் சொல்கிறாள்.

அந்த கம்பராமாயணப் பாடல்…

‘பைங் கருங்கூந்தல், செவ்வாய், வாள்நுதல், ஒருத்தி உள்ளம்

நெக்கனள் உருகுகின்றாள், நெஞ்சிடை வஞ்சன் வந்து

புக்கனன், போகா வண்ணம் கண் எனும் புலங்கொள் வாயில்

சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்’

இது போதாதா? காதலனைக் கண்ணுக்குள் அடைக்கும் இந்த இனிமையான இலக்கியக்கூறு ஏராளமான தமிழ்த் திரைப்பாடல்களில் இடம்பிடித்துள்ளது.

நமது கவியரசர் முத்தொள்ளாயிரப் பாடலையும், குறளையும், கம்ப ராமாயணத்தையும் அடியொற்றி மூன்றெழுத்து (1968) என்ற திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடலை வரைந்திருப்பார்.

அந்தப் பாடல், ‘காதலன் வந்தான் கண்வழி சென்றான். கண்களை மூடு பைங்கிளியே’ என்ற பாடல்.

கவியரசர் அதோடு விடவில்லை.

கைராசி (1960) என்ற படத்திலும் கவியரசர் இதே இலக்கிய நுட்பத்தைக் கையாண்டிருப்பார்.

அந்தப் படத்தில், ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்’ என்ற ஒரு திரைப்பாடலிலும் கவியரசரின் கைவண்ணம் மின்னும். மிளிரும்.

அதில், ‘கண்திறந்து காத்திருந்தேன் கட்டழகர் குடி புகுந்தார். கண் திறந்தால் போய்விடுவார். கண் மூடிக் காத்திருப்பேன்’ என கவியரசர் கலகலக்க வைத்திருப்பார்.

*

திரைப்படப் பாடல்கள், மூன்று முதல் நான்கு நிமிடங்களில் முடிந்துவிடக் கூடியவை. இந்த 3, 4 நிமிடங்களுக்குள். ஒரு காதல் இணையின் ஊடலையும், கூடலையும் இலக்கியச் சுவையுடன் சொல்லி முடிப்பது என்பது சாதாரண வேலையில்லை. ஆனால், கவியரசருக்கு அது கைவந்த வேலை.

கவியரசர் கண்ணதாசன் சொந்தமாகத் தயாரித்த படம் மாலையிட்ட மங்கை (1958). அந்தப் படத்தில் ஒரு பாடல்.

காதலி தனித்திருக்கிறாள். காதலர் திடீரென வந்து தொட காதலி திடுக்கிடுகிறாள். ‘நானில்லாமல் வேறு யார் வருவார்? உன்னை வேறு யார் தொடுவார்?’ என்கிறான் காதலன்.

அப்படி தொடங்கும் பாடல்தான் ‘நானன்றி யார் வருவார்? இளநங்கை உனை வேறு யார் தொடுவார்?’ என்ற பாடல்.

நானில்லாமல் வேறு யார் உன்னைத் தொடுவார் என்று காதலன் கேட்கும்போது ‘ஏனில்லை?’ என்ற கேட்டு அதிர வைக்கிறாள் காதலி.

‘ஏன் இல்லை. இன்று ஒருவர் அருகில் வந்தார். எனக்கு முத்தம் தந்தார்’ என்கிறாள் காதலி (ஏனில்லை இன்றொருவர் அருகில் வந்தார். முத்தம் எனக்கே என்றார். வந்தார் தந்தார்) அவர் பேசுகிறார், பாடுகிறார் என்று வேறு காதலி கூறுகிறார் (பேசாமல் பேசுகின்றார் வண்ணம் பாடாமல் பாடுகின்றார்).

இப்போது காதலியின் உதட்டில் இருக்கும் காயத்தைக் கவனிக்கும் காதலன், ‘இந்தக் காயம் எப்படி வந்தது?’ என்று கேட்கிறான் (வண்ணப் பாவை உந்தன், இதழ் கோவை தன்னில், இந்த காயம் என்ன? வந்த மாயம் என்ன?).

‘கூண்டுக்கிளி எடுத்துக் கொஞ்சினேன்’ என்று காதலி கூற, ‘இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ?’ என காதலன் கேட்க, ‘முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ? இன்னும் சந்தேகமா?, கண்ணே, கண்ணா’ என பாடல் தொடரும்.

பாடலின் முடிவில், ‘மாதென்னை யார் தொடுவார்? எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்?’ என்று காதலி கேட்க, அந்தப் பாடல் இலக்கியச் சுவை நிறைந்த இன்னும் சில வரிகளுடன் இனிதே நிறைவடையும்.

இப்படி 4 நிமிடங்களுக்குள் நயமான ஓர் இலக்கிய வித்தையை நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன்.

இந்த ‘நானன்றி யார் வருவார்?’ பாடல், மகாதேவி (1957) படத்தில் இடம்பெற வேண்டிய பாடல். அந்தப் படத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட அந்த பாடல்தான் கவியரசரின் சொந்தத் தயாரிப்பான மாலையிட்ட மங்கை படத்தில இடம்பெற்றது. இந்தப் பாடலுக்குப் பதிலாக மகாதேவி படத்தில் கவியரசர் எழுதிய பாடல்தான், ‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே. கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே’ என்ற பாடல்.

*

மறைந்த பிறகும் வரலாற்றில் வாழும் கவிஞர்களில் கவியரசர் கண்ணதாசனும் ஒருவர். ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று உயிருடன் இருந்தபோதே நெஞ்சை நிமிர்த்தியவர் அவர்.

கவியரசர் அவரது கவிதைகள், திரைப்பாடல்கள், நாவல்கள் மூலம் இன்னும் உயிர் வாழ்வதோடு, அவரது காலத்திற்குப் பிறகு வந்த திரைப்படப் பாடல்களிலும் நினைவுகூரப்பட்டு உயிர் வாழ்கிறார்.

1983 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ‘காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ, நெருங்கி வா, படிக்கலாம், ரசிக்கலாம்’

1991ஆம் ஆண்டு தேவா இசையில் வெளிவந்த மரிக்கொழுந்து திரைப்படத்தில் ஒரு பாடல். ‘கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு, என் காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு’

அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்த மதுமதி திரைப்படத்தில், ‘தேரில் போகும் தேவதையே’ எனத் தொடங்கும் ஒரு பாடலில் வரும் வரிகள். ‘கண்டவுடன் காதல் என்று சந்திரபாபு ஆடினார், காதல் ஒரு வேதம் என்று கண்ணதாசன் பாடினார்’ என்ற வரிகள் அவை. இந்த வரிகளை வரைந்தவர் காளிதாசன்.

இப்படி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்குப் பிறகு, அதிக அளவில் திரைப்படப் பாடல்களில் இன்றும் நினைவுகூரப்படும் கவிஞராக நெஞ்சங்களில் நிற்கிறார் கண்ணதாசன்.

*

ஒரு நாள் போதுமா?

திரைப்பாடல்கள் ராகங்களில் அமைவதுண்டு. அதுபோல, திரைப்பாடல்களில் ராகங்களின் பெயர்களும் அமைவதுண்டு. அப்படி திரைப்பாடலில் ராகங்களின் பெயர்களை இணைத்து எழுதுவது என்பது ஒரு நகாசு வேலை. கவியரசர் கண்ணதாசனுக்கு அது கைவந்த கலை.

திருவிளையாடல் படத்தில் ஐயா பாலமுரளி கிருஷ்ணா குரலில், நடிகர் டி.எஸ். பாலையாவின் நடிப்பில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். நினைவிருக்கிறதா? ‘ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?’ என்ற பாடல் அது. கவியரசர் எழுதிய பாடல் அது.

அந்த பாடலின் பின்பகுதியில் வரும் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு ராகத்தின் பெயர் இழையோடும்.

‘இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ?‘ என்ற வரியில் தோடி ராகம். ‘எனக்(கு) இணையாக தர்பாரில் எவரும் உண்டோ?’ என்ற வரியில் தர்பார் ராகம். ‘கலையாத மோகனச் சுவை நானன்றோ?’ என்ற வரியில் மோகன ராகம்.

எல்லாவற்றிலும் உச்சம் அந்த கடைசி வரிதான். ‘கானடா… என் பாட்டு தேனடா, இசை தெய்வம் நானடா’ என்று அந்த வரி முடியும். அந்த கானடா என்ற சொல் கானடா ராகத்தைக் குறிப்பிடும் அதேநேரம், ‘காணடா’ (பாரடா) என்று மன்னரையும், அவையோரையும் மறைமுகமாக அது ஏளனம் செய்யும்.

அந்த வரியை மீண்டும் ஒருமுறை சொல்லிப் பாருங்கள். அதில், இசைதெய்வம் நானடா என்பதற்குப் பதில் கவித் தெய்வம் நானடா என்று மாற்றிப் பாருங்கள். கவியரசருக்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு இது. முடிந்த அளவு அவரை நினைவில் நிறுத்துவோம்.

Summary

The distinctive songs of Kaviarasar Kannadasan in tamil movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.