இளைஞர் சக்தியை வீணடிக்கும் கரப்பான்கள்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் குறித்த நடுப்பக்கக் கட்டுரை....

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - கோப்புப்படம்
சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் பொது வெளியில் லட்சக்கணக்கான கருத்துகள் பகிரப்படும். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு யுகம் போதாது. ஆனால், தற்போது அதைத்தான் செய்து வருகிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்தைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகி, எதிர்மறை சிந்தனையை உயர்த்தி சமூக வலைதளங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அபிஜித் தீப்கே திட்டமிட்டு உருவாக்கிய உத்திதான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. கருத்துரிமைக்கு இடமுண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தி பொய்யான பரப்புரையை உருவாக்கிப் போராடுகிறது அவரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த அமைப்பு.
கரப்பான்பூச்சியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான அறிவியல் உண்மை உண்டு. அது உருவான காலம் முதல் தற்போதுவரை எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை என்பதுதான். அதுபோலத்தான் இப்போது சேர்ந்திருக்கும் இந்தக் கூட்டமும். இந்திய அரசமைப்பு, சட்டங்கள், ஜனநாயகம், இறையாண்மை, நிர்வாகம் என எதைப் பற்றியும் முழுதாக ஆராயாமல் அரசியல் புரிதல் இல்லாமல் இருப்பவர்களை இணைத்துக் கொண்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. தானும் வளராமல், வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களையும் குழப்பிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறது.
ஏதோ இந்தியாவை மாற்றப்போகும் மாற்றுக் குரல் நாங்கள் என்ற ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) இந்தியாவின் மாற்றுக் குரலா? அல்லது அரசியல் நையாண்டியின் புதிய வடிவமா என்றால் இரண்டும் இல்லை.
தரமான கல்வியின் அவசியத்தை முன்னிறுத்தும் சிஜேபி, தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி முழுமையாக ஆராயாமலும், அதன் பலன்களை மதிப்பிடாமலும் "ஸ்கூல் திக் கரோ' என்ற பிரசாரத்தின் வாயிலாக அரசுப் பள்ளிகளின் தரத்தை குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சில இடங்களில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததை ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்படி உள்ளது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?
அதேபோல் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி மூன்றாம் வகுப்பு நிறைவடைவதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை உறுதி செய்யும் தேசிய இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருவதும், குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், முடிந்தவரை 8-ஆம் வகுப்பு வரையிலும் தாய்மொழிக் கல்வியையும், தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகளில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதும் தேசிய அளவில் கல்வித்தரத்தை உயர்த்தியுள்ளது.
சிஜேபி வெளியில் தெரிய ஆரம்பித்ததே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில்தான். ஆனால் இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களிலும், பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. மத்திய பா.ஜ.க. அரசு தேர்வில் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் கடந்த மே 12-ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட் தேர்வை ரத்து செய்து லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியது. அதுமட்டுமன்றி கடந்த ஜூன் 21-ஆம் தேதி உச்சகட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் மறுதேர்வை நடத்தி இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அப்படியிருக்கும்போது, ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை சிஜேபி கையில் எடுக்காமல் மாணவர்களைத் தூண்டி விட்டு மத்திய அரசின் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்க முற்படுவதன் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் இருப்பதைக் காணலாம்.
அடுத்ததாக, பொருளாதாரத்தில் சிஜேபி தன்னை வேலைவாய்ப்பற்ற மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இளைஞர்களின் குரலாக முன்னிறுத்துகிறது. ஆனால், உண்மை என்னவெனில் உலக வங்கியின் அறிக்கை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாகப் புகழாரம் சூட்டியிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் மத்திய அரசின் தொடர் பொருளாதார சீர்திருத்தங்களால் வரும் 2028-க்குள் வறுமை விகிதம் மேலும் குறைந்து 12.1 சதவீதமாகச் சுருங்கும் என்றும் உலக வங்கி மிக நேர்மறையாகக் கணித்துள்ளது.
கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், போர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, காலநிலை மாற்றம் போன்றவற்றாலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் சராசரியைவிட அதிகரித்துள்ளது நிரூபணமாகிறது.
வேலைவாய்ப்பின்மை என்ற பேச்சு இப்போது மாறி பலரும் சுய தொழில்முனைவோர்களாக மாறி தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கின்றனர். இதற்கு மத்திய அரசின் தொடர் முன்னெடுப்புத் திட்டங்கள் ஊக்குவிக்கின்றன.
அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்றாலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் நடைமுறைத் திட்டங்களை முன்வைக்கவும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதும் ஜனநாயகத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். தங்களுக்கென தனி முகவரியே இல்லாதவர்களால் குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க இயலும்.
இந்தியா ஓர் சமயச் சார்பற்ற நாடு. இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எந்த ஒரு மதத்தையும், பின்பற்ற, பரப்ப முழு உரிமை உண்டு. ஆனால், அதைத் தனக்கான கொள்கைகளாக சிஜேபி பறைசாற்றி வருவது, இவர்கள்தான் புதிதாக மதம், மொழி, இனம் கடந்த வேறுபாடுகளைக் களைந்து குடிமக்களின் ஒற்றுமையைக் காக்க வந்தவர்கள்போல் அபத்தமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசமைப்பின் பகுதி 3-இல் உள்ள பிரிவுகள் 14 முதல் 18 வரை சமத்துவ உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. அதன் அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசு முத்தலாக் தடைச் சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி உறுதி செய்யப்பட்டுள்ளதும், பொது சிவில் சட்டம் அமலாக்கத்தின் மூலம் அனைத்து மதப் பெண்களுக்கும் சொத்துரிமை மற்றும் விவாகரத்து போன்றவற்றில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதிலும், குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, "அனைத்து மதங்களுக்கும் சம உரிமை' என்ற கொள்கையைத் தன் அடிப்படை நிலைப்பாடாகக் கொண்டுள்ளதையும் சிஜேபி ஆதரவாளர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்?
சிஜேபி-யின் ஐந்து முக்கியக் கோரிக்கைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, ஊடகச் சுதந்திரம், வாக்குரிமை பாதுகாப்பு, நீதிபதிகளின் ஓய்வுக்குப் பிந்தைய அரசியல் நியமனங்களைத் தவிர்த்தல் மற்றும் கட்சித் தாவும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 20 ஆண்டுகள் தடை விதித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
முதலில் 33% பிரதிநிதித்துவத்தை சிஜேபி-யின் ஆதரவாளர்களே எதிர்த்து வாக்களித்த நிலையில் பெண்களுக்கான 50 சதவீத பிரதிநிதித்துவம் சிஜேபி-யின் கொள்கை நாடகமல்லாமல் வேறென்ன? 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 106-ஆவது திருத்தம் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்துள்ளது.
பெண்கள் அதிகாரத்துக்கு வருவதை அவர்கள் ஆதரவாளர்களே எதிர்க்கும் நிலையில் பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து சிஜேபி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் குறித்த அடிப்படை வாதங்களையும், அதன் பலன்களையும் புரிந்துகொள்ளாமல் ஜனநாயகத்தின் நம்பிக்கையான இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்தும், சந்தேகித்தும் குரல் கொடுப்பதாலும், போராடுவதாலும் தாங்கள் செய்கின்ற தவறை நியாயப்படுத்த நினைக்கிறது சிஜேபி.
உண்மையான மாற்றத்தை விரும்புகிறவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்த புரிதல் கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறார்கள். அதற்கு தொடர்ந்து வெளியாகும் தேர்தல் முடிவுகளே சாட்சி.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இதுவரை நாட்டின் எந்தவோர் அதிகாரபூர்வ அரசியல் கட்சியாகவோ, அமைப்பாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, அதன் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்கள் மூலமும், பொதுவிவாதத்தை உருவாக்குவதன் மூலமும், அரசியல் அமைப்புகளின் மீது மக்களின் கவனத்தைத் திருப்புவதன் மூலமும் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இதற்கு எதிர்க்கட்சிகளும், வெளிநாட்டு அமைப்புகளும் ஆதரவு அளிப்பது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல்.
இந்தியாவுக்கு தேவை வெற்று அரசியல் முழக்கங்களோ, இளைஞர்களைத் திரட்டி போராடுவதோ, தவறான கருத்துகளைப் பரப்புவதோ அல்ல.
கல்வியில் தரம், பொருளாதாரத்தில் வளர்ச்சி, சமூகத்தில் ஒற்றுமை, நிர்வாகத்தில் நேர்மை, மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஆகியவையே. இதை எந்த இயக்கமாக இருந்தாலும் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்தால்தான் அது நாட்டின் வளர்ச்சிக்கான உண்மையான சக்தியாக மாற முடியும்.
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

