கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இந்திய கரப்பான்பூச்சிகளுக்கு அமெரிக்க நிதி? மேரி மில்பென் - அபிஜீத் தீப்கே மோதல் எழுப்பும் கேள்விகள்

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், அரசியல் எதிர்ப்பு, வெளிநாட்டு நிதியுதவி ஆகிய மூன்று விவகாரங்களும் இப்போது சர்வதேச அளவிலான விவாதமாக மாறியுள்ளது.

Mary Millben - Abhijit Dipke

மேரி மில்பென் - அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Updated On :

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், அரசியல் எதிர்ப்பு, வெளிநாட்டு நிதியுதவி ஆகிய மூன்று விவகாரங்களும் இப்போது சர்வதேச அளவிலான விவாதமாக மாறியுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும், அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கும் அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதியளிப்பதாக அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த தீப்கே, இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேரி மில்பென் முன்வைத்த வெளிநாட்டு நிதியுதவி குற்றச்சாட்டினால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடுகள், அபிஜீத் தீப்கேவின் நிலைப்பாடு, இந்தியாவின் தேர்தல் ஆணையம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் அரசியல் தலையீடு குறித்த கேள்விகள் இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளன.

இந்தச் சமூக வலைதள மோதல், வெறும் இருவருக்கிடையிலான வார்த்தைப் போராக மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியாவில் பொதுத் தேர்தல் குளறுபடி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சர்ச்சைகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு மில்பென் தெரிவித்துள்ள ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில் இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதியுதவியா?: அக்டோபர் 14 அன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட மேரி மில்பென், அமெரிக்காவில் உள்ள சில நன்கொடையாளர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான அரசியல் சக்திகளுக்கு நிதியுதவி வழங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, அபிஜீத் தீப்கேயும், அவர் நிறுவிய கரப்பான்பூச்சி இயக்கமும் அத்தகைய நிதியுதவியைப் பெறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பச் செய்து, அங்கு குழப்பத்தை உருவாக்குவது சில நன்கொடையாளர்களின் உலகளாவிய செயல்முறை எனவும் மில்பென் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய இளைஞர்கள் அச்சப்படாமல் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும், கரப்பான்பூச்சி-க்கு எதிராக அமைதியான எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மில்பெனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அபிஜீத் தீப்கே, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னைகளில் வெளிநாட்டினர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. மில்பென் - தீப்கே இருவரின் விவாதமும் நிதியுதவி குறித்த குற்றச்சாட்டிலிருந்து, இந்திய அரசியலில் வெளிநாட்டினரின் தலையீடு என்ற விவாதமாக மாறியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒரு போராட்ட இயக்கமா, புதிய அரசியல் சக்தியா, அல்லது எதிர்ப்பரசியலை ஒருங்கிணைக்கும் முயற்சியா? என்ற விவாதமும் எழுந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் பிரச்னையில் தொடங்கி, மத்திய அமைச்சரின் பதவி விலகல், போராட்டக்காரர்களின் உரிமைகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எனப் பல்வேறு விவகாரங்களுக்குப் பரவிவரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உண்மையில் எதை நோக்கிச் செல்கிறது? என்கிற கேள்வி அரசியல், சமூக வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

ஒரு கோரிக்கை நிறைவேறிய பின்னரும் போராட்டத்தைத் தொடர்வது, புதிய பிரச்னைகளை முன்வைப்பது, சமூக வலைதளங்களில் ஆதரவைத் திரட்டுவது, வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என கரப்பான் பூச்சி குறுகிய காலத்திலேயே விவாதத்துக்குரிய இயக்கமாக மாறியுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் போராட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும் காரணங்கள், போராட்டங்களின் போக்கு, அது தேர்ந்தெடுக்கும் அரசியல் இலக்குகள், அதன் நிதி ஆதாரம், அதற்கு ஆதரவளிக்கும் சக்திகளின் பின்னணி போன்றவை குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

2026 மே 15 அன்று, வழக்குத் தொடுக்க வரும் பொதுமக்களை, கரப்பான்பூச்சிகளைப்போல, வழக்குரைஞர்கள் சூழ்ந்துகொண்டு இம்சிக்கிறார்கள் என்கிற அவலம் பல மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் காணப்படும் எதார்த்த நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த். அதை, இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை இழிவுபடுத்துவதாக அவர் மீது குற்றஞ்சாட்டி, அமெரிக்காவில் இருந்து இணையதளத்தில் பதிவிட்டார் அபிஜித் தீப்கே.

தீப்கேயின் இணையதளப் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து முதல் 24 மணி நேரத்தில் 50,000 பேரும், அடுத்த ஐந்து நாள்களில் 10 லட்சமாகவும் அதிகரித்தது. இணையத்தில் ஆதரவு லட்சக்கணக்கில் அதிகரித்ததற்கு, இந்தியாவில் இருந்த ஆதரவு மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. இதுபோல மொத்தமாக ஆதரவு தெரிவிப்பதை அதிகரிப்பதற்கு என்றே சில வழிமுறைகள் இருக்கின்றன.

இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒப்பிட்டதாகக் கூறப்பட்டதற்கு எதிர்வினையாக, அபிஜீத் தீப்கே உருவாக்கிய இயக்கமே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இழிவுபடுத்துவதாகக் கருதப்பட்ட அடையாளத்தையே எதிர்ப்பின் சின்னமாக மாற்றுவது அதன் தொடக்க உத்தியாக அமைந்தது.

"கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' திடீரென உருவான ஓர் இயக்கமல்ல; நன்கு திட்டமிடப்பட்டு, வலுவான பின்னணியுடன் களமிறங்கியுள்ள ஓர் இயக்கம் என முன்வைக்கப்படும் கருத்துகளைப் புறந்தள்ளிவிட முடியாது. இந்த இயக்கத்தின் இலக்கு என்ன என்பது இதுவரையில் வெளிப்படையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஒரு கோரிக்கை நிறைவேறியதும் அடுத்த கோரிக்கையை முன்னெடுப்பதும், தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதைவிட, ஒருசிலரை இலக்காக்கி வீழ்த்த முனைவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் நோக்கத்தை கேள்விக்குரியதாக்குகின்றன.

பாஜக எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியா?: அரசியல் கட்சியைப் போன்று செயல்பட்டாலும், அரசியல் கட்சியாக அறிவித்துக்கொள்ளாமல், இளைஞர்களின் பிரச்னைகளுக்காகப் போராடும் பொதுவான இயக்கமாகவே இதுவரையில் கரப்பான்பூச்சி ஜனதா தன்னை முன்னிறுத்தி வருகிறது. அதேசமயத்தில், அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவுக்கும், பிரமர் நரேந்திர மோடிக்கும் எதிரானவையாக இருப்பதால், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஆதரவு இயல்பாகவே கரப்பான்பூச்சி-க்கு கிடைத்து வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி சிதறிவரும் நிலையில், வலுவான பாஜக எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் முயற்சிப்போருக்கு கரப்பான் பூச்சி-யின் போராட்டங்கள் கைகொடுப்பதாகவும் கருதப்படுகிறது. அண்மைக்காலத்தில், இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் அரசியல் கட்சி சார்பற்ற மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்று, ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதுபோன்றதொரு நிலையை உருவாக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்றும் கருதப்படுகிறது.

கரப்பான் பூச்சி-யின் பலம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல; சமூக வலைதளங்களில் ஒரு பிரச்னையை விரைவாகப் பரப்புவது, இளைஞர்களைத் தெருவில் திரட்டுவது, பிற எதிர்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பது ஆகியவற்றிலும் உள்ளது. இந்திய தேர்தல் முறையைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் மக்களுக்குத் தேர்தல் நடைமுறைகளின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்துவதும் கரப்பான்பூச்சி-யின் நோக்கங்களில் ஒன்றாகத் தெரிகிறது.

முதலில் நீதித் துறை, அடுத்தாற்போல இந்தியாவின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுமுறை, அதைத் தொடர்ந்து தேர்தல் துறை என்று இந்திய அரசமைப்பின் ஒவ்வொரு அமைப்பாகக் குறிவைத்து அவற்றின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கேள்விக் குறியாக்குவது கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியின் நோக்கமாகத் தெரிகிறது. இதன்மூலம் இந்தியாவின் நிர்வாக அமைப்புகளையும், ஜனநாயகத்தையும் தடம்புரள வைக்கும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் விமர்சனம்.

கரப்பான்பூச்சி ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கான தற்காலிக இயக்கமாகவே இருக்குமா அல்லது பரந்த அரசியல் சக்தியாக வளருமா என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

நிதி ஆதாரம் வெளிப்படையாகுமா?: கரப்பான் பூச்சி-க்கு அமெரிக்க நன்கொடையாளர்கள், ஜார்ஜ் சோரஸ், பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், தற்போது அமெரிக்கப் பாடகி மேரி மில்பென்னின் குற்றச்சாட்டும் சேர்ந்துள்ளது. மேரி மில்பென் - அபிஜீத் தீப்கே இடையிலான மோதல், சமூக வலைதளத்தில் தொடங்கியிருந்தாலும், அது இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், அரசியல் எதிர்ப்பு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி குறித்த விரிவான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கரப்பான் பூச்சி-க்கு வெளிநாட்டிலிருந்து பணம் அல்லது பொருள் உதவி கிடைத்துள்ளதா? அத்தகைய உதவி கிடைத்திருந்தால், அதை வழங்கியவர்கள் யார்; அதன் நோக்கம் என்ன? இயக்கத்தின் அரசியல் கோரிக்கைகள் வெளிநாட்டு அமைப்புகளால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்ற கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைகளே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் உண்மையான நோக்கத்தையும், அதன் எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.