நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

வாயேஜரின் சாதனைப் பயணம்!

மனிதகுலத்தின் விண்வெளி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக நவம்பர் 18-ஆம் தேதி நாசாவின் வாயேஜர் 1 விண்கலம்- ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1977-ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் வாயேஜர் 1 ஆளில்லா விண்கலம் - AP

Updated On :

பா. ஸ்ரீகுமார்

மனிதகுலத்தின் விண்வெளி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக நவம்பர் 18-ஆம் தேதி நாசாவின் வாயேஜர் 1 விண்கலம்- ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒளி ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது; அந்த வேகத்தில் 24 மணி நேரம் பயணித்தால் கடக்கும் தொலைவே ஒரு ஒளி நாள்.

இந்த மைல்கல்லை அடையும்போது வாயேஜர் 1 பூமியிலிருந்து சுமார் 2,590 கோடி கி.மீ. (25.9 பில்லியன் கி.மீ.) தொலைவில் இருக்கும். அப்போது, பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையேயான தகவல்தொடர்பு நேரம் சுமார் 48 மணி நேரமாக உயரும். அதாவது, பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒரு கட்டளை விண்கலத்தை அடைய ஒரு நாள் ஆகும்; அதன் பதில் பூமிக்கு வர மற்றொரு நாள் ஆகும்.

இது வெறும் ஒரு எண்ணியல் சாதனை அல்ல. இது மனித தொழில்நுட்பம் எவ்வளவு தொலைவு செல்ல முடியும் என்பதைக் காட்டும் அடையாளம். ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் முதல் மனிதத் தயாரிப்பு என்ற பெருமையை வாயேஜர் 1 பெற உள்ளது.

49 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, 05.09.1977 அன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் வாயேஜர் 1 ஆளில்லா விண்கலம், இன்று சூரியக் குடும்பத்தின் எல்லைகளைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடைப்பட்ட ஆழமான அண்டவெளியில் மணிக்கு 61 ஆயிரம் கி.மீ. வேகத்தில் மெüனமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வாயேஜர் திட்டம் முதலில் வியாழன் மற்றும் சனி ஆகிய வாயுப் பெருங்கோள்களை விரிவாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஜெட் இயக்க ஆய்வகத்தால் (ஜேபிஎல்) வடிவமைக்கப்பட்டது. 1979-இல் வியாழனை நெருங்கிய வாயேஜர் 1, கோள்களைப் பற்றிய மனிதனின் முந்தைய கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியது.

வியாழனைச் சுற்றி மெல்லிய தூசு வளையங்கள் இருப்பதை வெளிப்படுத்தியதுடன், அதன் நிலவான 'ஐஓ'வில் கொந்தளிக்கும் தீவிர எரிமலைச் சீற்றங்கள் நிகழ்வதையும் படம் பிடித்தது. பூமிக்கு வெளியே மற்றொரு வான்பொருளில் செயல்படும் உயிருள்ள எரிமலைகள் கண்டறியப்பட்டது அதுவே முதல்முறை. மேலும், யூரோப்பா நிலவின் தடிமனான பனி அடுக்குக்குக் கீழ் திரவப் பெருங்கடல் இருக்கக்கூடும் என்ற புரட்சிகரமான கருதுகோளையும் இவ்விண்கலம் முன்வைத்தது.

1980 நவம்பரில் சனிக் கோளை அடைந்தபோது, அதன் கம்பீரமான வளையங்கள் ஆயிரக்கணக்கான நுண்வளையங்களால் ஆனவை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியது.

சனியின் மிகப்பெரிய நிலவான 'டைட்டன்' அடர்த்தியான நைட்ரஜன் வளிமண்டலத்தையும், கரிம வேதியியல் மூடுபனியையும் கொண்டிருப்பதை இதன் சென்சார்கள் பதிவு செய்தன. டைட்டனை மிக அருகில் சென்று விரிவாக ஆராய்ந்ததன் விளைவாக, அதன் ஈர்ப்பு விசையால் தன் பாதையிலிருந்து விலகி, சூரியக் குடும்பத் தளத்தின் வடதிசை நோக்கிச் செங்குத்தாகத் திரும்பியது. இத்திருப்பம் புளூட்டோவை நோக்கிச் செல்லும் வாய்ப்பை ரத்து செய்தாலும், விண்மீன்வெளியை நோக்கிய வரலாற்றுப் பயணத்துக்கு அடித்தளமிட்டது.

14.02.1990 அன்று, புகழ்பெற்ற வானியலாளர் கார்ல் சாகனின் தொலைநோக்குப் பார்வையின்படி, விண்கலத்தின் கேமராக்கள் சூரியக் குடும்பத்தின் குடும்பப் புகைப்படத்தை எடுக்க பூமியை நோக்கித் திருப்பப்பட்டன. சுமார் 600 கோடி கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் புகழ்பெற்ற வெளிர் நீலப் புள்ளி (பேல் புளூ டாட்) புகைப்படத்தில், பரந்த விண்வெளியில் விழுந்த ஒரு சூரியக் கதிரின் நடுவே பூமி ஒரு மிகச்சிறிய மங்கலான துகளாகக் காட்சியளித்தது.

25.08.2012 அன்று சூரியக் காற்றின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் 'ஹீலியோபாஸ்' எனப்படும் எல்லையைக் கடந்து விண்மீன்வெளிக்குள் நுழைந்த முதல் மனித தயாரிப்பு என்ற மைல்கல்லை வாயேஜர் 1 எட்டியது.

தற்போது பூமியிலிருந்து சுமார் 2,590 கோடி கி.மீ. (172 வானியல் அலகுகள் - ஏயூ) தொலைவைக் கடந்துள்ள இந்த விண்கலம், பூமியிலிருந்து 'ஒரு ஒளி நாள்' தொலைவை எட்டும் விளிம்பில் நிற்கிறது. இந்த வியக்கத்தக்க தொலைவினால், பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ சமிக்ஞைகள் விண்கலத்தை அடைந்து மீண்டும் பூமிக்குத் திரும்ப முழுமையாக 48 மணி நேரமாக நீடிக்கிறது.

2023, 2024 காலகட்டங்களில் வாயேஜர் 1-இன் தொலைத்தொடர்பு மற்றும் பறக்கும் தரவுக் கணினியில் ஏற்பட்ட கடுமையான தொழில்நுட்பச் சிக்கல்களை, பில்லியன் கணக்கான கி.மீ. தொலைவிலிருந்தே நாசா பொறியாளர்கள் மிக நுட்பமாகச் சரிசெய்து தொடர்பை மீட்டெடுத்தனர்.

அறிவியல் ஆய்வுக் கருவிகளுக்கு அப்பால், வேற்றுக்கிரக நாகரிகங்களுக்கான செய்தியாக 12 அங்குல தங்க முலாம் பூசப்பட்ட தாமிர ஒலிப்பதிவு வட்டு இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பூமியின் இயற்கை ஒலிகள், விலங்குகளின் குரல்கள், உடற்கூறியல் படங்கள், உலகின் பல்வேறு பண்பாட்டு இசைக் கோர்வைகள் மற்றும் 55 உலக மொழிகளின் வாழ்த்துச் செய்திகள் பதியப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமாக தமிழ் இதில் இடம் பெறவில்லை. ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, தெலுங்கு , உருது ஆகிய ஒன்பது இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன.

அணுசக்தி மின்கலன்கள் படிப்படியாக ஆற்றலை இழந்து வருவதால், வரும் ஆண்டுகளில் இதன் அறிவியல் கருவிகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு விண்கலம் அமைதியடையக்கூடும். எனினும், ரேடியோ சமிக்ஞைகள் முழுமையாக நின்ற பின்னரும் இந்த விண்கலம் அண்டவெளியில் மெüனப் பயணியாகத் தொடர்ந்து மிதக்கும்.

இன்னும் சுமார் 40,000 ஆண்டுகளில் 'கிளீஸ் 445' என்ற நட்சத்திரத்தின் பாதையைக் கடக்கவிருக்கும் வாயேஜர் 1 காலத்தையும் எல்லையையும் கடந்து வாழும் மனித நாகரிகத்தின் அழியாத அறிவுச் சின்னமாக திகழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.