ராமசேரி இட்லி

கேரளத்தின் பாலக்காட்டிலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது ராமசேரி கிராமம்.

Updated On :

கேரளத்தின் பாலக்காட்டிலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது ராமசேரி கிராமம். அங்குள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்படும் இட்லி புகழ் பெற்றது. இந்த 'ராமசேரி இட்லி'யை 'உப்பிய தோசை' எனவும் அழைப்பர்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் குடும்பத்தினர் பலர் வேலை தேடி ராமசேரியில் வந்து குடியேறினர். இங்கு ஆண்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாதபோது, பெண்கள் குடும்பச் செலவைச் சமாளிக்க இட்லிகளைத் தயாரித்து விற்கத் தொடங்கினர். தோசையாகவும் இல்லாமல், இட்லியாகவும் இல்லாமல் மென்மையாகவும், பஞ்சு போலவும், கூடுதல் சுவையாகவும் இருக்க, அந்த இட்லி விரைவில் பிரபலமானது. இன்று வரையிலும் பிரபலமாகவே உள்ளது.

சிட்டூரி அம்மாள் என்ற பெண் தான் முதன்முதலில் இந்த இட்லியைச் செய்து விற்றார். ஐந்து தலைமுறையாக இட்லி வியாபாரம் தொடருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள்தான் முதலில் வாங்கிச் சாப்பிட்டனர். முதன் முதலில் இட்லி விற்க ஆரம்பித்த 'ஸ்ரீசரஸ்வதி டீ ஸ்டால்' முன் இன்று சொகுசு கார்கள் கூட நிறுத்தப்படுகின்றன. ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வரையில் இட்லியை வாங்கிச் செல்கின்றனர்.

தினமும் குறைந்தது 700 இட்லிகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. விடுமுறை நாள்களில் 1,500-யைத் தாண்டுகிறது. இட்லியுடன் ருசித்துச் சாப்பிட தேங்காய்ப் பால் குழம்பு, சாம்பார், தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி எனப் பலவகைப் பதார்த்தங்கள் உண்டு.

முதலில் அரிசியை இவர்களே விளைவித்தனர். காலப்போக்கில் கடைகளில் இருந்து அரிசியை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

தயாரிப்பு முறை:

நாலு கிண்ணம் இட்லி அரிசி, ஒரு கிண்ணம் தீட்டப்படாத வெள்ளை உளுந்து, போதுமான அளவில் வெந்தயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவு உருவாகிறது. அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி, இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீர் வடித்து காலையில் அரைக்கின்றனர். சிலர் சமைத்த சாதமும் கலந்து அரைத்து இட்லிக்கு மேலும் மென்மையைத் தருகின்றனர்.

மண் பாத்திரத்தில் ஈரப்படுத்தப்பட்ட பருத்தித் துணியின் மீது மாவுக் கலவை ஊற்றப்படுகிறது. எரிவாயு அடுப்பில் ஏற்றப்பட்ட கருமையாக்கப்பட்ட அலுமினியப் பானையின் மீது மூன்று மாவுக் கலவைகள் ஒன்றின் பின்னர் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. பின்னர், அது மற்றொரு அலுமினியப் பாத்திரத்தால் மூடப்படுகிறது. பத்து நிமிடங்கள் வேக வைத்தலுக்குப் பிறகு இட்லிகள் சூடாகச் சாப்பிடுபவர்களுக்குப் பரிமாறப்படுகிறது.

முன்பெல்லாம் இவர்கள் தயாரித்த இட்லி 8 நாள்கள் வரை கெடாமல் இருந்தது. இன்று அரிசி, உளுந்தின் தரம் முன்பைப்போல் இல்லாததால், ஓரிரு சில நாள்கள் வரையில்தான் அதே தரத்துடன் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.