பாரதியின் காளி தரிசனம்
தாயை இழந்த சிறு குழந்தையாகிய பாரதியாருக்குக் காளியே தாயாக இருந்து கவிதையூட்டி வளர்த்திருக்கிறாள்

மகாகவி பாரதியார் - கோப்பிலிருந்து...
உலக இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதத் தகுந்தது பாரதி என்னும் தமிழ்க் கவிஞனின் தோற்றம். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் முன்னர் யாரும் அடைந்திடாத "மகாகவி' என்னும் மணிமகுடத்தைப் பெற்றவர் பாரதி. காலக்கணக்கில் எத்தனையோ புலவர்களின் வரிசை நீண்டு நெடிதாய்க் கிடந்தபோதும், பாரதியின் பாட்டை தனிப்பாட்டையாக - ஏனைய புலவர்கள் அமைத்த பாட்டைகளையெல்லாம் ஒருங்கிணைக்கும் ராஜபாட்டையாக விளங்குகிறது.
பாரதியின் வாழ்வு முழுவதும் காவியம் போலவும் - புராணக் கதைகளில் சொல்லப்படுகிற ஓர் அவதார மகிமையாகவும் மக்கள் மனத்தில் பதிந்து விட்டது.
கருவிலே திருவுடையவராகத் தோன்றிய பாரதியாருக்கு, கவிதை இளம் வயதிலேயே கைவந்ததுடன் மட்டுமின்றி, நிலைத்த வெற்றியையும் புகழையும் ஈட்டித் தந்தது. நன்கு படித்துப் பட்டம் பெற்ற பண்டிதர்கள் மத்தியில், பாலகனாய்க் கவிதை பாடித் தன் திறம் நிறுவியதுடன், தன்னை மட்டம் தட்ட நினைத்த காந்திமதிநாதனையும் தன் பாட்டுச் சாட்டையால் பட்டென்று அடித்த மகாகவி பாரதியாரின் கவிப்புலமை கற்றுப் பெற்றதன்று; கருவிலே கனன்றது.
"பாரதியார் தமது ஏழாவது வயது முதலே அருமையான தமிழ்க் கவிகளை விளையாட்டாக விரைந்து கவனஞ்செய்வதைக் கண்ட வித்வான்கள் நமது கவியின் தந்தையாரைப் புகழ்ந்திருப்பதை நான் நேரில் அறிவேன். எட்டு, ஒன்பதாவது ஆண்டுகளில் சர்வ சாதாரணமாய், கொடுத்த ஸமஸ்யைகளை வைத்து அற்புதமான கவிகளை நிறைவு செய்து பெரிய புலவர் கூட்டங்களைப் பிரமிக்கச் செய்த பல காலங்களிலும் நான் கூட இருந்திருக்கிறேன்.
காளிதாஸன், கம்பன் முதலிய வரகவிகளுக்குக் காளி வாக்கில் எழுதிய காலமுதல் அநாயாஸமாய்க் கவிசொல்ல வந்ததென்று நாம் கேட்குங் கதைகளையும், குமரகுருபரர் ஐந்தாவதாண்டில் அரும்பாக்கள் இயற்றினார் என்ற கதையினையும் அபூர்வ கற்பனைகளென்று புறக்கணித்த நான், பாரதியார் ஏழாவது வயது முதல் எளிதில் பாடலியற்றித் தமிழ்வாணர்கள் மெச்சும்படி காட்டிய திறமையை நேரில் கண்டபோதுதான் கேவலம் படிப்பினால் பாவன்மை வராது. கவிகள் பிறப்பிலேயே அமையவேண்டுமென்று அறிந்தேன்' என்று பதிவிடுகிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
தாயை இழந்த சிறு குழந்தையாகிய பாரதியாருக்குக் காளியே தாயாக இருந்து கவிதையூட்டி வளர்த்திருக்கிறாள். இதற்கான சான்று ஒன்றையும் நீண்ட வரலாறாகப் பாரதியார் தனது சுயசரிதையில் விளக்கியுள்ளார். மூன்று காதலாக அமையும் முதலாவதான சரஸ்வதி காதலையும், இரண்டாவதான லக்ஷ்மி காதலையும், மூன்றாவதான காளி காதலையும் எழுதிய பாரதியார் பால வயதில் ஏற்பட்ட மற்றொரு காதலைப் பிள்ளைக்காதல் என்னும் தலைப்பில் வடித்துத் தருகிறார். அந்தத் தன்னுணர்வுப் பாடல் பாரதியாரின் உள்ளத்தில் கலந்திருந்த கவிதாதேவியாகிய காளிதேவியின் அருளைப் பெற்ற விதம் குறித்து விளக்குகிறது. தாயில்லாத் தனிமையும் தந்தையின் கண்டிப்பும் கூடி வருத்த, தகுந்த துணைதேடித் தவித்த பாரதியாருக்குக் காளியே தோழியாக வந்து வாய்த்ததை அந்தக் கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன.
"எத்தனையோ முனிவர்களும் அவளுடைய அன்பெனும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கையில் இளம்பிள்ளையாகிய நான் என்ன செய்துவிட முடியும்?' என்று அந்தக் காதலுக்குத் தான் ஈர்ப்புண்டதை வினவுகிறார்.
"அது வெறும் இச்சைக் காதலன்று' எனப் புலப்படுத்தி, "வயது முதிர்ந்த பின்னால் எய்துகிற காதலே மாசுடையது; தெய்விகத் தன்மையற்றது' என்னும் பாரதியார், "இக்காதல் அதற்கு மாறாக மாசற்ற தெய்விகமுடையது' என்பதைக் கூறாமல் கூறி விடுகிறார்.
இப்படியாக வளர்ந்த இந்தப் பேருணர்வைக் காதல் என்று கூறாமல் பக்தி என்றே முன்மொழியும் பாரதியாருக்கு இது புதுவித அனுபவமாகவே விளங்குகிறது.
அவளுடைய அழகில் அவர் மயங்கிய நிலையில் அதைக் குறித்த வருணிப்புகள் வெறும் காதல் புலம்பலாக அல்லாமல் பக்தித் தரிசனமாக திகழ்வதை அறிய முடியும்.
இவ்வண்ணமே பேரின்பப் பெருக்குடைய பக்தியில் கலந்திருந்த பாரதியாருக்கு ஒருநாள் காளியின் தரிசனம் கிடைத்து விட்டது. அதை அவரே தனது பாடல்களின் வழியாக உறுதி செய்கிறார்.
அஃதோர் திருவாதிரை நன்னாள். சங்கரன்கோவிலில் அவளும் இவரும் தனித்திருக்கும் வேளை. என்ன நடந்தது? பாரதியாரே சொல்லுகிறார் - சிவாலய மண்டபத்தில் அந்தக் கன்னிகையொடு தனித்திருந்து பேசிக் கொண்டிருந்த வேளையில், "எனது பேச்சினை இடைமறித்து அவளது கையிலிருந்த மையைக் கொண்டுவந்து, "ஒருசேதி. உனது நெற்றியில் திலகமிடுவேன்' என்று கூறி அதைச் செய்தாள். நான் செய்கை அழிந்து விட்டேன்' என்று குறிப்பிடுகிறார்.
காளிதாசன், கம்பன் முதலியவர்களுக்குக் கிடைத்த காளியின் அருள் தனக்குக் கிடைத்த விதத்தைப் பாரதியார் இவ்வாறு பதிவு செய்கிறார். நெற்றிப் பொட்டில் தனது விரலிலிருந்த மையினால் அழுத்தி அவரைப் பரவசத்தில் ஆழ்த்தி விட்டாள் என்பதைப் பாரதியாரின் வாக்கினாலேயே அறிய முடிகிறது. பக்திமரபு இதைத் தீட்சை என்கிறது. கடவுளோ, குருவோ தனக்கு விருப்பமான பக்தனுக்கு, சீடனுக்கு அருள் தருவதற்காகச் செய்யும் செயலே தீட்சை என்பது. அதிலும் ஸ்பரிச தீட்சை என்பது உடலைத் தொடுவதன் மூலம் நிகழ்வது. புருவ மத்தியில் அழுத்துவதால் ஞானத்தைச் சுரக்கச் செய்வது ஸ்பரிச தீட்சை.
பாரதியாருடைய வாழ்வில் ஏற்பட்ட முதல் காளி தரிசனம் ஸ்பரிச தீட்சையுடன் அமைந்து விட்டது. ஆனால், அவ்வேளையில் அதைப் பூரணமாக உணர்ந்து கொள்ளும் பரிபக்குவ நிலையைப் பாரதியார் அடையவில்லை என்றாலும், அவருக்குக்
கவிமடை திறந்து விட்டது என்பதே உண்மை. இந்தப் பருவத்தைத் தொடர்ந்துதான் பாரதியாருக்குத் திருமணம் நிகழ்ந்தது.
மணமாகும்போது பாரதியாருக்கு வயது பதினான்கு என்று அவர் மனைவியார் எழுதுகிறார்கள். பதினைந்து என்று மற்ற நூல்கள் கூறுகின்றன. ஆனால், தமக்கு அப்போது வயது 12 என்று பாரதியார் தனது சுயசரிதையில் இரண்டு முறை குறிப்பிடுகிறார். துன்பம் உழன்ற காலத்தில் ஒன்பது வயதுள்ள ஓர் அழகிய கன்னிகையைக் காதலுற்றதாக அவர் சுயசரிதையில் கூறுகிறார். பிள்ளைக் காதலர்கள் இருவரும் "கானகத்தி லிரண்டு பறவைகள் காதலுற்றது போல' அவர்கள் காதலிலே உடலைப் பற்றிய எண்ணமே இல்லை என்று பாரதியார் கூறுவதைத் தூரன் நினைவுகூர்கிறார்.
காளிதேவியின்பால் கொண்ட காதல் பாரதியாருக்குத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. பரிபக்குவம் அடையாத நிலையில் ஸ்பரிச தீட்சை பெற்ற அவருடைய ஞானப்புலன் அடுத்த திருவுருமாற்றத்துக்காக விழித்துக் கொண்டேயிருந்தது. அது கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவியின் வாயிலாக உபதேச தீட்சையால் வெளிப்பட்டது. அதுவே மெய்யான மெய்ஞ்ஞான தரிசனமாக விளங்குகிறது.
பாரதியார் பிற்காலத்தில் இந்தக் காதலை நினைத்து ஏங்கினாரென்று கூறுவதற்கில்லை. சுயசரிதையில் தவிர வேறு எங்கும் இதைப் பற்றி அவர் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. 1905-இல் காசியில் நடைபெற்ற காங்கிரஸுக்குப் பாரதியார் சென்றிருந்ததாக செல்லம்மா பாரதி எழுதியுள்ளார். அதுசமயம் டம்டம் என்னும் ஊரிலிருந்த சகோதரி நிவேதிதா தேவியாரை அவர் சென்று தரிசிக்கிறார். அந்த அம்மையாரின் உபதேசத்திலே பாரதியாரின் உள்ளம் லயித்து விடுகிறது. அவருடைய உள்ளத்திலிருந்த கலகமெல்லாம் அம்மையாரின் தரிசனத்திலேயே அகன்று விடுகிறது. பாரதியார் அவரையே தமது குருவாக ஏற்றுக் கொள்கிறார். அதுமுதல் அவருக்குப் பெண்களெல்லாம் பராசக்தியின் வடிவங்களாவே காட்சியளிக்கத் தொடங்குகின்றனர் என்னும் தூரன் பதிவிலிருந்து சகோதரி நிவேதிதா தேவியிடமிருந்து இரண்டாம் முறையாகப் பாரதியார் காளிதரிசனம் பெற்றார் என்பதை உறுதி செய்யலாம்.
மேலும் இதற்குச் சான்றாக, 1908-இல் பாரதியார் ஸ்வதேச கீதங்கள் என்ற நூலை வெளியிடுகிறார். பதினான்கு பாடல்கள் அடங்கிய இதுவே அவருடைய முதல் நூலென்று கொள்ளலாம். அந்நூலை அவர் தம் குருவாகிய நிவேதிதா தேவியாருக்கே ஸமர்ப்பணம் செய்திருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்மநிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை ஸமர்ப்பிக்கின்றேன் - என்று அவர் எழுதியுள்ளதை ஒப்பிட்டுப் பார்த்தால் பாரதியார் இளவயதில் பெற்ற அனுபவங்களின் தொடர்ச்சி மேலும் நீள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பாரதியார் காட்டுகிற உவமைகள் பக்தி மார்க்கத்தின் பிழிவாகவும் திகழ்வது கண்கூடு.
அதுபோலவே, 1909-இல் வெளியான ஜன்மபூமி என்ற நூலில் பாரதியார் தமது குருவின் பெயரைகவி குறிப்பிட்டு அவருக்கே அந்நூலையும் ஸமர்ப்பிக்கிறார். அதிலும், "எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமலுணர்த்திய கருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளதோடு அந்த ஸமர்ப்பணப் பாடலையும் தருகிறார்.
இப்பாடல் அவர்தம் காளிதரிசனத்தைப் புலப்படுத்துவதாகவே அமைகிறது. முன்பு தன் இளம்பிராயத்தில் கண்ட தரிசனமே பரிணாமம் பெற்று மீள்தரிசனத்துக்கு வித்திட்டது. பராசக்தி, பராசக்தி என்று பேச்சிலும் பாட்டிலும் உச்சரித்த பாரதியின் காளி காதல் ஆழ ஆராயத் தக்கதாகும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

