கேளீர் தமிழ் வரலாறு-14: மலர இருந்த மகாகவியும் சுதேசமித்திரனும்!
'திருவள்ளுவர் பெரிய மகான். ஆனால் இளங்கோ, கம்பன் போல மகாகவி இல்லை!'
'திருவள்ளுவர் பெரிய மகான். ஆனால் இளங்கோ, கம்பன் போல மகாகவி இல்லை!'
இப்படி 1905 ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னை இராசதானிக் கல்லூரி என்னும் மாநிலக் கல்லூரியில் ஒருவர் பேசியதாக ஜி. சுப்பிரமணிய ஐயர் காலத்துச் 'சுதேசமித்திர'னில் செய்தி வெளிவந்திருந்தது.
அப்படிப் பேசியவர் யார்? ஏன் அப்படிப் பேசினார்? பேசியது சரியா?
'சுதேசமித்திரன்' பற்றி இன்னும் கொஞ்சம் பார்த்துவிட்டு இறுதியாக வள்ளுவரை மகாகவி இல்லையென்றவரிடம் வலுவான சமர் ஒன்று புரியத் தயாராக நாம் வந்துசேர்வோம்.
தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் உண்டா இல்லையா என்பது இலக்கிய வரலாற்றில் ஒரு விவாதம். விவாதமே செய்யவேண்டாத ஒரு செய்தி, தமிழ்வளர்க்கும் தமிழ்ச் சங்கங்கள் நவீன வெளிச்சம் பெருகத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டில் புதிதாய்ப் பிறந்தனவல்ல; பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பணியைத் தொடங்கிவிட்டன என்பது.
தருமமிகு சென்னையில் திருவேட்டீஸ்வரன்பேட்டையில் ஒரு தமிழ்ச்சங்கம்! உ.வே.சாமிநாதய்யர் அங்கே குடியேறுவதற்கு முந்தைய காலம். 1891 ஏப்ரல் 12. தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா. விழாவுக்குத் தலைவர் பழந்தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம் பிள்ளை. மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீநிவாசாசாரியார் தமிழ்மொழியை வளர்ப்பது பற்றி ஒரு சொற்பொழிவை ஆற்றினார்.
சி.வை. தாமோதரம் பிள்ளை பழைய ஏட்டுப்பிரதிகளை அச்சில் பதிப்பிக்கும்போது பிழைகள் ஏற்படுவது குறித்தும், தமிழ் நூல்களை இக்காலத்தில் சேகரிப்பது மிகவும் அருமையானது எனவும், புத்தகசாலை ஏற்படுத்தும் முயற்சியின் பயன் குறித்தும், தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்கச் செய்வதால் தமிழ் பேசவும் தெரியாமல் பலர் இருக்கின்றார்கள் எனவும், ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் சுயபாஷை எனவும், இலக்கியத்தை அனுசரித்தே இலக்கணம் தோன்றியுள்ளதால் முதலில் அனைவரும் இலக்கியத்தில் தேர்ச்சியடைய வேண்டுமெனவும் எடுத்துரைத்திருந்தார்.
அவருடைய பேச்சு 'தமிழ் பாஷையைப் போல் இனிமையான பாஷை இல்லை எனத் துலங்கும்படியும் மனதில் பதியும்படியும்' இருந்ததாம். ஆண்டுவிழாக் கூட்டத்திற்கு வந்தவர்களையெல்லாம் அவருடைய பேச்சு 'ஆனந்த வாரிதியில்' மூழ்கச் செய்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழர் விழித்துக்கொண்டதற்கான வரலாற்றின் பக்கங்கள் இது போன்ற நிகழ்வுகள்.
இந்தச் செய்திகள் நமக்கு எப்படி வந்துசேர்ந்தன?
1891 ஏப்ரல் 17ஆம் தேதி வெளிவந்த 'சுதேசமித்திரன்' இதழின் வாயிலாக.
இந்த இடத்தில் ஒரு செய்தியைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. 'தமிழ்' என்னும் நூலை எழுதிய திருமணம் செல்வக்கேசவராய முதலியாரும் தமிழ் குறித்த பல சொற்பொழிவுகளைச் சி.வை. தாமோதரம் பிள்ளை தலைமையில்தான் ஆற்றியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில் ஏப்ரல் பதினெட்டாம் தேதி தனது குருநாதராகிய சோமசுந்தர நாயகரிடம் ஓர் அறிமுகக் கடிதம் பெற்றுக்கொண்டு மறைமலையடிகள் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சென்று கண்டு உரையாடியிருக்கின்றார்.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?
சி.வை. தாமோதரம் பிள்ளையின் முன்னோடியான பேரிடத்தை! இத்தகைய தமிழ்ச் சான்றோருக்குத் தமிழ்நாட்டில் - தலைநகர் சென்னையில் - ஒரு சிலையில்லை. இதைச் சொல்லாமலிருக்கலாமா? என்றைக்காவது உணர்வு வராதா?
1902 சூலை 4ஆம் தேதி திடீரென விவேகானந்தர் காலமாகிவிட்ட செய்தி 8ஆம் தேதி வெளிவந்திருந்தது எனக் கடந்த இதழில் எழுதியிருந்ததைக் கண்ட பலருக்கும் வெளிவந்த செய்தி என்னவென்று அறிந்துகொள்ளப் பேரார்வம். இருக்காதா! வரலாற்று வாசகமாக இருக்கும் என்னும் நியாயமான எதிர்பார்ப்பு!
பார்த்துவிடுவோமா?
இதோ:
சுவாமி விவேகானந்தர் காலஞ்சென்றார்:
சுவாமி விவேகானந்தாவைப் பற்றி நமது நேயர்கள் அநேகர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். சிலர் அவ்வுத்தமரைப் பார்த்து மிருக்கக் கூடும். அம்மகான் நேற்று வெள்ளிக்கிழமை யிரவு பரமபத மடைந்தார் என்று கேட்டு மிக்க விசனிக்கிறோம். அவருக்கு தேகவியோகம் நிமிஷப் பொழுதில் நேர்ந்ததென்று தெரியவருகிறது. வெளியே சிறிதுநேரம் உலாத்தப் போயிருந்தாராம். ஏதோ சற்று ஆயாசமாயிருப்பதாகத் தோன்றவே அவர் மடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே சற்றுப் படுத்துக்கொண்டார். படுத்து இரண்டொரு நிமிஷத்துக்கெல்லாம் உயிரும் காயமும் வேறாயினார். இம்மகானுக்கு பூர்வம் பாபு நோகேந்திரநாத் டட் என்று பெயர். அவர் கல்கட்டா சர்வகலாசாலை பட்டதாரிகளுள் ஒருவர். அவர் உலகப் பிரசித்தி பெற்றது 1893-ம் வருஷம் சிகாகோ நகரத்தில் கூடிய பொருட்காட்சி சந்தைக்குப் பிறகுதான். அவர் அச்சமயம் இந்துமதப் பிரதிநிதியாகச் சென்று விளங்கினார். அமெரிகாவில் அதற்குப் பிறகு 3 வருஷ காலம்போல் ஹிந்து மதத்தைப் பற்றிப் போனவிடங்களில் எல்லாம் பிரசங்கங்கள் செய்துகொண்டு சுற்றிவிட்டு, 1897-ஆம் வருஷம் இந்தியா வந்து சேர்ந்தார்.
இந்தியாவில் இமயமலைச் சாரல் முதல் கன்னியாகுமரி வரையில் அவர் சொற்ப காலத்தில் பிரக்யாதி பெற்றதோடு மதச் சம்பந்தமாய் பல வியாசங்கள் எழுதியிருக்கிறார். அவர் ராமகிருஷ்ண பரமஹம்சாவின் சிஷ்யர் என்று நாம் சொல்லுவது அநாவசியமாகும். சென்னையில் தொடங்கப்பட்டு இப்போது இமயமலைச் சாரலிலுள்ள குமாயூனில் நடத்தப்பட்டுவரும் பிரமவாதின் என்னும் மாதாந்தப் பத்திரிகையை பிரசுரஞ் செய்வதற்கு மூலகாரணமாயிருந்தார். ஹிந்துமதஸ்தர்களுக்கே சிரோரத்னமாக விருந்த சுவாமி விவேகானந்தர் இறந்தது அம்மதஸ்தர்கள் செய்த தவக்குறையேயாகும்.
தமிழ் நாளிதழில் கவிதைகள் இடம்பெறுவதுண்டா?
தமிழின் முதல் நாளிதழ் 'சுதேசமித்திரனி'ல் இடம்பெற்றிருக்கின்றன. அதுவும் இப்போது நாம் வலம்வந்துகொண்டிருக்கும் முதல் கட்ட - ஜி. சுப்பிரமணிய ஐயர் காலத்துச் 'சுதேசமித்திரனி'லேயே!
'சுதேசமித்திரன் கவிதைகள்' என்றே ஒரு தொகுதி திரட்டிவைத்திருக்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண்கள் மேம்பாடு பற்றி எழுதவும், பெண்கள் எழுதவும் அதிகம் இடமளித்தது 'சுதேசமித்திரன்'. 'இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார்' எனப் போற்றப்பட்ட அசலாம்பிகை அம்மையின் கவிதைகள் பலவற்றைச் 'சுதேசமித்திரன்' நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.
கவிதைகளுக்கு முக்கியத்துவம் தந்த முதல் நாளிதழ் 'சுதேசமித்திரன்'. மறைமலையடிகள் 1905ஆம் ஆண்டிலேயே 'இந்திய சுதேசீய முயற்சி வாழ்த்து' என்னும் கவிதையை ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை என்னும் பெயரில் எழுதியிருந்தார். அ. வரதநஞ்சைய பிள்ளை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் எனப் பலரது பாக்களும் வெளிவந்திருக்கின்றன. பாரதியார் கவிதைகள் வெளிவந்தமை அனைவரும் அறிந்தது. விடுதலை உணர்வூட்டும் கவிதைகள், ஓவிய வித்தகர் இரவிவர்மாவுக்கும் இசைவிற்பன்னர் சுப்பராம தீட்சிதருக்கும் இரங்கற்பாக்கள், ஆங்கில 'சானெட்' யாப்புவடிவத் தமிழ்க் கவிதைகள் எனப் பாரதியின் கவியோவியங்கள் 'சுதேசமித்திரனி'ல் இடம்பெற்றிருந்தன.
'சுதேசமித்திரன்' நாளிதழின் முதல் பக்கங்கள் பெரும்பாலும் விளம்பரங்களுக்கானவைதாம். அது அக்காலப் பத்திரிகை வழக்கம். ஆனால் வணிகப் பொருள்களின் விளம்பரங்களோடு இடம்பெற்ற நூல்கள், இதழ்களின் விளம்பரங்கள் தமிழின் சரித்திரப் பக்கங்களாக விளங்குகின்றன.
1901 மே 14 நாளிதழின் முதல் பக்கத்தில் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் பதிப்பித்த 'இன்பவல்லி - மலர் - 1' என்னும் விளம்பரமும் கு.ரா. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் எழுதிய 'வித்தியாரண்ய நகரம்' என்னும் கதைநூலின் விளம்பரமும் வெளிவந்திருந்தன. 1905 ஜூன் 8 நாளிதழில் '1899-வது வருடமுதல் நடத்தப்பட்டு வருகிறது' என்னும் அறிவிப்போடு ஒரு விளம்பரம். 'மாதர் மனோரஞ்சனி' இதழின் விளம்பரம் அது. 'தாயாரம்மா' என்பவர் அதன் ஆசிரியர்.
பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சக்ரவர்த்தினி' இதழின் விளம்பரம் 1905 ஜூன் 18 நாளிதழின் முதல் பக்கத்திலேயே வெளிவந்திருந்தது. 'இதன் ஆசிரியர் சுதேசமித்திரன் உதவிப் பத்திராசிரியர் சி. சுப்பிரமணிய பாரதியார்' என விளக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1908 பிப்ரவரி 13ஆம் தேதி வெளிவந்த நாளிதழின் முகப்பு வரலாறு படைக்கும் இரு நூல்களின் விளம்பரங்களைத் தாங்கியிருந்தது. பழந்தமிழ் மீட்பு நாயகரின் பதிப்பு நூலின் விளம்பரமும் புதுத்தமிழ்ப் படைப்பு நாயகரின் கவிதைநூலின் விளம்பரமும் பக்கத்தில் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. ஆம், அவை பாரதியின் 'ஸ்வதேச கீதங்கள்' நூலின் விளம்பரமும் உ.வே. சாமிநாதையர் பதிப்பித்த 'சீவக சிந்தாமணி' இரண்டாம் பதிப்பு நூலின் விளம்பரமும்.
1911 ஜூலை 27 நாளிதழில் 'நாடகாபிமானி' என்னும் மாத இதழின் விளம்பரம். 1911 ஆகஸ்ட் 22ஆம் தேதி நாளிதழின் முகப்பில் 'பெண் கல்வி' என்னும் மாத இதழின் விளம்பரம். 'இதன் பத்திராதிபரும், இதற்கு விஷயங்கள் எழுதுபவர்களும் ஸ்திரீகளேயாவர்' என்னும் குறிப்பை விளம்பரம் தாங்கியிருந்தது. 'சுதேசமித்திரனி'ல் இடம்பெற்ற விளம்பரங்கள்கூட வரலாற்றைப் பேசும் ஆவணங்கள்தாம்.
'சுதேசமித்திரனி'ன் வரலாறு 1882இல் தொடங்கிய வரலாறு. வார இதழ், வாரம் இருமுறை இதழ், வாரம் மும்முறை இதழ், நாளிதழ் என 34 ஆண்டுகள் நடந்த 'சுதேசமித்திரனி'ன் பயணம் ஜி. சுப்பிரமணிய ஐயர் முயற்சியில், உருவாக்கத்தில், பார்வையில், உழைப்பில், அறிவில் நடந்த பயணம்.
இந்த இடத்தில் நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழில் குறிப்பிடத்தக்க இதழியல் ஆராய்ச்சியாளர் அ.மா. சாமி. அவர் 1900ஆம் ஆண்டு 'சுதேசமித்திரன்' நாளிதழாக வெளிவந்ததாகக் கூறியுள்ளார். மேலும் தமிழின் முதல் நாளிதழ் 1882இல் வெளிவந்த 'தினோதய வர்த்தமானி' என்பதாகும் என்றும் கூறியுள்ளார். இந்த இதழ் சென்னையிலிருந்து ஏறத்தாழ இரு மாதங்கள் வெளிவந்ததாகவும் 150 பிரதிகள் விற்பனையானதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் நேரடியாக இதழைப் பார்க்கவில்லை. அரசாங்க அறிக்கையின் துணைகொண்டு குறிப்பிடுவதாகக் கூறுகின்றார்.
'சுதேசமித்திரன்' 1899ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாளிதழாக வெளிவந்துவிட்டது என்பது உறுதி. 'சுதேசமித்திரன்' இதழிலேயே அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அ.மா. சாமியின் இரு கருத்துகளுக்கும் அந்தக் காலகட்டத்திலேயே அச்சில் வெளிவந்த ஆதாரமொன்று பதில் அளிப்பதாக உள்ளது.
1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத ஆங்கில 'சித்தாந்த தீபிகை' இதழில் ஜே. எம். நல்லசாமி பிள்ளை,
'தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 'சுதேசமித்திரன்' எனும் பெயரில் ஒரு தமிழ் நாளிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளதை நாங்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறோம்'.
என்று எழுதியிருந்தார். அ.மா.சாமி குறிப்பிடும் கடந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர் ஜே.எம். நல்லசாமி பிள்ளை. வரலாறு அறிந்தவர். இதழியலும் அறிந்தவர். அறிஞர். அவரே 'தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தோன்றிய தமிழ் நாளிதழ்' எனச் 'சுதேசமித்திர'னைக் குறிப்பிட்டிருக்கின்றார். வெளிவந்த வரவேற்பு, வாழ்த்துக் குறிப்பின் காலமே 'சுதேசமித்திரன்' நாளிதழின் காலத்தையும் தெளிவுபடுத்திவிடுகின்றது. 'சுதேசமித்திரன்' நாளிதழையே வரவேற்று எழுதிய பெருமை ஜே.எம். நல்லசாமி பிள்ளைக்கு உண்டு.
1904 நவம்பர் மாதம்.
இருபத்திரண்டு வயதுதான் அந்த இளைஞனுக்கு!
அந்தக் காலத் தமிழின் ஒரே நாளிதழான 'சுதேசமித்திரன்' தனது உதவி ஆசிரியராக அந்த இளைஞனை அமர்த்திக் கொண்டது.
இருபத்திரண்டு வயது இளைஞனை உதவி ஆசிரியராக ஆக்கிக்கொண்ட வகையிலும் 'சுதேசமித்திரன்' முதல் நாளிதழ்தான். வேலையில் சேர்ந்து ஏழு மாதம்கூட ஆகவில்லை. அந்த இளைஞனைத் தனது பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டே இன்னொரு மாத இதழுக்கு ஆசிரியராகவும் செயல்பட அனுமதித்தது 'சுதேசமித்திரன்'. அந்த இளைஞன் 'சக்ரவர்த்தினி' இதழுக்கு ஆசிரியரானார். ஏற்கெனவே அந்த இளைஞனின் புலமையைக் காட்டப் பெயருக்குப் பின் ஒரு பின்னொட்டு இருந்தது. ஒளவையார், தொல்காப்பியனார் என்பன போல 'ஆர்' விகுதியை வேறு கூடுதலாகக் குறிப்பிட்டு அவரைத் தனது இதழிலேயே சிறப்பித்தது 'சுதேசமித்திரன்'.
அந்த இளைஞனை - இல்லையில்லை - இளைஞரைத் தெரியாதவருண்டா!
இன்று 'செகம்புகழும்' சி. சுப்பிரமணிய பாரதியார் தான் அவர்!
முதல் கட்டச் 'சுதேசமித்திரனி'லும் இரண்டாம் கட்டச் 'சுதேசமித்திரனி'லும் பாரதியாருக்கு முக்கியமான இடமுண்டு. முதல் கட்ட இதழில் இளைய பாரதியின் தொடக்க கால இலக்கிய, அரசியல், சமூகவாழ்வின் தடங்களும் தடயங்களும் பதிந்து கிடக்கின்றன.
ஜி. சுப்பிரமணிய ஐயர் காலச் 'சுதேசமித்திரனி'ல் 1904 நவம்பர் முதல் 1906 ஆகஸ்டு வரை பாரதி பணிபுரிந்தார். ஓராண்டும் பத்து மாதங்களும்.
பத்திரிகை தாண்டிய பாரதியின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருந்தன?
சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவர் தமிழ்ச் சங்கத்தில் பாரதி 1905 ஏப்ரல் மாதம் 'கருணை' என்னும் தலைப்பில் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். 1905 செப்டம்பர் 14இல் வங்காள மாணவர்களின் சுதேசிய முயற்சியைப் பாராட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டார். பாரதி பங்கேற்ற முதல் அரசியல் கூட்டம் இது எனத் தெரிகிறது. அதில் 'வங்கமே வாழிய' எனத் தாம் எழுதிய வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்.
1906 பிப்ரவரி 13ஆம் தேதி 'சுதேசமித்திரனி'ல் பாரதி எழுதிய 'விண்ணப்பம்' எனும் பகுதி வெளிவந்திருந்தது. பாரதமாதாவைப் பற்றிய பாடல் திரட்டொன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் பாரதி. பண்டைத் தமிழில் பாரதநாடு முழுவதையும் புகழ்ந்து கூறப்பட்ட பாக்களைத் தெரிந்தனுப்பவும், சமகாலத் தமிழ்ச் சான்றோர் புதியனவாகத் தேசபக்திப் பாடல்கள் புனைந்தனுப்பவும் பாரதி அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாரதி தனது வீட்டில் திலகரின் 50ஆம் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடினார். அந்தச் செய்தி 12-7-1906 'சுதேசமித்திரனி'ல் வெளிவந்திருந்தது.
இவற்றையெல்லாம் பாரதி அறிஞர்கள் பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் ஆகியோர் 'சுதேசமித்திர'னிலிருந்து கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பாரதியின் தொடக்க காலச் செயல்பாடுகள் இவ்வளவுதாமா?
பாரதியின் முதல் சொற்பொழிவு என இதற்குமுன் பாரதி அறிஞர்களால் கூறப்பட்டுவந்த 'கருணை' சொற்பொழிவுக்கு முன்பே பாரதி நிகழ்த்திய 'மாதரின் சுதந்திரங்கள்' என்னும் சொற்பொழிவு, பேராசிரியர் லட்சுமி நரசுவின் தலைமையில் நிகழ்த்திய 'பிரம ஞானமும் ஆசாரத் திருத்தமும்' எனும் ஆங்கிலச் சொற்பொழிவு, 'தென்னிந்திய ஜமீன்தார்கள்' என்னும் பொருளிலான ஆங்கிலச் சொற்பொழிவு முதலிய பலவற்றைச் 'சுதேசமித்திர'ச் சுரங்கத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்து வெளியிடும் பேறு எனக்கு வாய்த்தது. பாரதி வரலாற்றை இனி எழுதுவோர் மாற்றி எழுதவேண்டும். கிடைத்தவற்றுள் பாரதி ஆற்றிய முதல் சொற்பொழிவு மாநிலக் கல்லூரியில் ஆற்றிய 'கருணை' என்னும் சொற்பொழிவன்று. மக்கள் மன்றத்தில் ஆற்றிய 'மாதரின் சுதந்திரங்கள்' என்னும் சொற்பொழிவுதான்!
இன்னமும் இருக்கின்றன. அவ்வளவு பணிகளைப் பாரதி 22, 23 வயதில் ஆற்றியிருக்கிறார்.
இவற்றையெல்லாம் அறியக் காரணம் ஜி. சுப்பிரமணிய ஐயர் காலச் 'சுதேசமித்திரன்'!
1915 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி - தொழுநோயோடும் கண்பார்வை மங்கிவிட்ட நிலையோடும் போராடிக்கொண்டே இதழைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தன் முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த நிலையில் 'சுதேசமித்திரனு'க்கு முடிவு வந்துவிடாமல் இருக்க ஒரு முடிவினை மேற்கொண்டார்.
தான் உருவாக்கிய 'சுதேசமித்திர'னின் பெரும்பயணம் தன் காலத்தோடு முடிந்துவிடக்கூடதென்பதால் தக்கவர் ஒருவரிடம் 'சுதேசமித்திர'னை ஒப்படைக்க, விற்றுவிட முடிவெடுத்தார். ஏறத்தாழ எட்டாண்டுகள்! கண்பார்வை மங்கிய துன்பத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டாமா?
அவரோடு நெருங்கிப் பழகியவர்களுள் ஒருவரான கே. வியாசராவ் இப்படி எழுதினார்: 'தன் எதிரில் நிற்பவர் யார் என்பதை உணரும் ஆற்றல் அவரது கண்பார்வைக்குக் குறைந்துவிட்டது. ஆனால் இந்திய அரசியல், ஏன் உலக அரசியலின் மிகச் சிக்கலான விஷயங்களைப் பற்றி அவருக்கு மிகத் தெளிவான பார்வை இருந்தது'.
'சுதேசமித்திரனி'ன் ஆசிரியப் பதவிக்கும் நிருவாகிக்கும் தக்கவராக வாய்த்தார் 'இந்து' நாளிதழின் பொறுப்பைக் கஸ்தூரிரங்க ஐயங்காருக்குத் துணையாக மேற்கொண்டிருந்த ஏ. அரங்கசாமி ஐயங்கார். இந்த வகையிலும் ஜி. சுப்பிரமணிய ஐயரின் தெரிவுப்பார்வை தெளிவாகவே இருந்திருக்கின்றது.
1915 நவம்பர் முதல் ஏ. அரங்கசாமி ஐயங்கார் 'சுதேசமித்திரனி'ன் ஆசிரியராக, நிருவாகியாக ஆனார். அவரோடு அவருக்குத் துணையாக உறவினரான சி.ஆர். சீனிவாசன் இருந்தார். இவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவரும் ஒரு பாரதி தாசன்!
இதன் பிறகு ஆறுமாதங்கள்தான் உயிரோடு இருந்தார் ஜி. சுப்பிரமணிய ஐயர். தம் 61ஆம் வயதில் 1916 ஏப்ரல் 18இல் காலமானார்.
இந்தியப் பெருந்தலைவர்களெல்லாம் இரங்கித் துடித்தனர். தியாகச் செம்மல் வ.உ. சிதம்பரனார் பண்டை மரபில் நின்று கையறுநிலைப் பாடல்களாகப் பத்து வெண்பாக்களைப் பாடியிருந்தார். வ.உ. சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் நிறுவன முயற்சிகளுக்கும் வ.உ. சிதம்பரனாரின் வழக்குநிதிக்கும் அவரது விடுதலைக்காக அவரது மனைவி எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் ஜி. சுப்பிரமணிய ஐயர் காலச் 'சுதேசமித்திரன்' துணைநின்ற வரலாறு சொல்லிமாளாது.
தொடக்கத்தில் குறிப்பிட்ட 'திருவள்ளுவர் பெரிய மகான். ஆனால் மகாகவி இல்லை!' என்று 1905 இல் பேசியவரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா! சமர்புரியத் தயாரா? அச்சச்சோ! எல்லாம் தலைகீழாகிவிட்டது. நாம் 'சுதேசமித்திர'னை வலம்வந்த இந்தப் பத்தாண்டுக் கால வரலாற்றில் வள்ளுவரைப் 'பெரிய மகான்தான், மகாகவி இல்லை' என்றவரே ஒரு மகாகவி அளவிற்கு வளர்ந்துவிட்டார். வள்ளுவரைத் 'தெய்வ வள்ளுவன்' என்று வழிபடவும் தொடங்கிவிட்டார். வள்ளுவர் அவரை முற்றமுழுக்க வசப்படுத்திவிட்டார்.
'தமிழ்நாட்டில் இப்போது 'புதிய உயிர்' தோன்றியிருப்பதால், நாம் இவ்விஷயத்தில் தமோகுணம் செலுத்தாமல், கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மஹாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும், வருஷோற்சவங்களும் ஏற்பாடு செய்யவேண்டும்' என்று 10-7-1916 'சுதேசமித்திர'னில் வள்ளுவரை மகாகவி என்று கொண்டாடி எழுதினார்.
யார் அவர் எனக் கேள்வி எழுப்பவே தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும் நம் பாரதி தான் என்று!
'சிறந்த காவியங்களும் நாடகங்களும் படைக்கும் கவிஞர்களே மகாகவி' என்ற பழைய இலக்கிய மரபு கருதி 23 வயது இளைஞராகப் பேசிய பாரதி இப்போது ஒவ்வொரு குறள்வெண்பாவிற்குள்ளும் காவியப் பரிமாணத்தைக் காட்டிய வள்ளுவர் மகாகவி என்பதைக் கண்டுகொண்டுவிட்டார்.
ஒரு மகாகவியால் இன்னொரு மகாகவியை உணரமுடியாதா என்ன?
'பெரிய மகான்தான், ஆனால் மகாகவியில்லை' என்றது முதல்கட்டச் 'சுதேசமித்திரனி'ல். 'மகாகவி திருவள்ளுவருக்குத் தமிழ்நாட்டில் சிலைநாட்டித் தமிழர்கள் போற்றவேண்டும்' என்றது இரண்டாம் கட்டச் 'சுதேசமித்திரனி'ல்! முதல் கட்டச் 'சுதேசமித்திரன்' காலத்தில் மகாகவியாக மலர இருந்தவர் பாரதி! இரண்டாம் கட்டச் 'சுதேசமித்திரன்' காலத்தில் மகாகவியாக மலர்ந்து திகழ்ந்தவர் பாரதி!
அடுத்து, 'ரங்கசாமி' ஆசிரியராக இருந்த இரண்டாம் கட்டச் 'சுதேசமித்திர'னோடு நாம் கைகுலுக்கும் காலம் வந்துவிட்டது.
எல்லாம் சரி, மரியாதை இல்லாமல் முன்னொட்டு, பின்னொட்டு, அடைமொழி ஏதுமின்றி மொட்டையாக 'ரங்கசாமி' என்றா குறிப்பிடுவது?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

