பிராந்தியங்களின் சங்கமம்
நீடித்த நாகரிகத் தொடர்ச்சியைக் கொண்டாடுவதையே பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்ட "காசி தமிழ் சங்கமம்' நோக்கமாகக் கொண்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம்
-பிரல்ஹாத் ஜோஷி
ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலத்தின் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால், அந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு, நடைமுறையில் பயன்படுத்துவதற்குத் தனக்கென ஒரு மொழியையும் அணுகுமுறையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), எண்ம (டிஜிட்டல்) புதுமைகள் மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவற்றால் வடிவமைக்கப்படும் உலகில் வளர்ந்து வரும் இன்றைய இளம் இந்தியர்களுக்கு, தகவல்களைப் பெறுவது மட்டுமே சவால் அல்ல. வேகமாக மாறிவரும் வாய்ப்புகள் மற்றும் லட்சியங்களுக்கு மத்தியில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஞானத்தையும் தீர்மானிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்வதே உண்மையான சவாலாகும்.
2047-ஆம் ஆண்டுக்குள் "வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும்போது, அது பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றை மட்டுமே குறிக்கவில்லை. நமது நாகரிகப் பாரம்பரியத்திலிருந்து வலிமையைப் பெறுவதும், பகிரப்பட்ட தேசிய அடையாளத்தை வளர்ப்பதும், அறிவு, கருணை மற்றும் பொறுப்புணர்வால் வழிநடத்தப்படும் சமூகத்தை உருவாக்குவதும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனவே, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை, இளமையும் தன்னம்பிக்கையும் கொண்ட தேசத்தின் லட்சியங்களையும், பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வடிவமைத்த ஞானம் மற்றும் மதிப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.
நவீன அரசியல் எல்லைகள் உருவாவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, பண்டைய விஷ்ணு புராணம் நமது நிலத்தைப் பற்றிய புவியியல் மற்றும் நாகரிகப் புரிதலின் அடிப்படையில் பாரதவர்ஷம் என்ற கருத்தை எடுத்துரைத்தது.
உத்தரம் யத் சமுத்ரஸ்ய ஹிமாத்ரேஸ்சைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர சந்ததிஹி
அதாவது, கடலுக்கு வடக்கிலும் இமயமலைக்கு தெற்கிலும் அமைந்துள்ள நிலம் பாரதம் என அழைக்கப்படுகிறது; அங்கு பரதரின் சந்ததியினர் வாழ்கின்றனர் என்று இந்தப் புராண வரிகள் கூறுகின்றன.
பொதுவான மரபுகள், அறிவு அமைப்புகள் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் கலாசாரப் பரிமாற்றங்கள் மூலம் இணைக்கப்பட்ட, பகிரப்பட்ட புவியியல் மற்றும் நாகரிகப் பரப்பாக பாரதத்தைப் பற்றிய பண்டைய உணர்வை இது பிரதிபலிக்கிறது.
இந்த நீடித்த நாகரிகத் தொடர்ச்சியைக் கொண்டாடுவதையே பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்ட "காசி தமிழ் சங்கமம்' நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பு காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான ஆழமான, வேரூன்றிய தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இந்தியாவின் கலாசார மற்றும் அறிவுசார் பன்முகத்தன்மையையும், பல நூற்றாண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளை ஒன்றிணைத்த உறவுகளையும் மீண்டும் கண்டறிவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.
உலகின் மிகப் பழைமையான வாழும் நகரங்களில் ஒன்றான காசி, ஆன்மிகத் தேடல், கல்வி, இசை, இலக்கியம் மற்றும் கலைகளின் மையமாக நீண்ட காலமாகத் திகழ்ந்து வருகிறது. அதன் படித்துறைகள், கோயில்கள், மரபுகள் மற்றும் துடிப்பான கலாசார வாழ்க்கை ஆகியவை அறிவு மற்றும் நம்பிக்கையின் அசாதாரணமான தொடர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.
தமிழ்நாடும் செழுமையான கல்வி, இலக்கியம் மற்றும் கலாசார மரபுகளால் சிறப்புப் பெற்றது. 33,000-க்கும் மேற்பட்ட பழைமையான கோயில்களைக் கொண்ட தமிழ்நாடு, இந்தியாவின் ஆன்மிக மற்றும் அறிவுசார் பாரம்பரியத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. இந்த இரு பிராந்தியங்களின் சங்கமம் என்பது வெறும் கலாசாரப் பரிமாற்றம் மட்டுமல்ல; இந்திய நாகரிகத்தின் பொதுவான அடித்தளங்களைக் கொண்டாடும் நிகழ்வாகும்.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள், பல்வேறு புனிதர்கள் மற்றும் அறிஞர்களின் பயணங்களில் பிரதிபலிக்கின்றன. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் புனிதரான குமரகுருபரர், காசியின் கேதார் படித்துறையில் குமாரசாமி மடத்தை நிறுவினார். மேலும், காசிக் கலம்பகம் என்ற நூலையும் இயற்றினார்.
தமிழர் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் காசி யாத்திரை மரபும், காசி விஸ்வநாதர் கோயிலையும் ராமேசுவரம் கோயிலையும் இணைக்கும் புனித யாத்திரை மரபும், இந்த இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நீடித்த ஆன்மிக, கலாசார உறவுகளை மேலும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தத் தொடர்புகள் "ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை உள்ளடக்கியுள்ளன. பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட அறிவு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான மரபுகளைப் போற்றுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது. இந்த நாகரிக ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தவும், அதன் மதிப்புகளை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவும் "காசி தமிழ் சங்கமம்' அர்த்தமுள்ள ஒரு தளத்தை வழங்குகிறது.
இன்று தொடங்கி (நவம்பர் 28) டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு, "திருக்குறள் பயில்வோம்' என்ற கருப்பொருளின்கீழ் இந்தப் பயணத்தை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த முன்னெடுப்பின் மையத்தில் திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை இடம்பெறச் செய்வதன் மூலம், இந்தியாவின் செம்மையான அறிவு மரபுகளை இன்றைய இளைஞர்களின் கேள்விகள், லட்சியங்களுடன் இணைக்க இது முயல்கிறது.
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், குறிப்பிடத்தக்க ஆழமும் உலகளாவிய தன்மையும் கொண்ட நூலாகும். அதன் 1,330 குறள்கள் தனிமனித ஒழுக்கம், உறவுகள், தலைமைத்துவம் மற்றும் சமூகத்தை வழிநடத்தும் கொள்கைகளை ஆராய்கின்றன. அறம், நெறிமுறை சார்ந்த ஆட்சி மற்றும் மனித மாண்பு குறித்த அதன் போதனைகள், அவை தோன்றிய வரலாற்று மற்றும் மொழிசார் சூழலைக் கடந்து,
தலைமுறைகள் மற்றும் புவியியல் எல்லைகள் அனைத்திலும் தங்களது பொருத்தத்தைத் தக்கவைத்துள்ளன. இந்த நீடித்த பொருத்தம், இந்தியாவின் பாரம்பரிய அறிவு மரபுகள் சமூகத்துக்கு அர்த்தமுள்ள வழிகாட்டுதலை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
திருக்குறளின் போதனைகள் இன்றைய இளைஞர்களுக்குப் பொருத்தமானவை. விடாமுயற்சி, நேர்மை, பணிவு மற்றும் பொறுப்பான நடத்தை ஆகியவற்றுக்கு அது அளிக்கும் முக்கியத்துவம், சரியான தீர்மானங்களை எடுப்பது, அறிவை விவேகத்துடன் பயன்படுத்துவது மற்றும் பல்வேறு கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்வது ஆகியவற்றில் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது.
இந்தப் புரிதல் கல்வியை முழுமையானதாகவும், பல்துறை சார்ந்ததாகவும், இந்தியாவின் அறிவு மரபுகளில் வேரூன்றியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் தொலைநோக்குப் பார்வையுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது. கல்வி என்பது இளைஞர்களை வேலைவாய்ப்புக்காக மட்டுமல்லாமல், தலைமைத்துவம், புதுமை மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தயார்படுத்த வேண்டும். இதை நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு "காசி தமிழ் சங்கமம்' ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது. இந்தப் பதிப்பில் 1,000 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் ஒன்றிணைவார்கள். அவர்களின் பங்கேற்பு, திருக்குறளுடன் ஆழமாகப் பழகவும், அதன் பொருத்தத்தைப் புரிந்துகொள்ளவும், அதன் மதிப்புகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவும் உதவும்.
அறிவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் திருக்குறளை கிடைக்கச் செய்துள்ளது.
"வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறும்போது, தமது அடையாளத்தில் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், உலகைத்திறந்த மனதுடன் அணுகுபவர்களாகவும் இளைஞர்களைத் தயார்படுத்துவது தேசியப் பொறுப்பின் முக்கிய அம்சமாகத் தொடர்கிறது. சமூகத்தின் மீதான தங்களது பொறுப்புகளை உணர்ந்துகொண்டே, உலக அளவில் புதுமைகளை உருவாக்கவும், போட்டியிடவும், தலைமை வகிக்கவும் இளம் இந்தியர்கள் தயாராக இருக்க வேண்டும்.
நமது கலாசாரப் பாரம்பரியம் தொலைவில் இருந்து வியந்து பார்ப்பதற்கான மரபுச் செல்வம் மட்டுமல்ல; நாம் எவ்வாறு கற்கிறோம், பணியாற்றுகிறோம், ஆட்சி செய்கிறோம், எதிர்காலத்தைக் கட்டமைக்கிறோம் என்பதற்கு வழிகாட்டும் உயிருள்ள வளமாகும்.
காசி தமிழ் சங்கமத்தின் வெற்றி என்பது பங்கேற்பின் அளவு அல்லது அதன் கலாசாரப் பரிமாற்றங்களின் செழுமை ஆகியவற்றால் மட்டுமே அளவிடப்படாது. நிகழ்வுக்குப் பின்னரும் நிலைத்திருக்கும் கருத்துகள், மதிப்புகள் மற்றும் உறவுகளே அதன் வெற்றியைத் தீர்மானிக்கும். மாணவர்கள் திருக்குறளின் போதனைகளைத் தங்களது கல்வி நிறுவனங்களிலும் அன்றாட வாழ்விலும் கொண்டு சென்றால், இந்த முன்னெடுப்பு நீடித்த நோக்கத்தை அடைந்ததாக இருக்கும். கடந்த காலத்தின் ஞானத்தை எதிர்காலத்தின் லட்சியங்களுடன் உரையாடச் செய்வதன்மூலம், நவீன கண்ணோட்டம் கொண்டதாகவும், தனது பாரம்பரியத்தில் தன்னம்பிக்கை உடையதாகவும்,
பன்முகத்தன்மையில் ஒற்றுமை கொண்டதாகவும் விளங்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு "காசி தமிழ் சங்கமம்' பங்களிக்கிறது.
கட்டுரையாளர்:
மத்திய கல்வி அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

