ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மக்கள் சேவையில் கால் நூற்றாண்டு!

மக்கள் சேவையில் கால் நூற்றாண்டை நிறைவு செய்திருக்கும் பிரதமர் மோடி பற்றிய நடுப்பக்கக் கட்டுரை......

PM Modi

பிரதமர் மோடி

Published On :

பேராசிரியர் ப. கனகசபாபதி

நரேந்திர மோடி 2001-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்று சுமார் 13 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 2014 மே மாதம் முதல் பாரதப் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். எனவே, மாநில முதல்வராகவும், தேசத்தின் பிரதமராகவும் ஆட்சி அதிகாரத்தில் கால் நூற்றாண்டு காலச் சேவையை நிறைவு செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவில் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் சிறப்பைப் பெற்ற ஒரே இந்தியத் தலைவராக மோடி விளங்கி வருகிறார்.

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடித்ததும், குடும்பத்தைத் துறந்து முழு நேரமாகத் தேசப் பணி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடந்த 55 ஆண்டுகளாக நாட்டுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். அதில் 35 ஆண்டுகள் தேசிய இயக்கங்களிலும், பின்னர் 25 ஆண்டுகள் அரசுப் பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளார்.

குஜராத் முதல்வராக அவர் பொறுப்பேற்றபோது சிரமங்களும் சவால்களும் காத்திருந்தன. சில மாதங்கள் முன்னர் ஒரு பெரிய பூகம்பம் தாக்கி, 20,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்து, அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. பின்னர், 2002-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு, தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும் நிலவியது.

அவற்றையெல்லாம் உறுதியாக எதிர்கொண்டு கட்டமைப்பு மேம்பாடு, வறண்ட நிலங்களுக்குத் தண்ணீர், தொழில்கள் உருவாக்கம், புதிய முதலீடுகள் ஈர்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் எனப் பல முனைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதனால், விவசாயத் துறை வளர்ச்சி பத்து சதவீதத்தைத் தாண்டியது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தி, பல நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தார். அதற்குப் பிறகுதான் எல்லா மாநிலங்களும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தத் தொடங்கின.

அதனால் மோடியின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் ஏழு மடங்கு அளவு உயர்ந்தது.

முந்தைய காலங்களில் இல்லாத அளவு வளர்ச்சி விகிதம் அதிகரித்து, தேசிய சராசரியை முந்திச் சென்றது. அந்த மாநிலத்தின் முன்னேற்றப் பாதை "குஜராத் மாடல்' எனப் பாராட்டப்பட்டது. அவரது தலைமையில் குஜராத் அடைந்த முன்னேற்றங்களும் வளர்ச்சியும் மோடியை தேசிய அளவில் நிமிர்ந்து பார்க்க வைத்தன.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014 காலகட்டத்தில் உலக அளவில் அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் கணிக்கப்பட்டது. மோடி பிரதமரானதும் கடினமான நடவடிக்கைகளை உறுதியுடன் எடுத்ததுடன், தொடர்ந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்டும், புதிய அணுகுமுறைகளை வகுத்தும் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் என்று சர்வதேச அளவில் போற்றப்படுகிறார்.

"மனதின் குரல்' நிகழ்ச்சியின்மூலம் மக்களின் கருத்துகளை அறிந்து, மாதந்தோறும் அவர்களிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது; "தூய்மை இந்தியா', யோகா தினம் போன்ற திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றியது; கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மின்சார வசதி, சாலைகள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவை முன்னுரிமை பெற்றது; 12 கோடி கழிப்பறைகள், 56 கோடி வங்கிக் கணக்குகள், பத்து கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள், நான்கு கோடிக்கும் அதிமான வீடுகள், 55 கோடி பேர் பலன் பெறும் "ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டு உதவி ஆகியவைமூலம் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவது- இவையெல்லாம்தான் மக்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து மூன்று முறை அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், குறு-சிறு தொழில்கள் முன்னேற "முத்ரா' திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு நிதி உதவித் திட்டம், கிராம மக்களுக்குக் குழாய் நீர் வீட்டிலேயே கிடைக்க "ஜல் ஜீவன்' திட்டம், மகளிர், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் என வெவ்வேறு பிரிவினருக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்து வெளிவந்துள்ளனர்.

உலக அளவில் அறிதிறன்பேசிகள் தயாரிப்புகளில் நாம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 56 மடங்கு அதிகரித்து, 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது உலக அளவில் நடைபெறும் மொத்த எண்மப் பரிவர்த்தனைகளில் நமது நாட்டில் மட்டும் 49% நடைபெறுகிறது.

சட்டப் பிரிவு 370 நீக்கம், தேசிய கல்விக் கொள்கை-2020, பொருள்கள் மற்றும் சேவை வரி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை பிரதமர் நரேந்திர மோடி அரசின் துணிச்சலான முடிவுகள்.

நமது நீண்ட நாளைய கனவுகள் பல இப்போது வரலாறாக மாறியுள்ளன. நம்மால் எதுவும் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை பிறந்து, நம் கண்முன்னாலேயே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பில் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து இயங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தளர்வின்றித் தொடர வேண்டும் என்பதுதான் பாரதத்தின் வருங்காலத்தில் அக்கறையுள்ள இந்தியனின் பிரார்த்தனையாக இருக்க முடியும்!

கட்டுரையாளர்:

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.