
உண்மையான ஆய்வில் தேசத்தின் வெற்றி
ஒரு நாட்டின் ஆராய்ச்சித் திட்டங்களைப் பொருத்துத்தான் அந்த நாட்டின் நவீனமயமாக்கல், உற்பத்தித் திறன், பொருளாதார மேம்பாடு, மக்களின் வாழ்க்கை முறை அடங்கியிருக்கிறது.

உண்மையான ஆய்வில் தேசத்தின் வெற்றி... - பிரதிப் படம்
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் அறிவியல் பயணம் குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. ஒரு நாட்டின் ஆராய்ச்சித் திட்டங்களைப் பொருத்துத்தான் அந்த நாட்டின் நவீனமயமாக்கல், உற்பத்தித் திறன், பொருளாதார மேம்பாடு, மக்களின் வாழ்க்கை முறை அடங்கியிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் ஆய்வுக்காக நிதி ஒதுக்குகிறோம் என்ற வளர்ந்த நாடுகளுடனான ஒப்பீடு அவசியமாகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு வெறும் 0.64 சதவீதமாக உள்ளது. சீனா நம்மை விட நான்கு மடங்கு (2.56 %) அதிகமான நிதியை ஆய்வுக்காக ஒதுக்குகிறது. சீனாவை விடவும் அதிகமாக ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை பன்னாட்டு இதழ்களில் பிரசுரம் செய்வதில் சீனா தொடர்ந்து மற்றவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. காப்புரிமை மற்றும் கண்டுபிடிப்புகளை பதிவு செய்தல் அடிப்படையில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்து ஐந்தாம் இடத்தில் இந்தியா உள்ளது.
மக்கள்தொகையில் முதலிடம் இருக்கும் இந்தியாவின் ஆய்வுக் கட்டுரைகள் எண்ணிக்கையைவிட, சீனாவின் ஆய்வுக் கட்டுரைகள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. காப்புரிமை, கண்டுபிடிப்புகளில் இந்தியாவைவிட 18 மடங்கு முன்னிலையில் சீனா உள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய தாக்கம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்றதையும், அதில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட ரோபோ சீனாவைச் சேர்ந்தது என்ற சர்ச்சை நாடெங்கிலும் பேசுபொருளானது யாவரும் அறிந்தது. இதை விமர்சிக்கும் கல்வியாளர்களும் தொழில்நுட்பவாதிகளும் இதற்கான அடிப்படைக் காரணம் எங்கிருந்து உருவானது? என்பதை ஆராய வேண்டும்.
பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளில் இடம்பெறும் பெரும்பாலான படைப்புகள் அந்த மாணவ, மாணவிகள் சுய முயற்சியில் அல்லது தேடலில் செய்தவைதானா என்று கேட்டால் 80%}க்கும் அதிகமாக பெற்றோர், உறவினர்கள், அவர்களின் ஆசிரியர்கள், அல்லது அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுடையதுதான் என்பது தெரியவரும்.
எது இப்படி அடுத்தவருடைய உழைப்பை தன் உழைப்பாகக் காட்டத் தூண்டுகிறது? பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் நெருக்கடி, வெற்றி அல்லது சான்றிதழ் பெற நினைக்கும் ஆசை, போதிய வழிகாட்டுதல்களும், கால அளவும் தராமைதான். சரி, பள்ளிக்கூட நிலைதான் இப்படியென்றால், கல்லூரியின் நிலை இதை விட மோசம்.
அறிவியல், பொறியியல் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு படிப்பின் இறுதியில் திட்ட செயலாக்கம் சமர்ப்பிப்பு (ப்ராஜெக்ட் சப்மிஷன்) உள்ளது. அதில் கொண்டு வருபவை பெரும்பாலும் அவர்களுடையதாக இருப்பதில்லை. எங்கோ இதற்கென்றே இருக்கும் கடைகளில் விலை கொடுத்து வாங்கிக் காண்பித்துச் செல்கின்றனர். பட்டப்படிப்பு படிப்பவர்களின் ஆராய்ச்சி நிலை இப்படி இருக்கிறதெனில், முனைவர் பட்ட ஆராய்ச்சியிலும் இதே குளறுபடிகள் தொடர்கின்றன.
சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பன்னாட்டு இதழ்களில் பிரசுரிக்க இயலாதவர்களை வலைவீசி பிடிப்பதற்காகவே பல குழுக்கள், முகவரி இல்லாத முகவர்கள் நாடெங்கிலும், சர்வதேச அளவிலும் உள்ளனர். இவர்களிடம் சில லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து யாரோ செய்த அரைகுறை ஆராய்ச்சி வேலையை தான் செய்ததுபோலக் காண்பித்து முனைவர் பட்டம் வாங்கி பெருமைதேடிக் கொள்ள முயற்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆராய்ச்சி என்பது நாள், மாதம், ஆண்டுக் கணக்கு வைத்து செய்பவை அல்ல. இன்று வருமோ, நாளை வருமோ, என்று வருமோ தெரியாது நல்ல தீர்வு. தொடர் உழைப்பு, விடாமுயற்சி, ஒப்பீடு என்று கால நேரம் மறந்து சிலர் ஆராய்ச்சியில் உறைந்து போய் உழைக்கின்றனர். முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியில் பெரும்பாலும் சடங்கும், சம்பிரதாயமும், கால நிர்ணயமும்தான் உள்ளன. இந்த கால வரம்புக்குள் நினைத்தது கிடைத்து விடுமா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உண்மையான ஆராய்ச்சிக்கான சுதந்திரம், கட்டமைப்பு, தேடல் தேவைப்படும்போதுதான் அது நல்ல ஒரு கண்டுபிடிப்பாக மாறும் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், தான் சார்ந்திருக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், தனது வளர்ச்சிக்காகவும் உழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் இத்தனை குளறுபடிகளுக்கும், சறுக்கல்களுக்கும், தவறான முன்னுதாரணங்களுக்கும் நடுவிலும் இந்தியா சாதிக்கிறது.
நேர்மையாக உழைக்கும் ஆராய்ச்சியாளர்களால், தரமான ஆராய்ச்சி மையங்களால், உண்மையான தொழில்நுட்பவாதிகளால், தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத உற்பத்தி நிறுவனங்களால்தான் இது சாத்தியமாகிறது.
இந்தியாவின் எதிர்காலத் தொழில்நுட்ப முன்னுரிமைகளில் விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொது நிர்வாகம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், சூரிய ஆற்றல், மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்தி உற்பத்தித் திறன், குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆழமான தொழில்நுட்பத் துறைகள் ஆகியவை அடங்கும்.
இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப பாய்ச்சலில் இந்திய இளைஞர்கள் மாபெரும் புரட்சியைச் செய்து காட்டுவார்கள் என்று நம்புவோம்; நேர் கொண்ட பாதையில் பயணிப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




