2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அன்றே சொன்னார் அமர்நாத்!

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அணித் தலைமைப் பொறுப்பை மீண்டும் அவரிடம் வழங்க வேண்டும் என்பதைப் பற்றி...

சூர்யகுமார் யாதவ்.

Published On :

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினர் அனைவரும் கோமாளிகள். இதைச் சொன்னவர் 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்த பிரபல ஆல் ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் ஆவார்.

கிரிக்கெட்டோ அல்லது வேறு எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதற்குரிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்படுவோம் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து கடைசியில் தேர்வு செய்யப்படாமல் விடப்படும் எந்த ஒரு வீரரும் மனம் வெதும்பிய நிலையில் இவ்வாறு கூறுவது இயல்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக நமது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவினர் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேசிய அணிக்குத் தேர்வு செய்யும் வீரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது மொகிந்தர் அமர்நாத் கூறியதைப் புறந்தள்ளிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

அதுவும், 20 ஓவர் முறை வழக்கத்துக்கு வந்தபிறகு, தேர்வுக் குழுவினரின் ஒப்புதலைப் பெறுகிற வீரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, சீரான ஒரு தேர்வு முறை பின்பற்றப்படாமல் இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும். டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி ஆகிய மூன்று வகைகளிலும் போட்டியின் வடிவம் எதுவாயினும் அதில் பங்கேற்கும் நமது இந்திய அணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தேர்வுக் குழுவினரின் உள்ளார்ந்த நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வீரர்களின் பட்டியலானது இறுதி வெற்றி என்ற அந்த உன்னதமான நோக்கத்துக்கு எதிராகவே பலநேரங்களில் அமைந்துவிடுவதை என்னென்று சொல்வது? எடுத்துக்காட்டாக, வெற்றிகரமான டி-20 அணித் தலைவராக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் அணித் தலைவராக்கப்பட்ட பின்பு நமது இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக அடைந்த 'வாஷ் அவுட்' தோல்விக்கு நமது இந்திய அணித் தேர்வாளர்களின் தவறான கணிப்பே காரணம் என்றால் அது மிகையாகாது.

சூர்யகுமார் யாதவ் தாம் தலைமை ஏற்றிருந்த 50 போட்டிகளில் 42-இல் (84 சதவீதம்) வெற்றி பெற்றதுடன், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை ஆகியவற்றையும் வென்று தாய் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். சிறந்த வலதுகை பேட்டரான சூர்யகுமார் யாதவ் கற்பனைக்கும் எட்டாத ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவர். எதிரணிகளின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறங்களிலும் சிதறடிக்கும் வல்லமை படைத்த பேட்டராக விளங்கியவர்.

மின்னல் வேகத்தில் ஸ்வீப் ஷாட் அடிப்பதும், தலைக்கு மேலே மட்டையை உயர்த்தி ஸ்கொயர்லெக், ஃபைன்லெக் ஆகிய திசைகளில் பிரமிப்பூட்டும் சிக்ஸர்களை அடிப்பதும் அவருக்கே கைவந்த கலையாகும். திறமை வாய்ந்த களத்தடுப்பாளராகிய சூர்யகுமார் யாதவ் உற்சாகம் மிகுந்த அணித் தலைவராகவும் விளங்கினார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அணித் தலைவராக விளங்கிய காலகட்டங்களில் அவருடைய ரன் சராசரி வழக்கத்தை விடச் சற்றே குறைவது உண்மைதான் எனினும், இந்தப் பிரச்னையானது உலக அளவில் அணித் தலைமை ஏற்கும் பேட்டர்கள் அனைவருக்கும் பொதுவானதே.

இவ்வருடத்திய டி-20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் அதன் பிறகு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணியின் சார்பில் விளையாடி சராசரியாக 21 ரன்களே எடுத்தார் என்பது உண்மைதான். ஆனால், அதைக் காரணமாகக் கொண்டு அடுத்தடுத்த தொடர்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் 14 பேரில் ஒருவராகக்கூட அவரைத் தேர்வு செய்யாதது எந்தவிதத்திலும் நியாயமான நடவடிக்கையாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்கத் திணறிய போதும் சரி, கபில் தேவ் போன்ற திறமையாளர்கள் விக்கெட் எடுப்பது குறைந்த போதும் சரி, அவர்களைப் போன்ற மூத்த வீரர்களுக்குத் தொடர்ந்து சில காலம் வாய்ப்பு வழங்குவது வழக்கத்தில் இருந்து வந்தது. அதைத் தவறு என்று கூற முடியாது.

உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் கூட சில நேரம் தொடர்ச்சியாக சோபிக்கமுடியாமல் போவதுண்டு. ஆனால், அந்த நிலை நீடிக்காது. அந்த வீரர்கள் மீண்டும் முன்பை விட அதிகமான திறமையை வெளிப்படுத்தி தங்களின் அணிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

இது குறித்து பேசும் கிரிக்கெட் விற்பன்னர்கள், ஒரு வீரரின் தரம் என்பது மாறாதது. ஆனால், அவருடைய பங்களிப்பு என்பது சிலநேரம் மாறக்கூடியதே என்று கூறுவர். ஒருவேளை, சூர்யகுமார் யாதவின் தற்போதைய வயது 36 என்பதால், அவரை விட இளமையான வீரர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று அணித் தேர்வாளர்கள் எண்ணியிருந்தாலும், அவருடைய உடல்திறன் துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்து கொண்டு அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்ப்பதுதான் சரியாக இருக்கும்.

35 வயதை நிறைவு செய்துள்ள திறமை மிகுந்த சுழற்பந்து வீச்சாளராகிய வருண் சக்கரவர்த்திக்கு இந்திய அணியில் இடமளித்துள்ள நிலையில் சூர்யகுமார் யாதவின் அனுபவமும் உற்சாகமும் நமது இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பதை உறுதி செய்வதே புத்திசாலித்தனமாகும். இது மட்டுமின்றி, சூர்யகுமார் யாதவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அணித் தலைமைப் பொறுப்பை மீண்டும் அவரிடம் வழங்குவதே அவரைப் போன்ற அபூர்வமான திறமையாளர்களுக்குச் செய்யப்படும் நியாயமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.