ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

வியக்க வைக்கும் வளர்ச்சி

உலகளாவிய ட்ரோன் உற்பத்தித் துறையில் துருக்கி, அமெரிக்கா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளே கோலோச்சி வந்த நிலையில், இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக உலக வல்லரசு நாடுகளிடையே பார்க்கப்படுகிறது.

பிரதிப் படம்

Published On :

பெங்களூரைச் சேர்ந்த நான்கு இளம் பொறியியல் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய புத்தொழில் நிறுவனம், வான்வெளியில் தொடர்ந்து 417 மணி நேரத்துக்கும் அதிகமாக (சுமார் 17.4 நாள்கள்) பறக்கக்கூடிய அதிநவீன ட்ரோனை உருவாக்கி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய ட்ரோன் உற்பத்தித் துறையில் துருக்கி, அமெரிக்கா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளே கோலோச்சி வந்த நிலையில், இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக உலக வல்லரசு நாடுகளிடையே பார்க்கப்படுகிறது.

இன்றைய நவீன ட்ரோன் (அன்மேன்டு ஏரியல் வெகிள்- யுஏவி) தொழில்நுட்பம் என்பது ஏதோ ஒரே நாளில் உருவானது அல்ல. முதலில் ராணுவப் பயன்பாட்டுக்காக தொடங்கி, இன்று வணிகக் கண்காணிப்பு வரை இதன் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது.

19-ஆம் நூற்றாண்டில் அதாவது, 1849-ஆம் ஆண்டில் ஆஸ்திரிய ராணுவம் வெடிமருந்துகளை ஏந்திச் செல்லும் ஆளில்லா பலூன்களை வெனிஸ் நகரின் மீது வீசப் பயன்படுத்தியது. இதுவே ஆளில்லா வான்வழி தாக்குதலின் ஆரம்பப் புள்ளியாகவும், ட்ரோனின் ஆரம்பகட்டமாகவும் கருதப்படுகிறது.

பிறகு, முதல் உலகப்போரின் போது (1917) ரஸ்டன் புரோக்டர் ஏரியல் டார்கெட் எனப்படும் ரேடியோ அலை வரிசை மூலம் கட்டுப்படுத்தப்படும் உலகின் முதல் ஆளில்லா விமானமான "ஏரியல் டார்கெட்' அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக, 1935-ஆம் ஆண்டு "குயின் பீ' என்ற பெயரில் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானப் பயிற்சி இலக்கில் இருந்தே ட்ரோன் (பெண் தேனீ) என்ற பெயர் உலக அளவில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து, 21-ஆம் நூற்றாண்டில் 2000-ஆவது ஆண்டில் லித்தியம் பேட்டரிகள், ஜிபிஎஸ் மற்றும் மினியேச்சர் சென்சார்களின் வரவால் ட்ரோன்கள் வணிக ரீதியாகவும், புகைப்படக் கலைக்கும், விவசாயத்துக்கும் (வணிக மயமாக்கல் & குவாட்காப்டர்கள்) பயன்படத் தொடங்கின. இன்று நவீன வணிகப் பயன்பாட்டிலும், பொழுதுபோக்கு பயன்பாட்டிலும் காணப்படும் பெரும்பாலான ட்ரோன்கள் குவாட்காப்டர் வகையைச் சேர்ந்தவைதான்.

தற்போது இந்திய மாணவர்கள் தயாரித்திருக்கும் "டெதர்டு ட்ரோன்' என்பது, தரைப் பகுதியில் உள்ள மின்சார மையம் அல்லது மின் இயற்றியுடன் (ஜெனரேட்டர்) ஒரு வலுவான கேபிள்மூலம் பிணைக்கப்பட்டு இயங்கும் ட்ரோன் ஆகும்.

இந்த ட்ரோனானது, டைனமிக் சோரிங் முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, காற்று வீச்சைச் சாதகமாகப் பயன்படுத்தி, என்ஜின் ஆற்றல் அல்லது பேட்டரி செலவின்றி விண்ணில் மிதந்து பறக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். அதனால், பல நாள்கள் அல்லது வாரக் கணக்கில் தொடர்ச்சியாக வான்வெளியில் நின்று பணியாற்ற முடியும். அதனால், 417 மணி நேரம் தொடர்ந்து பறந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும். தவிர எல்லைப் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர் மேலாண்மை, பெரிய திருவிழாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின்போது 24 மணிநேர நேரலை கண்காணிப்புக்கு இதைப் பெரிதும் பயன்படுத்த முடியும்.

ட்ரோன்களின் ஆரம்பகால வளர்ச்சி பெரும்பாலும் ராணுவத் தேவைகளிலிருந்தே தொடங்கியது. இவை இன்றைய சிறிய ட்ரோன்களைப் போல இல்லாமல், விமானத்தைப் போன்ற பெரிய அமைப்புகளாக இருந்தன. பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சியுடன், தொலைக் கட்டுப்பாட்டு விமானங்கள் உருவாகத் தொடங்கின. அதாவது, தரையில் இருக்கும் ஒருவர் விண்ணில் பறக்கும் விமானத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது.

தொடர்ந்து, அடுத்தகட்டத்தில் பல சுழலிகள் கொண்ட சிறிய ட்ரோன்கள், குறிப்பாக நான்கு சுழலிகள் கொண்ட குவாட்காப்டர்கள் வேகமாக வளர்ந்தன. சிறிய அளவு, எளிதான இயக்கம் மற்றும் குறைந்த செலவு ஆகிய காரணங்களால் இவை பொதுமக்களிடம் பிரபலமடைந்தன.

பின்னர், ட்ரோன்களில் உயர்தர கேமராக்கள், ஜிபிஎஸ், நிலைப்படுத்தும் தொழில்நுட்பம், தடைகளை உணரும் சென்சார்கள் போன்றவை இணைக்கப்பட்டன. இதனால், வானிலிருந்து உயர்தர புகைப்படங்கள், காணொலிகளை எடுப்பது மிகவும் எளிதானது.

திரைப்படத் தயாரிப்பு, செய்தி, விவசாயம், கட்டுமானம், நில அளவை, இயற்கை ஆய்வு போன்ற பல துறைகளில் இவை பயன்படத் தொடங்கின.

தற்போதைய ட்ரோன்கள் மனிதக் கட்டுப்பாட்டை மட்டும் சார்ந்திராமல், செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி வழிசெலுத்தல், மேம்பட்ட சென்சார்கள் மற்றும் ஆற்றல் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களுடன் செயல்படுகின்றன.

இதன் அடுத்த வளர்ச்சியாக பல நாள்கள் தொடர்ந்து வானில் செயல்படக்கூடிய தன்னாட்சி வான்வழி அமைப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய அமைப்புகள் தாமாகவே பாதையைத் தேர்ந்தெடுத்து, சூழலைக் கண்காணித்து, தகவல்களைச் சேகரித்து, தேவையான பணிகளை மனிதர்களின் குறைந்தபட்ச தலையீட்டுடன் மேற்கொள்ளக்கூடும்.

விவசாயத் துறையை எடுத்துக்கொண்டால், இன்று வயல்களில் மருந்து தெளிக்க ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 15 கிலோ எடையுள்ள மருந்துப் பொருள்களைத் தூக்கிக் கொண்டு வயல்களில் பறக்கிறது என்பதே அதிசயம்தான்.

"மேக் இன் இந்தியா' மற்றும் "பிஎல்ஐ திட்டம்' ஆகியவை, அதாவது இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புப் பொருளாதாரத் திட்டமாகும். இந்தத் திட்டத்தால், 2030-க்குள் உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக இந்தியா மாறினாலும் வியப்படைவதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.