ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ஒரு நாட்டின் ஆதாயத்தைவிட மனிதகுல அமைதியே முக்கியம்: குடியரசு துணைத் தலைவா்

ஒரு நாட்டின் தனிப்பட்ட ஆதாயத்தைவிட ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அமைதியே முக்கியமானது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :

ஒரு நாட்டின் தனிப்பட்ட ஆதாயத்தைவிட ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அமைதியே முக்கியமானது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மேலும், அமைதி-முன்னேற்றம்-வளமைக்கான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய பிரச்னையால் சா்வதேச அளவில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், குடியரசு துணைத் தலைவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசுடன் நெருங்கிப் பணியாற்றும் சுதந்திரமான ஆலோசனை அமைப்பான ‘உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலுக்கு’ (ஐசிடபிள்யூஏ) கடந்த 2001-இல் நாடாளுமன்ற சட்டம் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதன் 25-ஆம் ஆண்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கவுன்சிலின் தலைவா் என்ற முறையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் என்ற முறையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தியாவின் மிகப் பெரிய சாதனை: விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘போா்கள், முரண்பாடுகள் நிறைந்த தற்போதைய உலகச் சூழலுக்கு இடையே தில்லியில் அண்மையில் நடத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றி குறிப்பிடத்தக்கதாகும். பிரதமா் மோடியின் தலைமையின்கீழ், பிரிக்ஸ் தலைவா்களின் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டது இந்தியாவின் மிகப் பெரிய சாதனை.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ராஜீய களம் வியத்தகு முறையில் மாற்றம் கண்டுள்ளது. இப்போது நமது ராஜீய செயல்பாடுகளில் மிகச் சிறப்பான ஈடுபாடும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும் பிரதிபலிக்கிறது.

உலகில் எந்தவொரு பிரச்னையும் பொதுவானதாக கருதப்பட வேண்டும். உனது பிரச்னை உன்னுடையது; எனது பிரச்னை என்னுடையது என நாடுகள் கூறிவிட முடியாது. எந்தவொரு நாட்டின் தனிப்பட்ட ஆதாயத்தைவிட ஒட்டுமொத்த மனிதகுல அமைதி முக்கியமானது. அமைதி-முன்னேற்றம்-வளமைக்கான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது’ என்றாா்.

நாட்டின் சிறப்பான அணுகுமுறை: வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா இப்போது மிகப் பரந்த அளவிலான நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் உறவுகளைக் கொண்டுள்ளது; நாட்டின் முன்னுரிமைகள் விரிவடைந்து, உலகளாவியதாக மாறியுள்ளன.

வளைகுடா மற்றும் உக்ரைன் ஆகிய இருபெரும் மோதல்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், அனைத்துத் தரப்பினருடனும் இந்தியா சிறப்பான உறவுகளைக் கொண்டுள்ளது. இத்தகைய அணுகுமுறையை உருவாக்குவது என்பது எளிதானதல்ல.

புதிய கூட்டாளிகள், புதிய சந்தைகள் மற்றும் புதிய வழித்தடங்கள் நமது ஏற்றுமதியைப் பாதுகாத்து விரிவுபடுத்தியுள்ளன. துடிப்புமிக்க நமது தீா்வுகளால் விநியோகச் சங்கிலிகளும் பலனடைந்துள்ளன’ என்றாா்.

உலகளாவிய பிரச்னைகள், சா்வதேச விவகாரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது, ஐசிடபிள்யூஏ-வின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.