பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கண்ணொளி காப்போம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வகுப்பறையில் பல குழந்தைகள் கண்ணாடி அணியும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பற்றி...

கண்ணொளி காப்போம்

Published On :

இரா. சரவணன்

நூறில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே கண்ணாடி அணிந்திருந்த நிலை மாறி, இன்று வகுப்பறையில் பல குழந்தைகள் கண்ணாடி அணியும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது மாறிவரும் நம் குழந்தைப் பருவத்தின் பார்வைத் திறன் குறித்த ஆபத்தான எச்சரிக்கை மணி.

உலக சுகாதார அமைப்பின் கணிப்புப்படி, தற்போதே உலக மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதத்தினர் இந்தக் கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் சரிபாதி பேருக்கு இந்தக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உலகளாவிய இந்த எச்சரிக்கையின் நிழல், தமிழ்நாட்டிலும் தற்போது மிக ஆழமாகப் படிந்துள்ளது. கடந்த காலங்களில், குறிப்பாக 1990-களில் படித்த மாணவர்களிடம் இந்த அளவுக்குப் பார்வைக் குறைபாடுகள் இருந்ததில்லை.

அன்றைய மாணவர்கள் கரும்பலகையைத் தெளிவாகப் பார்த்தார்கள்; வகுப்பறை முடிந்ததும் வெட்டவெளியில், இயற்கை சூரிய ஒளியில் ஓடி விளையாடினார்கள். தொலைவில் பறக்கும் பறவைகளையும், அடிவானத்தையும் பார்த்த அவர்களது கண்களுக்கு, தூரத்துப் பார்வையைத் துல்லியமாகக் குவிக்கும் இயற்கை பயிற்சி தானாகவே கிடைத்தது. இதனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் 15 வயது வரையிலான குழந்தைகளிடம் கிட்டப்பார்வை பாதிப்பு வெறும் 4 சதவீதமாக மட்டுமே இருந்தது.

தமிழகத்தில் அண்மையில் 14,342 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட 'ஸ்டெம்' மருத்துவ ஆய்வின் முடிவுகள் இதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்த ஆய்வின்படி, தற்போதைய குழந்தைகளிடம் கிட்டப்பார்வை பாதிப்பு 17.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நான்கு மடங்கு பிரச்னையாகும். குறிப்பாக, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளைவிட, நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் நகர்ப்புறப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு சுமார் 2.5 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய பாதிப்புக்கு எண்ம (டிஜிட்டல்) திரைகளை மட்டுமே நாம் ஒட்டுமொத்தக் குற்றவாளியாகக் கருதிவிட முடியாது. கண் மருத்துவ அறிவியல் கூறும் உண்மையான காரணம், தொடர்ச்சியாக அருகில் பார்க்கும் வேலைகள் மற்றும் இயற்கை சூரிய ஒளியின் பற்றாக்குறை ஆகிய இரண்டும்தான். புத்தகங்களை மிக அருகில் வைத்துப் படிப்பது, எழுதுவது மற்றும் கைப்பேசி பார்ப்பது போன்ற செயல்பாடுகளின் போது, கண்ணின் தசைகள் எப்போதும் சுருங்கிய நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

மாறாக, சூரிய ஒளியில் குவியும் விழித்திரை 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை சுரந்து கண் உருண்டை அளவுக்கு அதிகமாக நீளமாக வளர்வதைத் தடுக்கும் ஓர் இயற்கை அரணாகும். ஆனால், இன்றைய குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பதால், இந்த டோபமைன் சுரப்பு குறைந்து கிட்டப்பார்வை மிக எளிதாக ஏற்படுகிறது. உடல் வளரும் பருவத்தில் கண் உருண்டையும் வளரும்போது, வாழ்வியல் அழுத்தங்களால் கண்ணின் முன்-பின் அச்சு நீளம் இருக்க வேண்டிய அளவைவிட சற்று அதிகமாக நீண்டுவிடுகிறது.

இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? கண் உருண்டை வெறும் ஒரு மி.மீ. நீளமாக வளர்ந்தால்கூட, அது சுமார் மைனஸ் 3.00 டி வரை கிட்டப்பார்வை அளவை அதிகரித்துவிடும். அதிகாலைப் பள்ளி, அதைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள், மாலையில் தனி வகுப்புகள் எனப் போட்டித் தேர்வுகளுக்காகக் குழந்தைகளைக் கூண்டில் அடைக்கும் கல்வி அழுத்தமும், விளையாட்டு மைதானங்களின் மறைவுமே தற்போது 90 சதவீதப் பாதிப்புக்குக் காரணமாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதை எதிர்கொள்ளத் தமிழக அரசு, பள்ளி சிறார் 'கண்ணொளி காப்போம் திட்டம்' மூலம் மாபெரும் பரிசோதனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.24 கோடி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இதை அலட்சியப்படுத்தினால் எதிர்காலத்தில் கண்ணின் பார்வைத் திறன் மைனஸ் 6.00 டி-க்கும் அதிகமாக உயர்ந்து 'உயர் கிட்டப்பார்வை' என்னும் பேராபத்துக்கு வழிவகுத்துவிடும்.

இது பின்னாளில் விழித்திரை கிழிதல், பசும்படலம் மற்றும் இளம் வயதிலேயே கண்புரை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.குழந்தைகளின் உணவில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் துத்தநாகம் நிறைந்த கேரட், பப்பாளி, முருங்கைக்கீரை மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், முட்டை, பாதாம் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ச்சியாக அருகில் பார்க்கும் வேலைகளைச் செய்யும்போது, ஒவ்வொரு 20 நிமிஷங்களுக்கும் ஒருமுறை சிறு இடைவெளி எடுத்து, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை, குறைந்தது 20 விநாடிகள் பார்க்கும் '20-20-20' விதியைக் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். கிட்டப்பார்வை என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்னையல்ல; அது நாம் நம் குழந்தைகளின் இயற்கையான வாழ்வியலைப் பறித்துக் கொண்டதன் விளைவு.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, குழந்தைகள் பகல் நேரத்தில் தினமும் குறைந்தது 90 நிமிஷங்கள் சூரிய ஒளியில், வெளிப்புறத்தில் விளையாடுவது இந்தப் பாதிப்பை பெருமளவு குறைக்கும். எனவே, குழந்தைகளுக்குப் புத்தகங்களையும் எண்மத் திரைகளையும் தாண்டி, ஓடி விளையாட வானமும், பசுமையும் நிறைந்த வெளி உலகத்தை மீண்டும் வழங்குவதே அவர்களின் ஒட்டுமொத்தப் பார்வையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான முதல் மற்றும் மிக முக்கியப் படியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.