
'மெட்டா'வின் தளர்வு நடவடிக்கைகள்!
பயனாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து அடிமையாக்கும் தயாரிப்புகளை வடிவமைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்க வைக்க இப்போது உலக நாடுகள் முயன்று வருகின்றன.

'மெட்டா'வின் தளர்வு நடவடிக்கைகள்...
சமூக ஊடகங்களின் எதிர்மறையான வடிவமைப்பு அம்சங்கள், சொல்லாடல்கள், காட்சிப் பதிவுகள் முதலியன, தம் குடிமக்கள் மீது அக்கறைக் கொண்டுள்ள அரசுகளுக்கு கவலையை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாட்டை ஒரு 'பொது சுகாதார அபாயம்' என உலக நாடுகள் கருதுகின்றன.
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பாக தடைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. பிரான்ஸ், பிரிட்டன், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய சட்டரீதியான அல்லது வயது சரிபார்ப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தடையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குழந்தைகள், பதின்ம பருவத்தினர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
கடந்த 2023-ஆம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் 30 சதவீத கல்வி நிறுவனங்கள் வகுப்பறையில் கைப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தின. 2024-ஆம் ஆண்டின் இறுதியில் இது 40 சதவீதமாக உயர்ந்தது.
குழந்தைகள், பதின்ம வயதினர் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவது என்பது ஒரு ஈர்ப்புவிசைப் போன்றது, அது போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதைவிட ஆபத்தானது என்ற கவலையைப் புறக்கணிக்கும் வகையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. எச்சரிக்கைகள், அபராதங்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எதையும் பொருட்படுத்துவதில்லை.
நார்வேயிலுள்ள பெர்கன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் செசிலி ஷோ ஆண்ட்ரியாசென் மற்றும் அவரது உதவியாளர்களால் உருவாக்கப்பட்ட 'பெர்கன் சமூக ஊடக அடிமைத்தள அளவுகோலை' பயன்படுத்தி, ஆக்சிஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் 32 நாடுகளில் நடத்திய 'மெட்டா' பகுப்பாய்வில், நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை, உலக அளவில் 580 கோடி மக்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், சுமார் 24 சதவீதத்தினர் சிக்கலான சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கப் பதின்ம வயதினரிடையே, 46 சதவீதத்தினர் தொடர்ச்சியாக இணையத்தில் மூழ்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சங்கத்தின் வார இதழ் (ஜமா) நடத்திய ஆய்வில், சமூக ஊடகங்களின் பயன்பாடு என்பதானது ஓராண்டுக்குப் பிறகு அதிக மனச்சோர்வு, நோய் அறிகுறிகளுடன் தொடர்புடையது என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் இயங்கும் 'பியூ' ஆராய்ச்சி மையம், கடந்த 2025-ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட பதின்ம வயதினரில் 48 சதவீதம் பேர் சமூக ஊடகங்கள் தங்கள் வயதினரிடம் பெரும்பாலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இது 2022-ஆம் ஆண்டில் 32 சதவீதமாக இருந்தது.
'மெட்டா இயங்குதளங்கள் ஒருங்கிணைப்பு' என்பது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், மெசஞ்சர், திரெட்ஸ் போன்ற உலகின் முன்னணி சமூக ஊடகங்களை இயக்கும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனம் கலிபோர்னியாவிலுள்ள மென்லோ பார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மார்க் ஜுக்கர்பெர்க் இந்த நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
பல ஆண்டுகளாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக், யூடியூப் மற்றும் பிற முன்னணி சமூக வலைதளங்கள், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை ஈர்த்து, அடிமையாக்கும் வகையில் வேண்டுமென்றே வடிவமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2021-இல் மெட்டா நிறுவனத்தின் முன்னாள் தரவு விஞ்ஞானியும், தயாரிப்பு மேலாளருமான ஃபிரான்சஸ் ஹெளகன், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலனைவிட, 'மெட்டா' லாபத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அமெரிக்காவின் முக்கிய நான்கு மாநிலங்களான கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூஜெர்சி உள்பட 29 அமெரிக்க மாகாணங்களின் தலைமை வழக்குரைஞர்கள் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தற்போது நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான 'மெட்டா வழக்கு', சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு, பயனர்களின் நலனுக்கு எதிரானது என்பதை அறிந்திருந்த போதிலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அடிமையாக்கும் வகையில் அந்நிறுவனம் வேண்டுமென்றே வடிவமைத்ததா என்பதை விசாரிக்கிறது.
மெட்டாவின் அதிகப்படியான வருவாய்க்குக் காரணம் அதன் நுகர்வோர்கள் தொடர்ச்சியாக அதன் வலைதளங்களைக் காண்பதுதான். அதன் வடிவமைப்பு, பயனாளர்களை ஈர்த்து, அடிமையாக்கும் ஓர் உத்தி என்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது. நீதிமன்றம் மெட்டாவை 'பொது இடையூறு' என்று அழைத்தது.
வேண்டுமென்றே சமூக ஊடங்கங்களின் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைத்தற்காக மெட்டா மீது வழக்குத் தொடர்ந்த 29 அமெரிக்க மாகாணங்களுடன், மெட்டா கடந்த 26.8.2026 அன்று சமரச ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தம் மீது தொடுத்த வழக்குகளைத் தீர்ப்பதற்காக, மெட்டா நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் 12.7 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை மாகாணங்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டது.
டிக்-டாக் மற்றும் யூடியூப் போன்ற போட்டி சமூக ஊடகங்களும், இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதிரீதியாக பங்களித்தால் இதன் மொத்தத் தொகை 17.1 பில்லியன் டாலர் (சுமார் 1.6 லட்சம் கோடி) வரை உயரக் கூடும்.
மேலும், தனது செயல்பாட்டின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா ஒப்புக்கொண்டது. இதன்படி, 18 வயதுக்குள்பட்ட பயனர்களுக்குத் தினமும் இரண்டு மணிநேரப் பயன்பாட்டு வரம்பு இயல்பாகவே இருக்கும். எனினும், பெற்றோர் இந்த வரம்பை மாற்றியமைக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு ஓர் எண்ம உறங்கும் நேரம் அறிமுகப்படுத்தப்படும்; நள்ளிரவு முதல் காலை ஆறு மணி வரை அணுகல் கட்டுப்படுத்தப்படும்.
அதே நேரத்தில், இரவிலும், பள்ளி நேரங்களிலும் அறிவிப்புகள் குறைக்கப்படும். சிறார்களின் பதிவுகளுக்கான விருப்பக்குறிகள் மற்றும் எதிர்வினை எண்ணிக்கைகள் நீக்கப்படும். இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிக்-டாக் போன்ற சமூக ஊடக செயலிகளில் பயன்படுத்தப்படும் தற்காலிக முகமாற்று தொழில்நுட்பங்கள் பதின்ம பருவத்தினருக்குத் தடைச் செய்யப்படும்.
குழந்தைகளையும், பதின்ம வயதினரையும், வெறும் நுகர்வோராகப் பார்ப்பதைத் தாண்டி, தனது வலைதளங்களை அவர்களுக்குப் பொறுப்புள்ளவையாக மாற்றும் வகையில் பாதுகாப்பு அம்சங்களையும் மேற்கொள்ள மெட்டா உறுதியளித்துள்ளதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
சமரசத்துக்கு நீதிமன்ற ஒப்புதல் கிடைத்தபிறகு, அமெரிக்காவிலுள்ள பதின்ம வயதினருக்கான மெட்டாவின் புதிய கட்டுப்பாடுகள் காலப்போக்கில் படிப்படியாக அமல்படுத்தப்படும். இவை அனைத்தும் வயது சரிபார்ப்பைச் சார்ந்துள்ளன.
இந்தத் தொழில்நுட்பம் இதுவரை நம்பகத்தன்மையற்றதாகவும், குறைபாடுள்ளதாகவும் உள்ளதுடன், தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் இதர தீங்கான உள்ளடக்கங்கள் மீது அதிக பொறுப்புணர்வையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
முன்னதாக, இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் குறித்து 'மெட்டா' நிறுவனத்துக்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் அறிவிப்பு ஒன்றை அனுப்பியது. அத்தகைய விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் குறித்து இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தால் நிர்வகிக்கப்படும் இணைய குற்றத் தடுப்பு வலைதளத்தில் நேரடியாகத் தகவல்களைத் தெரிவிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுவரை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய தகவல்களை அமெரிக்காவில் செயல்படும் 'மாயமான மற்றும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திடம்' மெட்டா தெரிவித்து வந்தது. அதன் மூலமாகவே இந்திய முகமைகளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இனி இந்திய சட்ட அமலாக்க முகமைக்கு மெட்டா நேரடியாக தகவல் தெரிவிக்கும்.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'குழந்தைகள் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபடுவோர், தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்கச் செய்யப்படுவதை உறுதி செய்ய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளோம்' என்றார்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அபாயங்களை அறிந்திருந்தபோதிலும், பயனாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து அடிமையாக்கும் தயாரிப்புகளை வடிவமைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்க வைக்க இப்போது உலக நாடுகள் முயன்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






