
டெங்கு பரவலைத் தடுப்போம்
டெங்கு பரவலைத் தடுப்பது பற்றிய நடுப்பக்கக் கட்டுரை.....

டெங்கு தடுப்பு..
தமிழகத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் 133 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருந்து. மேலும், செப்டம்பர் 17 அன்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் செப்டம்பர் 22 வரை மாநிலம் முழுவதும் 17,277 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில அளவிலான டெங்கு பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சென்னையில் மட்டும் செப்டம்பர் 17 அன்று டெங்கு காய்ச்சலால் 87 பேரும், மலேரியா, சிக்குன்குனியா, ஃபுளூ காய்ச்சல் போன்ற நோய்களால் 156 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பருவமழை காய்ச்சலின் பரவல் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
டெங்கு வைரஸ் பாதித்த ஒருவரை ஏடிஸ் கொசு கடிக்கும்போது, கொசுவின் உடலுக்குள் வைரஸ் செல்கிறது. பின்னர், அந்தக் கொசு மற்றொரு நபரை கடிக்கும்போது, வைரஸ் அவருடைய ரத்தத்தில் கலந்து டெங்கு தொற்று ஏற்படுகிறது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் கடிக்கும். வீடுகளைச் சுற்றி தேங்கும் சுத்தமான நீர், பூந்தொட்டி, பழைய டயர், தேங்காய் ஓடு, தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் ஏடிஸ் கொசுக்கள் ஏராளமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
இவ்வாறான காய்ச்சல்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் பருவகால ஃப்ளூ. இன்ஃப்ளூயன்ஸô வைரஸôல் ஏற்படும் இந்தச் சுவாசப் பாதை தொற்றிலிருந்து பெரும்பாலானவர்கள் சிக்கலின்றி குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா, இருதய நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வழக்கமான சளிக் காய்ச்சலைவிட ஃப்ளூ சற்று வேகமாக பாதிக்கப்பட்டவரை சோர்வடையச் செய்யும். திடீரென காய்ச்சல், குளிர்நடுக்கம், தலைவலி, உடல்வலி, இருமல், தொண்டைவலி, மூக்கடைப்பு, கடுமையான சோர்வு போன்றவற்றை இந்தக் காய்ச்சல் ஏற்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கும் சில நேரங்களில் ஏற்படலாம். பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் உடல்நிலை சீராகி விடும். இருமலும் சோர்வும் இன்னும் சில நாள்கள் நீடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் காய்ச்சலின் அறிகுறிகள் தோன்றியதுமே முதல் 48 மணி நேரத்துக்குள் மருத்துவ சிகிச்சையை தொடங்கி விடுவது நல்லது.
பெருகி வரும் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு விரைவுபடுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் சுய சிகிச்சையை தவிர்த்து, அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குணமாகி வருவது போலத் தோன்றி, மீண்டும் காய்ச்சல் அல்லது இருமல் அதிகரித்தாலும் மருத்துவப் பரிசோதனை அவசியம். காய்ச்சல் மூன்று அல்லது நான்கு நாள்களை கடந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஓய்வும், தூக்கமும் தேவை. தண்ணீர், சூப், கஞ்சி, ரசம் போன்றவற்றை உடலுக்கு ஏற்றபடி எடுத்துக்கொள்ளலாம். உடல் போதுமான நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. வெதுவெதுப்பான பானங்களை அருந்துவது தொண்டைக்கு இதமளிக்கும். தொண்டை வலி உள்ளவர்கள் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.
காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சளிக்கான கூட்டு மருந்திலும் அதே மருந்து இருக்கக்கூடும் என்பதால், ஒரே மருந்தை இருமுறை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஃப்ளூ வைரஸுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது.
பாக்டீரியா தொற்று சேர்ந்திருக்கலாம் என்று மருத்துவர் கருதினால் அவை தேவைப்படலாம். பழைய மருந்துச் சீட்டைப் பார்த்துத் தானாக ஆன்டிபயாட்டிக் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்காக நாம் ஒவ்வொருவரும் சரியான மருத்துவக் காப்பீட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பது நல்லது.
காய்ச்சல் வருவதை தடுப்பதற்கு ஆண்டுதோறும் மருத்துவர் பரிந்துரைக்கும் ஃப்ளூ தடுப்பூசியை நாம் போட்டுக் கொள்ளலாம். குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்படி ஃப்ளூ தடுப்பூசி போட்டுக் கொள்வோம். இந்தச் சிறிய முன்னெடுப்பு கவலைப்பட வைக்கும் காய்ச்சலால் ஏற்படும் நமது கவலைகளை வெகுவாகக் குறைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





