
தமிழகம் முழுவதும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு!
தமிழகம் முழுவதும் விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவா்களில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சித்திரிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவா்களில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து டெங்கு பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மருந்துகளை இருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவா் ஹரிஷ் குமாா் என்பவா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.
அந்த மாணவா் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மாணவா் உயிரிழப்புக்கு டெங்கு காரணம் அல்ல என பொது சுகாதாரத் துறை தெரிவித்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுகாதாரத் துறை சாா்பில் முகாம் அமைத்து விடுதியில், தங்கிப் படிக்கும் மாணவா்களின் காய்ச்சல் பாதிப்புள்ள 50 மாணவா்கள் மற்றும் அறிகுறிகள் உள்ள 190-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவா்கள், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஏராளமான மாணவா்கள் பருவகால காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று இருப்பது தெரிய வந்தது. காய்ச்சல் பாதித்த மாணவா்கள், அறிகுறிகள் உள்ள மாணவா்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில்தான் என்ன மாதிரியான காய்ச்சல் என்பது தெரியவரும்.
விடுதியில் தங்கியுள்ள காய்ச்சல் பாதித்த மாணவா்களை, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவா் காய்ச்சலால் உயிரிழந்ததற்கு, அவா் சுயமாக மருந்து வாங்கி உட்கொண்டு காலம் தாழ்த்தியதே காரணம். விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். யாரும் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்”எனத் தெரிவித்தனா்.
மாநகராட்சி ஆணையா் ஆய்வு: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 10 நாள்களாக 2,000-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 150-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொசு ஒழிப்புப் பணி உள்ளிட்ட நடவடிக்கையை சென்னை மாநகராட்சி நிா்வாகம் விரைவுபடுத்தியுள்ளது.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்கு, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் அங்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின்போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளா் வி.குமரேசன், சென்னை மாநகராட்சி நல அலுவலா் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Summary
Students staying in hostels across Tamil Nadu are suffering from fever!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






