டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மீண்டும் எழுத்துத் தேர்வு முறையை டி.ஆர்.பி. பின்பற்றுமா?

சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், மீண்டும் எழுத்துத் தேர்வு முறை கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. உயர் கல்வியின் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 am

சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், மீண்டும் எழுத்துத் தேர்வு முறை கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த இது அவசியம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. உதவிப் பேராசிரியர் பணியிடத்தக்குத் தகுதியுடையவர்களை, எழுத்துத் தேர்வு மூலம் டி.ஆர்.பி. தேர்வு செய்து வந்தது.

1993-ம் ஆண்டு முதல் இந்த எழுத்துத் தேர்வு முறை பின்பற்றப்பட்டு வந்தது. 1996, 1998, 2000 ஆண்டுகளிலும் இதே முறை பின்பற்றப்பட்டு, உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், அதன் பிறகு கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் அதிகம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, எழுத்துத் தேர்வு முறையை அப்போதைய அரசு தவிர்த்தது.

பணியிடங்களை வேகமாக நிரப்பவேண்டும் என்ற நோக்கத்தில், நேர்முகத் தேர்வு மூலம் மட்டும், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதாவது, முன் அனுபவத்துக்கு வழங்கப்படும் மதிப்பெண், நேர்முகத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். 2007-ம் ஆண்டு முதல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே, உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தப் புதிய நடைமுறையில், நேர்முகத் தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என கல்வியாளர்களும், பேராசிரியர்களும் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வந்தனர். ஆனால், அப்போதைய அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

இப்போது, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, கல்லூரிகளில் காலியாக உள்ள 1,025 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நடப்பு ஆண்டிலேயே டி.ஆர்.பி. மூலம் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், மீண்டும் எழுத்துத் தேர்வு முறையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு வயது வரம்பு இல்லை. எனவே, படித்து முடித்து பல ஆண்டுகளாக, அரசுப் பணிக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், அவர்களுடைய துறைகளில் (பாடங்களில்) புலமையுடன் இருப்பர் என்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.உதாரணமாக, 2007-ம் ஆண்டு, நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் தேர்வின்போது, 57 வயதைக் கடந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, ஊட்டியில் உள்ள அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பணியில் சேர்ந்த அவர், ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற்றார்.இதுபோன்ற நபர்கள் அவரவர்களுடைய பாடங்களில் புலமையுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய, எழுத்துத் தேர்வு முறை அவசியம். நேரடி நேர்முகத் தேர்வு முறை, முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கிறது. எனவே, மீண்டும் எழுத்துத் தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களை டி.ஆர்.பி. தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உயர் கல்வியின் தரத்தையும் மேம்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த அரசுக் கல்லூரிப் பேராசிரியர் கே.ஜி. பழனி கூறினார்.

இதுகுறித்து உயர் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

1,025 உதவிப் பேராசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து டி.ஆர்.பி. அலுவலர்கள் மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும், முன்பிருந்ததுபோல் எழுத்துத் தேர்வு முறையிலேயே, உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.