சத்குரு என்றால் வழிகாட்டியா?  

பரிசுத்தமான தெய்விக நிலையில் மனித உருவில் உள்ளவர்களே சத்குருக்கள்.
சத்குரு என்றால் வழிகாட்டியா?  

பரிசுத்தமான தெய்விக நிலையில் மனித உருவில் உள்ளவர்களே சத்குருக்கள். ஏனென்றால், இறைவனின் அனைத்து குணாதிசயங்களையும் இவர்கள் தம்முள் கொண்டுள்ளார்கள். உதாரணமாக வாசுதேவ கிருஷ்ணன் மனித உடலை எடுத்துக் கொண்ட ஒரு கடவுள் அவதாரமே. உண்மையில் சாயிபாபா என்பது யார்? இதுவரை என்னால் நிச்சயமாகக் கூற முடியவில்லை. நேரடி அனுபவம் இன்றி உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது கற்பனையாகவோ எதையும் அனுமானிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பாபாவின் உண்மை வடிவம் குறித்து நேரடி அனுபவம் கிட்டும்போது கட்டாயம் நான் அதைப்பற்றி கூறுவேன்.

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் தெளிவாகக் சொல்ல முடியும். அதாவது பாபா ‘பரமுக்தி நிலையில்’ இருப்பவர். வாழ்வு, மரணம் ஆகியவற்றைக் கடந்த நிலையில் இருந்தார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், பஞ்சபூதங்களையும் தன் விருப்பத்திற்கிணங்க கட்டுக்குள் வைத்திருக்கும் தெய்விக சக்திகளைப் பெற்றிருந்தார்.

நம் வாழ்வில் சத்குருக்களின் பங்களிப்பு என்ன?

இறையறிதலுக்கான திறத்தை நமக்கு வழங்குபவர் சத்குரு ஒருவரே. ‘பரமஹம்ச நிலையை’ அடையக்கூடிய அனுபவத்தை மனிதனுக்கு வழங்குவதே சத்குருவின் முதல் வேலை. சத்குருவின் அருள் இன்றி இத்தகைய ஒரு நிலையை அடையவே முடியாது. பத்து கோடியில் ஒருவர் வேண்டுமானால் இந்நிலையையும் தாண்டிச் செல்லமுடியும். கடும் முயற்சியால் ஒருவேளை பரமுக்தி மற்றும் துரியவஸ்தா நிலையை அடையக்கூடும். மனிதனின் ஆன்மிக வளர்ச்சிப் பாதையில் குறிக்கிடும் அனைத்து இடர்பாடுகளையும் சத்குருவே களைகிறார்.

வெறும் அறிவின் அடிப்படையில் மனித மனத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சித்தாந்தங்களை சத்குரு தகர்த்தெறிகிறார். இச்சித்தாந்தங்கள் அனைத்தும் அறியாமையின் அடையாளங்களே. இத்தகைய அறியாமை இருள் அகற்றப்படும் போது உள்ளொளி அறிவு தன்னால் ஒளிரத் தொடங்குகிறது. உண்மை அறிவு அல்லது ஞானத்தை இச்சித்தாந்தங்கள் அனைத்தும் திரையிட்டு மறைக்கின்றன. எனவே இவைகளை கழற்றி நம்முள்ளிருந்து அகற்றி எறிய வேண்டியது அவசியமாகிறது. ஒருவன் தான் மிகச்சிறந்த அறிவாளி என நினைக்கும் போது அவன் அறிவு முழுவதும் உண்மையில் முட்டாள்தனமே என்று அவனே உணரும் வரை சத்குரு அவனது அறிவு என்னும் அகங்காரத்தை முழுவதுமாக அழிக்கிறார். மனிதன் தன் குறைகள், வரையறைகள், கட்டுப்பாடுகள் என இவற்றையெல்லாம் கடந்து வரையறையே இல்லாத ஒரு எல்லையற்ற நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்குரு தன் பக்தர்களை வழிநடத்தி முன்னேற்றம் அடையச் செய்கிறார்.

அவதாரத்திற்கும் சத்குருவிற்கும் இடையே வேறுபாடு ஏதேனும் உண்டா? ஆம் எனில் தெய்விகப் பணியாற்றுவதில் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

இருவருக்கும் குறிக்கோள் ஒன்றே. அவர்தம் வழிமுறைகளும் ஒன்றே. அவர்கள் பணியாற்றும் நிலைகளும், அவர்களின் தெய்விக ஆதிக்கம் செலுத்தப்படும் மனிதக் கூட்டங்களும் மட்டுமே வேறுபடலாம். மனித நாகரிக வளர்ச்சிக்கு இருவரும் பெரும் ஊக்கம் அளிக்கின்றனர். சுருக்கமாக இவ்வளவு தான் கூற முடியும்.

சத்குரு என்பவர் ஒவ்வொரு ஜீவராசியின் துயரங்களையும் தாம் சுமந்து கொள்கிறார் என்பது உண்மையா?

சத்குருக்கள் பூர்வ ஜென்ம பந்தங்கள் ஏதும் இல்லாதவர்கள். இவர்களைப் பொறுத்தவரை ஜென்ம ஜென்மமாகத் தொடரும் பூர்வ கர்ம வினைகளை எரிந்து சாம்பலாய் போனவை எனலாம். அவர்கள் ‘கர்ம வினை வெற்றிட நிலையில்’ உள்ளனர். எனவே இத்தகைய சத்குருக்கள் முன்னிலையில் யார் வந்தாலும், அவர்களுடைய கர்மாக்களின் விளைவுகள் இந்த வெற்றிடத்தில் நுழைகின்றன. இது ஒருவருக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ ஆனால் இதுவே உண்மை. எவ்வகையிலாவது சத்குருவை நெருங்க இயலும் ஒவ்வொரு ஆன்மாவின் விஷயத்திலும் இது ஒரு உண்மை நிகழ்வே. இந்நிகழ்வு மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது.

ஏனெனில், இயற்கையின் கருணை நியதியானது, இயல்பாக தன்னிச்சையாக சத்குருவின் மூலம் நிறைவேறுகிறது. ஒரு குதிரையை ஒருவன் அடித்தபோது அந்த விளாசல் காரணமாக பாபாவின் முதுகு, கறுத்தி கன்றிப் போயிருந்தது. இது ஒரு சிறு உதாரணமே. பாபாவின் அடியவர்கள் துன்பத்துக்கு உள்ளான போதெல்லாம் பாபா இயற்கையாகவே அவர் தம் சூட்சும சரீரத்தில் அவ்வலியை, வேதனையை அனுபவித்தார். ஒரு அடியவரின் மனத்தில் ஒரு எண்ணம் உதித்தவுடனே அல்லது ஒரு உணர்வு எழுந்தவுடனே அல்லது ஒரு சொல் வாயினின்று கிளம்பும் அந்தக் கணத்தில், இவற்றின் அதிர்வுகள் உடனே சத்குருவை சென்றடைகின்றன. இதனால் தான் பாபா ‘நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கூட அவை எல்லாவற்றையும் நான் அறிவேன்’ என்று கூறுவது வழக்கம்.

(உங்கள் கேள்விகளுக்கு குருஜியின் பதில்கள் – ஆசிரியர் குருஜி சத்பதி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com