ஜெயலலிதா தெலுங்கு கற்றுக் கொண்ட கதை!

ஜெயலலிதா தெலுங்குத் திரைப்படங்களிலும் கணிசமாக நடித்தவர் தானே! அவருக்குத் தெலுங்கு பேசத் தெரிந்திருப்பதில் என்ன அதிசயம் என்று சிலர் நினைக்கலாம். அது  அப்படியல்ல... குஜராத்தியான நமீதா கூடத் தான் தமிழ்..
ஜெயலலிதா தெலுங்கு கற்றுக் கொண்ட கதை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆந்திரா பிளவு படுவதற்கு முன்பு ஒன்றுபட்ட ஆந்திராவில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். பேசத் தொடங்கிய சற்று நேரத்திலேயே தான் பேசுவது அங்கிருந்த மக்களுக்கு புரியவில்லை என்று உணர்ந்தாரோ என்னவோ; உடனடியாக சரளமாகத் தெலுங்கில் பேசத் தொடங்கி விட்டார். ஜெயலலிதா தெலுங்குத் திரைப்படங்களிலும் கணிசமாக நடித்தவர் தானே! அவருக்குத் தெலுங்கு பேசத் தெரிந்திருப்பதில் என்ன அதிசயம் என்று சிலர் நினைக்கலாம். அது  அப்படியல்ல... குஜராத்தியான நமீதா கூடத் தான் தமிழ் படங்களில் நடிக்கிறார், தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார். ஆனால் அவரது பேச்சை சரளமான, இலக்கண சுத்தமான தமிழ் என்று பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது தானே! ஒரு மொழியைக் கையாள்வதில் ஒரு நளினம், ஒரு நேர்த்தி என்ற ஒன்றும் இருக்கிறது தானே! ஜெயலலிதாவின் மொழியாற்றல் அத்தகையது. ஆனால் அது எப்படி வந்தது? அதைத் தெரிந்து கொள்ள கீழே கட்டுரையை முழுதுமாக வாசியுங்கள்...

ஜெயலலிதாவுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல அனைத்து தென்னிந்திய மொழிகளும் நன்கு பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். அது எப்படியென்றால்; தமிழ் அவரது தாய்மொழி, பிறந்து வளர்ந்தது மைசூரில் தாத்தா வீட்டில் என்பதால் கன்னடமும் சரளமாக கை வந்தது, சர்ச் பார்க் மெட்ரிகுலேஷன் மாணவி என்பதால் ஆங்கிலம் அவருக்கு தண்ணீர் பட்ட பாடு. ஆனால் தெலுங்கு அப்படி அல்ல. தெலுங்கு ஆரம்ப காலங்களில் அவருக்கு அந்நிய மொழியாகத் தான் இருந்தது. அவர் நடிக்க வந்த புதிதில் ‘மனசுலு, மமதலு’ என்றொரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஒப்பந்தம் செய்யும் போது ஜெயலலிதா அந்தத் திரைப்படடத்யாரிப்பாளரிடம் ‘ தனக்குத் தெலுங்கு தெரியாதே... எப்படி தெலுங்குப் படத்தில் நடிப்பது எனக் கேட்டிருக்கிறார். உடனே படக்குழுவினர் ஒரு தெலுங்கு மாஸ்டரை ஜெயலலிதாவுக்கு தெலுங்கு கற்றுத் தரச் சொல்லி பணி அமர்த்தி விட்டார்களாம்.

தினமும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் தெலுங்கு மாஸ்டர் ஜெயா வீட்டிற்கு வந்து விடுவார். இரவில் ஷூட்டிங் முடிந்து தாமதமாகத் திரும்பும் ஜெயலலிதாவுக்கு அதிகாலைத் தூக்கம் மிகவும் சுகமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அதைக் கெடுப்பதற்கென்றே தெலுங்கு மாஸ்டர் வந்து விட்டாரே! வேறு என்ன செய்ய முடியும். தாய் சந்தியாவுக்கோ மகள் நிச்சயமாக தெலுங்கு கற்றுக் கொண்டு தெலுங்குப் படங்களிலும் முடிசூடா ராணியாக வலம் வர வேண்டுமென்பதில் மிகுந்த விருப்பமிருந்தது. எனவே எப்போதும் போல் தனது அம்மா சந்தியாவின் ஆசைக்காக ஜெயா விடிந்தும், விடியாத காலைப் பொழுதில் தெலுங்கு மாஸ்டரோடு வார்த்தைகளில் மல்லுக்கட்டி, தெலுங்கில் கத்திக் கத்திப் பேசிப், பேசியே 70 நாட்களில் தெலுங்கு கற்றுக் கொண்டாராம். இது ஜெயலலிதாவே 70 களில் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு தான் அளித்த நேர்காணலில் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்தி. அதாவது ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், மிக எளிமையான வழி அந்த மொழியை, மொழி தெரிந்தவர்களிடம் அடிக்கடி உரக்கப் பேசிப் பழகுவது தான். ஏட்டில் படித்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் இது மிக எளிதானது.

அந்த வகையில் ஜெயலலிதாவைப் போல வெகு விரைவாக, மூன்று மாதங்களில் புதிய மொழி கற்றுக் கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோமா?!

தாய்மொழி தவிர்த்து, பிற மொழியினையும் கற்க வேண்டும் என்று ஆர்வம் உடையவரா நீங்கள்? இதற்கு கீழ்காணும் எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும்.

பேச வேண்டுமானால் புத்தகங்களைப் படிக்காதீர்கள்: பிற மொழிகளில் நன்றாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில், பிற மொழியை கற்க உதவும் புத்தகங்களால் நிச்சயம் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. பிற மொழியில் சரளமாகப் பேசுவதற்கு, இலக்கணமும் உங்களுக்கு உதவாது. எனவே பிற மொழி கற்பது தொடர்பாக வெளியாகியுள்ள புத்தகங்களைப் பயன்படுத்துவதை முதலில் கைவிட வேண்டும்.

முதல்நாளில் இருந்தே பேச வேண்டும்: பிற மொழியில் பேச வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு முதல்நாளில் இருந்தே நீங்கள் உங்களது முயற்சியைத் தொடங்க வேண்டும். முதல்நாளில் இருந்தே அந்த மொழியில் பேசிப் பழக வேண்டும். முதலில் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் மட்டுமே தெரிந்திருக்கும். இருப்பினும் முயற்சியை கைவிடக் கூடாது. அன்றாடம் புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு, அதை திரும்பத் திரும்ப வாய்விட்டு பேசிப் பழக வேண்டும். 

தயக்கம் வேண்டாம்: பிற மொழியில் பேசி பழகுவோர்  தாங்கள் பேசும் வார்த்தைகளில் ஏதாவது தவறு இருக்குமோ? அதை கேட்கும் பிற நபர்கள் என்ன நினைப்பார்களோ? என்று நினைக்கக் கூடாது. தயக்கமில்லாமல் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளில் வாய்விட்டு வெட்கமின்றி உரக்கப் பேச வேண்டும். அப்படி பேசும்போதுதான் உங்களுக்கு உங்களது பேச்சின்மீது நம்பிக்கை ஏற்படும். 

தவறுகள் சகஜம்: புதிய மொழியில் பேசி பழகும்போது, தவறுகள் நிகழ்வது சகஜம்தான். அந்த தவறையே நினைத்துக் கொண்டு, முயற்சியைக் கைவிடக் கூடாது. சரளமாக பேசப் பழக வேண்டும். 

செயலி மூலமும் பேச பழகலாம்: இணையதளங்கள், சில செயலிகள் வாயிலாக நீங்கள் உங்களுக்குத் தேவையான மொழிகளை எளிதில் கற்க முடியும். மேலும் ANKI எனப்படும் செயலியின் மூலமும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிகளில் இருக்கும் முக்கிய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு பேசலாம். அதாவது, இதுபோன்ற செயலிகளை உங்களது கணினி அல்லது செல்லிடப்பேசியில் தரவிறக்கம செய்து  கொண்டு, தேவைப்படும் நேரத்தில் அதில் இருக்கும் வார்த்தைகளை எந்த தவறுமின்றி உச்சரித்து பழகலாம்.

பிற மொழி பேசும் நபர்களுடன் கலந்துரையாடுங்கள்:   வெளிநாட்டு மொழியில் நீங்கள் பேச கற்றுக் கொண்டீர்களா? அந்நாட்டினருடன் முதலில் நீங்கள் கலந்துரையாடுதல் மிகவும் அவசியமாகும். இதற்கு நீங்கள் அந்நாட்டினரை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்பதில்லை. இதற்கென MEET.COM போன்ற இணையதளங்களில் தனிக் குழுவினரே உள்ளனர். அந்த இணையதளத்துக்குச் சென்று, பிற மொழி பேசும் நபர்களுடன் நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேசலாம். 

மேற்கண்ட எளிய நடைமுறைகளை பின்பற்றுங்கள். விரைவில் நீங்கள் விரும்பிய மொழிகளில் பேசும் திறமை உங்களை வந்தடையும். வாழ்த்துகள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com