கடந்து செல்லும், காத்திருங்கள்!
எதிர்கட்சிகளின் கோரிக்கை கருப்பு பண முதலைகளுக்கு ஒரு குருட்டு தைரியத்தை கொடுத்திருக்கிறது.


ஒரு காடு. அரசன் சிங்கம். ஒரு வேட்டையின் போது அதன் வால் பாறையில் மாட்டி துண்டானது. வாலின் நீளம் ஒரு அடியாக குறைந்தது. சிங்கம் அதை அவமானமாக நினைத்தது. குகைக்குத் திரும்பியது. வெட்கத்தினால் வெளியே செல்வதை தவிர்த்தது.
அந்தக் காட்டில் நரி ஒன்று இருந்தது. சிங்கத்திடம் பேசியது.
‘அரசே! காட்டில் மற்ற விலங்குகள் நீளமான வால் வைத்திருக்கின்றன. அது உங்கள் பெருமைக்கு அழகல்ல. அதனால் ஒரு யோசனை சொல்கிறேன். ‘யாருக்கெல்லாம் ஒரு அடி நீளத்திற்கு மேல் வால் இருக்கிறதோ அவர்கள் தங்களுடைய வாலை பாதியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்', என்று ஒரு சட்டம் கொண்டுவாருங்கள். அதன்பிறகு காட்டில் உள்ள எல்லா விலங்குகளின் வாலும் வெட்டப்பட்டிருக்கும். நீங்கள் சங்கடமில்லாமல் வெளியில் செல்லலாம்', என்றது நரி.
‘அருமையான யோசனை. உடனடியாக சட்டத்தை நிறைவேற்று', என்றது சிங்கம்.
சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி ஒரு அடி நீளத்திற்கு மேல் வால் வைத்திருக்கும் எல்லா விலங்குகளும் தங்கள் வாலை பாதியாக நறுக்கிக் கொண்டன.
சில வாரங்கள் சென்றன. தற்போது சிங்கம் எந்த தயக்கமும் இல்லாமல் வெளியே வந்தது. சிங்கம் வழியில் ஒரு குரங்கை பார்த்தது. அதன் வால் சிங்கத்தின் வாலைவிட பெரியதாக இருந்தது. குரங்கைக் கூப்பிட்டது.
‘உண்மையைச் சொல். நீ வாலை நறுக்கிக்கொண்டாயா அல்லது ஏமாற்றுகிறாயா? உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு நீளமான வால் இருக்கிறது? என்று மிரட்டியது சிங்கம்.
‘உங்கள் சட்டத்தை மீறவில்லை. முன்பு எனக்கு மூன்று அடி நீளமுள்ள வால் இருந்தது. சட்டப்படி பாதியை நறுக்கிக்கொண்டேன். இப்போது என் வாலின் நீளம் ஒன்றரை அடி. வேண்டுமென்றால் அளந்து பாருங்கள்', என்றது குரங்கு.
குரங்கைச் சொல்லி குற்றமில்லை. இயற்றிய சட்டத்தில் தான் தவறிருக்கிறது', என்று யோசித்தது சிங்கம். நரியைக் கூப்பிட்டது.
நரி பயந்துகொண்டே பேசியது.
‘அரசே! இப்படியாகும் என்று எனக்குத் தெரியாமல் போனது. உடனடியாக சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள். இனி யாருக்கும் ஒரு அடிக்கு மேல் வால் இருக்கக்கூடாது', என்றது சிங்கம்.
சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. சில வாரங்கள் சென்றன. சிங்கம் ஒரு கழுதையைக் கண்டது. அதனிடம் பேசியது.
‘உன்னுடைய வாலின் நீளம் என்ன?', என்று சிங்கம் கேட்டது.
‘உங்களின் வாலின் நீளம் எவ்வளவோ அதே அளவு தான் என்னுடையதும்' என்றது கழுதை.
சிங்கத்திற்கு திருப்தி. பக்கத்தில் இருந்த நரியை பெருமையாகப் பார்த்தது. நரி மீண்டும் பிரச்னையை கிளப்பியது.
‘அரசே உங்களுக்கு சமமாக கழுதைக்கும் வாலிருக்கிறது. இது உங்கள் புகழுக்கு அழகல்ல. அதனால் எல்லோரும் ஒரு அடிக்கு குறைவாகவே வாலை வைத்துக்கொள்ளவேண்டும்', என்று சட்டத்தை மாற்றுவோம்,' என்றது நரி.
ஏற்றுக் கொண்டது சிங்கம்.
சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. விலங்குகள் தங்களின் வாலை ஒரு அடிக்கு குறைவாக நறுக்கிக்கொண்டன.
சில வாரங்கள் சென்றது. சிங்கம் ஒரு பன்றியைக் கண்டது.
‘ஏய் பன்றியே! முன்பு உனக்கு எவ்வளவு நீளமான வால் இருந்தது? நீ எவ்வளவு நறுக்கிக்கொண்டாய்?' என்று கேட்டது சிங்கம்.
‘அரசே, என்னுடைய வாலின் நீளம் எப்போதுமே அரை அடி தான். அதனால் உங்களின் எந்த சட்டமும் என்னை பாதிக்க்கவில்லை. வாலை வெட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை', என்றது பன்றி.
பக்கத்திலிருந்த நரி பேசியது.
‘பன்றியின் வால் உங்களுடைய வாலை விட சிறியது. அதனால் அதற்கு நறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வால் சிறியதாக இருப்பது மட்டும் நமக்கு முக்கியமல்ல. மற்றவர்கள் வாலை நறுக்கிக்கொண்டபோது பன்றி ஜாலியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறது. அதனால் சட்டத்தை மாற்றவேண்டும். சிறியதாக இருந்தாலும், கொஞ்சமாவது நறுக்கிகொள்ளவேண்டும்', என்றது நரி.
சட்டம் திருத்தப்பட்டது.
விலங்குகள் வெறுப்படைந்தன. சாதுவிடம் சென்றன. தங்களின் பரிதாப நிலயை விளக்கிக் கூறின. சாது பேசினார்.
‘வருத்தப்பட வேண்டியது நீங்களல்ல. உங்களை விட சிங்கத்தின் நிலை மிகவும் பரிதாபமானது. எப்படிப்பட்ட விலங்கையும் நேருக்கு நேராக, முகத்துக்கு முகம் சந்திக்கும் தைரியமான, போராட்ட குணம் சிங்கத்திற்கு உண்டு. ஆனால் இப்போது அது ஒவ்வொரு விலங்குகளின் பின்புறமும் சென்று வாலின் நீளத்தை அளந்து கொண்டிருக்கிறது. சிறிய வால் கொண்ட விலங்குகள் சிங்கத்தின் முன் தைரியமாக செல்கின்றன. விலங்குகளுக்கு சிங்கத்தின் மீதிருந்த பயம் போய்விட்டது. வால் துண்டானது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல. அப்படியே அது வெட்கப்படவேண்டிய விஷயமாக இருந்தாலும், ஒரு முறை மற்றவர்களிடம் சொல்லிவிட்டால் போதும். சொல்லுகிறவரை மட்டுமே சங்கடம் இருக்கும். விமர்சனம் செய்பவன் ஆயிரம் கருத்துக்களை சொல்லுவான். ஒவ்வொன்றிற்கும் தனது நிலையை மாற்றிக்கொண்டால் அவன் அரசனாக இருப்பதற்கு தகுதியற்றவன்', என்றார் சாது.
ஓர் அரசன் முடிவெடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்கலாம். முடிவெடுத்தபின் எடுத்த முடிவை செயல்படுத்தும் வழிமுறையை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இன்று நம் தேசத்துக்கு வந்துவிட்டது. வாலை இழந்த சிங்கம் போல கருப்புப் பணம் நம் தேசத்தை ஆட்டிப் படைக்கிறது. இதுவரை மற்ற அரசுகள் எடுத்த முயற்சிகள் எல்லாமே இழந்த வாலை மறைப்பதற்கு மட்டுமே உபயோகப்பட்டிருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த சட்டங்கள் கருப்புப் பண முதலைகளுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக கருப்பு பணத்தால் ஏற்படும் அழுத்தங்களை மக்கள் மீது சுமத்தியது. அதாவது மற்ற விலங்குகளின் வாலை நறுக்கியதைப் போல. இது நம் எல்லோருக்கும் தெரிந்தது. முதன் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கருப்புப் பணத்தை பிரச்னையாக பார்க்கத் தொடங்கி, காய்களை அதற்கு எதிராக நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இதற்கு எதிர்கட்சிகள் தங்களது ஒத்துழைப்பை தரவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அரவிந்த் கேஜ்ரிவல், டெல்லி முதல்வர். மத்திய அரசின் மீது குழந்தைத்தனமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இதை காங்கிரஸும் ஆமோதித்துள்ளது. அந்த குற்றச்சாட்டு எவை என்பதை காண்போம்.
பா.ஜ.க வினர் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள், கறுப்பு பணம் வைத்திருப்போர் போன்றவர்களுக்கு முன்னரே அவகாசம் கொடுத்துவிட்டுதான் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதனால், கறுப்பு பணம் வைத்திருப்போர் ஒரு மாதத்திற்கு முன்பே தங்களிடம் இருந்த பணத்த வங்கியில் டெபாசிட் செய்துவிட்டனர். மேலும், தங்கம், டாலர் ஆகியவற்றில் முதலீடு செய்துவிட்டனர். மோடி அரசு மக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறது. கறுப்பு பணத்திற்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் நாட்டில் தற்போது மிகப் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் நோக்கத்தை தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை அரசு வெளியிடுமா? மோடியின் இந்த அறிவிப்பால் அதிக பயனடைந்தவர்கள் கறுப்பு பணம் வைத்திருப்போர் மற்றும் வரி ஏய்ப்பு செய்தோர்தான்.
என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் கேஜ்ரிவால். இவர் முன்னால் வருமான வரித்துறை அதிகாரி. கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். ஊழல், கருப்புப் பணம் போன்ற விஷயங்களை கையிலெடுத்து ஆட்சியை பிடித்தவர் இவர். கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக இவரது பேச்சுக்கள் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
மிஸ்டர் கேஜ்ரிவால், ஒரு விஷயத்தை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் மோடியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பணத்தை வங்கியில் முன்னரே டெபாசிட் செய்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். இது குற்றச்சாட்டு அல்ல. பிரதமர் மோடிக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டு. பணத்தை வங்கியின் மூலம் பறிமாற்றம் செய்யுங்கள் என்பதற்காகத் தானே இத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கிறது. அதனால் தானே இப்போதும் ‘வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யுங்கள்', என்று அரசு வலியுறுத்துகிறது!
உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களை ஏதாவது இருந்தால் கொடுங்கள். வழக்கு தொடுங்கள். ஏதோ பேசிவிட்டு சாட்சிகளையும், ஆவணங்களை காற்றில் தேடாதீர்கள்.
இவரைப் போலவே ப. சிதம்பரம், மம்தா பேனர்ஜி, முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், ஆகிய எல்லோரும் பிரதமர் மோடியின் முயற்சியை தவறு என்கிறார்கள். ‘500, 1000 ரூபாய் ஒழிப்பை வாபஸ் பெறவேண்டும்', என்ற அபாயகரமான கோரிக்கையையும் வைக்கிறார்கள்.
குஜராத்தில் ஒருவர் ஆறாயிரம் கோடியை வங்கியில் செலுத்தினார், தமிழ் நாட்டு கோவில் உண்டியலில் நாற்பது லட்சம் ரூபாய் இருந்தது, குப்பைத் தொட்டியில் பல லட்சம் ரூபாய் கிடந்தது, மாவோயிஸ்டுகளிடம் 7 ஆயிரம் கோடிகள் மாட்டிக் கொண்டிருக்கிறது', என்றெல்லாம் நம்மைச் சுற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களிடையே ஒரு பயம் கவ்விக்கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
‘500, 1000 ரூபாய் ஒழிப்பை வாபஸ் பெறவேண்டும்', என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை கருப்பு பண முதலைகளுக்கு ஒரு குருட்டு தைரியத்தை கொடுத்திருக்கிறது. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த கருப்பு பண முதலைகளுக்கு எதிர் கட்சிகளின் கோரிக்கை ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது.
வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை விட இந்தியாவில் இருக்கும் கருப்புப்பணமே அதிகம் என்று சில காலங்களுக்கு முன் கருத்து தெரிவித்தவர் மரியாதைக்குறிய ப. சிதம்பரம் அவர்கள். ஆனால், தற்போது மத்திய அரசின் முயற்சியை கண்டிக்கிறார். அப்படியானால், இவர் பொறுப்பிலிருந்து விடுபட்டதும், உள்நாட்டு கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாமா?
ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது அவசியம். இது கருப்புப் பணத்திற்கு எதிரான போர். நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால், கட்சிகளின் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஒரு நல்ல முயற்சிக்கு தடைக்கலாக இருக்காதீர்கள். கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக செயல்படாதீர்கள். இதே பா.ஜ.க அரசு தலைமையில் பாகீஸ்தானுடன் போர் ஏற்படுமானால், பாகீஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பீர்களா?
எதிர் கட்சிகளே! மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சாதாரண மக்கள் பாதிப்படைந்திருப்பது உண்மைதான். இது எல்லோருக்கும் தெரியும். மக்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாட்டின் நலனுக்காக அவர்கள் இந்த கடினமான நாட்களை கடந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் அரசியல் லாபத்திற்காக அவர்களை உசுப்பேற்றிவிடாதீர்கள்.
பிரதமர் அவர்களே! கதையில் வருவதைப் போல யாரோ எடுத்த முடிவை சுமக்கும் காட்டுச் சிங்கமல்ல நீங்கள். கருப்பு பண ஒழிப்பு என்பது உங்களின் சிந்தனையில் உதித்த ஞானக்குழந்தை. பொழுது போகாமல் சுற்றித்திரியும் சுயநல நரிகளின் விமர்சனங்களுக்காக உங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளாததற்கு எங்கள் பாராட்டுக்கள்.
மக்களே! சட்டத்தின் சூடு தாங்கமல் வெளிவரும் கறுப்பு மனிதர்களையும், அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் சக்திகளையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். பயப்பட வேண்டியதில்லை. இந்த கடினமான நாட்களும் கடந்து செல்லும். காத்திருங்கள்.
சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...