பாட்டி 7 குழந்தைகள் பெற்றார், அத்தனையும் சுகப்பிரவம், அதில் இரண்டு பேர் வளரிளம் பருவத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா என சுகவீனத்தில் இறந்தாலும். இப்போது மீதமுள்ள 5 பேரும் நல்ல ஆரோக்கியத்துடனே இருக்கிறார்கள். அம்மா மூன்று குழந்தைகள் பெற்றார். 3 ம் சுகப்பிரசவம். 3 பேருமே நல்ல ஆரோக்கியத்துடனே இருக்கிறோம். எனது பள்ளிப் பருவத்தில் உடன் படித்த பிள்ளைகளின் அம்மாக்களும், அத்தைகளும், சித்திகளும் குழந்தை பெற்றார்கள். அத்தனையும் சுகப்பிரசவங்கள் தான். 1990 ஆம் வருடத்திற்குப்பிறகு தான் சிசேரியன் குழந்தைகள் பெருமளவில் பிறக்க ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும், சிசேரியனில் குழந்தை பெற்ற செய்திகள் பரவலாக காதில் விழ ஆரம்பித்தன.
இப்படியும் ஒரு கணவர்!
2004 ஆம் ஆண்டு உறவுக்காரப் பெண் ஒருவருக்கு பிரசவ சமயம். பக்கத்து வீடும் கூட என்பதால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த அன்று மாலை மருத்துவமனைக்குப் போயிருந்தோம். இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. லேபர் ரூமுக்கு வெளியே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலியே வரவில்லை என சொல்லிக் கொண்டிருந்தார்கள் மருத்துவரும், செவிலியும். பெண்ணின் மாமியார் வீட்டு மனிதர்கள் வந்தார்கள். மகன் அமெரிக்காவில் இருந்ததால் அவர் அங்கிருந்தபடியே ஃபோனில் இங்கிருந்த உறவுகளுக்கும், மருத்துவருக்கும் தன்னுடைய குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என உத்தரவுகள் இட்டுக் கொண்டிருந்தார்.
இன்ன நாளில், இன்ன நட்சத்திரத்தில், இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் தான் குழந்தைக்கு ராஜ யோகமாம். அப்படிப் பிறக்கும் குழந்தையால் தான் மேன்மேலும் கோடீஸ்வரன் ஆகப் போவதாகவும் அதனால் இன்றே குழந்தையை அவரது ஆஸ்தான ஜோதிடர் குறித்துத் தந்த நேரத்தில் சிசேரியன் மூலம் பிரசவிக்க வேண்டும் எனவும் அவர் மருத்துவரிடம் கோரியதாக பின்னர் மருத்துவர் எங்களிடம் கூறினார்.
‘இப்படியும் ஒரு கணவர் இருப்பாரா? மருத்துவரே சுகப்பிரசவம் ஆக வேண்டும் என காத்திருக்கையில், பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க வைக்க நேரம் குறித்து, அதன் படி குழந்தையைப் பெற்றெடுக்க வைக்க வற்புறுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பெண்ணின் கணவரின் மீது கோபமும், கவலையும் கொண்ட மருத்துவர். ‘இதோ பாரம்மா, உனக்கு வலி வந்தா தான் பிரசவம். அது வரை நாம காத்திருக்கத்தான் வேண்டும். வலி வந்தால் என்னை கூப்பிடுங்கள். என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இப்படியும் சில நல்ல மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின் பிரசவ வலி வந்த பிறகு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டு நலமாக வீடு போய்ச் சேர்ந்தார்.
இப்படியும் சில பிரக்கிருதிகள் இருக்கின்றனர் இந்த உலகில்?! என்னவென்பது இவர்களை? இப்படிப்பட்டவர்கள் பெருகி விட்டதன் காரணமாகவும், மருத்துவர்களின் பேராசையின் காரணமாகவும் இன்று சுகப்பிரசவம் அரிதாகி, சிசேரியன்கள் பெருத்து விட்டன.
மருத்துவர்களின் பேராசைகளை வெளிப்படுத்தும் சில உரையாடல்கள்:
- கருப்பையில் குழந்தை குறுக்காக விழுந்து விட்டது, தலை திரும்புவது கஷ்டம் அதனால் சிசேரியன் தான் ஒரே சாய்ஸ்!
- கருப்பையில் தண்ணீர் குறைவாக இருக்கிறது, அதனால் குழந்தை மூச்சு விட சிரமமப் படுகிறது. உடனே சிசேரியன் செய்தால் தான் தாய், சேய் இருவரையும் காப்பாற்ற முடியும்.
- முதல் பிரசவம் சிசேரியன் என்பதால் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்? பேசாமல் இரண்டாவது பிரசவமும் சிசேரியனாக முடிவு செய்வது தான் நல்லது.
- குழந்தை எடை அதிகம், தலை திரும்பவில்லை உடனே சிசேரியன் செய்து விடலாம் இத்யாதி...
சிசேரியனால் பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்!
பணி நிமித்தமாகவோ அல்லது நட்பு வட்டத்திலோ, உறவுகளிலோ நாம் சந்திக்கும் பெண்களில் 10 ல் 7 பேர் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாகவே கூறுகிறார்கள். இப்படி சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சந்திக்கும் இடர்களில் மிக முக்கியமானது முதுகு வலி, கால்சியம் பற்றாக்குறை. பெற்ற குழந்தைக்குத தாய்பால் போதாமை இத்யாதி, இத்யாதி...
சிசேரியனுக்கு எதிராக ஓர் ஆன்லைன் பெட்டிஷன் இயக்கம்!
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது பெருகிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்தியாவின் அனைத்துப் பெண்களுக்குள்ளும் ஒரு கேள்வி இருந்து கொண்டே தான் இருந்தது. பூனைக்கு யார் மணி கட்டுவது? எனும் மன உளைச்சலின் உச்சகட்டமாக மும்பையைச் சேர்ந்த சுபர்ணா கோஷ் என்பவர் change.org எனும் பெயரில் ஒரு ஆன் லைன் பெட்டிஷன் இணையப் பக்கத்தை ஆரம்பித்து அதில் கையெழுத்துப் போராட்டத்தை துவக்கி வைத்தார். இதுவரை இந்த ஆன்லைன் பெட்டிஷனில் 1.3 லட்சம் பெண்கள் கையெழுத்துட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனியார் மருத்துவமனைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்!

இதை அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கு அனுப்பினார். மேனகா காந்தி இந்த விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வுக்குத் தெரியப்படுத்தினார். அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் “நாளொன்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் நடைபெறக்கூடிய சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் சுகப்பிரசவ எண்ணிக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகங்கள் வெளிப்படையாக பொதுவெளியில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
மேனகா காந்தியின் ட்விட்டர் பக்கத்தில்...
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்துக்களையும் பதிவிட்டார். அவரது ட்விட்டர் கருத்தின் அடிப்படை, “தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை விகிதம் தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாகவும் இதனால் பெண்களின் நலன் தொடர்ந்து கவலைக்கிடமாக மாறும் வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு காரணமும் இன்றி பணத்துக்காக மட்டும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தாய்மை அடைந்த பெண்களை பிரசவ நேரங்களில் மருத்துவர்கள் செண்டிமெண்டலாக வற்புறுத்தினால் அத்தகைய மருத்துவர்கள் இனம் காணப்பட்டு அவர்களது பெயர்களை பொதுவெளியில் வெளியிட்டு களங்கம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாடெங்கும் பெண்கள் பெரிய அளவில் ஒன்றாகத் திரண்டு பணத்திற்காக சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மகப்பேறு மருத்துவர்களை அடையாளம் காண ஒத்துழைக்க வேண்டும்” என்பதாக மேனகா காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சிசேரியன் எண்ணிக்கைகள்!
சர்வ தேச மக்கள் தொகை அறிவியல் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவரான சயான் ராய் சவுத்ரி என்பவர் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் ஆண்டு தோறும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு ஆட்படும் பெண்களின் சதவிகிதமானது 16.7 % மாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் ஒப்பிடும் போது பிற நாடுகளைக் காட்டிலும் இது அதிகம் என்பது கவலைக்குரிய விசயம்.
சிசேரியன் பாதிப்புகள் காலம் கடந்தே உணரப்படுகிறது!
தனிக்குடும்பங்கள் பெருத்து விட்ட இன்றைய தலைமுறையினருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது கொஞ்சம் எளிதான முறையாகத் தெரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பிரசவ வலியை விட சிசேரியன் அறுவை சிகிச்சையினால் உண்டாகும் வலி ஒன்றும் பெரிதில்லை. சிசேரியனுக்குப் பிறகு மருத்துவர்கள் அளிக்கும் மருந்து மாத்திரைகளால் பெண்கள் சிசேரியனால் ஏற்படும் காயங்களையும், உபாதைகளையும் அந்த நேரத்துக்கு மட்டுமாக எளிதாகக் கடந்து விடுவார்கள், ஆனால் காலத்திற்கும் அது பெண்களின் உடல்நிலையில் ஏற்படுத்திச் செல்லும் கணிசமான உபாதைகளை பெண்கள் காலம் கடந்தே உணர முடிகிறது. 40 வயதுக்கு மேல் சிசேரியன் முறையில் குழந்தை பேறு ஆன பெண்கள் இயல்பாக தங்களது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு கூட சிரமத்திற்கு உள்ளாகும் நிலையை இன்றைக்குப் பல இடங்களில் காண முடிகிறது.
எனவே மருத்துவர்கள் உரிய காரணங்கள் இன்றி பணத்துக்காக மட்டுமே சிசேரியன் அறுவை சிசிச்சைகளை பரிந்துரைத்தால் பெண்களும் அவரது குடும்பத்தினரும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
இனி வரும் தலைமுறைகளிலாவது சுகப்பிரசவங்கள் அதிகரிக்கட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


