நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புலி வேட்டை எப்போது?

இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றியை தீர்மானித்தவை இரண்டு விஷயங்கள்.

News image
Updated On :13 மார்ச் 2017, 6:47 am

சாது ஸ்ரீராம்


‘இந்த நிலையில் நாம் 2019ம் ஆண்டு தேர்தலை மறந்து விடவேண்டியதுதான். 2024 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுவோம்', என்று ஒரு செய்தி டிவிட்டரில் வந்து சேர்ந்தது. இதை அனுப்பியது காஷ்மீரத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் அவரை இப்படி புலம்ப வைத்துள்ளது. யாரும் கனவில் கூட எதிர்பார்த்திராத தேர்தல் முடிவு. பல தலைவர்களுக்கு அரசியல் ஓய்வு கொடுத்த தேர்தல் முடிவு.

‘ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது. பணத்துக்கும், மதுவுக்கும் கிடைத்த வெற்றி. அராஜகத்துக்கு கிடைத்த வெற்றி', என்று தோல்விக்கான காரணங்களை தோற்றுப் போனவர்கள் அடுக்கவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவை. உத்திரபிரதேச தலைவர்கள் சிலர் வாக்கு இயந்திரத்தை குறை சொன்னாலும், அந்த குற்றச் சாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுருக்கமாக சொன்னால், இந்த வெற்றியை யாரும் அழுக்காக்க முடியாது. இதையெல்லாம்விட வெற்றி பெற்ற பிறகு பாஜக தலைவர்கள் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்பட்டதும், தொலைக்காட்சியில் பேசும் போது ஆர்பாட்டமில்லாமல் கண்ணியத்தை கடைபிடித்ததும் பாராட்டப்பட வேண்டியவை.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று ஒரு தரப்பும், பாஜக இழுபறியில் ஆட்சியமைக்கும் என்று மற்றொரு தரப்பும் சொல்லிவந்தது. ஆனால், முடிவுகள் இரு தரப்பு கணிப்புகளையும் பொய்யாக்கியது. பாஜக 325 இடங்களைப் பிடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை பரிசாக அளித்தது.

‘அரசியல் சாணக்கியர் திரு. அமித் ஷா அவர்களின் புத்திசாலித்தனத்திற்கும், கடும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. பாரத பிரதமரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி', என்று பாஜக முழங்குகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது என்பது சாதாரணமான காரியமல்ல.

இந்த தேர்தலில் எஸ்.சி 84%, ஓபிசி 78%, பொதுப் பிரிவினர் 86%, ஜாட் இனத்தவர் 90%, யாதவர்கள் 65% பாஜகவை ஆதரித்துள்ளார்கள். இதுமட்டுமின்றி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மொத்தத்தில் ஜாதி, மத வேற்றுமைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

பண மதிப்பை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் பலவகையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதை பார்த்தோம். அப்படியிருந்தும் எப்படி இந்த வெற்றி சாத்தியம்?

இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றியை தீர்மானித்தவை இரண்டு விஷயங்கள்.

ஒன்று, பாரதிய ஜனதா கட்சியின் ‘முத்தலாக்' எதிர்ப்பு. இது இஸ்லாமிய பெண்களிடம் விழிப்புணர்ச்சியையும், ஆதரவு நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு, Demonitization என்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது.

தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த இரண்டு விஷயங்களும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. காரணம், இந்த இரண்டைப் பற்றிய பாசிடிவான அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவிற்கு தமிழக பாஜக இல்லை. இது நிதர்சனம். இதை சிறப்பாக செய்த உத்திரபிரதேசம், உத்தரகண்ட் ஆகியவை பாரதிய ஜனதாவிற்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. பஞ்சாபைத் தவிர மற்ற இடங்களில் எதிர்கட்சிகளுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது. அடுத்தவர் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு வெற்றியை பெற்றுள்ளது.

முத்தலாக், உணர்வு பூரவமான விஷயம். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதைப் பற்றிய விவாதத்தை தவிர்க்கிறேன்.

கருப்பு பண முதலைகளின் அட்டகாசங்களை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், அரசினால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஏற்றுக் கொண்டார்கள். பாஜக வை ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் பாஜக வெற்றியின் ரகசியம்.

அரசு பணமதிப்பை குறைக்கும் முயற்சியாக 16.5 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெற முயற்சி எடுத்தது. இதில் 12 அல்லது 13 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரும், மீதமுள்ள ரூபாய் நோட்டுக்கள் கருப்பு பணமாக பதுக்கல்காரர்களின் பிடியில் அழிந்து போகும் என்று ஒரு சாரர் கணக்குப் போட்டார்கள். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வகையில் 16 லட்சம் கோடிக்கு மேல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் அரசுக்கு வந்து சேர்ந்தது. மத்திய அரசுக்கு இது அதிர்ச்சியை தந்தது. அப்படியென்றால் கருப்பு பணமே இந்தியாவில் இல்லை என்று அர்த்தம் கொள்ளலாமா? இதுவரை ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்ந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மிகச்சரியான மதிப்பு எவ்வளவு என்பதை அரசு இன்னமும் வெளியிடவில்லை. இப்போது அது பிரச்னையல்ல. கருப்பு பண ஒழிப்பிற்கான மத்திய அரசின் முயற்சிக்கு மக்களிடம் அங்கீகரம் கிடைத்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இது கருப்பு பணத்தை கைப்பற்றும் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி. இதுவரை நடந்தது வெறும் முயற்சி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையில் கருப்பு பணம் தங்கமாகவும், பினாமி சொத்துக்களாகவும் உருமாறியுள்ளது. இதை மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பதை இனி வரும் நாட்களில் நாம் பார்க்க வேண்டும். நம்முடைய ஆசையெல்லாம், பினாமிகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். மீதமிருக்கிற இரண்டு ஆண்டு ஆட்சியில் இவையெல்லாம் சாத்தியமா?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு காடு. அங்கு புலிக் கூட்டம் ஒன்று இருந்தது. புலிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. பொறுக்க முடியாத மக்கள் அரசரிடம் முறையிட்டனர்.

உடனடியாக வீரர்களை அழைத்தார் அரசர். புலிக்கூட்டத்தை அழிக்க ஆணை பிறப்பித்தார். புலி வேட்டை தொடங்கியது. பயந்து போன புலிகள் ஓடி ஒளிந்து கொண்டன. வேட்டையாடும் வீரர்களிடமிருந்து நிரந்தரமாக தப்பிக்க என்ன வழி என்று யோசிக்கத் தொடங்கின. அந்தக் காட்டில் வசிக்கும் மந்திரவாதியை சந்தித்தன. தங்களை காப்பாற்றும்படி அவனிடம் கேட்டுக் கொண்டன.

மந்திரவாதி சில மந்திரங்களை உச்சரித்தான். அவ்வளவுதான். புலிகள் எல்லாம் பன்றிகளாக உருமாறின. நாட்டுக்குள் தைரியமாக அங்குமிங்கும் ஓடின. உருவம் பன்றிகளாக மாறினாலும் புலியின் வேட்டையாடும் குணம் மாறவில்லை. பன்றியின் உருவிலேயே மற்ற விலங்குகளை கொன்று தின்றன.

சில நாட்களுக்கு பிறகு புலிகள் உருமாறிய விஷயம் அரசனுக்கு தெரிந்தது. உடனடியாக பன்றிகளை கொல்ல உத்தரவிட்டான். பன்றிகள் உருவத்தில் இருந்த புலிகள் மீண்டும் மந்திரவாதியை சந்தித்தன. இம்முறை மந்திரவாதி அவைகளை பசுக்களாக மாற்றினான். பசுக்களாக மாறிய புலிகள் துள்ளிக் குதித்து ஓடின.

அந்த நாட்டில் பசு மடம் ஒன்று இருந்தது. அங்கு ஆயிரக்கணக்கான பசுக்களை அரசன் வளர்த்து வந்தான். பசுக்களின் உருவத்தில் இருந்த புலிகள் மடத்தில் இருந்த பசுக்கூட்டத்துடன் கலந்தன.

இந்த செய்தி அரசரை சென்றடைந்தது. பசுக் கூட்டத்தில் கலந்திருக்கும் பசுக்கள் உருவில் இருக்கும் புலிகளை கண்டுபிடித்து அழிக்கும் வழி தெரியாமல் தடுமாறினார் அரசர். கண் முன்னே இருக்கும் தீமையை அழிக்க முடியாமல் மனம் புழுங்கினார். பிரச்னையை தீர்க்க சாதுவை அழைத்தார். பிரச்னையின் தீவிரத்தை அவரிடம் தெரிவித்தார். புலிகளை எப்படி அழிப்பது என்று யோசனை கேட்டார்.

‘அரசே! பசுவின் உருவில் இருந்தாலும் அவை புலிகள். அதன் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. ஆகையால், இந்த பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க ஒரு யோசனை சொல்கிறேன். அதன்படி செய்யுங்கள்'

‘பசுக்களுக்கு கொடுக்கப்படும் புற்களில் மயக்க மருந்தை கலந்து வையுங்கள். புற்களை உண்மையான பசுக்கள் மட்டுமே சாப்பிடும். உடனடியாக மயக்கமடையும். புலி பசித்தாலும் புல்லை தின்னாது. அதனால், புற்களை சாப்பிடாத பசு உருவில் இருக்கும் புலிகள் மயக்கமடையாமல் இருக்கும். பிறகு அவற்றை கண்டு பிடித்து கொல்வது எளிது', என்றார் சாது.

‘அருமையான யோசனை. பசு உருவில் இருக்கும் புலியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எந்த தவறும் செய்யாத உண்மையான பசுக்களுக்கு மயக்க மருந்தை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?' என்று கேட்டார் அரசர்.

‘உண்மை தான். என்ன செய்வது! நம்மிடையே கலந்துவிட்ட தீய சக்திகளை அழிக்கும் போது இது போன்ற கஷ்டங்களை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நமக்காக கஷ்டங்களை தாங்கிக்கொண்ட பசுக்களுக்கு என்றுமே நாம் நன்றியுடன் இருப்போம். அதுமட்டுமின்றி, தீய சக்திகளுக்கு உதவும் மந்திரவாதியை தூக்கிலிடுங்கள்', என்றார் சாது.

புலி வேட்டை தொடங்கியது.

இந்தக் கதையில் வரும் புலிகளைப் போல கருப்பு பண முதலைகள் நம்மிடையே கலந்து பசுக்களாக காட்சியளிக்கின்றனர். அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பிறகு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும். தான் குற்றமற்றவன், தான் சம்பாதித்தது நியாயமான வழியில் என்பதை என்பதை நிரூபிக்கும் பொறுப்பை (Burden of Proof) குற்றம் சாட்டப்பட்டவருக்கே வழங்க வேண்டும். இத்தகைய வழக்கு நடவடிக்கைகளுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டு அவசர வழக்குகளாக விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு மக்களாகிய நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம்.

போராட்டங்கள் செய்வதன் மூலமும், நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் மக்களின் ஆதரவை பெறலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மணிப்பூரில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட இரோம் ஷர்மிளா 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து இவர் 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்த போதும் தனது போராட்டத்தை கைவிடவில்லை. சில மாதங்களுக்கு முன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்ட ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். புதிய கட்சியை துவக்கினார். மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தினார். இவர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து தொபல் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசியல் கட்சிகளே! ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். போராட்டங்களும், அதற்கு ஆதரவான நிலையும் ஓட்டுக்களாக மாறும், அவற்றை தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளலாம் என்று யாரும் கணக்குப் போட வேண்டாம். போராட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை கேட்டுப் பெறுவதற்காகத் தானே தவிர ஓட்டுக்களை பெறுவதற்கு அல்ல. இது இரோம் ஷர்மிளா விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். நீங்கள் பெற்ற வெற்றி திருமங்கலம் ஃபார்முலாவால் பெற்ற வெற்றியல்ல.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு பெற்ற வெற்றியல்ல. பிரியாணிக்கும், சரக்கிற்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு பெற்ற வெற்றியல்ல. கொள்கைகளுக்கும், கடும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி சரித்திரத்தில் ஊங்களுக்கென்று ஒரு நிரந்தரமான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.