காவல் துறை பொறுப்புகளும், கடமைகளும்-ஓர் அலசல்

காவல் துறை பொறுப்புகளும், கடமைகளும்-ஓர் அலசல்

பதிற்றுப் பத்து 89 காவல் முல்லையில் மன்னவனது நாடு காவல் சிறப்புக் கூறி, வாழ்த்தப்பட்டுள்ளது.

காவல்துறை வரலாறு

பண்டைய தமிழ் காவல்

பதிற்றுப் பத்து 89 காவல் முல்லையில் மன்னவனது நாடு காவல் சிறப்புக் கூறி, வாழ்த்தப்பட்டுள்ளது.

காவற்பிரிவின் வகை

அறப்புறம் காவல் நாடு காவல்எனச்
சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே. -      ஒத்த நூற்பா  440 

அறப்புறம் காவல் அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்வது இப்பிரிவு.  நாடு காவல் பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.

அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்த போது நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்திருக்கிறான்.

 

மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்

 

 

கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண வியற்றினான்.

   

     99. திருக்கூட்டச் சிறப்பு

 

உயிர்க்கெல்லாம், மனிதர்க்கேயன்றி நடப்பன பறப்பன முதலிய எல்லா உயிர்களுக்கும் காவல் புரிபவன். வேந்தன் தன் அரசின் கீழ் வாழும் எல்லா உயிர்களுக்கும் வரும் துன்பம் போக்கிக் காவல் செய்தல் வேண்டும் என்பது நீதி. இதுபோல பண்டைய தமிழகத்தில் காவல் சிறப்புக்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

ஆங்கிலேயர் கால காவல் சீர்திருத்தங்கள்

ஆங்கிலேய ஆட்சிக்கு முன்புவரை சிறந்த காவல் முறை இருந்துள்ளது. அரசர்கள் சேனதிபதிகள் மூலம் நாட்டை காத்து வந்தனர். 1540-1555 ஆண்டுகளில் ஷெர்ஷா மன்னன் ஆட்சி காலத்தில் மாபெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. முதன்முதலாக காவல்துறைக் கோட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன. முகலாய மன்னர்கள் நிலையான நீதிமுறையை பிக்னி-பெரோஸ் மற்றும் பாட்வா-யி-ஆலம்கிரி என்ற சட்ட வடிவமைப்பைக் கொண்டு சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது.கிராம கவுன்சிலால் காவல் பொறுப்பை பார்த்துக் கொண்டனர்.

ஜமீந்தார்கள் காலத்தில், மணியக்காரர்கள் மற்றும், தலையாரிகள் இரவு ரோந்து, குற்றவாளிகலைப் பிடித்தல், சந்தேக நபர்களைப் பிடித்தல் போன்ற பணிகளை செய்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1787-ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங் காலத்தில் காவல் கண்காணிப்பாளர்களை வங்காளம், ஒரிசா மாநிலங்களுக்கு நியமித்தது. பெண்டிங் பிரபு காலத்தில் வருவாய் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு 1816-முதல் பொது காவல் முறை கொண்டுவரப்பட்டது.

காவலர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால், 1859 ஆண்டு முதல் காவல் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1861-ஆம் ஆண்டு இந்திய போலீஸ் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மாவட்டம் தோறும் காவல்துறை இயங்க வழிவகை செய்யப்பட்டது. 1902-ஆண்டு காவல் ஆணைக் குழுவின் பரிந்துரையின் படி தற்போதுள்ள காவல்முறை வந்தது.

மெக்காலே என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், 1860 ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பின் 1872-ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் அமலுக்கு வந்த பின் நாடு முழுதும் ஒருங்கிணைந்த சட்ட ஒழுங்கிற்கு வழிவகை செய்தது.

1935-இந்திய சாசனச் சட்டப்படி, காவல்துறை அந்தந்த மாநிலத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு

1659-ஆம் ஆண்டு மதராஸ்பட்டணத்தின் (பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை) பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படி எனலாம். 1770-ஆம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி, பொது சுகாதாரம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 1771-ஆம் ஆண்டு சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்ட்ரேட்டன் என்பவர் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார். 1780-ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பதவி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்களை கண்காணித்து, பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

1782--ஆம் ஆண்டு தவறுகளைத் தடுக்கவும், மோசடிகளை தடுக்கவும், சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்குவது குறித்த விரிவான திட்டத்தை போஃபாம் என்பவர் உருவாக்கினார். 1791-ஆம் ஆண்டு கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் (லஞ்சம்) வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது. 1806- மூன்று போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பி.யாக வால்டர் கிரான்ட் பதவியேற்றார். 1815-ஆம் ஆண்டு மெட்ராஸ் எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார். 1829-1832-இல் மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், செயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1834-ஆம் ஆண்டு முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும், டி.எஸ்.பியாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர். 1856-ஆம் ஆண்டு போலீஸ் சட்டம்  திருத்தப்பட்டது. அதன் படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி. போட்லர்சன் நியமிக்கப்பட்டார். 1858-ஆம் ஆண்டு ராபின்சன் தலைமை போலீஸ் ஆணையராக (ஐஜி) நியமிக்கப்பட்டார். 1859-ஆம் ஆண்டு நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்குதான் ஆரம்பித்தது. போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது. 1906-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியெனலாம்.

1865-ஆம் ஆண்டு தற்போதைய போலீஸ் (டிஜிபி) தலைமையிடம் அமைந்துள்ள கட்டடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. 1874 - இந்தக் கட்டடத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ. 20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ. 10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1884-ஆம் ஆண்டு மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது. 1895-ஆம் ஆண்டு கை விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. 1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையர் தலைமையிலும், தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன. 1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. பாவ்செட் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார். 1909-ஆம் ஆண்டு கிங்க்ஸ் போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது. 1919-ஆம் ஆண்டு மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான்.  பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் ஆண்டு சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப் பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1929-ஆம் ஆண்டு மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப் பிரிவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது. 1935-ஆம் ஆண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 1946-ஆம் ஆண்டு போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது. 1947-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி, டெல்லி ஐபியின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான். 1951-ஆம் ஆண்டு மெட்ராஸ் மோப்ப நாய்ப் படை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்ப் படைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது. 1956-ஆம் ஆண்டு போலீஸ் ரேடியோ அலுவலகம் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது. 1960-ஆம் ஆண்டு போலீஸ் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. 1961-ஆம் ஆண்டு மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது.  மாநில தடயவியல் ஆய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது. 1963-ஆம் ஆண்டு மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழு அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. - ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு போலீஸ் கம்ப்யூட்டர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர் மயமாக்கலை தொடங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான். கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. - தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது.

1973-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். 1976-ஆம் ஆண்டு ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை, பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.  சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு  தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது. - தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார். 1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது. 1984 - சிஐடி வனப் பிரிவு உருவாக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது. - காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது. - தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது. 1992-ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. - தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது. 1993-ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு மதக் கலவரங்களைத் தடுக்க விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.

காவலர் பண்புகள்

  1. ஒவ்வொரு காவலர் அலுவலரும், பொது மக்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், அன்புடனும் நடக்க வேண்டும்.
  1. அரசு ஆணைகளை நிறைவேற்றத் தான் காவல் அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசு கட்டளைகளை பற்றி எந்த விதமான அபிப்பிராயமோ அல்லது விவாதமோ வைத்துக் கொள்ளக் கூடாது.
  1. நல்லோர்க்கு நண்பர்களாகவும், தீயோர்க்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்க வேண்டும்.
  1. எந்தவித கொடுமையான காரியத்தை யார் செய்தாலும் அவர்கள் சமூகத்திற்கு எதிராக செய்கிறார்கள், எந்த ஒரு காவலரும் தனக்கு நேரிடையாக துன்பம் விளைவித்ததாகக் கருதி அதை உணச்சிவயப்பட்டு அதை அணுகக் கூடாது. சட்டப்படி எடுக்க வேண்டிய நடவைக்கைகளை சரிவர எடுக்க வேண்டும்.
  1. கைது செய்யப்பட்ட எவரையும் தரக் குறைவாக நடத்தக் கூடாது. அவனும் மனிதன் தான் என்று நம் நினைவில் கொள்ளவேண்டும்.
  1. பொதுமக்கள் அனைவரும், குற்றவாளிகள் அல்ல. குற்றம் புரிவோர் அனைவரும் கொடுமையானவர்கள் அல்ல. சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக குற்றம் புரிபவர்கள் நிறைய பேர். ஆகையால் நாம் எல்லோரிடத்திலும் கனிவுடன் நடப்பது  அத்தியாவசியம்.
  1. மரியாதையளிப்பது, நமக்கு மதிப்பை தேடித் தருகிறது.
  1. பெருங்கூட்டங்களிலோ, திருவிழாக்களிலோ நாம் மக்களிடம் பேசும்போது மிகச் சிரத்தையுடன் பேசுதல் வேண்டும். அக்கூட்டத்தில் எவரேனும் தவறு செய்திருந்தாலும், நம்மை தாக்கியிருந்தாலும், வசவு ஏவியிருந்தாலும், தரக் குறைவான வார்த்தைகள் பேசுதல் கூடாது.
  1. அமைதியாக இரு. உறுதியாக செயலாற்று
  1. உன்னிடம் தகவல் யாரேனும் கேட்டால், தெரிந்தால் சொல், இல்லையேல் பணிவாக தெரியாது என்று கூறு.
  1. நீர் ஒருபொது மக்கள் ஊழியன் என்பதை எக்காலத்திலும் மறவாதீர்.
  1. ரோந்து செல்லும் போது போகும் வழியில் உள்ள பொது மக்களிடம் நன்றாக பழகு, நிச்சியமாக அவர்களில் ஒருவர் இடுக்கண் வருங்காலத்தில் உனக்கு உதவுவார்.
  1. குற்றம் சாட்டப்பட்டாரையோ, சந்தேக நபரையோ துன்புறுத்தல் கூடாது.
  1. பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் மிக மரியாதையுடனும், அவர்கள் கூறும் குறைகளை அக்கறையுடன் கேட்டு சட்டத்திற்குட்பட்டு ஆவன செய்ய வேண்டும்.

காவலரின் நற்பண்புகள்

  1. எப்போதும் தூய உடை உடுத்தி, ஆயத்தமாக இருத்தல் வேண்டும்.
  2. கடைமையில் தவறாமல் இருத்தல். இட்ட வேலையைத் திறமையாகவும், பொறுப்பாகவும், குறிப்பிட்ட காலத்தில்முடித்தல்
  3. காலந்தவறாமை, காவலர் காலந்தாழ்த்துவதால் பல உயிர்கள் பலியாகலாம்
  4. இனிமையாக இருத்தல்-பேசும் போதும், எழுதும்போது, மரியாதையாக இருத்தல் வேண்டும்
  5. எல்லோரையும் சமமாக நடத்துதல் வேண்டும். ஏழை, பணக்காரன், உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி பழகுதல்
  6. நலிவுற்ற பிரிவினரிடம் பரிவு காட்டுதல்
  7. பெண்களிடமும் குழந்தைகளிடமும் அன்புடன், பண்புடன், கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல்’
  8. சிக்கனத்தைக் கடைபிடித்தல்-வருவாய்க்குள் செலவு செய்தல்
  9. கையூட்டு பெறாமல் வாழ்க்கை நடத்துதல்
  10. தாமே சட்டத்தை மீறாமல் பலருக்கு எடுத்துக் காட்டாக வாழ்தல், அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தாமல் இருத்தல்.

காவல்துறையின் மதிப்பினை உயர்த்த காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டியவை

  • சீருடையினை முறையாக அணிவது, தொப்பியை தலையிலிருந்து நீக்கக் கூடாது
  • அசோக சின்ன அரசின் சின்னம், அதனை மதித்தால் தான் மக்கள் மதிப்பார்கள் (காவல்துறை தலைமையக சுற்றறிக்கை ந.க.எண்.128951/பொது/1/2003 நாள் 18/06/2003)
  • முக்கிய நபர்கள் பாதுகாப்பு, திருவிழா, போக்குவரத்து அலுவல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிக்கெனெ நியமிக்கப்பட்டால், அனைத்து தரப்பு மக்களிடமும் மரியாதையுடனும் இன்முகத்துடனும் பழக வேண்டும்.

காவல் துறை உங்கள் நண்பனாக முடியுமா?

தமிழக காவல்துறை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான, 6.2 கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனிக்க வேண்டும். காவல்துறையில் தலைவர் முதல் பணியாற்றுபவர்கள் 01.04.2016 தேதியில் மொத்தம் 1,21,215   ஆவர்.

சைக்கிளில் லத்தி மட்டும் வைத்துக் கொண்டு வரும், காவலரை கண்டு பெரிய மனிதர்களும், பணக்காரர்களும் கொடுத்த மதிப்பு எங்கே போனது. அப்பொதைய உலகத்தில் சிறந்த போலீசான ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்டது, தமிழக போலீஸ். மக்களின் நண்பனாக விளங்க தங்கள் நெறிமுறைகளை கடைபிடித்து, நாட்டுப்பற்றுடன் ஒவ்வொரு காவலரும் மீண்டும் நற்பெயர் ஈட்டலாம்.

C.P.சரவணன், வழக்கறிஞர்  9840052475

Refernces:

  1. இலக்கண விளக்கம்,பொருளதிகாரம்,தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம் 1972
  2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 1
  3. திருத்தொண்டர் புராணம்_சேக்கிழார் பெருமான்
  4. காவலர், தலைமைக் காவலர் கையேடு 1987
  5. காவலர் கையேடு 2005
  6. தமிழ்நாடு சார்புநிலை சிறப்பு காவல்படை அலுவலர்கள் நடத்தை விதிகள்
  7. தமிழ்நாடு சார்புநிலை காவல்படை அலுவலர்கள் நடத்தை விதிகள்,1964
  8. Police Standing Orders
  9. http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/History?48

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com