அமெரிக்காவிலும் ஒரு இந்திராணி முகர்ஜி! 

16 ஆண்டுகளுக்கு முன் ரெபெக்கா தனக்குப் பிறந்த பெண் குழந்தையை, அன்று  என்ன நினைத்துக் கொண்டு தத்துக் கொடுத்தாரோ! அந்தப் பிரச்னை மறுபடியும் தலை தூக்கத் தொடங்கியது
அமெரிக்காவிலும் ஒரு இந்திராணி முகர்ஜி! 

அமெரிக்காவின் ஒஸார்க் கவுண்ட்டி மாகாணத்தில் தனது பண்ணை வீட்டில், தனது புதிய ஆண் நண்பருடன் சந்தோசமாக வசித்து வந்தார் ரெபெக்கா ரூட் எனும் 39 வயதுப் பெண்மணி. 16 வருடங்களுக்கு முன்பு தனக்குப் பிறந்த ஒரே மகளான சாவன்னா லெக்கியைக் கூட, பிறந்த கணத்திலேயே மிஸெளரியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தார் ரெபெக்கா. தனக்குப் பிறந்த ஒரே குழந்தையையும் தத்துக் கொடுத்து விட்டு தன்னிஷ்டம் போல வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு தனக்குச் சொந்தமான 81 ஏக்கர் பண்ணை வீட்டில் மிகச் சுதந்திரமான, ஏகாந்த வாழ்க்கை ஒன்றை ரெபெக்கா அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில் அவரது கெடுவிதி குறுக்கே வந்தது. 

ரெபெக்காவால், தத்துக் கொடுக்கப்பட்ட மகளான சாவன்னாவை மீண்டும் ஏற்றுக் கொள்ள முடியுமா? என தத்தெடுத்துக் கொண்ட அம்மாவிடமிருந்து வேண்டுகோள் வந்தது. பிறந்து 16 ஆண்டுகள் வரை ரெபெக்காவுக்குத் தன் மகளிடம் பெரிதாகத் தொடர்பு எதுவும் இல்லை. எப்போதாவது நினைத்துக் கொண்டால் பார்ப்பதோடு சரி!

நடுவில்...சாவன்னாவைத் தத்தெடுத்துச் சென்ற மிஸெளரி தம்பதியனரிடையே கருத்து வேறுபாட்டால் பிரிவினை வரவே. கணவனும், மனைவியும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டிருந்தனர். இப்போது  தத்து அம்மாவுக்கு வாய்த்த புதுக் கணவரால் சிறுமி சாவன்னாவுக்கு புதுத் தலைவலி. அம்மாவின் ஆண் நண்பரால் சாவன்னாவுக்குத் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படுவதை அறிந்த தத்து அம்மா, நிஜ அம்மாவான ரெபெக்காவைத் தொடர்பு கொண்டு, குழந்தையின் பொறுப்பை அவளது பயலாஜிக்கல் மதரான ரெபெக்காவால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று வேண்டுகோள் வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தன் மகளை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோரியதும், முறைப்படி செரீஃப் அனுமதியுடன் சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்ட மகள் மறுபடியும் தனது நிஜ அம்மாவிடமே மீண்டு வந்தாள். 

இதுவரை எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது.

மகள் தன்னிடம் மீண்டு வந்த சமீபத்தில், ரெபெக்கா, தன் மகளுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட, அதற்கு அவரது நண்பர்களிடமிருந்து, 'உன் மகள் உன்னைப் போலவே இருக்கிறாள்', என்றெல்லாம் கமெண்ட்டுகள் வந்திருந்தன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தத் தாயுடன் சேர்ந்த மகள் நிம்மதியாக இருப்பாள் என ரெபெக்காவின் முகநூல் நண்பர்கள் நினைத்துக் கொண்டிருக்க; அவர்களது நம்பிக்கை பொய்த்துப் போனது.

16 ஆண்டுகளுக்கு முன் ரெபெக்கா தனக்குப் பிறந்த பெண் குழந்தையை, அன்று  என்ன நினைத்துக் கொண்டு தத்துக் கொடுத்தாரோ! அந்தப் பிரச்னை மறுபடியும் தலை தூக்கத் தொடங்கியது

ஒரு விஸ்தாரமான பண்ணை வீட்டில் , தனியே மனம் போன போக்கில், விரும்பிய ஆண் நண்பர்களுடன் ஏகதேசமாக வாழ்ந்து வந்த ரெபெக்காவுக்கு, இப்போது புதிதாக முளைத்த தாய் எனும் பொறுப்புணர்வு நீண்ட நாட்களுக்கு ஏற்புடைய விஷயமாக இல்லை. சிறுமியின் மீதான பொறுப்பு அவரது தனிப்பட்ட சுயநலங்களுக்கு இடைஞ்சலாக வந்து சேர்ந்தது. இதனால் சிறிது, சிறிதாகத் தன் மகளின் மீது ரெபெக்காவுக்கு வெறுப்பு வரத் தொடங்கியது. ஆரம்பத்திலும் கூட சிறுமியின் மீது அவளது சொந்தத் தாய்க்கு அப்படி ஒன்றும் பாசம் கொட்டி முழக்கவில்லை என்றே வையுங்களேன். அவள், தான் பெற்ற மகள் என்பதற்காக மட்டுமே, சிறுமியைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்த ரெபெக்கா, தனது பண்ணை வீட்டில், சிறுமிக்குத் தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தந்ததாகத் தெரியவில்லை என்கிறது தற்போது ‘சாவன்னா’ கொலைக்கான உண்மை துலங்கிய பின் வெளியிடப்பட்டிருக்கும் செரிஃப் அலுவலக ஆய்வறிக்கைகள்.

விஸ்தாரமான பண்ணையில் சகல வசதிகளுடன் கூடிய தனது வீட்டில் ஆண் நண்பருடன் தனித்து உறங்கும் வழக்கம் கொண்ட ரெபெக்கா, தன் மகளைத் தங்க வைத்ததோ என்சிசி, என்எஸ்எஸ் கேம்ப் போனால் தங்குவதற்கு தற்காலிகமாகக் கட்டிக் கொள்வோமே அப்படிப் பட்ட ஒரு டென்ட்டில் தான். அங்கே அந்தச் சிறுமிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. உடைந்த ஏர்கண்டீஷனில் உறங்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது. அது மட்டுமல்ல சொந்தத் தாயால் சிறுகச், சிறுக அந்தச் சிறுமி கொடுமைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள். பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுடன் பன்றியாகத் தன் மகளை ரெபெக்கா நடத்தத் தொடங்கி இருக்கிறார். கொடுமையின் உச்சம் என்னவெனில் சாவன்னாவின் காயங்களில் உப்பும், ஆல்கஹாலும் தடவி அவளைச் சித்திரவதைப்படுத்தும் அளவுக்கு ரெபெக்காவின் தாயுள்ளம் சுயநலத்தால் சுருங்கிப் போய் இரக்கமின்றிச் சீரழிந்திருந்தது. இத்தனைக்கும் காரணம், தன் மகளை போஷிப்பதற்கு ஆகும் செலவு, தனது பண்ணையை நிர்வகிக்கும் செலவைக் காட்டிலும் கூடுதலாக ஆகி விடுமோ என்ற அந்தத் தாயுருவில் இருந்த பேயின் அச்சம் தான்! அப்படியொன்றும் தன் மகளை சகலவிதமான வசதிகளுடனும் அவள் வளர்த்து விடவில்லை என்பது பின்னர் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இப்படியே தனது சொந்தத் தாயுடனான வாழ்க்கையில் சாவன்னாவின் நாட்கள் நரகமாகிக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு நாள் ரெபெக்கா, தன் மகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கிறார். தேடுதல் நடைபெறுகிறது. விசாரணையின் போது, அந்தப் பெண் தனது பெட்டி, படுக்கை மற்றும் கலரிங்  பாக்ஸை எடுத்துக் கொண்டு எங்காவது ஓடியிருப்பாள் என்றார் ரெபெக்கா. ரெபெக்காவின் 81 ஏக்கர் பண்ணையின் பல பகுதிகளில் தேடுதல் வேட்டை நடபெறுகிறது. அட்ப்போதெல்லாம் காவல்துறைக்கு சந்தேகம் வந்திருக்கவில்லை ரெபெக்காவே தன் மகளை கொலை செய்திருக்கக் கூடுமென்று!

எந்தக் கொலையிலும், கொலையாளி தனக்கே தெரியாமல் ஆதாரத்தை எங்காவது விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்பது தானே எல்லாக் கொலை வழக்குகளிலும் பால பாடம்!

அப்படித்தான் ரெபெக்கா விஷயத்திலும் நடந்தது.

தனது பண்ணை வீட்டில் அக்கம், பக்கம் எவருமில்லை. மக்களுடன் தினம் தொடர்பு கொள்ளக் கூடிய ஜன சந்தடி மிகுந்த இடமாக தனது இருப்பிடம் இல்லை என்ற தைரியத்தில் தான் ரெபெக்கா, தன் மகளின் மீது பல கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார். அதையெல்லாம் யாரும் பார்க்கவில்லை என்பதே ரெபெக்காவின் நம்பிக்கை. ஆனால் இந்த இடத்தில் தான் ரெபெக்காவின் பழைய ஆண் நண்பர்களில் ஒருவர் முக்கிய ஆதாரமாக வந்து சேர்ந்தார். அவரளித்த சாட்சியத்தில் தான் தெரிய வந்தது; ரெபெக்கா தனது பண்ணையில் மகளை எந்த அளவுக்கு கொடுமை செய்திருக்கக் கூடுமென்று?! அவரளித்த சாட்சியத்தின் அடிப்படையில், ரெபெக்காவின் பண்ணையில் ஆளரவமற்ற மலை உச்சியில் காவல்துறையும், ஃபாரன்ஸிக் துறையும் இணைந்து நடத்திய தேடுதலில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சிறுமியை, ரெபெக்கா எரித்துக் கொன்றது தெரியவந்தது. அதுவும் எப்போதென்றால் மகளைக் காணவில்லை என்று ரெபெக்கா எப்போது புகார் அளித்தாரோ அதற்கு முந்தைய இரவில் தான்.

ரெபெக்கா தான் கொலையாளி என்பது அப்பட்டமாக நிரூபணமான பின்; தற்போது கொலை மற்றும் கொலைக்கான ஆதாரங்களை மறைக்க முயற்சித்த வழக்கின் கீழ் ரெபெக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கைப் பார்க்கும் போது, இது அப்படியே இந்தியாவின் இந்திராணி முகர்ஜி வழக்குக்கு ஒப்பானதாக இருக்கிறது. இரண்டிலும் ஒத்துப் போகும் அடிப்படை விஷயங்கள் 2.

இருவரிடத்திலுமே மகள்களை நேசிக்கும் தாயுள்ளம் என்பது அறவே இல்லை.

குற்றவாளிகளான இருவருமே பெற்ற மகள்களை, தங்களது சுதந்திரமான, எதேச்சாதிகாரமான வாழ்க்கையின் தடைக்கற்களாகவே கருதியுள்ளனர். கொலைக்கான முக்கியக் காரணமே அது தான்.

இந்திராணி முகர்ஜி, ஷீனா போராவைக் கொலை செய்து விட்டு, கொலைக்கான தடயங்களை மறைக்க முயற்சித்ததற்கு சற்றும் சளைத்ததல்ல ரெபெக்காவின் முயற்சி.

அதனால் ரெபெக்காவை இன்னொரு இந்திராணி முகர்ஜி எனச் சொன்னால் அதில் தவறேதுமிருக்காது எனக் கருதுகிறேன்.

மேற்கண்ட இரு வழக்குகளையும் உளவியல் ரீதியாக அணுகினால், கொலைக்கான காரணங்கள் சம்மந்தப்பட்ட அந்த இரண்டு அம்மாக்களின் சுயநலம் மட்டுமே தவிர வேறில்லை என்பதை உணரலாம்.

இரு அம்மாக்களுமே இப்போது இருப்பது சிறையில்! இந்திராணி முகர்ஜி வழக்கில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரெபெக்கா வழக்கில், இப்படி ஒரு தாய் உயிரோடு இருக்கத் தேவையில்லை. அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும் என செரிஃப் பரிந்துரைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com