Enable Javscript for better performance
world popular reality shows in western t|உலகப் பிரசித்தி பெற்ற பிற ரியாலிட்டி ஷோக்கள்... ஒரு பார்வை!- Dinamani

சுடச்சுட

  

  பிக்பாஸ் போலவே உலகப் பிரசித்தி பெற்ற பிற ரியாலிட்டி ஷோக்கள்... ஒரு பார்வை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 24th August 2017 11:46 AM  |   அ+அ அ-   |    |  

  reality_t

   

  ஒரு பிக் பாஸுக்கே இங்கே தமிழில்... யூ டியூப்களில் கண்டித்தும், பாராட்டியும், வெறுத்தும், பழித்தும் கலாய்த்தல்கள் நிரம்பி வழிகின்றன. பிக் பாஸுக்குப் பின் இன்று ஒரு சிலரது சிறந்த பொழுதுபோக்கே யூ டியூபில் பிக் பாஸ் வீடியோக்களை வரிசை கட்டிப் பார்ப்பது மட்டும் தான் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு தமிழில் ரீச் ஆகியிருக்கிறது பிக் பாஸ். ஆனால் பிக் பாஸ் போல, பல ரியாலிட்டி ஷோக்களை கோழி முட்டையிடுவதைப் போல இட்டுத் தள்ளிக் கொண்டே செல்லும் பழக்கமுடையது மேற்கத்திய சேனல் உலகம். அப்படி பிக் பாஸ் போல மேற்கத்திய சேனல்களில் 2000 மாவது ஆண்டுவாக்கில் துவக்கப் பட்டு இன்றளவும் சக்கைப் போடு போட்டு உலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ரியாலிட்டி டி.வி ஷோக்கள் எவையெவை! என்று பார்க்கலாமா? உலகப் பிரசித்தி பெற்ற ரியாலிட்டி ஷோக்கள் என்று கூகுளில் டைப் செய்தால் பலப்பலவும் வந்து விழுகின்றன. அவற்றில் நமக்குக் கொஞ்சமாவது அறிமுகமாகியிருக்கக் கூடிய வகையிலான சுமார் 15 ரியாலிட்டி ஷோக்களை மட்டும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...

  இந்த ரியாலிட்டி ஷோக்களுக்காக கூகுளில் தேடுகையில் தான் சட்டெனக் கிளிக்காகியது. நம்மூர் ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட, கிச்சன் கில்லாடிகள், நாளைய இயக்குனர், கலக்கப் போவது யாரு? முதல் இன்றைய பிக் பாஸ் வரை எல்லாமும் அங்கிருந்து இங்கே உருவி காப்பி அடிக்கப் பட்டவை தான் என. ஆஹா!  ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படி அப்பட்டக் காப்பி என்றும் சொல்லி விட இயலாது. ஏனென்றால் மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் தமிழாகும் போதும், இந்தியாகும் போதும், இங்கே இந்திய ரசிகர்களுக்காக பெரிதும் உருமாற்றம் செய்யப்பட்டே ஒளிபரப்பாகின்றன. எனவே கான்செப்ட் உபயம் மட்டும் மேற்கத்திய சானல்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். 

  1. சர்வைவர்...

  ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகமே இல்லாத புதியவர்கள் 16 பேரை ஒரு தீவில் இறக்கி விட்டு அவர்களை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்காக ஒருவருக்கொருவர் போராட விடுவதே சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் தீம். இந்த சர்வைவர் தான் த்ரில்லர் வகை உலக ரியாலிட்டு ஷோக்களுக்கு முன்னோடி. சர்வைவர் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.வி ஷோக்களின் முகமே முற்றிலும் மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஒளியும், ஒலியும், வயலும், வாழ்வும், குடும்பக் கதைகள் அல்லது துப்பறியும் கதைகளைக் கொண்ட சீரியல்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று சதா ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பி டல் அடித்துக் கிடந்த டி,.வி சேனல்கள் சர்வைவர் மாதிரியான புதுமையான ரியாலிட்டி ஷோவுக்கு கிடைத்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தன் முகத்தை அதற்குத் தோதாக மாற்றிக் கொள்ளத் தொடங்கின. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும், பார்வையாளர்களும் சர்வைவர் குறித்து பாசிட்டிவ்வாகவும், நெகட்டிவ்வாகவும் கருத்துக்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தாலும், தொடங்கிய நாள் முதல் எவ்விதத் தொய்வுகளும் இன்றி ரியாலிட்டி ஷோக்களின் அரசனாக முதலிடத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது சர்வைவர். சர்வைவர், ரசிகர்களின் எல்லா விதமான ரசனைகளுக்கும் தீனி போடக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இன்றும் தொடர்கிறது.

  பெஸ்ட் சீஸன்: இதுவரை ஒளிபரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோ தொடர்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது சர்வைவர் - சீஸன் 1. 2000 ல் முதல் சீஸன் தொடங்கப்பட்டாலும் கடந்த 17 வருடங்களுக்குள் 18 சீஸன்களைத் தாண்டி இப்போது 19 ல் வந்து நிற்கிறது. உலக அளவில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பே இதையொட்டி புதுமையான தீம்களை மையமாகக் கொண்டு வேறு, வேறு விதமான ரியாலிட்டி ஷோக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

  2. தி அமேஸிங் ரேஸ்...

  11 பேர்கள் கொண்ட இரண்டு குழுவினரிடையே நிகழும் பந்தயம் இது. போட்டியின் விதிமுறை இந்த இரண்டு குழுக்களிலும் உள்ள போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டபடி, நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தும், சைக்கிள், ஸ்கூட்டர், கார், டிரக், ரயில், விமானம் என எதில் வேண்டுமானாலும் பயணித்து அவர்கள் அளிக்கும் டாஸ்குகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, கிட்டத்தட்ட உலகையே ஒருமுறை சுற்றி, குறிப்பிட்ட டெஸ்டினேஷனை அடைய வேண்டும். அப்படி இறுதியில் வெற்றி பெறுவோருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு. இந்த ரியாலிட்டி ஷோவும் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை பல சீஸன்களைக் கண்டு வெற்றிகரமாகத் தொடர்கிறது.

  பெஸ்ட் சீஸன்: பெஸ்ட் சீஸனாகக் கருதப் படுவது சீஸன் 9 மற்றும் 11. குறிப்பிட்ட சில சீஸன்களைக் காண விரும்புவோர் யூ டியூபில் தேடிக் காணலாம். எல்லா சீஸன்களும் யூ டியூபில் காணக் கிடைக்கின்றன.

  3.தி ஆஸ்போர்ன்ஸ் எம். டி.வி:

  இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான ஆஸி ஆஸ்போர்ன்  (ஹெவி மெட்டல் பேண்ட் பாடகர்) -ன் தினப்படி வாழ்க்கையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட ரியாலிட்டி ஷோ இது. நம்மூரில் ஒளிபரப்பாகும் ‘ஸ்டாருடன் ஒரு நாள்’ மாதிரி எல்லாம் இல்லை. இது முழுக்க, முழுக்க ஆஸியுடனும், அவரது குடும்பத்தாருடனும் நேரம் செலவளித்து எடுக்கப்பட்ட முற்றிலும் உண்மைத் தன்மையுடன் கூடியதொரு நிகழ்ச்சி. அடம் பிடிக்கும் முரட்டுக்குழந்தைகள், வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகள், குடும்பத்தின் பிற அங்கத்தினர் என எல்லோரையும் சமாளித்து விட்டு, வீட்டு வேலைகளையும் பங்கிட்டுக் கொண்டு வீட்டுக்குள் சேரும் குப்பைகளை அகற்றத் திணறி, பக்கத்து வீட்டுக்காரர்களோடு வரும் மனஸ்தாபங்களை, கோப தாபங்களையும் சமாளித்து முடிவில் ஆஸி ஆஸ்போர்ன் எவ்விதம் தனது தினசரி வாழ்க்கையை எல்லாவிதமான போராட்டங்களுடனும் வெற்றிகரமாக முடிக்கிறார்? என்பது தான் இந்த ரியாலிட்டி ஷோவின் அடிப்படை. 2002 ல் தொடங்கி 2005 வரை கிட்டத்தட்ட 29 சீஸன்கள் கண்ட ரியாலிட்டி ஷோ இது.

  பெஸ்ட் சீஸன்: யூ டியூபில் ஆஸி ஆஸ்போர்ன் சீஸன் 1 என டைப் செய்து, ஷரன், சண்டைக்காரரான தனது பக்கத்துவீட்டுக்காரரை எவ்விதம் சமாளிக்கிறார் என்பதற்கான காட்சிகளைக் காணுங்கள். இந்த சீரிஸில் எப்போதும் டாப்பாக இருப்பது சீஸன் 1 தான்.

  4. புராஜெக்ட் ரன் அவே: (2004 - 2008 & 2009 முதல் இன்று வரை)

  உலகத் தொலைக்காட்சிகளில் ஆடை வடிவமைப்பில் ஆர்வமுள்ளோருக்காகவே திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்ட புது ரியாலிட்டி ஷோ முயற்சி இது. ’புராஜெக்ட் ரன் அவே’ போட்டியாளர்கள் அனைவருக்குமே, ஆடை வடிவமைப்பில் பல்வேறு டாஸ்குகள் தரப்படும். அந்த டாஸ்குகளில் வென்றவர்கள் தவிர பிறர் வாரம் ஒருவர் அல்லது இருவராகப் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர். போட்டியின் நடுவர்களிடம் அதிக மதிப்பெண் பெறும் போட்டியாளர்கள் ‘நியூயார்க் ஃபேஷன் வீக்கில்’ கலந்து கொண்டு போட்டியிட அனுமதிக்கப் படுவர். எவர் ஒருவர் அப்படி அனுமதிக்கப்படுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். ரியாலிட்டி ஷோக்களில் ஃபேஷன் டிஸைனிங்குக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப் பட்ட இந்த ரியாலிட்டி ஷோ 2008 ஆம் ஆண்டுக்கான Peabody விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது. விருது வழங்கப்பட்டதற்கான காரணம் ரியாலிட்டி ஷோ என்றாலே வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே என்றிருந்த நிலையை மாற்றி, ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக ஃபேஷன் டிஸைனிங்கில் ஆர்வமுள்ளோரை ஊக்குவிக்கலாம், அவர்களது கற்பனைத் திறனை அதிகரிக்கலாம் என்பதை உணர வைத்த முதல் ஷோ இது தான் என்பதால்.

  பெஸ்ட் சீஸன்: ஃபேஷன் உலகின் சொர்க்கம் பாரிஸ். கேத் மைக்கேல், தனது ஃபேஷன் புத்தகங்களுடனும், போட்டியாளர்கள் குழுவுடனும் பாரிஸுக்கு செல்லும் பயணத்துடன் கூடிய சீஸன் 3 க்கு ரசிகர்கள் அதிகம். இச்சமயத்தில் தான் தான் ஆறாவது முறையாகக் கருவுற்றிருப்பதையொட்டி சக போட்டியாளர்களில் வாயடியான லாரா பென்னட் பயணத்திலிருந்தும், போட்டியிலிருந்தும் விலகிக் கொண்டது நிகழ்ந்தது.

  5. தி ரியல் வேர்ல்டு: (எம் டி.வி 1992 முதல் இன்று வரை)

  ஒரு வீட்டுக்குள் நிகழ்வதைப் போல இன்று நாம் கண்டு ரசிக்கும் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களுக்கெல்லாம் முப்பாட்டன் இந்த ரியாலிட்டி ஷோ தான். இந்த ரியாலிட்டி ஷோவின் சமீபத்திய சீஸன்கள் ஏறக்குறைய ஒரு சாஃப்ட் போர்ன் திரைப்படங்களை ஒத்து இருந்தாலும் கூட இதற்கான ரசிகர்களின் வரவேற்புக்கென்னவோ எந்தக் குறைச்சலும் இல்லை. இந்த ரியாலிட்டி ஷோவில் இன்றைய இளம் சமுதாயத்தின் வாழ்வியல் பிரச்னைகள் குறித்துப் பேசப்படுகின்றது. 

  பாலியல் பாகுபாடு, சக ஆண் மற்றும் பெண் குறித்த தப்பெண்ணம், மதம், கருக்கலைப்பு, நோய், பாலியல் இச்சைகள், எய்ட்ஸ், மரணம், அரசியல் மற்றும் பிற விஷயங்களில் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்களில் அவர்களை கன்வின்ஸ் செய்து வாழ்விற்கான திட்டமிடலையும், தீர்மானங்களையும் உருவாக்கத் தவறினால் பிற்காலத்தில் அவர்களது வாழ்வு அதனால் மட்டுமே வீழ்ச்சி அடையக் கூடும். என்பதை சமூகத்திற்குச் சொல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். ஆரம்பிக்கப்பட்ட போது நோக்கம் வேறாக இருந்தாலும் நாளடைவில் இந்நிகழ்ச்சி மூலம் பெருமளவில் இன்றைய இளைய சமுதாயத்தின் அறியாமையும், மோசமான பக்கங்களுமே வெளியாகி பார்வையாளர்களுக்கு எதிர்மறையான காரணங்களுக்காக மட்டுமே நிகழ்ழ்சியைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்து விட்டது.

  பெஸ்ட் சீஸன்: சான் ஃபிரான்சிஸ்கோவில் எய்ட்ஸுடன் வாழ்வது எப்படி என்பதை காட்சியாக்கிக் காட்டிய சீஸன் 3 தான் இந்த ரியாலிட்டியின் பெஸ்ட் ஷோ வாகக் கருதப்படுகிறது.

  6. அமெரிக்கன் ஐடல்: (ஃபாக்ஸ் டி.வி,  2002 முதல், இன்று வரை)

  நமது ஸ்டார் விஜயில் வருடந்தோறும் நடைபெறும் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலைப் போல, இது அமெரிக்காவின் செல்லக் குரலுக்கான தேடலைத் துவக்கி வைத்த ஒரு ரியாலிட்டி ஷோ.
  பெஸ்ட் சீஸன்: சீஸன் 8 இன்று வரை பெஸ்ட் சீஸனாகக் கருதப் படுகிறது. ஏனெனில் சீஸன் 8 ல் நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படப் போகிறார்கள் என்றிருந்த நிலையில் மக்கள் குறிப்பாக இசை ரசிகர்கள் வேறொன்றைத் தீர்மானித்தனர். மக்களான தங்களுக்குப் பிடித்தமான செல்லக்குரல் எதுவென்பதை அவர்கள் வெற்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் அறிவிக்க மிக, மிகப் பர பரப்பாக இருந்தது அந்த ஷோ,

  7. ஜாக்காஸ் (எம் டி.வி 2000 - 2002)


  திகிலான, த்ரில்லான விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக நடத்தப்படும் ரியாலிட்டி ஷோ போட்டி இது. இதில் பங்கேற்பவர்கள் சாகஷச் செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் வெல்வது சுலபம். சாகஷச் செயல்கள் என்றால் அது எதுமாதிரியாகவும் இருக்கலாம். அதாவது கண்களைக் கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்வது மாதிரி... மலை உச்சியில் நின்று கொண்டு பாக்ஸிங் செய்வது மாதிரி இப்படி... இந்த ரியாலிட்டி ஷோவில் வரும் ஜானி நாக்ஸ்வில்லியும் அவரது மூளை மழுங்கிப் போனவர்களான நண்பர்களும் இதில் எல்லாம் கை தேர்ந்தவர்கள்... எல்லா நேரத்திலும் அல்ல, எப்போதாவது சில நேரங்களில் அவர்கள் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.
  பெஸ்ட் சீஸன்: சீஸன் 1.

  8. டாப் செஃப் (2006 முதல் இன்று வரை)

  சர்வைவருடன் ஃபுட் போர்னையும் சேர்த்தால் என்ன வரும்? டாப் செஃப் ரியாலிட்டி ஷோ வரும். இதில் பங்கேற்கும் செஃப்கள் முறையாக சமையற்கலை கற்றவர்களாகவும், புத்திசலிகளாகவும் இருப்பதால் புதிதாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் உணவுப் ப்ரியர்கள் மற்றும் சமையல் ப்ரியர்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பதோடு பார்வையாளர்களும் இந்நிகழ்ச்சியைக் காணும் போது அத்தனை சீக்கிரம் சோர்வடைவதில்லை. 2006 ல் துவக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ சீஸன்கள் கடந்து இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே இதற்கான வெற்றிக்கு ஆதாரம்.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 1

  9.  புராஜெக்ட் கிரீன்லைட்: (HBO 2001 முதல் 2003 வரை, மீண்டும் 2005)


  மேட் டாமன் மற்றும் பென் அஃப்லெக் இருவரும் இணைந்து ஒரு நல்ல தேவதைக் கதைக்கான தேடலைத் துவங்குவதே புராஜெக்ட் கிரீன் லைட் ரியாலிட்டி ஷோவின் தீம். இந்நிகழ்ச்சி மூலமாக நமது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியைப் போல ஹாலிவுட்டில் நிறைய புதுப்புது திறமையான இயக்குனர்கள் கண்டறியப்பட்டனர். அது மட்டுமலல் இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கிங் மாதிரியான கடினமான முயற்சிகளையும் இவ்வுலகின் முன் வைத்தது இந்த ரியாலிட்டி ஷோ தான்.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 3.

  10. அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்:  


  2003 லிருந்து 2006 வரை, நடுவில் சில காலம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.

  அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல் யார்?  எனும் சுவாரஸ்யத் தேடல் மிகுந்த இந்த பயணத்தில் இந்நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யும் டைரா பாங்கின் துடிப்பான வர்னணை பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்க்கும் வண்ணமிருக்கும். உதாரணத்துக்கு; போட்டியாளர்களிடையே பேசும் போது ஊக்குவிக்கும் விதமாக; நீங்கள் இப்போதும் அமெரிக்காவின் அடுத்த டாப் மாடலாகும் பந்தயத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். எனும்படியான உற்சாகமூட்டல்கள்.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 3.

  11.தி பேச்சிலர் ( ABC 2002 லிருந்து இன்று வரை)

  ஒரு ஆண், ஒரு பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்வதெல்லாம் பழைய கான்செப்ட். இது கொஞ்சம் புது கான்செப்ட்... இதன்படி ஒரு ஆண், 25 பெண்களைச் சந்திக்கிறார். அதில் தனக்கேற்ற பெண்ணை எவ்விதமாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பது தான் இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட். 

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 13.

  12. ஸோ யூ திங்க் யூ கேன் டான்ஸ்... FOX, 2005 முதல் இன்று வரை)


   இந்த ரியாலிட்டி ஷோ முதன்முதலாக FOX ல் ஒளிபரப்பான போது அமெரிக்கன் ஐடல் எனும் ரியாலிட்டி ஷோ விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதாக மட்டுமே இருந்தது. ஆனால் இதில் பங்கேற்ற திறமை வாய்ந்த, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடனக் கலைஞர்கள் மற்றும், நடன ஆசிரியர்கள் மூலமாக இந்நிகழ்ச்சி இதற்கென ஒரு தனித்துவத்தை தானே உண்டாக்கிக் கொண்டது. இந்நிகழ்ச்சி மூலமாக ஹாலிவுட்டுக்கு பல திறன் வாய்ந்த நடனக்கலைஞர்கள் கிடைத்தனர்.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 4

  13. தி ரியல் ஹவுஸ் வைவ்ஸ் ஆஃப்... 2006 முதல் இன்று வரை)

  இல்லத்தரசிகள் எங்கிருந்தாலும் சரி அவர்கள் இல்லத்தரசிகளாகவே இருக்கிறார்கள் என்பது மாதிரியான ஒரு தீம். 

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 4.

  14. பிக் பிரதர் (2000 லிருந்து இன்று வரை)

  இப்போது நாம் தமிழில் கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸின் மேற்கத்திய வெர்சன். குறைந்த பட்சம் 15 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாகவோ அல்லது அறிமுகமற்றவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே போட்டிக்குள் நுழைந்த கணத்திலிருந்து வெளி உலகத் தொடர்பே இல்லாமல் தங்களுக்குத் தாங்களே சமைத்து, உண்டு, வீட்டைப் பராமரித்து, சக போட்டியாளர்களை அரவணைத்து நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப் பிடிக்க வேண்டும். யார் அவ்விதமாகத் தாக்குப் பிடிக்கிறார்களோ? அவர்களே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 2.

  15. தி அப்பரண்டிஸ்...

  இந்த ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியைப் போன்றது தான். ஆனால் எம்பிஏ பட்டதாரிகள் சர்வைவர் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும்? அவ்விதமாகத் திட்டமிடப்பட்டு வெகு நகைச்சுவையாக செல்லும் ஷோ இது.

  பெஸ்ட் சீஸன்: சீஸன் 8.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai