நடுச்சமுத்திரத்துல டுமுக்குனுச்சாம்... மனைவிகளின் புத்திசாலித்தனத்தை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று!

கணவனான ஆண் காகம், இப்படி தெற்குத் தெருவில் தனிக் குடும்பம் வைத்துக்கொண்டு பராமரிப்பது, நாளடைவில் மனைவியான பெண் காகத்துக்குத் தெரிய வர அதற்கு வந்த ஆற்றாமையும் ஆத்திரமும் சொல்லி மாளாது.
நடுச்சமுத்திரத்துல டுமுக்குனுச்சாம்... மனைவிகளின் புத்திசாலித்தனத்தை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று!

ஒரு கிராமத்தில், ஊரின் மையத்திலிருந்த புளியமரத்தில் காகத் தம்பதியொன்று வசித்து வந்தது. அவர்களுக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாய் இரண்டு காகக்குஞ்சுகளும் உண்டு, அவைகளைப் பொறுத்தவரை நேரா நேரத்துக்கு இரைகள் கிடைத்ததால் அதுவொரு நல்ல நிறைவான பறவை வாழ்க்கை. காகங்களுக்கும் ஆசைகள் ,பேராசைகள் உண்டு போலும், வடக்குத் தெருவில் குடி இருந்த இந்த காகத் தம்பதிகளில் ஆண் காகம், தெற்குத் தெருவில் தன் வசதி வாய்ப்புக்கு ஏற்ப மற்றொரு பெண் காகத்தை துணைவியாக சேர்த்து வைத்துக் கொண்டதாம் .

கணவனான ஆண் காகம், இப்படி தெற்குத் தெருவில் தனிக் குடும்பம் வைத்துக்கொண்டு பராமரிப்பது, நாளடைவில் மனைவியான பெண் காகத்துக்குத் தெரிய வர அதற்கு வந்த ஆற்றாமையும் ஆத்திரமும் சொல்லி மாளாது. ஆண் காகத்தின் செயல்களைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல், அதனிடம் இந்த விஷயம் குறித்துச் சண்டையிடவும் விரும்பாமல் பெண் காகம் தனக்குள் இந்த விசயத்தைப்போட்டுக் குழப்பிக் கொண்டு நெடு நாட்களாகப் போராடிக் கொண்டிருந்தது .

அக்கம் பக்கம்... வேறெந்த காகங்களிடமாவது ஆலோசனை கேட்டால், அது தன் குடும்ப சமாதானத்திற்கும், நிம்மதிக்கும் தான் இழுக்கு என்றெண்ணியோ என்னவோ யாரிடமும் சொல்லாமல் தானாக அது ஒரு முடிவுக்கு வந்தது.

அந்த முடிவின்படி ஒருநாள் நன்றாக சீவி சிங்காரித்து பூ முடித்து (காக்காபூ வைக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது; இது கதை... கதைக்கு காலுண்டா?!) மதியம் கூட்டுக்கு வந்த ஆண் காகத்திடம் சிரித்த முகத்துடன் மதிய இரையாக சில பல பெரிய புழுக்களை உண்ணக் கொடுத்து பேசிக் கொண்டிருந்ததாம்.... முடிவில்;

"நாம் குடும்பத்தோடு கோயில் குலமென்று போய் வந்து பல நாட்கள் ஆகின்றன, நாமெல்லோரும் சேர்ந்து ஒரு முறை சமுத்திரம் தாண்டியுள்ள ஷேத்திரங்கள் எதற்காவது போய் வந்தால் சந்தோசமாக இருக்கும்... போகலாமா மாமா?! "என்று வெகு சாமர்த்தியமாகக் கேட்டது.

மனைவியான பெண் காகத்தின் சிரித்த முகம், ஆண் காகத்தின் மனதில் சந்துஷ்டியை அளிக்க ஏற்கனவே திருப்தியான இரையுண்ட சந்தோசத்தில் இருந்த ஆண் காகமும் பெரிதாக யோசித்துக் கொண்டிருக்காமல் ;

"அதற்கென்ன போய் விட்டு வந்தால் ஆச்சு... இந்த வாரம் வெள்ளிக் கிழமையே போகலாம் என்று வாக்கு கொடுத்து விட்டது.

வாக்குக் கொடுத்த கையோடு துணைவி வீட்டுக்குப் பறந்த ஆண் காகம், அங்கிருந்தவளிடமும் "வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போகிறோம், நீயும் கிளம்பத் தயாராக இரு " என்று சொல்லி வைத்தது.

இதை முன்னமே எதிர்பார்த்திருந்த மனைவியான பெண் காகமும்... எதேச்சையாகச் செல்வது போல தெற்குத் தெருவில் இருந்த அந்த துணைவியின் கூட்டின் வழி போனது. அப்படிப் போகையில் வாசலில் இருந்த துணைவி காகத்தைப் பார்த்து ரொம்பவும் சகோதர வாஞ்சை தவழ;


"தங்கச்சி நீயும் கோயிலுக்கு வரியாமே?” என்று போகிற போக்கில் கேட்பதைப் போல கேட்டு வைத்தது.

இந்தப் பக்கம் துணைவிக் காகம் சும்மா இருந்திருக்கலாம்... அது; தன் பாட்டுக்குப் பெருமைக்கு மாவு இடிப்பதைப் போல ;


"ஆமாக்கா... நானும் வரேனில்ல... மாமா தான் என்னையும் வரச் சொல்லி நேத்தே வந்து சொல்லிட்டுப் போயிருக்காங்கல்ல... நானுந்தேன் வாரேன்...  உங்க கூட என்றது.

பொசு பொசுவென கருகல் நாற்றத்தில் வயிறு புகைந்தாலும் மேலுக்குச் சிரித்துக் கொண்டு மணவவியான பெண் காகம், அவளிடம்;

"நீ வாரது சரி... ஆனா கோயிலுக்குப் போகையில இப்படியே வந்திராத... உன் றெக்கை எல்லாம் உறிச்சுக் கழிச்சுட்டு, மஞ்சத் தேச்சு நல்லாக் குளிச்சு, மொழுகி, நெத்தி நிறைய செந்தூரம் வச்சுகிட்டு தான் கோயில் கொளத்துக்கு வரணும்" அப்டி வாரதா இருந்தா தான் தாலி பாக்கியம் நிலைக்கும்” என்றது.

அடடா... தன் மேல் தான், முதல் மனைவியான இந்த காக அக்காளுக்கு எத்தனை அக்கறை? எத்தனை விலாவரியாக, கோயிலுக்குப் புறப்பட வேண்டிய முறைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறாள்! என்று சந்தோசத்தில் மூழ்கிப் போனது துணைவிக் காகம்.

வெள்ளிக்கிழமையும் வந்தது;

கணவனான ஆண் காகம் வருவதற்குள், தன் அலகால் றெக்கைகள் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டு விட்டு, பரக்க மஞ்சள் தேய்த்துக் குளித்துச் செந்தூரம் வைத்துக்கொண்டு ஆண் காகத்தின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து அதிகாலைக் குளிரில் வெட வெடக்க கூட்டின் வாசலில் காத்துக் கொண்டிருந்தது.

இங்கே ஆண் காகம்; தன் பெண்டாட்டி பிள்ளைகளிடம்...

"நீங்க மெதுவா பறந்துக்கிட்டு இருங்க நான் போய் முக்கியமான ஒருத்தரை கோயிலுக்குக் கூட்டிகிட்டு வாரேன்."

-என்று சொல்லி விட்டு துணைவிக் காகம் இருக்கும் தெற்குத் தெரு கூட்டை நோக்கிப் பறந்தது.

கணவன் சொன்னதை நினைத்து மனதில் கறுவிக் கொண்டே தன் குஞ்சுகளுடன் பறந்து கொண்டிருந்த மனைவியான பெண் காகம்

"அப்பா எங்கே போகிறார்?"

என்று கேட்ட தன் குஞ்சுகளை சமாதானப் படுத்திவிட்டு...

"அவ வீட்டுக்கா போற... போ..போ... இன்னும் எத்தனை நாளைக்கு உன் ஜம்பம்?!” என்று கறுவியவாறு, தனக்குள் விஷமத்தனமாக சிரித்துக் கொண்டு தன் குஞ்சுப் பறவைகளோடு நிதானமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது.

தெற்குத் தெருவில் துணைவிக் காகத்தைக் கண்ட கணவனான ஆண் காகம், அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகாத குறை!


"அடி... என்னடி இது? இப்படி ஒரு அவதாரம் போல றெக்கை எல்லாம் உறிச்சிப் போட்டுட்டு நிக்கிற... இதென்ன கேடு காலம்" என்று சத்தமிட்டது.

"எல்லாம் என் தாலி பாக்கியத்துக்காகத்தான், நீங்க சும்மாப் பேசிக்கிட்டு நிக்கவேண்டாம், உங்க பெண்டாட்டி, பிள்ளைக முன்னாடி போயிறப் போறாக, வாங்க நாமளும் போயி அவுகளைப் பிடிச்சிடலாம்" என்று பறக்கத் துணிந்தது.

றெக்கை முழுக்க தான் உறித்தாயிற்றே... பிறகு எங்கிருந்து பறக்க?!

பறக்க முயன்று தத்தித் தத்தி கீழே விழுந்து கொண்டிருந்த துணைவியான பெண் காகம் படும் துன்பம் கண்டு அந்த ஆண் காகம் "நமக்காகத் தானே இவள் றெக்கை எல்லாம் உரித்துப் போட்டுவிட்டு இப்படி கோயிலுக்குக் கிளம்பி வருகிறாள்! என்று ஆதூரம் மிக தன் அலகால் வைப்பாட்டிக் காகத்தை கவ்விக் கொண்டு வானில் பறந்தது.

வேகமாகப் பறந்ததில் சமுத்திரத்தின் மேலாகப் பறந்து கொண்டிருந்த தனது குடும்பத்தினரை எட்டி விட்டது ஆண் காகம், அதன் அலகில் சிக்கி இருந்த துணைவிக் காகமும் தான்.

இவர்கள் வந்த கோலம் கண்டு பொங்கிப் புழுங்கிப் போன மனைவியான பெண் காகம், சும்மா இருக்க வகையின்றி; படு கொச்சையான பாஷையில்;

"நானும் எம் பிள்ளைகளும் நடையில... வைப்பாட்டிக் காக்கா வாயில "

என்று அங்கிருந்து புலம்பிக் கொண்டே பறக்க ஆரம்பித்தது, நீண்ட சமுத்திரத்து வான வீதி நெடுகிலும்;

கணவனுக்கோ மனைவியை அடக்கி ஒன்றும் சொல்ல வகையில்லை, வாயைத் திறக்கத்தான் வழியில்லையே!

இப்போது நிறுத்துவாள்... அப்போது நிறுத்துவாள் என்று பொறுத்துக் கொண்டே பறந்துகொண்டிருந்தது.

ஆனால் மனைவியான பெண் காகம், தன் பிலாக்கணத்தை நிறுத்தக் காணோம் ;

அம்மாக் காகம் புலம்புவதைக் கண்ட குஞ்சுக் காகங்களும் தங்கள் போக்கில் ;

"நாங்களும், எங்கம்மாளும் நடையில... வைப்பாட்டிக் காக்கா வாயில " என்று வழி நெடுக புலம்ப ஆரம்பிக்க;

இப்போது வைப்பாட்டிக் காக்காவுக்கு வந்ததே கோபம்;

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பிறகு பொறுக்க முடியாத ஒரு நொடியில்...

"ஆமா... ஓமா... அப்படித் தான்னு சொல்லுங்களேன் மாமா" என்றது;

முதலில் அதன் முட்டாள் தனத்திற்கு காது கொடுக்காமல் இருந்த ஆண் காகம், பின்பு அதன் கரைச்சல் தொல்லை தாங்காமல் ஒரு நொடியில் ;

"ஆமா ஓமா அப்படித் தான் என்று கரைந்தே விட்டது "

அவ்வளவு தான் நடுச்சமுத்திரத்தில் பறந்து கொண்டிருக்கையில் இப்படிச் சொன்னதால் துணைவியான பெண் காகம் அப்படியே 'தொப்' பென சமுத்திரத் தண்ணீரில் விழுந்து தத்தளித்து சில நிமிஷங்களில் முங்கிப் போனது .

ஒரு நிமிஷத்தில் தன் வாழ்வில் விடிந்து விட்டதே! என்று சந்தோசத்தில் திக்கு முக்காடிய மனைவியான பெண் காகமோ;

"நடுச்சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம்... நானும் எம் பிள்ளைகளும் சுகம் பெத்தோம்"

"நடுச்சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம்... நானும் எம் பிள்ளைகளும் சுகம் பெத்தோம்"

"நடுச்சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம்... நானும் எம் பிள்ளைகளும் சுகம்பெத்தோம்"

என்று பாடிக் கொண்டே வைப்பாட்டிக் காகம் ஒழிந்த சந்தோசத்தில்... ஷேத்திராடனம் முடித்துக் கூடு வந்து சேர்ந்தது தன் புருஷன் மற்றும் குஞ்சுக் காகங்களோடு.

இது ஒரு கிராமியக் கதை.

என் பாட்டி, என் சிறு வயதில் எங்களைத் தூங்க வைக்க இந்தக் கதையை எங்களுக்குப் பல நாட்கள் சொல்லி இருக்கிறார்.

முன்பு கீற்று தளத்தில் கி.ரா வின் பக்கங்களில் இதே கதை வாசிக்கக் கிடைத்தது, இப்போது அங்கே இதைக் காணோம். எனக்குத் தெரிந்த வகையில் அந்தக்கதையை சில மாற்றங்களுடன் தொகுத்து இங்கே பகிர்ந்திருக்கிறேன். இம்மாதிரியான செறிவான வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட பல கதைகள் நமது தமிழ் நாட்டுப்புறக் களஞ்சியங்களில் பல உண்டு. பல கதைகளை நாம் கி.ரா வின் தொகுப்புகளிலும் காணலாம். இவை எல்லாம் கூட இப்போது அழியும் நிலையில் தான் இருக்கின்றன. குழந்தைகள் யோஉ டியூபில் ராபேஞ்சல், ஸ்னோ வொயிட், சிண்ட்ரல்லா, கதைகளைக் காண்பது தவறில்லை... ஆனால் நமது தீந்தமிழிலும் அதே போன்ற கதைகள் உண்டு, அவற்றில் ஒப்பற்ற நகைச்சுவையும் கூட உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com